போராட்டம் மூலமே விடுதலை சாத்தியப்படும்

Share this:

வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செய்திகளைச் சுழன்றுச் சுழன்று சேகரித்து வெளியிடும் ஊடகங்கள், இந்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு வகிக்கும் தலித் மற்றும் பழங்குடியினர் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தங்கள் பக்கங்களை ஒதுக்குவதில்லை. ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் ஒரு தலித் கூட இல்லை என்று 2006 இல் வெளிவந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இத்தகையதொரு சூழலில் தான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலித் பிரச்சனைகளைக் குறிப்பாக, அவர்கள் சந்திக்கும் வன்கொடுமைகள் பற்றிய பதிவுகளை பிரண்ட்லைன் இதழில் மிகவும் நேர்மையாகப் பதிவு செய்து வருகிறார், எஸ்.வி என்று பத்திரிகையாளர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

 

 

ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் பத்திரிகையாளராகப் பணியாற்றும் விஸ்வநாதனின் சொந்த ஊர் தூத்துக்குடி. 1961ஆம் ஆண்டு ‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ தமது பணியைத் தொடங்கிய இவர், அடிப்படையில் மார்க்சிய சிந்தனையாளர். இளம் வயதிலிருந்தே தமிழ் மற்றும் இடதுசாரி இலக்கியங்களின் பால் அவருக்கு இருந்த ஈர்ப்புதான் அவர் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக இயங்குவதற்கான மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. இவர்கள் ஆய்வு (1995 – 2004) செய்து ‘பிரண்ட்லைன்’ இதழில் வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பான Dalits in Dravidian Land என்ற நூல் ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.

சந்திப்பு: பாண்டியன்

—-ooOoo—–

 

ஊடகத்துறையில் தலித் பிரச்சனைகளை ஆய்வு செய்து எழுதுவது என்பதோ, வெளிக்கொணர்வது என்பதோ மிகவும் குறைவு. ஆனால், அதை நீங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செய்து வருகின்றீர்கள். அப்படி செய்ய உங்களைத் தூண்டியது எது?

 

தலித் பிரச்சனைகளை எழுதுவது என்பதை நான் ‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ இருந்த போதிலிருந்தே செய்து வருகிறேன். 1980களில் புளியங்குடி கலவரம் நிகழ்ந்த போது, நான் மதுரை ‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ துணை ஆசிரியர். இப்பொழுது செய்தியாளராக இருக்கிறேன். எழுதுவதற்கு வாய்ப்புள்ளவனாக இருக்கிறேன். அப்பொழுது செய்தி அறையில் உட்கார்ந்து கொண்டு, வருகிற பிரதியைத் திருத்தம் செய்து மேம்படுத்தி அனுப்புவது தான் எனது வேலை. 1983, 84 என்று கருதுகிறேன். புளியங்குடியில் நடந்த இந்து – முஸ்லிம் கலவரம் குறித்த செய்தி எனக்கு தெரிவிக்கப்படுகிறது. நான் அப்பகுதிக்குச் சென்றேன். ஏழை தலித் மக்களும் முஸ்லிம்களும் கணிசமாக வாழும் பகுதி அது.

“தலித்துகள் இந்துக்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே, உங்கள் கடவுள்கள், தேர்கள் இவையெல்லாம் எங்கள் பகுதிக்கு வருவதில்லையே, உங்கள் பக்கமே போகிறதே ஏன்?” என்று தலித் மக்கள் இந்து மதவாதிகளைக் கேட்டபோது, அதற்கு பதில் தரும் வகையில் தனியாக ஒரு தேரை செய்து கொண்டு ‘சக்தி ரதம்’ என்று சொல்லி, தலித் பகுதிகளுக்கு தனி ரதத்தை அந்த மதவாதிகள் இழுத்துக் கொண்டு வந்தனர். ஆனால் அது கோயில் ரதம் அல்ல. சில இடங்களுக்குச் செல்லும் போது தகராறு வருகிறது; அதைத் தொடர்ந்து தான் கலவரம். அப்பொழுது புளியங்குடியில் பயங்கரமான வன்முறைச் சூழல் நிலவுகிறது. எல்லோரும் பயந்து போய் கிடக்கிறார்கள். ஒருபக்கம் ஆதிக்கச் சாதிக்காரர்கள் இன்னொரு பக்கம் தலித்துகள்.

கிராமங்களைப் பார்த்தீர்களானால், முக்கிய சாலையிலிருந்து கிளைச்சாலை பிரியும். அங்கு முதலில் ஒரு தேவர் கிராமம் இருக்கும்; அதற்கப்புறம் காலனி இருக்கும். ஊரைத் தாண்டித்தான் தலித் பகுதிகளுக்குப் போக முடியும். இந்தப்பக்கம் சாதி இந்துக்கள். மறுபக்கம் பார்த்தால் போலிஸ்காரர்கள். தலித்துகள் அவங்க குடியிருப்புக்குப் போக முடியாது. மிகவும் பயந்த நிலையில் இருந்தார்கள்.

நீங்கள் அப்போதுதான் முதன் முதலாக அங்கே போயிருக்கிறீர்களா?

 

ஆமாம். பெரிய அளவில் செய்தி சேகரிக்கப் போனதில்லை. சின்னச் சின்ன நிகழ்ச்சிகளுக்கு செய்தியாளர்கள் இல்லாத சமயத்தில் நான் சென்றிருக்கிறேன். அப்பொழுது தான் என்னை புளியங்குடிக்கு போகச் சொன்னார்கள். அங்கே போனபிறகு ஒரு செய்தியைப் புரிந்து கொண்டேன். உண்மையில் அங்கு நடந்தது இந்து – முஸ்லிம் கலவரமில்லை. மாறாக, தலித்துகளின் மதமாற்றத்தை எதிர்த்து நடக்கக் கூடிய கலவரங்கள் அவை என்பதுதான் அது. அங்கு நான் பார்த்தபோது தலித்துகள் பாதுகாப்பில்லாமல் இருந்தார்கள். தலித்துகளின் துன்பங்களை நேரடியாகப் பார்க்க நேரிட்டது.

வெளிப்படையாகப் பார்த்தால், கலவரம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. அப்பொழுது தலித் என்ற பெயர் கூட பெரிய அளவில் வெளிவரவில்லை. புளியங்குடி பக்கத்தில் தென்காசியைத் தாண்டி தான் மீனாட்சிபுரம். அங்கே ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் கணிசமான அளவில் தலித்துகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தனர். அவ்வூரைப் போய் நான் பார்த்தேன். அந்த மக்களிடையே பேசினேன். அவர்கள் நிறைய செய்திகளை கூறினார்கள். ஏன் நீங்கள் மதம் மாறினீர்கள் என்று கேட்டதற்குப் பல காரணங்களை சொன்னார்கள். அதைப் பற்றிக் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

அதற்குப் பிறகு மதுரை ‘இந்தியன் எக்ஸ்பிரசி’லிருந்து சென்னைக்கு மாறுதலாகி வந்தேன். ‘எக்ஸ்பிரஸ் வீக் எண்ட்’ என்று ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தோம். அதற்கு என்னைப் பொறுப்பாளராகப் போட்டார்கள். அதில் புத்தக விமர்சனம் போன்ற சின்னச் சின்ன கட்டுரைகள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட்டன. படிக்கும்போது தமிழ் இலக்கியத்தில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. வேலைக்கு வந்த பிறகு அந்த ஆர்வம் குறைந்து விட்டது. கவிஞர் மீரா எனக்கு நண்பர். அவருடைய பதிப்பகம் வெளியிட்ட சில நூல்களுக்கு மதிப்புரை எழுதினேன். அவற்றிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு முன்னர் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா போன்றவர்களின் நேர்காணல்களை வெளியிட்டோம். எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் முதல் ஆங்கிலப் பேட்டியை நான் எடுத்து வெளியிட்டேன். இப்படி ‘வீக் எண்ட்’ மிகவும் பிரபலமடைந்தது. ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் துணை இதழாக வெளிவந்தாலும், அது தமிழ் கலை, இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் முக்கிய இடம் பெற்றது.

‘வீக் எண்ட்’இல் பத்தி எழுத எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் சிறப்புக் கட்டுரைகளை நான் எழுதிக் கொள்ளலாம். ‘எஸ்வி’ என்ற பெயரில் எழுதினேன். பின்னர் ‘பிரண்ட்லைன்’ பருவ இதழில் சேர்ந்தேன். 1993இல் தனம் என்ற சிறுமி சேலம் பகுதியில் பள்ளிக்கூடத்தில் ‘மேல்’ சாதியினருக்கான பானையில் தண்ணீர் குடித்ததால், தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தியைப் படித்து மிகவும் ஆதங்கப்பட்டேன். அந்த நேரத்தில் ‘பிரண்ட்லைன்’ பொறுப்பாசிரியர் தமிழ்நாட்டில் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து தீண்டாமை எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை குறித்து ஓர் ஆய்வு செய்யலாம் என்றும், அதற்கு மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு அமைத்து செல்லலாம் என்றும் சொன்னார். மூன்று பேரில் என்னையும் ஒருவராக சேர்த்துக் கொண்டார்.

வட மாவட்டங்களுக்கு ஒருவரும், மத்திய மாவட்டங்களுக்கு ஒருவரும் சென்றனர். என்னை தென் மாவட்டங்களுக்கு அனுப்பினார். தென் மாவட்டங்களில் சாதி கலவரங்கள் அவ்வப்போது தலைதூக்கிக் கொண்டிருந்த நேரம் அது. அம்பேத்கர் சிலையை அவமதிப்பது, தேவர் சிலையை அவமதிப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது அவை பற்றியெல்லாம் எழுதினேன். அப்பொழுதுதான் காரணை பிரச்சனை நடந்தது. மூன்று பேரும் தீண்டாமையை குறித்த ஆய்வுகளை எழுதினோம். நான் சென்ற பகுதிகளில் தலித்துகளின் மீது பெரும் தாக்குதல் நடக்கும் என யூகித்து எழுத முடிந்தது.

அந்த நேரத்தில் கொடியங்குளத்தில் தலித்துகள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். நான் கொடியங்குளத்திற்குச் சென்று அங்கு காவல்துறையினர் தலித் மக்களுக்கு எதிராக நடத்திய அத்துமீறல்களைப் பற்றியும் வன்முறை பற்றியும் எழுதினேன். எனக்கு அப்பொழுதுதான் தலித் சிக்கலில் உள்ள புதிய பரிமாணங்கள் கிடைத்தன. அங்கு தலித்துகள் கொஞ்சம் வசதியாக இருந்தார்கள். அப்பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்குப் போனாலும் குறைந்தது இருபது, முப்பது தலித் பட்டதாரிகளை நாம் பார்க்கலாம். அப்படித்தான் கொடியங்குளத்தில் தலித்துகளின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது காவல்துறை வன்முறை தான். அதை நான் பதிவு செய்திருக்கிறேன். இப்படித்தான் தலித் பிரச்சினைகளை எழுத ஆரம்பித்தேன்.

நீங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘பிரண்ட்லைன்’ இதழில், தலித் பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து எழுதுவது எப்படி சாத்தியமாயிற்று?

 

‘பிரண்ட்லைன்’ ஆசிரியர் என். ராம் அவர்கள், தலித் பிரச்சனையில் மிகுந்த அக்கறையுடையவர். அதனால்தான் என்னால் இந்தளவுக்கு தொடர்ச்சியாக இவ்விஷயத்தைப் பதிவு செய்ய முடிகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மதக் கலவரம் என்னும் போது ‘அமைதிப்பூங்கா’ என்று சொல்லப்படுகிறது. பெரியார் பிறந்த பூமி, திராவிட இயக்க மண், கம்யூனிசம் வளர்ந்திருக்கிற இடம் என்று சொல்லும் தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் தொடர்வது ஏன்?

மத விஷயத்தில் கூட, எப்போதும் அமைதிப் பூங்காவாக தமிழகம் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. கோயம்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி நாகப்பட்டிணம் போன்ற இடங்களில் மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. நாகப்பட்டிணத்தில் நடந்த கலவரத்தை நான் பதிவு செய்திருக்கிறேன். மதக் கலவரம் இல்லாமல் இருந்தது என்பது, எண்பதுகளுக்கு முன்பு. அதற்குப் பிறகு ஆங்காங்கே மதப் பூசல்கள் நடந்திருக்கின்றன. அவர்கள் வேர் விட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக, கன்னியாகுமரியில் ஆழமாக வேர் ஊன்றி இருக்கிறார்கள்.

‘அவர்கள்’ வேர் ஊன்ற ஆரம்பித்து விட்டார்கள் என்றால்…

‘அவர்கள்’ என்றால் மதவாதிகள். சங்பரிவார் அவர்களுடைய பழைய ரூபத்திலேயே ஆரம்பித்திருந்தனர்.

 

சங்பரிவார் வேர் ஊன்றத் தொடங்கிய பிறகு தான் மதக்கலவரம் மட்டுமல்ல, சாதிக் கலவரமும் ஏற்படத் தொடங்கியது என்கிறீர்களா?

மதக்கலவரங்களுக்கு முக்கியமான காரணங்கள் அவர்கள். அவர்களின் செயல் திட்டத்தில் சாதியின் ஒரு கூறும் இருக்கிறது. ஒரு பக்கம் சாதியத்தையும் வளர்க்க வேண்டும்; இன்னொரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிராகத் திரட்டப்படும் இந்துக்கள் அணி தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இப்படி ஒரு முரண் திட்டம் அவர்களுடையது. இந்து மதவாதிகளுக்கு ஓட்டு வாங்குவதும் முக்கியம்.

ஜனநாயகம் என்பதில் யாரையும் புறந்தள்ள முடியாது. தலித்துகளுக்கு ஓட்டு இருக்கிறதல்லவா! இந்திய அரசியல் சட்டம் தந்த மிகப்பெரிய சமூக நீதிக்கான ஆயுதம் ஓட்டு ஆகும். அதனால் அவர்களும் மதக் கட்டமைப்புக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்து மதத்திற்கு வெளியே இருந்தாலும் கூட, தலித்துகள் இந்து என்னும் அடையாளத்தோடு இருந்தால் தான் ஓட்டு வாங்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மீனாட்சிபுரத்திலே இருக்கிறவனையும் கொண்டு போகிறானே என்பதும், முஸ்லிம்கள் எண்ணிக்கையில் இந்துக்களை விட அதிகமாகிவிடுவார்கள் என்கின்ற தேவையற்ற பயமும் அவர்களுக்கு ஏற்படுவதால்தான் அப்படிப்பட்ட கலவரங்களை செய்கிறார்கள்.

மீனாட்சிபுரத்திற்கு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் போகிறேன். அங்கு ஒருவர் என்னை சந்திக்கிறார். சென்ற முறை நீங்கள் செய்தி சேகரிக்க வந்தீர்கள் தானே என்று நலம் விசாரிக்கிறார். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறேன். நலமாக இருக்கிறேன் என்றும் ‘முல்லா’வாக இருக்கிறேன் என்றும் கூறுகிறார். ஊருக்குள்ளே போகும்போது இப்பொழுது எல்லோரும் ‘சலாம் பாய்’ என்று சொல்லுகிறார்கள் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

அந்த ஊரில் முன்பு ஒரு சிறுவன் கூட வயது முதிர்ந்த ஒரு தலித்தை பேர் சொல்லித்தான் கூப்பிடுவான்; இப்பல்லாம் பெரியவர்கள் கூட என்னை ‘பாய்’ என்று சொல்கிறார்கள் என்று அவர்கள் சொன்னதாக நீங்கள் அதில் எழுதியிருந்தீர்கள்…

ஓ… அப்படியா! நான் அவரைக் கேட்டேன்: “மகிழ்ச்சியாக இருக்கிறதா சொல்றீங்க, ஆனா பல இழப்புகளை சந்திச்சிருப்பீங்களே?” உதாரணத்திற்கு இடஒதுக்கீடு இருக்காது. அதற்கு அவர், “எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எங்க பசங்க நல்லா படிக்கிறாங்க. உழைப்பு இருக்கு, அதனால் இடஒதுக்கீடு பற்றி கவலையில்லை” என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, “பள்ளிக் கூடத்துல ஸ்காலர்ஷிப் கொடுக்கும்போது புள்ளைங்கள எழுப்பி ‘போங்கடா போய் காசு வாங்கிக்கங்கடா’ என்று சொல்லி எங்களை இழிவுபடுத்துவார்கள். நாங்க கூனி குறுகிப் போயிடுவோம், அந்த அவமானத்தைத் தாங்க முடியாது. இப்ப அந்த அவமானம் எம்பிள்ளைகளுக்கு இல்லை. அப்போ இதே கிராமம் எங்களை ஒதுக்கிச்சி; இப்போ அதே கிராமம் தான் எங்கள ஏத்துக்கிச்சி” என்று கூறினார்.

 

சரி, சாதிக் கலவரத்திற்கு என்ன காரணம்?

 

இப்பொழுது நடப்பதை சாதிக் கலவரம் என்று சொல்ல மாட்டேன். 90களுக்குப் பிறகு நடந்தவையெல்லாம் சாதி ரீதியான வன்முறைகள்தான். எங்கு பார்த்தாலும் எதிர்வினையாகத்தான் இருக்கும். எதிரெதிரே மோதும் காட்சி என்று இப்போது இல்லை. இவர்கள் போய் இன்றைக்கு தாக்கிவிட்டு வந்தார்கள் என்றால், இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் போய் தாக்கிவிட்டு வருவதுதான் இப்பொழுது நடப்பது. தலித்துகள் இப்போது இந்த வன்முறைகளை தாங்கக்கூடியவர்களாக, எதிர்த்து தாக்குபவர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனால் எல்லா பகுதிகளிலும் அப்படி இல்லை. எங்கே ஓரளவு அவர்கள் திரண்டிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், இதுவே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து விடாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எதிர்த்து நிற்பது பிரச்சனைகளுக்கு தற்காலிகத் தீர்வினைத்தான் தருகிறது.

ஏதாவது இரண்டு சாதிகள் மோதிக் கொள்கிறார்கள். இதை வெறும் சாதி மோதலாகக் கருதாமல், அதற்குப் பின் இருக்கும் சாதிய சமூக அமைப்பை நீங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றீர்களா?

தனித்தனியே அதை சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்டுரையிலும் அது சில வார்த்தைகளிலேயே வெளிப்படும். சாதி என்பது இந்து மதத்தின் தரவு தான் என்பதையும் நான் சொல்லியிருக்கிறேன். தனியாக அதை எழுதவில்லை. அதுதான் செய்தியாளருக்கும், எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம். நான் செய்தியாளராகத்தான் இயங்க முடிந்தது. பத்தி எழுதுபவரைப் போல ஒரு செய்தியாளரால் பணியாற்ற முடியாது. இப்படி நடக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இப்படியெல்லாம் செய்கிறார்களே என்று ஆதங்கப்பட்டு சொல்ல முடியாது.

மாயாவதியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ‘பிரண்ட்லைன்’ இதழில் “தலித்தை அதிகாரப்படுத்துதல்’ என்று சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதிலும் தலித் அரசியல்தான் வலியுறுத்தப்பட்டிருந்தது. தலித் பிரச்சனைக்கு தலித் அரசியல் தான் தீர்வா?

அப்படியில்லை. தலித் அரசியல் என்பது இருக்கிறது; அதன் அவசியமும் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. வர்க்க ரீதியான திரட்சி இருக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நீண்ட காலக் கொள்கையும் இருக்க வேண்டும், குறுகிய கால நிலைப்பாடும் இருக்க வேண்டும். ஏனெனில், புரட்சி வரும்வரை யாரும் பட்டினி கிடக்க முடியாது. அதுவரைக்கும் மக்கள் வாழ்க்கை நடத்த வேண்டும். அதற்கு வர்க்க ரீதியான திரட்சியும் தலித்துகளின் திரட்சியும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஏனெனில், தலித்துகள் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்களில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார ரீதியாகவும் சுரண்டப்படுகிற தொழிலாளர்கள். இந்திய ரீதியாக ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உழைக்கும் வர்க்கத்தினர். ஆகவே வர்க்க ரீதியான திரட்சியும் இருக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் என்ற அடையாளமும் வேண்டும். அவர்கள் இருவரும் சமூக, பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டவர்கள். அம்பேத்கரே பல இடங்களில் இது பற்றிக் கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக வரும் தலித் உறுப்பினர்களை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அம்பேத்கரே அதை விரும்புகிறார்.

தனித்தொகுதியாக இல்லாமல் கட்சி ரீதியாகப் பிரிந்து கிடக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடைய கட்சிக்காகப் பணியாற்றுகிறார்கள். கட்சி அரசியலில் எவ்வளவோ நடக்கிறது. இப்பொழுது கூட ம.தி.மு.க. பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கிருஷ்ணன், எம்.பி.க்கள் நிதியிலிருந்து கொடுத்த பணத்தில், மாநில அரசு கட்டியிருக்கும் சமூகக் கூடத்தில் தலித்துகள் உள்ளே போக முடியாது என்பது தான் நிலை. அது பற்றிய சர்ச்சை வந்தபோது கூட, அந்த ம.தி.மு.க. எம்.பி. பெரிய தலையீடு எதுவும் செய்யவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.

அரசியல் இப்பொழுது எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அது மிகவும் மோசமானதாக, பயனற்றதாக அமைந்திருக்கிறதே?

ஆம், அரசும், கட்சிகளும் தருவது, ஒரு இடைக்கால நிவாரணமாகத் தான் இருக்க முடியும். இடதுசாரிகளுக்கு நீண்ட நாள் இலக்கு, குறுகிய கால வேலைத் திட்ட நிலைப்பாடும் இருப்பது போலவே மற்ற கட்சிகளுக்கும் இருக்க வேண்டும். நீண்ட கால இலக்கு என்பது சாதி ஒழிப்பு என்றால், அது ஒரே நாளில் நடக்கக் கூடியது அன்று. ஆனால் தலித்துகள் வாழ்வுரிமையை காப்பது, வன்முறைகளில் இருந்து அவர்களை மீட்பது இவையெல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும். இது குறுகிய கால வேலைத்திட்டம். ஆகவே தொழிலாளர் வர்க்கமும், தலித்துகளும் மட்டுமே வருங்காலத்தில் பெரும் சக்தியாக இருப்பார்கள். தொழிலாளர் வர்க்கத்தினர் தலித்துகளுக்கு இருக்கும் தனிப்பட்ட துன்பங்களை அறிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

சாதி ஒழிப்பு ஒரே நாளில் நடக்கப்போவதில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் கள ஆய்வுக்குப் போன இடத்தில் ஒருவர் உயிரோடு இருக்கும்போது, மதமாற்றத்தால் அவருடைய சாதி ஒழிந்து, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறாரே?

மதமாற்றம் அவர்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. எல்லோரையும் அது பாதிக்கும் என்றும் சொல்ல முடியாது. இடஒதுக்கீட்டை இழந்திருப்பது, அவருடைய சுயமரியாதை சார்ந்த விஷயமாக அவர் பார்க்கலாம். அவருக்கு ‘முல்லா’வாக இருப்பதே பெரிய பதவியாக இருக்கிறது. நிறைய பேர் இடஒதுக்கீட்டின் பயனை இழந்திருக்கிறார்கள். இடஒதுக்கீடு மட்டுமே தீர்வு என்றும் சொல்ல முடியாது. தொடர்ந்து போராடுவதன் மூலமாகத்தான் சாதியை ஒழிக்க முடியும். கையால் மலமள்ளும் தொழிலை தடுக்கும் சட்டம் இருப்பினும், அப்படி ஒரு சட்டம் இருப்பதே பலருக்கும் தெரியாதே.

மத மாற்றம் சாதிக் கொடுமைகளிலிருந்து மனிதனை விடுவிக்கிறதா, இல்லையா?

இந்த ஆய்வை வைத்துக் கொண்டு நான் அதை சொல்ல முடியாது. இதுவரைக்கும் அப்படி இல்லை. நான் பார்த்த வரைக்கும் மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு இல்லாமல் துன்பப்படுகிறார்கள் எனலாம். கிறித்துவத்தில் கிடைத்த அளவிற்கு சலுகைகள், இஸ்லாத்தில் கிடைத்ததா? பவுத்தத்திற்கு சென்றவர்களுக்கு அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இஸ்லாத்திற்கு சென்றவர்களுக்கு அப்படி இல்லை. தலித் கிறித்துவர்கள் விஷயத்தில் கூட கல்வி, அதனால் கிடைத்த பதவிகள், பொருளாதாரச் செழிப்பு போன்றவை அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருந்தாலும் சமூக அந்தஸ்த்தை உயர்த்தவில்லையே. எறையூரில் பார்க்கிறோமே? மதமாற்றம் தீர்வாக இருக்கும் என்று சொல்வது ஒரு மாயை. தலித்துகளுக்கான பயன்கள் மதம் மாறியவர்களுக்கு இல்லாமல் போகிறது. ஆனால் சுயமரியாதை கிடைக்கிறது. மரியாதை என்று எதை நினைக்கிறோமோ அது தான் மரியாதை. எல்லோரும் அப்படி இருக்க முடியுமா?

நீங்கள் பத்தாண்டுகளாக பத்திரிகையாளராக, சமூக ஆர்வலராக இருக்கிறீர்கள். வேறு என்ன மாதிரியான தீர்வை இதற்கு கூறுகிறீர்கள்?

போராட்டம் மூலமாகத்தான் விடுதலை சாத்தியப்படும். தைரியப்படுத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளின் மூலம், அவர்களை அடுத்த உயர்ந்த கோரிக்கைகளை வென்றெடுப்பவர்களாக மாற்ற வேண்டும். வர்க்க ரீதியான போராட்டமும், சாதி மேலாதிக்க ஒழிப்புப் போராட்டமும் இணைந்து நடைபெற வேண்டும். அப்படி இணைந்து நடக்கும்போது சாதி ஒழியலாம். இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் இருக்கிறது. தஞ்சாவூரில் சீனிவாசராவ் இரண்டையும் சேர்த்தே செய்திருக்கிறார்கள். தனது தோழர்களைக் கொண்டு சாதி ஒழிப்புப்போரையும் வர்க்கப் போரையும் இணைத்தே நடத்தியிருக்கிறார்.

 

நன்றி: கீற்று


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.