தமிழ் இஸ்லாமிய சமூக ஒற்றுமை – ஒரு மனம் திறந்த மடல்!

{mosimage}சகோதரர்கள் PJ மற்றும் MHJ அவர்களுக்கு…… 

எம் வாசக சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சகோதரர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இம்மடல், தமிழில் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் வானொலியில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான நேரடி வர்ணனைகள் மூலமும் தேர்ந்த அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் மூலமும் உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களிடம் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இலண்டனிருந்து இயங்கும் “தீபம்” தொலைக்காட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக “அரங்கம் – அந்தரங்கம்” என்ற பெயரில் ஓர் அரசியல் ஆய்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்.

வை.கோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், சுப.வீ, விஜயகாந்த், ராஜேந்தர், கார்த்திக் உள்பட பல்வேறு பிரபல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெத்தா தமிழர் சங்கத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக் அவர்கள், கனடாவின் “தமிழோசை” ஸ்ரீ அவர்கள், பாரிஸ் “ஏபிஸி தமிழ்” ரேடியோவிலிருந்து கோவை நந்தன் அவர்கள், துபாய் ஏசியாநெட் ரேடியோவிலிருந்து ஆசிஃப் மீரான் அவர்கள் ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்நிகழ்ச்சிக்காக, பி.ஜே என்று பிரபலமாக அறியப்படும் மவுலவி பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை அழைத்து இரண்டு பாகங்களைத் தயாரித்தேன். ஆன்மீகம், அரசியல் ஆகிய இரு தலைப்புக்களின் கீழ் அவரைப் பேட்டி கண்டேன். கலந்து கொள்பவரை நோக்கி எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும் அந்நிகழ்ச்சியில் பி.ஜே, என்னுடைய மிகவும் ஆழமான கேள்விகளுக்கும் மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாக பதில் கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்வாரமும் வரும் வாரத்திலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

இதே ரீதியில் நான் வியந்த இன்னொரு நபர், இதற்கு முன் வேறொரு சமயத்தில் நான் பேட்டி கண்ட பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆவார். இருவரின் அறிவுத்திறனையும் கண்டு வியந்திருந்த நான், இஸ்லாமிய சமூகத்திற்காக இவர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கை கோர்த்து ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியிருக்கின்றேன்.

முஸ்லிம்களின் நலனுக்கான சமூக அக்கறையும் கவலையும் கொண்டுள்ள நல்ல உள்ளங்களைக் கொண்டவர்கள், இவர்களது பிரிவினைக்குப் பிறகு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிவரும் குழப்பங்களைக் கண்டு மனம் வெதும்பியுள்ள நன்மக்கள் இவர்களது ஒற்றுமைக்காகவும், கூட்டாக இணைந்து செயல்படவும் முயற்சிக்கவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகளாகும்.

சமூக ஒற்றுமைக்கான நமது இந்த முயற்சிக்கு இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

– அப்துல் ஜப்பார், சாத்தான்குளம்.

சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டிருப்பதைப் போன்று சகோதரர் பி.ஜே, சகோதரர் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் சகோதரர் கமாலுத்தீன் மதனி, சகோதரர் குலாம் முஹம்மது, சகோதரர் டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது போன்ற ஏனைய சமூகத் தலைவர்கள், சமுதாய முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு உழைக்கின்றார்கள் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்கும் இடமில்லை.

ஓர் இறைவனையும், அவனது ஒரே இறுதித்தூதரையும் ஒரே இறுதிவேதத்தையும் ஏற்றுக் கொண்டு ஒரே கிப்லாவை முன்னோக்கும் இத்தலைவர்களிடம் சமுதாயத்திற்காக ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனையும்  சமூக அக்கறையின் மீதான வேட்கையுமே, அவர்களைப் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வைத்துள்ளன. எனினும் பின்னர் தோன்றிய சிற்சில கருத்து வேறுபாடுகள் இவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இயங்குதளங்களில் அதே இலக்கை நோக்கி முன் செல்ல வைத்துள்ளன.

 

இறைக்கோட்பாடு விஷயத்திலோ, மார்க்க அடிப்படை விஷயங்களிலோ எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இல்லாத இவர்கள், ஒரே அணியில் ஒருங்கிணைந்து அவரவர் தேர்ந்தெடுக்கும் துறைகளில் அப்படியே இருந்து கொண்டு தம்மால் இயன்ற நல்லதை சமூகத்திற்குச் செய்து சின்னாபின்னமாகப் பிரிந்து முடமாகிப் போய்க் கிடக்கும் தமிழ் இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?

எனவே இச்சிந்தனையை முன்வைத்து சமூக நன்மையின் மீதும், சமுதாய ஒற்றுமை மற்றும் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதன் மீதும் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட இத்தலைவர்கள் தங்களது நிலைகளை மறுபரிசீலனை செய்து சீரமைத்துக் கொள்ள முன் வரவேண்டும்.

 

அனைவரும் தாங்கள் நம்பும் இறைவனின் முன் அடிப்படையில் ஒருவரே என்ற எண்ணத்தை மனதில் இருத்தி, தங்களின் கருத்து வேறுபாடுகளை மனம் திறந்து ஓரிடத்தில் குழுமி விவாதித்து, கருத்து வேறுபாடில்லாத விஷயங்களில் ஓரணியில் நின்று சமூகத்தை நன்மையை நோக்கி இட்டுச்செல்ல இத்தலைவர்கள் அனைவரும் இனியும் காலம் தாழ்த்தாமல் முன்வரவேண்டும் என்பதே சமூக நலனின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டு மனம் வெதும்பி இருக்கும் இச்சமூகத்தில் பெரும்பாலானவர்களின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை என்பதையே மேற்கண்ட சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களின் மடல் ஓர் எடுத்துக்காட்டாக உணர்த்தி நிற்கின்றது.

எனவே இத்தலைவர்கள் உண்மையிலேயே சமூக நலனின் மீதும், முன்னேற்றத்தின் மீதும் அக்கறை கொண்டு, உடனடியாகத் தங்களுக்கிடையிலான இவ்வுலகத் தொடர்பான விஷயங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தூக்கி வீசி விட்டு, ஓரணியில் சமூகத்தை வழிநடத்துவதற்குத் தேவையான வழிமுறைகளைக் குறித்து அனைவரும் கலந்து பேச ஏற்பாடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என சத்தியமார்க்கம்.காம் மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

 

இம்முயற்சியில் தூய இக்லாஸுடன் ஈடுபடுவோம் எனில் இறைவன் நிச்சயம் நமக்கு வெற்றியைத் தருவான் என்பதில் துளியும் ஐயமில்லை.