முஹம்மத் (ஸல்) நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி : குஷ்வந்த் சிங்

Kushwant_Singh
Share this:

புகழ்பெற்ற எழுத்தாளரும், மிகச் சிறந்த இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராகத் திகழுபவருமான திரு. குஷ்வந்த் சிங் “தி டெலக்ராஃப்” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு எழுதிய “நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி” என்ற ஆங்கிலக் கட்டுரையை சமீபத்தில் மொழி பெயர்த்து சத்தியமார்க்கம்.காம் வாசகரான சகோதரர் சாதிக் அனுப்பியுள்ளார். இனி, கட்டுரையின் மொழியாக்கம்:

மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் முஸ்லிம்களின் கை ஓங்க ஆரம்பித்த காலத்திலிருந்து இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகள் கிறிஸ்தவ நாடுகளில் பரப்பப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ போராளிகள் இஸ்லாத்தை அது உருவான தாய்மண்ணில் அழித்துவிட வேண்டும் என்ற அவர்களது குறிகோள்களில் தோல்வியுற்றனர். ஆனால் இஸ்லாத்தை தோற்றுவித்தவரான முஹம்மது நபி (ஸல்) மீது தொடர்ந்து அவதூறுகளை அள்ளிவீசினர். (தொன்று தொட்டு வீசப்படும் இந்த அவதூறுகளுடன்) அல் காய்தா மற்றும் தாலிபான் போன்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாத இயக்கங்களின் தோற்றம் இவர்களின் குற்றச் சாட்டுகளுக்கு மேலும் வலுவூட்டியது. செப்டம்பர் 11, 2001-ல் நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்திலும், வாஷிங்டனிலுள்ள பென்டகன் இராணுவ அலுவலகத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் இவர்களுக்கு இஸ்லாத்தை மேலும் நிந்திக்கக் கிடைத்த புதிய ஆயுதங்களாக அமைந்தன. அன்றிலிருந்து இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு முஸ்லிமல்லாதவர்களால் எங்கும் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய விரோதிகளால் இஸ்லாத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் முதன்மையான இரு வாதங்கள் என்னவென்றால் ஒன்று இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டது என்பதும் மற்றது இஸ்லாத்தை தோற்றுவித்த தீர்க்கதரிசியான முஹம்மது நபி (ஸல்), முஸ்லிம்கள் கூறுவது போல் ஒழுக்கச்சீலர் அல்லர் என்பதுதான். இஸ்லாமிய மார்க்கம் மக்களின் மீது திணிக்கப்படவில்லை என்பதை வரலாற்றுச் சான்றுகளிலிருந்து நிரூபிக்க இயலும். இந்த தவறான கூற்றுக்கு மாறாக இஸ்லாம் அன்றைய காலகட்டத்தில் மனித இனமே கேள்வியுற்றிராத புதிய கோட்பாடுகளையும் (உலகிலேயே முதன் முறையாக) பெண்களுக்கான உரிமைகளையும் வழங்கியது என்பதால் கோடிக்கணக்கான மக்களால் உடனுக்குடனே முழுமனதுடன் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இஸ்லாம் திணிக்கப்படவில்லை மாறாக இஸ்லாமிய மதப்பிரச்சாகர்களால் பரப்பப்பட்டது.

பொதுவாக முஸ்லிம்கள் தங்களின் தீர்க்கதரியான முஹம்மது (ஸல்) மீது விமர்சனத்தை சிறிதும் சகிக்க மாட்டார்கள். பாரசீக மொழியில் ஒரு பழ மொழியே உண்டு “ப ஹுதா திவானா பஷோ, ப முஹம்மத் ஹோஷியார்!” – “இறைவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், முஹம்மதை (ஸல்) பற்றி சொல்லும் வார்த்தையில் எச்சரிக்கையாய் இருங்கள்”. முஸ்லிம்கள் முஹம்மது நபியை (ஸல்) ஆதாம், மூசா (மோஷஸ்), நூஹ் (நோவா), இப்ராஹிம் (ஆப்ரஹாம்) மற்றும் ஈஸா (ஏசு) போன்ற தீர்க்கதரிசிகளின் தொடர்ச்சியில் கடைசி தீர்க்கதரிசியாகவும், இந்த உலகில் இது வரை தோன்றிய மனிதர்களில் முழுமையானவர் என்ற ஸ்தானத்தில் தங்கள் மனதில் வைத்து பார்க்கின்றனர். முஸ்லிம்கள் அவரை அப்படி எண்ணக் காரணம் என்ன என்பதை நீங்கள் நேர்மையாக தெரிந்துகொள்ள விரும்பினால், அவருடைய வாழ்க்கையையும் அவருக்கு இறைவன் மூலமாக வெளிப்படுத்தப் பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்ற அவரது போதனைகளையும் நன்றாக படித்து ஆராய வேண்டும். மாறாக, அல்காய்தா, தாலிபான் இவர்களின் செயல்களைக் கொண்டோ மற்றும் அயோத்துல்லாக்களும், அரைவேக்காட்டு முல்லாக்களும் கொடுக்கின்ற ஃபத்வாக்களையும் அடிப்படையாக வைத்தோ அவரை மதிப்பிடுவது முற்றிலும் தவறாகும். வேதங்களையும், உபநிசத்துகளையும் அருளியிருக்கும் ஹிந்துயிசக் கொள்கையை ஹிந்துத்வா என்ற பெயரில் மசூதிகளை இடித்தும், கிறிஸ்துவ மதப்பிரச்சாகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் கொலை செய்தும், நூலகங்களையும், கலை பொருட்களையும் இடித்தும், எரித்தும் நாசப்படுத்தும் ஹிந்துக்களின் செயல்களை வைத்து நீங்கள் மதிப்பிடுவதில்லை.சீக்கிய குருமார்களின் போதனைகளை ஜர்னைல் சிங் பிந்தரன்வலாவின் சொற்களைக் கொண்டோ அல்லது அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் குண்டர்களைக் கொண்டோ கணிப்பதில்லை. அதேபோல்தான், முஹம்மதை (ஸல்), முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிய சிலரின் தவறான போக்கைக் கொண்டு மதிப்பிடாமல், முஹம்மது நபி (ஸல்) என்ன என்ன போதித்தார், எதற்காக பாடு பட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள்.

முஹம்மது நபி (ஸல்) கி.பி. 570-ல் மக்காவில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் பெற்றோர்களை இழந்ததால் தன் பாட்டனாலும், தாய் மாமனாலும் வளர்க்கப்பட்டார். ஒரு விதவையின் வியாபாரத்தை கவனித்து வந்தவர் பின்னர் அந்த விதவையின் விருப்பத்திற்கிணங்க அவரையே மணந்துகொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. தன் மனைவி இறக்கும்வரை முஹம்மது (ஸல்) வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. நாற்பது வயதான போதுதான் அவருக்கு ஒருவித உணர்வற்ற மயக்கநிலையில் (வஹி என்று சொல்லப்படும்) இறைச்செய்தி வெளிப்பட ஆரம்பித்தது. முஸ்லிம்கள் அவரை தங்கள் புதிய (கடைசி) தீர்க்கதரிசி என்று அறிவித்தனர். இது போன்ற இறைச்செய்திகள் பல நேரங்களில் வந்து கொண்டிருந்தன. சமயங்களில் அந்நேரத்தில் எழுந்த பிரச்சனைகளுக்கு விடையளிப்பதாகவும் அல்லது தீர்வாகவும் சில நேரங்களில் ஆன்மீக விஷயங்களைக் குறித்தும் வெளியாயின. அந்த (இறைச்செய்தி) வெளிப்பாடுகள் அனைத்தும் முஹம்மது நபியை (ஸல்) மனப்பூர்வமாக நம்பியவர்களால் மனனம் செய்யப்பட்டும், எழுதப்பட்டும் “சப்தத்துடன் ஓதுதல்” என்ற பொருள்படும் “குர்ஆன்” ஆனது. மேலும் அவர் சொல்லிய கருத்துக்களில் பெரும்பான்மையானவை ஏற்கனவே யூத சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டவைதான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் (ஒரு சிலவற்றைத் தவிர). அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருள் அரபி மொழியில் நபிக்கு முன்னரே “இறைவனை” குறிப்பதாகத்தான் இருந்தது. அதே போல்தான் “இஸ்லாம்” என்றால் “அடிபணிதல் அல்லது அற்பணித்தல்” என்றும் சலாம் என்றால் “அமைதி” என்றும் அரபுமொழியில் பொருள் பட்டது. மக்கா நகரம் பது என்ற குலத்தவரின் சந்தை நகரமாக இருந்து வந்தது. அங்கிருந்த கஃபா என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய கருப்புக்கல் பதிக்கப்பட்ட ஆலயத்தில் ஹஜ் மற்றும் உம்ரா என்ற இரு வகையான புனித யாத்திரைக்காக மக்கள் கூடினர். முஹம்மது நபி (ஸல்) யூதர்களின் மரபின் படியே ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஹராம் (தடுக்கப்பட்டது – உ..ம். பன்றி இறைச்சி) என்ற உணவு பழக்க வழக்க முறைகள், ஐ வேளை தொழுகையின் பெயர்கள், ஆண் குழைந்தைகளுக்கான சுன்னத் முறை போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றி மக்களுக்கும் போதித்தார்.

முஹம்மது நபி (ஸல்) ஏகத்துவத்தை வலியுறுத்தியதுடன் இறைவனுக்கு இணை வைப்பதையும், பல்வேறு குலத்தினர் பின்பற்றிய சிலை வழிபாட்டையும் தடுத்தார். முஹம்மது நபி (ஸல்) ஒரு போதும் தன்னுடைய நம்பிக்கையை மக்களின் மீது கட்டாயப்படுத்தவில்லை. மாறாக நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கட்டாயம் கூடாது – லா இக்ரா ஃபில் தீன்” என்று (குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும்) இறைச் செய்தியை வலியுறுத்தினார். மேலும், “இறைவன் நினைத்திருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே கட்டளையில் அப்படி தான் விரும்பியபடி மாற்றியிருக்க முடியும்; ஆனால் அவன் உங்களுக்கு அருளியிருப்பவற்றிலிருந்து உங்களை சோதிக்க எண்ணினான். எனவே, நற்காரியங்களில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளுங்கள்” என்ற (குர்ஆனில் கூறப்பட்ட) இறைச்செய்தியையும் மேற்கோள் காட்டினார்.

அவர் எதிர்பார்த்திருக்கக் கூடியது போலவே, முஹம்மது நபியின் (ஸல்) தூதுத்துவம் அவருக்கெதிரான கடும் பகைமையை உருவாக்கியது. அவரை கொலை செய்ய பல வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் தெய்வீகமாக ஆச்சர்யப்படும் வகையில் அனைத்து கொலை முயற்சிகளிலிருந்தும் உயிர்தப்பினார். கடைசியாக, கி.பி. 622-ல் அவர் மக்காவை விட்டு மதீனா செல்ல பணிக்கப்பட்டார். முஸ்லிகளின் ஆண்டு கணக்கீடு என்று அறியப்படும் இந்த நபியின் பயணம்தான் ஹிஜ்ரா என்று அழைக்கப் படுகிறது. மக்கா வாசிகள் மதீனாவை பிடிக்க சில முயற்சிகள் செய்து விரட்டியடிக்கப் பட்டனர். கடைசியில் முஹம்மது நபியை (ஸல்) தலைமையாகக் கொண்டு சென்ற முஸ்லிம் படைகள் மக்காவை வெற்றி கொண்டு மக்காவுக்கு வெற்றிவீரர்களாக திரும்பினர். கி.பி. 632-ல் முஹம்மது நபி (ஸல்) இறந்தபோது, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிணைந்த பல்வேறு குலத்தினரை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பம் உருவானது.

முஹம்மது நபிக்கு (ஸல்) எதிராக வீசப்படும் அவதூறு விமர்சனங்களில் பெரும்பாலனவை அவர் தன் முதல் மனைவி கதீஜாவின் மரணத்திற்கு பின் பலதாரமணம் புரிந்ததையே சுட்டுவதாக உள்ளன. இதை அக்கால அரேபிய சமூகத்திலிருந்த பழக்க வழக்கங்கள் மற்றும் சூழலின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அக்காலத்தில் அரேபியாவில் பல்வேறு குலத்தவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டும், பாலைவனத்தில் பிரயாணம் செய்யும் கூட்டத்தினரை கொள்ளையடித்தும் வாழ்க்கையை நடத்தி வந்ததால் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரழந்தனர் (நபியின் காலத்திற்கு பிறகுதான் அரேபியர்களின் வாழ்க்கைமுறை மாறி சிலை வழிபாடு, கொலை, கொள்ளை போன்ற அநீதிகள் மாறின). அது ஆண் பெண் விகிதாச்சாரத்தில் பெருத்த சமநிலையின்மையை உருவாக்கியது. இறந்த ஆண்களின் விதவை மனைவிகளுக்கும், அனாதையாக விடப்பட்ட குழந்தைகளுக்கும் இருப்பிடமும், உணவும் தேவைப்பட்டது. இல்லையென்றால் அவர்கள் விபச்சாரம் செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ பிழைக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு அவர்களை சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணம் என்ற சமூக அமைப்பு வெவ்வேறு குலத்தவரை இணைக்கும் பாலமாக இருந்தது.

முஹம்மது நபி (ஸல்) ஒருபோதும் மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு கருத்தைச் சொன்னதோ அல்லது செய்ததோ இல்லை. முஹம்மது நபிதான் (ஸல்) முதன் முதலில் ஓர் மணமே சிறந்த வாழ்க்கை முறை என்ற கருத்தை வலியுறுத்திய போதகர். பிறகு அன்றைய சூழலுக்கு ஏற்றாற் போல் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என வரையறுத்தார்; ஆனால் அனைத்து மனைவிகளையும் சமநிலையாக மகிழ்ச்சியில் வைத்திருக்க முடியும் என்ற நிபந்தனையின் பேரில் – (இது முற்றிலும் சாத்தியமற்றது என்பதை நாம் அறிவோம்). அது சம்பந்தமாக குர்ஆன் கூறுகிறது “நீங்கள் அனாதைகளிடம் நடுநிலையுடன் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று அச்சப்படுவீர்களேயானால், வேறு தாங்கள் விருப்ப்படும் (அனாதையல்லாத) சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட பெண்களிலிருந்து திருமணம் செய்துகொள்ளுங்கள். இரண்டோ, முன்றோ அல்லது நான்கு வரை மணந்துகொள்ளலாம். ஆனால், அனைவரையும் சமமாகவும், நேர்மையாகவும் நடத்த இயலுமா என்ற அச்சம் உங்களுக்கு எழுமேயானால், ஒரு பெண்ணை மட்டுமே மணந்து கொள்ளுங்கள்”. அன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதிலும் பரவலாக இருந்த குலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களில் பலதாரமணம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பழக்க வழக்கமாகவே இருந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணங்களையும் முன் முடிவுகளையும் உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்கு முதல்படியாக காரன் ஆம்ஸ்ட்ராங்கின் “முஹம்மது: நம் காலகட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி” என்ற புத்தகத்தை வாசியுங்கள். காரன் ஆம்ஸ்ட்ராங் சமய ஆராய்ச்சி ஒப்பீட்டு எழுத்தாளர்களில் இன்றைக்கு முண்ணனி எழுத்தாளராக திகழ்பவர். காரன் ஒரு முஸ்லிம் அல்லர்.

நன்றி: டெலகிராஃப் இந்தியா
மொழியாக்கம்: சகோ. சாதிக்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.