இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளுக்கு எதிரான அநீதிகளும், பாரபட்சங்களும்

ட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டமாவது வெங்காயமாவது.
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடிகள் இவர்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைப்புகள், நக்சல்பாரிகள், மாவோவியப் போராளிகள் என்று தங்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் பிரிவினர் மீது ஆளும் அரசுகள், சங்பரிவார் கும்பல்களின் தாக்குதல்கள் என்பதும் அதற்கு எதிர்வினையான சம்பவங்கள் நடந்து வருவதும் நாம் வரலாற்றுப் பார்வையில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும்

இந்நிலையில் இருந்தே தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு பொது விவாதத்தையும், கருத்து பரப்புரையும் செய்ய வேண்டிய தருணத்தில் இருந்து தொடங்குவோம்….

1992ம் ஆண்டு அன்றைக்கு நான் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தம்) கட்சியின் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக நான் உட்பட 6 தோழர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து சித்ரவதைகளுக்குப் பின்னால் திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்வரை எங்கள் மீது என்ன வழக்கு போடப்பட்டது என்று எங்களுக்குத் தெரியாது.

திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட போது எங்களுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும், சமூகத்திற்கும் நமக்குமான ஒரே தொடர்பான வானொலியில் டிசம்பர் 6 அன்று கேட்கும் போதுதான் நாங்கள் அறிந்து கொண்டோம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியை… அதன் எதிரொலி சிறைச்சாலையின் கம்பிகளுக்குள்ளும்….

அதற்குப் பின்னிட்ட நாட்களில் திருப்பூர் கிளைச் சிறைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமாக வந்து சேருமிடமாகிப்போனது. நடு இரவிலும் அதிகாலையிலும் இஸ்லாமிய இளைஞர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
அன்றைக்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த, சித்திரவதை செய்வதற்கே பயன்படுத்தப்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு மூன்று நாட்கள் ‘சரியான கவனிப்புகளுக்குப்’ பின் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதிக இளைஞர்கள் நடக்க முடியாமல் உடல் ரணத்துடன் கொண்டு வரப்பட்டார்கள். (எனக்கும் அதே காவல் நிலையத்தில்தான் 23 நாட்கள் ‘கவனிப்பு’ நடந்தது என்பது வேறு விசயம்)

கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர்களில் அன்றைக்கு புரட்சியாளர் பழனிபாபாவின் ஜிஹாத் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம். அவர்கள் மூலம் பாபர் மசூதி இடிப்பும், அதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய மக்களின் போராட்டங்களையும், சங்பரிவார் கும்பலின் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் அறிந்து கொண்டோம்.

திருப்பூர் கிளைச் சிறையில் இருந்து எங்களை டிசம்பர் மாதம் இறுதியில் கோவை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். டிசம்பர் 31 அன்று இரவு எங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டது.

டவர்பிளாக் என்று கூறப்படும் 10 பிளாக்கில் ஒன்றான 1ஏ பிளாக்கில் வைத்து இருந்தார்கள். 10ம் பிளாக்கில்தான் கோவை ராமகிருட்டிணன் உட்பட பல தோழர்கள் தடா கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதே 10ம் பிளாக்கில்தான் பாபர் மசூதி கலவர வழக்கில் பாஷாபாய், அன்சாரி, நவாப்கான், ஒஜீர் உட்பட பல இஸ்லாமியத் தோழர்கள் தடா சட்டத்தின்படி சிறைபடுத்தப்பட்டிருந்தார்கள் என்று அறிந்து கொண்டோம்.

அவர்களிடம் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. நானும் ஆர்வப்படவும் இல்லை. அவர்கள் மத அடிப்படையில் சிறைக்கு வந்துள்ளார்கள் என்ற பார்வையே எனக்கு அப்பொழுது இருந்ததால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்படவில்லை.

சிறைப் போராட்டங்கள் ஊடாகவும், தோழர் தடா பெரியசாமி, ஈச்சனாரி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் மூலமாகவும் எங்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் அறிமுகம் ஏற்ப்பட்டது.

உமர்கயான் என்ற அறிமுகத்தால் என் மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அவர்கள் என்னுடைய கொள்கைகளில் முரண்பட்டாலும் அது நட்பு முரணாகவே இருந்தது. என்னுடன் சாத்தியப்பட்ட நேரத்தில் மார்க்க அடிப்படையில் விவாதித்தார்கள்.

அப்பொழுதுதான் எனக்கு தமிழ் திருமறை குர்ஹான் படிக்க கொடுத்தார்கள். சிறையில் தடா சிறைவாசிகளையும், தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட எங்களையும் வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில்தான் குடும்பத்தினர், தோழர்கள் சந்திக்க முடியும். அந்த நாட்களில் இசுலாமிய சிறைவாசிகளை சந்திக்க வரும் அவர்கள் குடும்பமும் எங்களுக்கு அறிமுகமானது. வெளி உலகம் அறியா இசுலாமியப் பெண்கள் பல சிரமங்களுக்கிடையில் சிறைச்சாலைக்கும் நீதிமன்றங்களுக்கும் அல்லல்பட்டு வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபத்தை ஏற்படுத்தும். உண்மையிலேயே தண்டனை என்பது அவர்களுக்கும் சேர்த்துதான் என்று நமக்குத் தோன்றும். 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் நாங்கள் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை அடைந்து வெளியில் வந்தோம். தடாவின் கொடுங்கரங்களில் அடைபட்டு இருந்த இசுலாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் விடியலும் இல்லை; விடுதலையும் இல்லை!

வினையும் எதிர் வினையும்

இந்திய வரலாற்றில் இசுலாமியர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவையாக இருந்த போதிலும் இந்திய அரசியல் சூழலில் மிகுந்த நெருக்கடிகளுக்கும் ஆளானவர்களாகவும், அதன் விளைவாக ஓரங்கட்டப்பட்டவர்களாகவும், அம் மக்களின் பங்களிப்புகள் வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஆளும் கும்பலும், இந்துத்துவா சக்திகளும் அதற்கான வேலைகளில் முன்நின்றன‌.

தமிழகம் தவிர்த்த வடமாநிலங்களில் இசுலாமிய மக்களுக்கு எதிரான கருத்தோட்டங்களும், புனைவுகளும் பெரும்பான்மை மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. திலகர் முதல் பட்டேல் வரை, இசுலாமிய மக்களின் எதிர்க்கருத்தோட்டம் கொண்டவர்களாகவே அறியப்பட்டார்கள்.

இந்துமகாசபை, ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள், அவர்களின் கோட்பாடுகளான‌ அகண்ட இந்தியா, பொதுசிவில் சட்டம், ராமராஜ்யம், இந்துநாடு போன்ற எதிர் முரண் கோட்பாடுகள் இந்து தீவிரவாதத்திற்கு வழி வகுத்தது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் மூலம் இசுலாமிய மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திசை திருப்புவும், அதன் மூலம் கலவரங்களை ஏற்படுத்தவும் முயற்று அதிலே வெற்றியும் பெற்றனர்.

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய மக்களால் புனிதமாகக் கருதப்படும் திருக்குரானையும், அவர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசவும் ஆரம்பித்தார்கள். பல இடங்களில் மேடை போட்டு விசமத்தனத்தைக் கொட்டினார்கள். பெரியாரிய கருத்தோட்டங்களால், சமுக நீதிக்கான போராட்டங்களால் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்த மக்களிடம் மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி உழைக்கும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தினார்கள்.

தொடக்க காலங்களில் திராவிட இயக்கங்களுக்குப் பின் திரண்ட இசுலாமியர்கள் 80களுக்குப் பிறகு இந்து முண்ணனியின் ஆபாச அராஜகங்களுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றிணைய ஆரம்பித்தார்கள். ஜிஹாத் கமிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்திய புரட்சியாளர் பழனிபாபா இந்து முன்னணியின் ஆபாச பேச்சுகளுக்கு எதிராக பதிலடி கொடுத்து வந்தார்.

கோவை பகுதியில் மார்வாடிகள், பனியாக்கள், சேட்கள் மொத்த வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். இசுலாமிய மக்கள் சாதாரண நடைபாதை வியாபாரிகளாக இருந்தார்கள். மார்வாடிகள் இவர்களை தங்கள் வியாபாரத்திற்கு இடைஞ்சல் என்று கருதி வந்தார்கள். இவர்கள் மீதான மார்வாடிகளின் வன்மம் இந்து முன்னணியை ஆதரிக்க வைத்தது. இசுலாமியர்களின் அமைதியான வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்கினார்கள்.

இசுலாமிய மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஜிஹாத் கமிட்டி, அல் உம்மா போன்ற அமைப்புகளின் பின்னும் அணி திரண்டார்கள். இருதரப்பிலும் வினைகளும் எதிர்வினைகளும் மாறி மாறி தோன்றியது. கொலைகள், கலவரங்கள், மக்களின் அமைதியான வாழ்வியல் தொலைந்து பதட்ட சூழ்நிலை தொடர்ந்தது. கோவையில் மட்டுமல்ல தமிழகத்தில் இசுலாமிய மக்கள் வாழும் பிற பகுதிகளிலும் கலவரங்கள், பதட்ட சூழ்நிலை உருவாகியது.

1992 பாபர் மசூதி இடிப்பும் எதிர்வினைகளும்

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இசுலாமிய மக்கள் ஒரு நிரந்திர பதட்டத்தையும், பாதுகாப்பின்மையும் உணர ஆரம்பித்தார்கள். 1992க்கு முன் ரதயாத்திரை என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்களுக்கு சங்பரிவார் கும்பல் விதை போட்டது. தமிழகத்தில் அது நிரந்திர அமைதியின்மையை ஏற்ப்படுத்தியது.

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்ட களத்தில் நின்ற இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். வீடுகள் தோரும் சோதனை என்ற பெயரில் காவல் துறை காட்டு தர்பார் நடத்தியது. சுதந்திர இந்தியாவின் ஆள் தூக்கி கருப்புச் சட்டமாம் தடா சட்டத்தில் இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இறைச்சி அறுக்க வைத்திருந்த கத்தி கூட பயங்கர ஆயுதங்களாகக் கருதப்பட்டன‌; சிறுவர்கள் கூட தப்பவில்லை.

1997 நவம்பர் கருப்பு படுகொலை ஒரு இன அழிப்பின் தொடக்கம்

1997 நவம்பர் 29ம் நாள் போக்குவரத்துக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது கோவை முஸ்லீம்களின் மீதான ஒரு பெரும் இன அழிப்பின் தொடக்கமாக அமைந்த நிகழ்வு. இந்துத்துவா திவிரவாதிகளுடன் காவல்துறையும் இணைந்து கோவை மாநகரில் இசுலாமிய மக்கள் மீது பெரும் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தினார்கள். இப்படுகொலைகளும் கலவரங்களும் குஜராத் இனப் படுகொலையை ஒத்திருந்தது.

இந்துத்துவா வெறியர்கள் இசுலாமிய மக்களை வெட்டியும், குத்தியும் கொன்றார்கள். காவல்துறை சுட்டுக்கொன்றது. கோவை அரசு மருத்துவமனை எதிரே காவல்துறையின் கண்முன்னே அப்பாஸ் என்ற இளைஞன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டான்.

தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட முசுலீம்களுக்கு சிகிச்சை கொடுக்கக் கூடாது என்றும் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் மிரட்டப்பட்டனர். இசுலாமியர்களின் வணிக நிறுவனங்கள் காவல்துறையின் உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்டது. பின்பு தீவைத்து கொளுத்தப்பட்டது.

எரிவாயு உருளைகளின் உதவியுடன் வணிக நிறுவனங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறை இந்த கும்பலுக்குப் பாதுகாப்பாக வல‌ம் வந்தது.

29ம்தேதி முதல் காவியும், காவல்துறையும் சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தில் 18 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்; பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவையில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று எண்ணும் அளவிற்க்கு கருணாநிதியின் ஆட்சியில் போலீஸின் வெறியாட்டம் இருந்தது.

இசுலாமியர்களின் நண்பன் என்று வேடமணிந்து பசப்பிய கருணா, இன்று வரை கோவை முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு நேரில் சந்தித்து ஆறுதல் எதுவும் கூறவில்லை, அவர்களுக்கு அநீதியையே கருணாவின் ஆட்சி பரிசளித்தது.

அன்றைக்கு தங்களின் புதுக்கூட்டாளி பா.ஜ.காவின் மனம் கோணாமல் கருணா நடந்துகொண்டார். முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் என்ன?ஈழத்தில் 1,50,000ம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டால் என்ன? தன் ஆட்சி அதிகாரத்திற்க்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் அவர் தெளிவாக இருந்தார்.

திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருந்து பழக்கப்பட்ட கருணாநிதி கோவையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்த காவி + அரச பயங்கரவாதத்திற்குத் துணை நின்றார், முஸ்லீம் மக்களுக்கு எதிராக நீதி பல் இளித்து நின்றது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், காவல் துறையின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாதிக்கப்பட்ட இசுலாமியர்களையே குற்றவாளியாக்கிய அயோக்கியதனத்தை மறக்க முடியாது. பல முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கியது காவல் துறை. கோவை மத்திய சிறை முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் முஸ்லீம் மக்கள் துடித்தார்கள். 1997 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று பேருக்கு சில நபர்களைக் கைது செய்த காவல் புலனாய்வுப் புலிகள் அவர்கள் பினையில் வெளிவர உதவினர். உண்மையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுக்கு பிணையில் வெளிவர முடியா நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள்.

நீதி தனது கடைசி நேர மரண ஓலத்தை வெளிப்படுத்தியது….

கோவை குண்டு வெடிப்பு

1998 பிப்.14ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல். பா.ஜ.க. திமுக, தேர்தல் கூட்டணியில் பா.ஜ.க கோவை தொகுதியில் போட்டியிட்டது. பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மேடை அருகிலும், கோவையின் பல இடங்களிலும் சங்கிலித் தொடராக குண்டுகள் வெடித்தது. இக் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டார்கள், 362 பேர் காயம் அடைந்தார்கள்

இக் குண்டு வெடிப்பு 1997ம் வருடம் நவம்பரில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பலி வாங்கும் செயலாக நடந்தது என்று காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் 167 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியும் ஒருவர். அப்போராளி ஒரு கொடும்தாக்குதலில் ஒரு காலை இழந்தவர்.

இவ் வழக்கில் பல்வேறு விசாரணைகள் முடித்து இறுதி குற்றப்பத்திரிக்கை 5.5.1999ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு இவ் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தடா, பொடா போன்ற கருப்புச்சட்டங்கள் எதுவும் போடப்படவில்லை என்றாலும் விசாரணை என்பது ரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்றம் என்ற பெயரில் கூண்டிற்குள் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல், கோவை நடுவண் சிறை அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் விசாரணை நடந்தது.

இத் தொடர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தமிழகத்தில் தீண்டப்படாத கட்சியாக இருந்த பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இவ் வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கண்ணபிரான், திருமலைராசன், விருதாசல ரெட்டியார், முகமது அபுபக்கர், எனது சீனியர் ப.பா.மோகன் அவர்களும் சிறப்பாக வழக்கை நடத்தினார்கள்.

1.8.2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்துல்நாசர் மதானி உட்பட 8 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். 43 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும், 70 பேருக்கு 13 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 7ஆண்டுகள் என்று தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சுமார் 100 பேர் சிறையில் இருந்த நாட்களைக் கழித்து  சிறை மீண்டனர்.

நீதியின் முன் அனைவரும் சமமா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இசுலாமியர்கள் 10ஆண்டுகள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார்கள். இவர்களுக்கு வழக்கின் தீர்ப்பு நாள் வரை பிணை வழங்கப்படவில்லை. 18 இசுலாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது; காவல் துறையும் பிணை வழங்கலை எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லீம்கள் என்ற காரணத்தால் பிணை மறுக்கப்பட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூற இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அப்துல்நாசர் மதானி ஒரு காலை இழந்தவர். கடுமையாக நோய்வாய்பட்டு இருந்த நிலையில் அவர் உடல் நலனைக் காரணம் காட்டியும் கூட, பிணை மறுக்கப்பட்டது. இந்த நாட்டில் சங்கராச்சாரிகளுக்கு ஒரு நியாயம், மதானிக்கு ஒரு நியாயம்!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மதானி மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றைக் கூட காவல் துறையால் நிரூபிக்க முடியவில்லை.

10 ஆண்டுகள் அநீதியாக சிறை வைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? 18 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கூட, ஒரு நாள்கூட தண்டிக்கப்படவில்லை.

மேற்கண்ட வழக்குகளில் இஸ்லாமிய மக்களை மட்டுமே தண்டித்து நீதிமன்றங்களும் தங்களின் நீதியை நிலைநாட்டிக்கொண்டு நீதித்துறை வரலாற்றிற்கு சிறப்பு சேர்த்தன‌.

இஸ்லாமிய சிறைவாசிகளும், அவர்களின் முன் விடுதலைக்கான கோரிக்கைகளும்

2008ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வதாக அன்றைய கலைஞர் அரசு அறிவித்தது.

10ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் தங்கள் முன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில், துரோகம் என்பதற்கு மறு பெயர் எடுத்த கருணாநிதி, இசுலாமியர்கள், நக்சல்பாரித் தோழர்கள், தமிழ்தேசிய விடுதலைக்காக‌ சிறைப்பட்ட தோழர்களுக்கு மட்டும் பல்வேறு சட்டப்பிரிவுகளில், அவசர அரசாணைகளைப் பிறப்பித்து இவர்களின் முன் விடுதலையைத் தடுத்து மீண்டும் துரோகம் செய்தார்.

அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள், மத மோதல்களில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிட்டு அந்த வழக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு முன் விடுதலை கிடையாது என்று அரசாணை வெளியிட்டு அவர்களின் முன் விடுதலையில் மண் அள்ளிப்போட்ட பெருமை கருணாவையே சாரும்.

தனது மகனின் அடியாட்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கு ஏதுவாக 7 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்திரவிட்டவர் இசுலாமிய சிறைவாசிகளுக்கு அந்த உரிமையை மறுத்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்து இருக்கவேண்டும். ஆனால் சட்டம் இந்த நாட்டில் பாகுபாடு கொண்டதாகவே இருக்கிறது. இசுலாமியர்கள், தலித்கள், நக்சல்பாரிகள் என்று பார்த்துப் பார்த்து சட்டம் கடமையைச் செய்யும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறது.

இசுலாமிய,அரசியல் சிறைவாசிகளின் துயர சிறைவாழ்வு

தண்டனை என்பதற்கு ஒரு வரையறை வேண்டும். ஆனால் இந்திய சட்டங்கள் அப்படியான முடிவான வரையறைக்குள் வருகிறதா என்று பார்த்தால் இல்லை.

தண்டனையின் நோக்கம்தான் என்ன?

1.குற்றம் செய்பவர்களைத் தடுத்து தனிமைப்படுத்தி வைப்பது. மீண்டும் அக்குற்றம் நிகழாவண்ணம் தடுப்பது.

2.அவர்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக சமூக அமைப்பில் இருந்து, அவர்களின் குடும்ப வாழ்வியலில் இருந்து தனிமைப்படுத்தி அக்குற்றத்தை உணரவைப்பது.

3.மீண்டும் அக்குற்ற செயல்களில் ஈடுபடாவண்ணம் அவர்களைத் திருத்துவது.

இவைகள்தான் கைது, காவல், சிறை போன்றவற்றின் அடிப்படையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறையில் ஒருவரை தடுத்து வைப்பது என்பது அவர்களை திருத்தி சமூகத்தில் மீண்டும் அவர்களை வாழ வைக்கவேண்டும். அதற்கு ஒருகால எல்லை வேண்டும். தமிழக சிறைகளில் இசுலாமிய சிறைவாசிகளுக்கு சில ஆண்டுகள் வரை சிறைகளில் ஏற்பட்ட கடுமையான சூழல் தனது எதிரிகளுக்குல் கூட வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு இருந்தது. எழுத்தில் வடிக்க முடியாவண்ணம் சிறைக்கொடுமைகளை இசுலாமிய சிறைவாசிகள் அனுபவித்தனர். இவர்களைப் பார்க்கவரும் உறவுகள் சந்திக்கும் நெருக்கடிகள் கொஞ்சம் அல்ல. உளவுத் துறையின் கண்காணிப்புகள், சிறைவாயிலில் இருந்து சந்திக்கப்போகும் இடம் வரை தொடரும் சோதனைகள், அவமானங்கள், அதுவும் இசுலாமியப் பெண்கள் படும் துயரம் இனி ஒருமுறை சிறையில் வந்து தன் உறவுகளை சந்திக்க வேண்டுமா என்று எண்னம் கொள்ளும் அளவிற்கு இருந்தது; இருக்கிறது.

சிறைவாசிகளுக்கான உரிமைகளும் இசுலாமிய சிறைவாசிகளும்

தமிழக சிறைகளில் சிறைப்பட்டிருக்கும் சிறைவாசிகளுக்கு பரோல் என்று அழைக்கப்படும் சிறைவிடுப்பு உண்டு. ஒருவாரம், ஒரு மாதம் என்று விடுப்பு அனுமதிக்கப்படுவது உண்டு. வெளியில் வந்தவுடன் அதை நீட்டிக்கவும் வழி உண்டு. அமைச்சர் பரிந்துரை விடுப்பின் மூலம் மாதக்கணக்கில் பரோலில் வெளியில் இருக்கலாம். இது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இசுலாமிய சிறைவாசிகளுக்கு இந்த உரிமை முற்றாக மறுக்கப்படுகிறது. மீறி அனுமதித்தாலும் வழிக்காவலோடுதான் அனுமதிக்கப்படுகிறது. இசுலாமிய சிறைவாசிகள் விடுப்பிற்காக விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டும். ‘வழிக்காவலர்கள் இல்லை சில நாட்கள் காத்திருக்கவேண்டும்’ என்ற பதிலே வரும்.

சிறையில் இருக்கும் அனைவரும் வழிக்காவலோடுதான் சிறை விடுப்பு அதாவது பரோலில் போகிறார்கள் என்று எண்ணி விடாதீர்கள். மற்ற சிறைவாசிகள் வழிக்காவல் இல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட விடுப்பு நாட்களில் சுதந்திரமாக எங்கும் சென்று வரலாம். ஆனால் இசுலாமிய சிறைவாசிகள் காவலர் காவலோடு பயங்கர ஆயுதங்களின் பாதுகாப்போடு தான் அதிகபட்சம் இரண்டுநாட்கள் விடுப்பில் செல்ல முடியும். இப்பொழுது கூறுங்கள் சட்டம் அனைவருக்கும் பொதுவானதா?

ஒரு சமுகத்தை தொடர்ச்சியாக குற்றப் பரம்பரைபோல் பார்ப்ப‌தும், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அரசு மக்களிடம் பரப்புவதும், அதற்கு ஊடகங்கள் துணை நிற்பதும் அரச பயங்கரவாதத்தின் உச்சமாகவே இருக்கிறது. மதச்சார்பற்ற நாடாக பீற்றிக்கொள்ளும் அரசுகள் ஒரு சமூகத்தின் மீது கொள்ளும் மதிப்பீடுகள் வெட்ககரமாகவே இருக்கிறது.

இசுலாமிய சிறைவாசிகளின் முன் விடுதலையும் போராட்ட களங்களும்

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் துயருற்றுவரும் இசுலாமிய சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தமிழகத்தில் பல போராட்டக் களங்களை கண்டாலும், அது இவர்களின் முன் விடுதலைக்கான வலிமையைச் சேர்க்கவில்லை என்பதுதான் உண்மை. தொடர்போராட்டங்களை மக்களிடம் வீரியமாக எடுத்து சென்றால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இசுலாமிய மக்களும் அவர்களைப் பிரதித்துவப்படுத்தும் இசுலாமிய அமைப்புகள் மட்டுமே போராடினால் தீர்வு கிடைத்துவிடுமா?

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக அவர்களின் விடுதலைக்கான நியாங்களை பொதுச்சமூகத்திடம் எடுத்துப்போகவேண்டிய தேவை இருக்கிறது. பொதுத்தளத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியர்கள், பெரியாரியல்வாதிகள், மனித உரிமைப்போராளிகள் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுக்களத்தை கட்டியமைப்பதின் மூலமே இவர்களின் விடுதலை சாத்தியம் என்று எண்ணுகிறோம்.

தமிழக இசுலாமிய இயக்கங்களே..!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு பொதுக்களம் அமைப்போம்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல், ஆயுள் சிறையாளிகளின் முன்விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

10 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் குடும்பம் விட்டு, உறவை விட்டு சிறைப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்காக இப்பொழுதே உங்கள் குரல் ஒலிக்கட்டும். அமைப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றைக் கோரிக்கையாம் தமிழக சிறைகளில் வாடிவரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை என்ற முழக்கத்தின் மூலம் ஒன்றிணைவோம்.

தமிழக அரசே..!

தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், மற்றும் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையைக் கோருகிறோம்.

முந்தைய ஆட்சியில் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையில் அரசின் பாரபட்ச போக்கால் 71 இசுலாமிய சிறைவாசிகள் முன் விடுதலைக்குத் தகுதி இருந்தும் அவர்களை விடுதலை செய்யவில்லை. கடந்த ஆட்சியின் தவறுகளைக் களைந்து எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்த நாளில் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலையைக் கோருகிறோம்.

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலையை தடுக்கும் நோக்குடன் பிறப்பிக்கப்பட்ட ஒரு சார்பான அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்யக் கோருகிறோம்.

மற்ற சிறைவாசிகள் போலவே இசுலாமிய சிறைவாசிகளுக்கு வழிக்காவல் இல்லாமல் பரோல் விடுப்பு அளிக்கக் கோருகிறோம்.

சிறையில் இனம் புரியா நோயால் தினம் செத்துக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

சிறையில் தங்கள் உறவுகளை சந்திக்கவரும் இசுலாமியர்களை மாத்திரம் அவமானப்படுத்தும் நோக்குடன் சோதனை செய்வதை தடுத்து நிறுத்தவேண்டுகிறோம்.

மனித உரிமைப்போராளிகளே..! சனநாயக சக்திகளே..!

தமிழக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு குரல் கொடுங்கள்..!

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தொடர் பிரச்சாரம் மூலம் ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்துவோம். செப்.15 இவர்களின் விடுதலையை சாத்தியமாக்குவோம்.

ஒன்றிணைவோம் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காய்…!

– உமர்கயான்.சே
ஒருங்கிணைப்பாளர்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தமிழ்நாடு

(நன்றி: கீற்று)