அமெரிக்கா நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரான போர்: முன்னாள் US அட்டர்னி ஜெனரல்

{mosimage}

“ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்….

“சர்வதேச சமூகம்” என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப் படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் “புதிய உலக நியதி”யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?

பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.

 

படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்து…?

 

இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும். தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. “வியாபாரமயமாக்கல்” மற்றும் ‘பொருள் முதல் வாதம்’ முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் ‘கலாச்சாரம்’ ஆகியவைதான்.

 

ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவே…..

 

‘உலகமயமாக்கலின்’ தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.

 

புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?

 

பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.

 

உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.

 

பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.

 

இராக் மீதான அமெரிக்காவின் “அத்து மீறிய ஆக்கிரமிப்பை’ நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள…கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?

 

இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டது…

 

எப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ‘பயங்கரவாதம்’ அமெரிக்காவின் சுய உருவாக்கமா?

 

பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தை முற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.

 

இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?

 

இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

 

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

 

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

 

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

 

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

 

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

 

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

 

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்