இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – 4

Share this:

ங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைக்கும் இராணுவ ஆட்சி அதிகாரம் கிடைத்து அதிகாரம் செலுத்த ஆரம்பித்த பின்னர் இந்திய விடுதலைப் போராட்டம் மற்றொரு கட்டத்தை நோக்கி நகரத் துவங்கியது. ஆங்கிலேயர்களும் இந்தியாவை முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் எண்ணத்தில் எங்கெல்லாம் தங்களின் அதிகாரம் செல்லுபடியாகவில்லையோ, அப்பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களை மிரட்டலாலும் இராணுவத்தாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தி அப்பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக ஆங்காங்கே நடைபெற்று வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவத் துவங்கின. இவ்வாறு நாடெங்கிலும் ஆங்கிலேயருக்கெதிராக போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய இருபெரும் வீரர்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் – வடக்கே சிராஜுத் தெளலா, தெற்கே திப்புசுல்தான்.

மாவீரர் சிராஜுத் தெளலா(ரஹ்)

ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிரஜுத் தெளலா வங்காள நவாபாக ஆனார்.

சிராஜுத் தெளலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர்.  1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார்.

கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்.

மைசூர் வேங்கை திப்புசுல்தான் ஷஹீத் (ரஹ்)

”அந்நியரை விரட்ட தெற்கே நிகரில்லா போர் புரிந்து நாட்டுக்காகவும் சமுதாயத்திறகாகவும் உயிர்நீத்த தியாகிகளில் இவருக்கு நிகர் எவரும் கிடையாது” என்று காந்தியடிகளே பாராட்டிய விடுதலை வேங்கை திப்புசுல்தானைப் பற்றி சில முக்கிய குறிப்புகள்:

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத்தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767 – 1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

1782 டிசம்பர் 6ல் ஹைதர் அலி மரணம். 1782 டிசம்பர் 26ல் தம் 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார்.

1790 – 1792 மூன்றாம் மைசூர் யுத்தம் மற்றும் 1799ல் நான்காம் மைசூர் யுத்தம் உட்பட எண்ணற்ற முறை ஆங்கிலேயர் மற்றம் ஆங்கிலேயக் கைப்பாவையாக செயல்பட்டு வந்த தீய வஞ்சக மன்னர்களுடன் திப்புசுல்தான் வீரதீரத்துடன் செய்த போர்களை இவ்வுலகம் உள்ளவரை மறக்க, மறைக்க முடியாது.

நாட்டில் குடியேறிய, நாட்டையாளத்துடித்த பரங்கியர் கூட்டத்தை இம்மண்ணிலிருந்து விரட்ட திப்பு சுல்தான் அயராது போரிட்டார். ”ஆடாக இருந்து இரு நூறு ஆண்டுகள் வாழ்வதை விட புலியாக இருந்து இரு நாள் வாழ்ந்தால் போதும்” என்று வீர கர்ஜனை புரிந்தவர் திப்பு.

சொல்லும் செயலும் ஒன்றில் ஒன்று மாற்றம் இல்லாமல் ஆட்சி புரிந்தார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணிலிருந்து விரட்ட தன்னிடம் நட்புக் கொள்ள விரும்பிய ஃப்ரெஞ்சு வீரன் நெப்போலியனையும் தாய்நாட்டின் விடுதலைப் போரில் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தார். எகிப்து தேசம் வரை வந்த பிரெஞ்சுப் படைகள் எகிப்தில் எதிர்பாராது உருவான உள்நாட்டு கலகங்களால் எகிப்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. ஆனால் விரைவில் தான் திரும்பவும் வருவதாக திப்புவிற்கு நெப்போலியன் எழுதிய கடிதம் மிகப் பிரசித்திப் பெற்றதாகும்.

****************

திப்புவுக்கு நெப்போலியன் எழுதிய அந்தக் கடிதம்:

தேசிய அமைப்பின் தலைமைத் தளபதி நெப்போலியன் போனபார்ட் , தமது உன்னத நண்பரும் மகத்தான சுல்தானுமாகிய திப்புவுக்கு எழுதுவது.

செங்கடல் கரையோரம் நாங்கள் வருகை புரிய இருப்பதைத் தங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். வெல்லற்கரிய வலிமைமிக்க படையுடன் தங்களை பிரிட்டாஷின் இரும்புச் சங்கிலியிருந்து விடுவிக்க மிக்க விருப்பத்துடன் வர உள்ளோம். மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்களின் மூலம் தங்கள் விருப்பத்தையும் அரசியல் நிலைகளையும் அறிந்தோம்.

சூயஸ்ஸுக்கோ, கெய்ரோவுக்கோ தங்களுடைய கரத்தை ஆதாரப்பூர்வமாக பிரதிபலிக்கும் திறமை கொண்ட ஒருவரை அனுப்பவும், அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.

***************

1798ல் எழுதப்பட்ட இக்கடிதம் ஆங்கிலேயனின் சதியால் திப்புவை வந்தடையவில்லை. ஆம்! திப்புவின் தூதர் மீர் அலிகான் இக்கடிதத்தை பெற்றுக்கொண்டு இந்தியாவரும் வழியில் புனிதமக்கா சென்று உம்ரா செய்ய நாடினார். மக்காவில் தங்கி தமது கிரியைகளை நிறைவேற்றுவதில் லயித்திருந்த போது, ஆங்கிலேய ஒற்றர்கள் அக்கடிதத்தை அவரது அறையிலிருந்து திருடி விட்டனர். இப்படி இந்தியா வரவேண்டிய அக்கடிதம் இங்கிலாந்து போய் சேர்ந்தது. இவ்வாறு மாவீரன் நெப்போலியனுக்கும் திப்புவுக்கும் இடையில் ஏற்படவிருந்த நாட்டுக்கான விடுதலை போராட்ட ஒப்பந்தம் நடக்க முடியாமலே போனது.

”பிறந்த மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கும்வரை பஞ்சு மெத்தையில் உறங்குவது இல்லை” என அவர் சபதம் மேற்கொண்டார். சுதேசி பற்றுக் கொண்ட திப்பு தன் உணவில் கூட வெளிநாட்டு உப்பைப் பரிமாறக்கூடாது எனக் கட்டளையிட்டார். “முழந்தாளிட்டு உயிரோடு இருப்பதை விட நின்று கொண்டு இறப்பதே மேல்” என்ற கோட்பாடு உடையவராகவே இறுதிவரை வாழ்ந்தார். அ1வர் ஆங்கிலேய பிரபு வெல்லஸ்லியை எதிர்த்துப் பல போர்கள் புரிந்துள்ளார். ஆங்கிலேயத் தளபதி மாத்யூஸ் இன்னும் பலரைக் கைது செய்தார். திப்புவின் அரண்மனை வாயிலில் வைக்கப்பட்டிருந்த புலி பொம்மை ஒன்று பிரிட்டிஷ் சிப்பாயை வாயில் கவ்விக் கொண்டு இருக்கும் காட்சியே பரங்கியரை விரட்ட எண்ணிய அவரின் ஆவேசத்தை உணர்த்தும்.

ஆங்கிலேயனை இந்திய மண்ணிலிருந்து விரட்ட, எல்லை கடந்து ஃப்ரஞ்சிலிருந்து உதவி பெறும் அளவுக்கு விடுதலை வேட்கையில் திளைத்த திப்புவை, இனத்துரோகி திருவிதாங்கூர் மகாராஜா பாலராம வர்மா, அன்னியன் ஆங்கிலேயனுக்குத் துணை நின்று விடுதலை வீரர் திப்புசுல்தானைக் காட்டிக் கொடுத்தான். திப்பு மிகவும் நம்பியிருந்த திப்புவின் தளபதியான மீர் ஸாதீக் கைக்கூலியாக மாறினான். எல்லாவற்றுக்கும் மேலாக திப்புவின் ஆலோசகர் பூர்ணைய்யா, ஒற்றர்கள் மூலம் கிடைத்த எதிரிகளின் சதி செய்திகளைத் திப்புவுக்கு தெரிவிக்காமல் செய்த சதி மைசூர் வேங்கையின் நாட்டு விடுதலையை நோக்கியப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட காரணமாகியது.

இறுதியில் 1799ம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி நடுப்பகலில் தன்னை யாரென்று இனம் காட்டிக் கொள்ளாத நிலையில் இறுதிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரைப் ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் கோர்களம் இறங்கிப் போரிட்டு வீரமரணமடைந்தார் திப்புசுல்தான்.

அவரின் மரணத்தைக் குறித்து மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ், ”இன்று முதல் இந்தியா நம்முடையது” எனக் கூறினார்.

ஆம்! அடுத்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கான பாரத நாட்டின் தலைவிதி அன்றைய தினம் திப்புவின் வீர மரணத்தோடு நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

1803ல் டெல்லி செங்கோட்டையில் திப்பு வீரணமடைந்த நான்காம் ஆண்டு யூனியன் ஜாக் கொடியேற்றப்பட்டது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

< பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.