கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஹிந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயல்பாடுகள் முழு மூச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாட்டில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பிரச்னைகள் பல தலைவிரித்தாடும்போது, பல்வேறு மதத்தினரிடையே மோதல்கள் ஏற்படும் வகையில் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பகிரங்கமாகவே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதிகளும் காற்றின் திசையில் பறந்து பயணிக்கின்றன. ஓட்டுப் போட்டவர்கள் உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சில சாதனைகளைப் பார்ப்போம்.
கருப்புப்பணமும் குரங்கு பல்டியும்:
“நூறு நாட்களில் வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவோம்!” என்றும் “இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கும் ரூபாய் 15 லட்சத்தால் நிரம்பும்!” என்றும் வாக்குறுதி அளித்துவிட்டு, அப்படிச் சொல்லவே இல்லையே என குரங்கு பல்டி அடித்துள்ளனர் மத்திய அமைச்சர்களும் பிஜேபி தலைவர்களும்.
கருப்புப் பணத்தை மீட்பது ஒரு புறமிருக்கட்டும். கருப்புப் பண முதலைகளின் பெயர் பட்டியலைக் கூட இந்திய மக்களுக்கு வெளியிட தயாராக இல்லை பாஜக அரசு. மக்களுக்கு வெளியிடுவது கூட இரண்டாம் கட்டம், முதற்கட்டமாக நீதிமன்றத்தில் இப்பெயர் பட்டியலை சமர்ப்பிக்கக்கூட இவ்வரசு தயக்கம் காட்டியுள்ளது.
“வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களை நீங்கள் ஏன் பாதுகாக்க வேண்டும்? கருப்புப் பணத்தை மீட்கும் பொறுப்பை அரசிடம் நாங்கள் விட முடியாது. வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி சிறப்பு விசாரணைக் குழு கவனித்துக் கொள்ளும்” என்று உச்ச நீதி மன்றம் வன்மையாக கண்டித்து, “வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் அனைத்தையும் குறிப்பிட்ட தேதியில் சமர்ப்பிக்க வேண்டும்!” என்று மத்திய அரசுக்கு முகத்தில் அறைந்தார்போல் உத்தரவு பிறப்பித்த பிறகே மூடப்பட்ட உறையிலிட்டு அப்பட்டியலை சமர்ப்பித்தது பாஜக அரசு.
பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் பேருதவியுடன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடி, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கள்ளக் கணக்குகளை நாட்டு மக்களுக்கு எப்படி அறிவிப்பார்? அப்படி அறிவித்தால் அது துரோகமன்றோ? அறம் நிறைந்த தலைவர் (?!) அறமற்று நடப்பாரோ? போன்ற கேள்விகளை ஓட்டுப் போட்டவர்களே வெளிப்படையாக விவாதிக்கத் துவங்கிவிட்டனர்.
எரிபொருள் விலைக்குறைப்பும் கலால் வரி உயர்வும்:
எரிபொருளில் ஏற்பட்டுள்ள பாரிய விலைக்குறைப்பினால் உலகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலுக்கு 91 காசுகளும் டீசலுக்கு 84 காசுகளும் குறைக்கப்பட்ட இரண்டே தினத்தில் பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.2.25ம் டீசலுக்கான கலால் வரி ரூ.1ம் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த கலால் வரி விதிப்பை பெட்ரோலிய விற்பனை நிறுவனங்கள் தற்காலிகமாக தாங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. இதனை எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களான இந்திய மக்கள் மீது சுமத்தலாம். ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் தேர்தல் நுண்ணரசியலே இதற்கு காரணம்.
அதே நேரத்தில் உலகச்சந்தையில் ஏற்பட்ட விலைக்குறைப்பினால் பாகிஸ்தானில் எரிபொருள் விலை கடுமையாக குறைந்து வருகின்றது. அங்கு பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் 84.53 (INR மதிப்பு 51.69) மட்டுமே; ஆனால் இந்தியாவிலோ ரூ.63.33. அதாவது, சர்வதேச விலையை விட கிட்டத்தட்ட 20% அதிக விலையில் நமக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்ற ரிப்போர்ட் அதிர வைக்கிறது.
பண வீக்கம் – வளர்ச்சி – விலையுயர்வு:
“இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ICU வில் கிடப்பதற்குக் காங்கிரசே காரணம்!” – இது நவம்பர் 14, 2013ல் மோடி சொன்னது. ஆனால் அந்தோ பரிதாபம், கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு இந்திய ரூபாயின் வீழ்ச்சி நவம்பர் 29, 2014 ல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.08 ஆகி தலையை கிறுகிறுக்க வைத்துள்ளது. இது பிஜேபி அரசின் பொருளாதார கொள்கையின் தோல்வியையே காட்டுகின்றது.
வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடியின் ஆட்சியில், கடந்த காலாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பார்த்தால், மோடி கூறிய “அச்சே தின் (நல்ல நாள்)” இது தானா என்று பொதுமக்களுக்கு வயிறு கலக்க ஆரம்பித்து விட்டது.
‘அச்சா தின்’ வீழ்ச்சிகள் பலவற்றில் சில:
– மொத்த உள்நாட்டு உற்பத்தி – 5.3% வீழ்ச்சி
– விவசாய உற்பத்தி – 3.2% வீழ்ச்சி
– உற்பத்தி வளர்ச்சி – 0.1% வளர்ச்சி
பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த உடனேயே விலையேற்றமும் கூடவே வந்தது. அவற்றில் குறிப்பிட்ட சில:
– ரயில் கட்டணம்
– சமையல் எரிவாயு
– மருந்துகள்
– சர்க்கரை
இதற்கு முந்தைய ஆட்சியில், விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி எத்தனைப் போராட்டங்களை பாஜக முன்னெடுத்தது? இப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் துயரங்களை கிஞ்சிற்றும் உணராது விலையேற்றத்தை மேற்கொள்கிறார்கள். எனில், மக்கள் நலன் பேசுவதெல்லாம் எதிர்கட்சியாய் இருக்கும்போது மட்டும் தானோ? எனும் விவாதங்கள் மக்கள் மன்றங்களில் தூள் கிளப்புகின்றன.
பெண்கள் பாதுகாப்பு – ஓர் கேள்விக்குறி:
ஓடும் பேருந்தில் வன்புணரப்பட்டு தூக்கி வீசப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் மரணத்தை மீடியாக்கள் துணையுடன் பெரும் அரசியலாக்கி, இந்தியத் தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர் பிரச்சாரம் செய்து டெல்லியில் ஆட்சி அரியணையில் வீற்றிருந்த காங்கிரஸைத் தோல்வி அடையச் செய்தது பாஜக.
“மிஸ்டர் க்ளீன்” என்று அழைத்துக் கொள்ளும் மோடி-யின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் “நிஹால் சந்த்” என்பவர் வன்புணர்வு வழக்கில் ராஜஸ்தான் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி என்பது கசக்கும் உண்மை. காவல்துறையிடமிருந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு குற்றவாளி, அச்சமயத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கு பெற்ற வீடியோ கோப்பை தூர்தர்ஷன் வாயிலாக காண நேரிட்டது இந்தியாவின் சாபக்கேடு.
தலைநகர் டெல்லியின் நிலையோ அந்தோ பரிதாபம். பெண் ஒருவரை வன்புணர்ந்த UBER டாக்சி டிரைவர் “சிவராம்” இப்போது காவல்துறையின் பிடியில். இது மட்டுமின்றி, தினசரி பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன. டெல்லியில் பாஜகவின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையால், பெண்கள் பாதுகாப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என இச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
ஹராம் ஜாதே வெளியேறு:
ஒரு நாட்டின் அமைச்சரே அந்நாட்டின் குடிமக்களை “நாட்டை விட்டு வெளியேறுங்கள்!” என்று கூறும் அதிசயத்தை உலகில் எங்கும் பார்க்க முடியாது – இந்தியாவைத் தவிர. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ராமரின் பிள்ளைகளே; இதனை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறட்டும்!” என பகிரங்கமாக அறிவிப்புச் செய்கிறார் மத்திய அமைச்சர் சாத்வி (?!) நிரஞ்சன் ஜோதி. இதையே தான் ஆர்.எஸ்.எஸ் பல்லாண்டு காலமாக சொல்லி வருகிறது.
இதைவிட ஒரு படி மேலாக, “ராம் ஜாதே சாஹியே? ஹராம் ஜாதே சாஹியே? – ராமரின் பிள்ளைகள் உங்களை ஆள வேண்டுமா? அல்லது முறை தவறிப் பிறந்தவர்கள் ஆள வேண்டுமா?” என்று பி.ஜே.பி / ஆர்.எஸ்.எஸ் அல்லாதவர்கள் அனைவருமே முறை தவறிப் பிறந்தவர்கள் என்று குரல் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியர்களை இழிவு படுத்தியிருக்கிறார் சாத்வி.
இவ்வாறு பேசுவது இவருக்கும் பி.ஜே.பியினருக்கும் முதல்முறை அன்று. கடந்த நவம்பர் 21, 2013-ல் ஆக்ராவில் நடைப்பெற்ற கூட்டத்தில் “ராம் பிரதாப் சவுஹான்” என்பவர் மோடியின் முன்னிலையிலும், மார்ச் 2, 2014ல் லக்னோவில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் சாத்வி நிரஞ்சன் ஜோதியே மோடியின் முன்னிலையிலும், மே 1, 2014ல் பரேல்லியில் நடைப்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஒருவர் ராஜ்நாத் சிங் முன்னிலையிலும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளனர்.
இது போன்று எப்போதும் வன்முறை தூண்டும் வகையில், காழ்ப்புணர்ச்சியும் குரோதமும் கொண்டு பேசுபவர்களும், பல இடங்களில் குண்டுவைத்து பொதுமக்களை கொன்று விட்டு, பின்னர் அப்பழிகளை அப்பாவிச் சிறுபான்மையினர் தலையில் போடுபவர்களும் (ப்ரக்யா சிங்) ஹிந்துத்துவ சாத்விகளாய் இருப்பது ஏன் என்ற கேள்வி அப்பாவி இந்துக்கள் மனதில் எழ ஆரம்பித்துவிட்டது.
கிராமத்துப் பெண்கள் கீழ்த்தரமானவர்கள்:
இந்தியா முழுவதும் சாத்வியின் அகங்காரக் கருத்துகள் எதிர்ப்பலைகளை ஏற்படுத்த, எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்று திரண்டு அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தை முடக்கியவுடன் அமைச்சரைக் காக்க களமிறங்கிய மோடி, “அவர் பாவம், கிராமத்துப் பெண், அவரிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறி பலமான அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் மொத்தப்பரப்பில் 70 % அடங்கிய கிராமங்களையும் அங்கு வசித்து வரும் மக்களும் இப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் என்ற அர்த்தத்தில் மோடி சிறுமைப் படுத்தியுள்ளார்.
நல்லவேளை, டாக்ஸியில் வன்புணர்வு செய்த குற்றவாளியான சிவராம் கிராமத்துப் பையன், மன்னித்து பெருந்தன்மையாக விட்டு விடுங்கள் என்று கூறி அமைச்சர் ஆக்காமல் விட்டாரே! என்ற ரீதியிலான நக்கல்கள் சமூக வலைத்தளங்களில் மக்களிடையே எழுந்துள்ளன.
பகவத் கீதை – தேசியப் புனித நூல்:
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை, இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறி இந்திய அரசியல் சாசனத்தை உடைத்துள்ளார். இந்தியா போன்ற மதச்சார்பற்ற குடியரசு நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறித்தவ, சீக்கிய, ஜைனம் போன்ற பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குரிய புனித நூலைப் போற்றி வருகின்றனர். பல்சமூகக் கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் அனைத்து மதங்களையும் அவற்றின் புனித நூல்களையும் சமமாகப் பாவித்து மதச்சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்திய சட்டமைப்பே மத்திய அரசின் அடிப்படை கோட்பாடாக இருந்திட வேண்டும். இது தான் ஒரு மதச் சார்பற்ற குடியரசின் இலக்கணமும் ஆகும்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆளும் பாஜகவே மீறும் போது ஒவ்வொரு மதத்தினரும் தங்களது புனித நூலை தேசத்தின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவர். இவை இந்தியாவிற்குள் பிரிவினைவாத சக்திகள் வளரும் அபாயத்தை உருவாக்கும். அச்சக்திகள் தேசத்தைத் துண்டாடும் செயல்களை ஊக்குவிக்கும் என்பதைச் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
காங்கிரஸ், கடந்த 60 வருடங்களில் இந்தியாவை நாசமாக்கியுள்ளது – மோடி அன்று
வெறும் ஆறே மாதங்களில், காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததை விட என் அரசு சிறப்பாக செய்துள்ளது – மோடி இன்று
லோக்பாலும் ஊழல் எதிர்ப்பும்:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெறுவதற்காக விதை விதைத்தவர்களில் காந்தியவாதி அண்ணா ஹஸாரேவும் ஒருவர். அவர்தான் காங்கிரஸ் அரசாங்கத்தின் காலகட்டத்தில் நடைப்பெற்ற ஊழல்களுக்கு எதிராக மக்கள் இயக்கம் (?) கண்டு பெரும் போராட்டங்களையும் உண்ணா விரதங்களையும் மேற்கொண்டு காங்கிரஸ் மீது மக்களிடையே வெறுப்பை விதைத்தவர். பிஜேபி தலைவர்களுடன் அவர் கொண்டிருந்த கள்ள உறவு வெளிச்சத்துக்கு வந்தவுடன் அவருடைய போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின. மக்கள் ஹஸாரே மீது வைத்திருந்த நம்பிக்கையும் தகர்ந்தது.
அண்ணா ஹஸாரே வைத்த முக்கியமான கோரிக்கை லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது. இறுதியில் காங்கிரஸ் அதனை ஒத்துக் கொண்ட போதும், தான் முன்வைத்த வடிவத்திலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டார் ஹஜாரே. பிஜேபி தலைவர்களும் அவருக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்து காங்கிரஸின் நிலையை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அன்று அவ்வாறு விமர்சித்த பா.ஜ.க, இன்று ஆட்சி அரியணையில் அமர்ந்த பின்னர் லோக்பால் மசோதாவின் நிலையோ கவலைக்கிடம் ஆகியுள்ளது. லோக்பால் மசோதாவை செயல்பாட்டுக்குக் கொண்டுவர எவ்வித கால நிர்ணயமும் செய்யப்படவில்லை என நவம்பர் 27, 2014 அன்று பிஜேபி அரசு அறிவித்துள்ளது.
பிஜேபி அரியணை ஏறிவிட்டதால் அண்ணா ஹஸாரேவும் தனது பணி முடித்த களிப்பில் ஓய்வெடுக்கிறார். இப்போது அவரிடம் லோக்பால் குறித்து கேட்டால், அப்படின்னா என்ன? என்று கேட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. தமிழருவிகள் உட்பட ‘காந்தியவாதிகள்’ என்று சொல்லிக் கொள்வோரின் நிலை ஏன் இப்படியோ?
லோக் ஆயுக்தா என்பது அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை வெளிக்கொணரும் ஒரு நீதி அமைப்பு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இவ்வமைப்பு இயங்கி வருகிறது.
இன்று பிரதமராக இருக்கும் மோடி, சில மாதங்களுக்கு முன் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்க பெரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மோடியின் எதிர்ப்பு காரணமாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், உயர் நீதிமன்றத்தின் அறிவுத்தலின் படியும், இவ்விஷயத்தில் மாநில அரசை புறந்தள்ளிவிட்டு குஜராத் ஆளுனர் லோக் ஆயுக்தாவை அமைத்து அதற்கான நீதிபதியையும் நியமித்தார். அவ்வாறு நியமிக்கப்பட்ட நீதிபதி R.A.மேத்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவந்தது மாநில அரசு. லோக் ஆயுக்தா விசயத்தில் உச்ச நீதிமன்றமே மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசுக்கு கொட்டு வைத்தது.
இந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் தான் “மிஸ்டர் க்ளீன்” புகழ் மோடி. இவரது தலைமையிலான பிஜேபி அரசில் லோக்பால் நிறைவேறுமா? என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி நிறைவேற்றபட்டால் கட்கரி போன்ற பிஜேபியின் மூத்த தலைவர்களின் கதி அதோகதி தான்.
– சுல்தான்
(மோடி அரசில் இந்தியர்களின் அச்சங்கள், பட்டியல் தொடரும்…)