விழி கண் குருடர்கள் – வினா, விடை! – 1

Share this:

டுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது? அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும். அப்படியான கேள்விகளும் பதில்களும்:

“இலங்கை குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக நடந்து வரும் தாக்குதல்களும் பல்வகை நெருக்கடிகளும் நடத்தப்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது!.

இலங்கை நெருக்கடிக்களின் நீட்சியாக, தற்போது கோவையிலும் மதுரையிலும் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் விசாரணை எனும் பெயரால் தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு உங்க ஆட்களின் செய்கைகள் தானே காரணம்? இப்படி நான் கேட்பதற்கு நீங்கள் வருத்தப்படக்கூடாது”

“நீங்கள் சொல்வது உண்மைதான். மூளைச்சலவை செய்யப்பட்ட மிகச் சிலரின் மதி கெட்ட செய்கையால் முழுச் சமூகமும் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கிறது”

“மூளைச்சலவை என்று நீங்கள் காரணம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு வகையான தப்பித்தல் என்று நான் நினைக்கிறேன். இனியும் நீங்கள் மூளைச்சலவை, அது, இது என்று காரணங்கள் கற்பித்துக் கொண்டிருக்க இயலாது. உங்கள் சமூகம் ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஏன் இப்படி ஆனார்கள்? அவர்களை வழி நடத்தும் சித்தாந்தம் எது? அவர்கள் தங்கள் செய்கைகளை நியாயப் படுத்துவதற்கான ஆதாரங்கள் உங்கள் மார்க்கக் கொள்கைகளிலேயே பொதிந்துள்ளனவா? அப்படியானால் அக்கொள்கைகளை கைவிட நீங்கள் தயாரா? உங்கள் கொள்கைகள் மாற்றம் செய்யப்பட முடியாதவை என்று இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? இதையெல்லாம் நீங்கள் ஆராய வேண்டும்”

“உங்கள் கேள்விகள் நியாயமானவையே. அவற்றிற்கு நான் பதில் சொல்லுமுன், ‘மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர்’ என்று நான் சொன்னதை நீங்கள் ஏற்க மறுத்ததன் காரணம் என்ன என்று சொல்லுங்கள்”

“சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்களையோ, மாற்றுக் கருத்துகளை பரிசீலிக்கும் வாய்ப்பு அறவே கிடைக்காதவர்களையோதான் மூளைச்சலவை செய்ய முடியும். இலங்கை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்கள். உங்கள் மார்க்கக் கல்வியிலும் தேர்ந்தவர்கள் என்றுதான் ஊடகங்கள் கூறுகின்றன”

“நீங்கள் சொன்ன இரு பிரிவினர் அல்லாது படுமோசமான இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள் . அவர்கள் மாற்றுக் கருத்துகளைப் பரிசீலிக்கக்கூட மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்கள்”

“அப்படியுமா இருப்பார்கள்?”

“தாம் ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர், அல்லது இயக்கத்தைத் தவிர பிற அனைத்துமே தவறானவை என்று தீவிரமாக நம்புபவர்கள் அவர்கள். அவ்வாறுதான் அவர்களின் தலைவர்கள் அவர்களை வார்த்தெடுக்கின்றார்கள். தம் கருத்தியல்களுக்கு மாற்றுக் கருத்து உடையவர்களை எதிரிகளாகக் கட்டமைத்துவிடுகின்றார்கள். இதன் மூலம் அத்தொண்டர்களின் கண்களும் காதுகளும் மூடப்பட்டுவிடுகின்றன. மாற்றுக் கருத்துகள் எதுவும் அவர்கள் உள்ளத்தில் புகுவது தடுக்கப்பட்டுவிடுகிறது. ‘நாம் செய்வது மட்டுமே சரி. நாம் மட்டுமே நேரான பாதையில் செல்கிறோம். மற்ற அனைவரும் தவறான வழியில் இருக்கிறார்கள் எனும் மாயக் கருத்தாக்கம் இவர்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் தலைவர்கள் சொல்வதை எந்தச் சிந்தனையுமின்றி கண் மூடித்தனமாக நம்பும் இவர்கள், தம் தலைவர்களின் தவறுகளைக்கூட நியாயப்படுத்திக் கொண்டு திரிவார்கள். இதில் பரிதாபம் என்னவென்றால் தங்களை உண்மையில் யார் இயக்குகின்றார்கள் என்பதைக்கூட இவர்கள் உணர்ந்து கொள்ள முயல்வதில்லை”

“ம்…இது போன்ற தொண்டர்கள் சிலர் எல்லா இயக்கங்களிலும் கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நீங்கள் இதை ஒரு காரணமாகச் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. நீங்கள் வைத்திருக்கும் அதே குர்ஆனைத்தான் அவர்களும் வைத்திருக்கிறார்கள். அதே குர்ஆனிலிருந்துதான் அவர்கள் வசனங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள். ‘காஃபிர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்’ என்ற குர்ஆன் வசனத்தைக் கொண்டு தங்கள் செய்கைகளை நியாயப்படுத்திக் கொள்கின்றார்கள். வார்த்தைக்கு வார்த்தை இன்ஷா அல்லாஹ் சொல்லி நீங்கள் வணங்கும் அதே அல்லாஹ்வைத்தான் தங்களுக்கு சாட்சியாக்குகிறார்கள். இதில் நீங்கள் எதை மறுக்கப் போகிறீர்கள்? அவர்களின் அல்லாஹ்வும் குர்ஆனும் வேறு என்பீர்களா? அல்லது அந்த வசனங்கள் குர்ஆனிலேயே இல்லை என்பீர்களா? அல்லது அந்த வசனங்களை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றா? அவ்வாறு குர்ஆனின் சில வசனங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடும் என்று இருந்தால் அது யாருடைய தவறு?”

“இல்லை, இதில் எதையும் நான் மறுக்கவில்லை. ஓர் உதாரணம் மூலம் இதை விளக்க முயற்சி செய்கிறேன்…

நாம் எல்லோரும் அறிந்த கதைதான் இது. பார்வையற்ற சிலர் முதன் முதலாக யானையைத் தொட்டு உணர்கிறார்கள். அவர்கள் உணர்வதை அவர்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ‘அது ஒரு சுவரைப் போன்றது, அது ஒரு தூணைப் போன்றது, அது தென்னை மரத்தைப் போன்றது, என கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்கள் அறிந்தவரை அது சரியான கருத்துதான். யானை என்ற விலங்கின் முழு உருவத்தைப் பற்றி அவர்கள் அறிந்திருக்காததால் அவர்களால் அந்த முடிவுக்குத்தான் வர முடிந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் மேலும் அதிகத் தகவல்களைப் பெற்றிருக்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்தால் அது அசைவதைக் கண்டு அது ஒரு பிராணி என்பதை அறிந்திருப்பார்கள். அதன் வாடையை உனர்ந்திருப்பார்கள். அது எழுப்பும் ஒலியைக் கேட்டிருப்பார்கள். இவையெல்லாவற்றையும் விட எளிமையான வழி பார்வையுள்ள ஒருவரிடம் தாங்கள் பார்த்தது எதை என்பதைப் பற்றி விசாரித்திருக்கலாம்”

“இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை”

“அவர்கள் தங்கள் தொடு உணர்வின் மூலம் அறிந்ததைவிட யானை பெரியது. அவர்கள் தங்கள் மனத்தில் இருத்திக் கொண்ட பிம்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒருவருக்கு அது சுவரைப் போல தெரிந்தது. அவருடைய அறிவுக்கு உட்பட்டவரை அது சரிதான். ஆனால் அது உண்மையில் சுவர் அல்ல; சரிதானே?”

“ஆம்!”

இதே உதாரணத்தை நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் அந்த ஆட்களுக்குப் பொருத்திப் பார்ப்போம். குர்ஆனின் சில வசனங்களை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் Context-ஐ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த வசனங்களிலிருந்து அவர்கள் புரிந்து கொண்ட கருத்திற்கு நேர்மறையான கருத்துகளைக் கொண்ட வசனங்களும் அதே குர்ஆனில் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இஸ்லாத்தின் மூலாதாரக் கொள்கைகளுடன் அந்த வசனங்கள் எப்படிப் பொருந்துகிறது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் தலைவர்களின் போதனைகளைத் தவிர்த்து வேறு எந்தக் கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

“இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்”

“ஒகே. இன்னோர் உதாரணம் சொல்கிறேன். ‘களவும் கற்று மற’ என்ற பழமொழியின் பொருள் ‘களவுத் தொழிலையும் கற்று சில காலம் பயன்படுத்தி விட்டுப் பிறகு மறந்து விடு’ என்பதாகும் என்று நான் சொன்னால் என்னைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். இது சரியான பொருள் அல்ல என்பது இப்போது எனக்கும் தெரியும். ஆனால் விபரம் புரியாத வயதில் இதைத்தான் அப் பழமொழியின் உண்மைப்பொருள் என்று நம்பிக் கொண்டிருந்தேன்”

“நானும்தான்”

“இந்தப் பழமொழியில் அல்லது அதை நாம் புரிந்துக் கொண்ட விதத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று நமக்கு ஏன் தோன்றியது? பழமொழி என்பது முன்னோர்களின் அனுபவ மொழி. ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள். அவை அச் சமுதாயத்தினரின் முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக இருக்கின்றன. பழமொழிகளைப் பற்றிய எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய அடிப்படையான புரிதல் இது. ஆனால் மேற்கண்ட களவு பற்றிய பழமொழி இந்த அடிப்படைக்கு மாற்றமாக இருக்கிறது. சமூகப் பொது நியதிகளுக்கு மாற்றமான தீங்கான ஒரு செயலை மூத்தோரின் அனுபவமொழியாகிய ஒரு பழமொழி ஊக்குவிக்குமா? இந்தக் கேள்வி நம் உள்ளத்தில் தோன்றியதால்தான் அப் பழமொழியின் உண்மைத் தன்மையைப் பற்றி நாம் ஆராய்கிறோம். அதற்கு வேறு ஒரு பொருள் இருப்பதை காண்கிறோம்.

அது போலவே இஸ்லாம் சில அடிப்படை வாழ்வியல் விதிகளைக் கொண்டது. அவை ஒன்றோடொன்று முரண்படாதவை. யாருக்கும் எந்த விதத் தீங்கும் விளைவிக்காமல் இணக்கமாக வாழ வேண்டும் என்பது அவ்விதிகளுள் தலையாயது. இதில் முஸ்லிம்கள், அல்லாதவர்கள் எனப் பாகுபாடு இல்லை. இதற்கு ஏராளமான ஆதாரங்களை குர்ஆன் வசனங்களிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்தும் அவரிடமிருந்து நேரடியாகப் பாடம் பயின்ற அவருடைய தோழர்களின் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தும் நாம் காட்டலாம். ஒரே ஓர் ஆதாரம் மட்டும் சொல்கிறேன்:

‘யாருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் மற்றவர்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார். யாரைக் குறித்து மக்கள் தம் உயிர், உடைமைகள் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே உண்மையான நம்பிக்கையாளர் ஆவார்’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு. திர்மிதீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூலில் இது பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

ஒரு சிறந்த முஸ்லிம் தன் நாவினால் கூட பிறருக்குத் தீங்கு விளைவிக்க மாட்டார் என்பது அடிப்படை விதியாக இருக்க அப்பாவி மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தீங்கு விளைவிப்பதை இஸ்லாம் அனுமதித்திருக்குமா? அப்படி எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை.

நீங்கள் முன்பு குறிப்பிட்ட அந்த காஃபிர்களின் கழுத்தை வெட்டச்சொல்லும் வசனம் இந்த அடிப்படை விதிக்கு முரணாக இருக்கிறது. முஸ்லிம் அல்லாதவர் என்ற காரணத்திற்காக மட்டுமே ஒருவரைக் கொல்ல முடியும் என்றிருந்தால் முஸ்லிம்கள் மக்காவை வெற்றி கொண்ட பிறகு அந்நகரில் முஸ்லிம் அல்லாத ஒருவர்கூட மிஞ்சி இருந்திருக்க மாட்டார். ஆனால் அதற்கு நேர் மாற்றமாக நிகழ்ந்த சம்பவங்களை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. நபியவர்களின் பேரணி அமைதியாய் மக்கா நகரில் நுழைந்தது. ஆரவாரமோ வெற்றி முழக்கங்களோ இல்லை. மக்கத்துவாசிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. யார் யார் முஸ்லிம்களுக்கு என்னென்ன தீமைகளை செய்திருந்தாலும் அனைவரும் அன்று மன்னிக்கப்பட்டனர். இஸ்லாம் இந்த நல்லிணக்கப் போக்கைத்தான் போதிக்கிறது”

“அப்படியானால் அந்த வசனத்திற்குப் பொருள்தான் என்ன?”

“பேசுவோமே …”


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.