மாத்யமம்: ஒரு முஸ்லிம் ஊடகத்தின் வெற்றிப் பயணம்!

Share this:

கேரள முஸ்லிம்கள், மாநில மக்கள் தொகையில் ஏறத்தாழ கால்வாசி பேர், இந்தியாவிலேயே அதிக சதவீதத்தில் கல்வியறிவு பெற்றவர்கள். சமுதாயத்தின் அதிகக் கல்வியறிவு சதவிகிதத்தின் விளைவாக முஸ்லிம்களின் சொந்த மலையாள நாளிதழை தந்துள்ளது.

இன்றைய தேதியில், பல்வேறு கேரள முஸ்லிம் அமைப்புகளால் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள், தனிப்பிரதிகள் மற்றும் செய்திதாள்கள் வெளியிடப் படுகின்றன. இவை மதத்தைப் பற்றி மட்டும் சார்ந்தில்லாமல் (பல வட இந்திய முஸ்லிம் பதிப்புகள் மதத்தை மட்டும் சார்ந்துள்ளன) சமூகம் மற்றும் அரசியலையும் அலசுகின்றன. இந்தப் பத்திரிக்கைகள் கேரள முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படவும் அவற்றின் மீதான முஸ்லிம்களின் பார்வையைப் பெறுவதிலும் மாநில அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் முஸ்லிமல்லாத சக மலையாளிகளுடைய கவனத்தைப் பெறுவதிலும் பல்வேறு சமுதாயத்திற்கிடையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுத்துவதிலும் இன்றியமையாத பங்கு வகித்துள்ளன.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கேரளப் பகுதியின் அதிக உறுப்பினர்களைக் கொண்ட, ‘ஐடியல் பப்ளிகேஷன் டிரஸ்’டால் 1987ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ‘மாத்யமம்’ தினசரி கேரளாவின் வெற்றிகரமான முஸ்லிம்களின் சொந்த நாளேடு என்ற மதிப்போடு திகழ்கிறது. மாநிலத்தில் அதிக விற்பனையாகும் பத்திரிகைகளில் மூன்றாவது இடம் வகிக்கிறது. இதன் தலைமைப் பதிப்பாளர் அப்துல் ரஹ்மான், “இது குறிப்பாக முஸ்லிம்களுக்காகவோ அல்லது இஸ்லாத்திற்காவோ மட்டுமான நாளிதழ் இல்லை” என வலியுறுத்தி கூறுகிறார். மாத்யமம் அனைத்துத் தரப்பு மலையாள வாசகர்களுடனும் இணைந்துள்ளது; முஸ்லிம்களுக்காக மட்டுமில்லாமல் தலித்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை சமுதாயத்தினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதுடன் பொதுவான விஷயங்களையும் கையில் எடுக்கிறது.

“நாங்கள் மாத்யமத்தை ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகப் பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

அவர் மாத்யமத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது, “லாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக ரீதியிலான பத்திரிக்கைளில் இருந்து வேறுபட்டு ஒழுக்கத்தையும் நீதியையும் வலியுறுத்தும் ஒரு மதிப்புமிக்க பத்திரிக்கை மாத்யமம்” என்கிறார்.

தற்பொழுது மாத்யமம் பல்வேறு பதிப்புகளாக கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு என கேரளாவிலிருந்து ஆறு நகரங்களில் இருந்தும் பெங்களூரு மற்றும் மங்களூர் என கர்நாடகாவிலிருந்து இரண்டு நகரங்களிலிருந்தும் வெளிவருகிறது.

தனி வளைகுடாப் பதிப்புகளாக‌, அரபு நாடுகளில் வாழும் மலையாளிகள் ஐந்து லட்சம் பேருக்குத் தனியாக செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது. துபை, பஹ்ரைன், குவைத், தோஹா, தம்மாம், ரியாத் மற்றும் ஜித்தா எனப் பல பகுதிகளில் வெளியாகி இந்த மண்டலத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் மலையாள‌ பத்திரிகையாக மாத்யமம் விளங்குகிறது. கூடுதலாக மாத்யமம் வாராந்திர பத்திரிகை 25000 பிரதிகள் வரை விற்பனையாகிறது.

தற்பொழுது மொத்த மாத்யமம் குழுமம் 500 முழுநேரப் பத்திரிகையாளர்களையும் சேர்த்து மொத்தம் 1200 பணியாளார்களைத் தன்னிடம் கொண்டுள்ளது.

போதிய விளம்பர வருவாய் இல்லாமல் போராடுவது மாத்யமம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும். அப்துல் ரஹ்மான் விவரிக்கையில், “செய்தித்தாள்கள் என்பன விளம்பரங்களில் இருந்து வரும் வருவாயிலிருந்தே உயிர் வாழ்கின்றன. ஆனால் நாங்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களை மட்டும் பதிப்பது என்பதை மிக முக்கியக் கொள்கையாகத் துவக்கத்திலேயே முடிவு செய்து விட்டோம். அரைகுறை ஆடையைணிந்த பெண்களின் படங்கள் அடங்கிய விளம்பரங்கள், வங்கி விளம்பரங்கள், மதுபானம், தவறான முறையற்ற முதலீடுகள் மற்றும் திரைப்படங்களுக்கான விளம்பரங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்தோம். நாங்கள் அதிக இழப்புகளை சந்திக்க இதுதான் காரணமாக அமைந்தது; இப்பொழுது கூட இவற்றை நாங்கள் சமாளித்தே செல்கிறோம்”.

“செய்தித்தாள்களில் இருந்து வரும் லாபத்தில் ஒரு பகுதி மாத்யமம் உடல் நலச் செயல்திட்டத்திற்காக (Health care programme) பயன் படுத்தப்படுகிறது. இது எங்களிடம் கூட்டாக உள்ள‌ மருத்துவமனைகளில் சாதி, மதம் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் மருத்துவ வசதிகளை இலவசமாக அளித்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் செலவில் 3000 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர்”.

திறமையான பத்திரிகையாளர்கள் அதிகம் இல்லாதது முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை என அப்துல் ரஹ்மான் விவரிக்கிறார். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் கடந்த வருடம் ‘மாத்யமம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ துவக்கப்பட்டது. தற்பொழுது பத்திரிகையின் கோழிக்கோடு அலுவலத்தில் இயங்கும் இந்தப் பயிற்சி மையம் ஜர்னலிஸத்தில் ஓராண்டு டிப்ளமோப் பயிற்சியை வழங்குகிறது. தற்சமயம் இந்து, முஸ்லிம்களில் ஆண்க‌ள் மற்றும் பெண்க‌ள் என‌ 14 மாணவர்களைக் கொண்டுள்ளது. கேரளாவில் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரே பத்திரிக்கையாளர் கல்வி நிறுவனம் இது. இந்த டிப்ளமோவில் மாத்யமமே களப்பயிற்சியை வழங்குறது. தேர்வு பெற்ற மாணவர்களுக்குச் செய்தித்தாள்களில் பணிபுரிய வாய்ப்பும் அளிப்பதாக அப்துல் ரஹ்மான் தெரிவிக்கிறார்.

* மாத்யமத்தின் வெற்றி, இந்தியாவில் உள்ள மற்ற முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு என்ன பாடத்தைத் தெரிவிக்கிறது? நாட்டின் பிற பகுதிகளில் முஸ்லிம்கள் நடத்தும் மற்ற பத்திரிகைகளில் இருந்து வேறுபட்டு மாத்யமத்தால் எப்படி வெற்றி நடை போட முடிகிறது?

“முஸ்லிம் பத்திரிகைகள் வெறுமனே முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாமல் அனைவரின் வரவேற்பையும் பெறும் வகையில் வெளிப்படையான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும்” என‌ அப்துல் ரஹ்மான் வலியுறுத்துகிறார்.

“ஒரு முஸ்லிம் தினசரி செய்தித்தாள் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், முஸ்லிம்களுக்கான மதச் செய்திகளை வெளியிடுவதோடு மட்டும் இருக்ககூடாது”.

அவர் கூறுகையில், “நம்முடைய பார்வைகளையும் பிரச்சனைகளையும் மிகப்பெரிய சமுதாயத்தின் மீது வழங்க இது ஒன்றே வழி. இல்லையென்றால் மற்றவர்கள் நம்முடைய விசயத்தை கவனமுடன் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் இதனால் நம்மால் முஸ்லிம் என்ற‌ சமுதாய வட்டத்தைத் தாண்டி எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது”

இது போன்ற எங்களது அணுகுமுறையால்தான் எங்களது பெரும்பாலான வாசகர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

நாங்கள் மதம் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து பதிந்து ஒரு எல்லையில் குறுகுவதில்லை. மற்ற செய்தித்தாள்களைப் போல செய்திகளையும் செய்தியைப் பற்றிய விமர்சனங்களையுமே தருகிறோம். மத விழாக்களில் நாங்கள் சிறப்புப் பதிப்புகளை வெளியிடுகிறோம். இது முஸ்லிம் பண்டிகைகளில் மட்டுமல்ல, மலையாள ஹிந்துப் பண்டிகளைகளான ஓணம், விஷு மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளுக்கும் வெளியிடுகிறோம்”.

அப்துல் ரஹ்மான் தொடர்ந்து கூறும்பொழுது அதே நேரத்தில் இவையெல்லாம் முஸ்லிம் நாளிதழ்கள் முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. மாத்யமத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் செய்திகளைச் செய்திகளாக தருகிறோம். அனைத்துச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். வெறும் முஸ்லிம்களின் முன்னேற்றம் பற்றிய செய்திகளை மட்டும் வழங்கி கொண்டிருப்பதில்லை.

ஆனால் செய்திகளைப் பற்றிய எங்கள‌து பார்வைகளையும் எங்களுடைய தலையங்கப் பகுதியில் முன்னிலைப் படுத்துகிறோம். மேலும் பல வல்லுனர்களையும் பங்கு பெறச் செய்கிறோம். மக்கள் எங்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கவும் நாங்கள் அனுமதிக்கிறோம். முஸ்லிம் பத்திரிகைகள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது ஒரேயொரு குறுகிய பாதையில் செல்வதிலிருந்து தடுக்கும்.

முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு அப்துல் ரஹ்மான் வழங்கும் மற்றொரு அறிவுரை “முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்களின் பார்வைகளையும் இடம்பெற அவர்களை அழைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான முஸ்லிமல்லாத எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் மாத்யமத்திற்காக எழுதுகிறார்கள். ஆரோக்கியமான பணிபுரியும் சூழ்நிலையை உருவாக்க முஸ்லிமல்லாத பத்திரிகையாளர்களை பணியமர்த்த வேண்டும், மேலும் அவர்களை முஸ்லிம்கள் சம்பந்தமான நிகழ்வுகளில் கவனத்தை செலுத்த நிர்பந்திக்கக் கூடாது. மாத்யமத்தில் 40% பத்திரிக்கையாளர்கள் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், மார்க்சிஸ்டுகள் மற்றும் நாத்திகர்கள். எங்களின் ஊழியர்களுக்கு அவர்களுடைய சொந்த அரசியலில் ஆர்வம் உண்டு. சிலர் முஸ்லிம் லீகுக்கும் சிலர் காங்கிரஸ் மற்றும் சிலர் கம்யூனிசத்திற்கும் ஆதரவளிப்பவர்கள். ஆனால் அவர்கள் ஒரு தொழில்முறையோடு பணிபுரியும்போது இது ஒரு விஷயமே இல்லை” என்கிறார்.

மாத்யமத்தின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி அப்துல் ரஹ்மான் கூறும்பொழுது, டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து தொடர்ச்சியாக வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு சாதாரண தொலைகாட்சி அலைவரிசை (மாத்யமத்தை போலவே கொள்கையுடைய), அதனுடன் கேரளாவிலிருந்து மேலும் சில பகுதிகளிலிருந்து புதிய பதிப்புகள் வெளியிடுதல் என்று மேலும் தங்கள் எல்லையை விரிவாக்க ஆவலுடன் தெரிவிக்கிறார்..

நிச்சயமாக நாவலைப் போல பத்திரிகைகளை வெளியிடும் மற்ற முஸ்லிம் ஊடகங்கள் மாத்யமத்திலிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி: புதிய பாதை


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.