இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை

இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை
Share this:

முஸ்லிம்கள்..

 

 

அகில உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஒரே இறைவனால் வாழ்க்கை நெறியாக அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்;

 

இவ்வுலகில் நீதியை நிலைநாட்டும் நடுநிலைப் பொறுப்பை இறைவனால் வழங்கப்பட்ட சமுதாயத்தவர்கள்;

 

அநியாயம் அக்கிரமங்களுக்கு எதிராகவும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களுக்காகவும் இவ்வுலகில் எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் போராடுபவர்களாகக் கணிக்கப்பட்டிருப்பவர்களை அங்கமாக கொண்டுள்ள உயர்ந்த சமுதாயத்தவர்கள்;

நாளை மறுமையில் இவ்வுலக மாந்தர் அனைவருக்காகவும் இறைவனிடம் பரிந்துரைக்கும் வாய்ப்பு பெற்ற ஒரே இறைத்தூதரான நபி முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்கள் என்ற மிகப்பெரும் பேறு பெற்றவர்கள்; சுவனத்தின் சொந்தக்காரர்களை உள்ளடக்கிய இறைவனின் பேரன்பிற்கு பாத்திரமான மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்; ஹம்ஸா(ரலி), உமர்(ரலி), அலி(ரலி), காலித் பின் வலீத்(ரலி), ஸலாஹுத்தீன் அய்யூபி போன்ற மாவீரர்களை வரலாற்றில் தன்னகத்தே கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்;

அவிசெனா என்கிற இப்னு சீனா போன்ற இன்றைய நவீன மருத்துவத்திற்கு அடிகோலிய மருத்துவர்களையும் பல விஞ்ஞானிகளையும் இவ்வுலகிற்கு வழங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்; உலகின் இருண்ட காலகட்டம் என்று உலக மக்களால் இன்று கணிக்கப்படும் மத்திய காலகட்டத்தில் உலகிற்கு எல்லா துறைகளிலும் வல்லுனர்களை வழங்கி ஒளி வீசிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்;

 

இத்தனை மகோன்னதங்களை உள்ளடக்கிய இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலை?

 

உலக பயங்கரவாதிகளால் சாதாரண மக்களின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்டு…

 

உலகிற்கு ஒற்றுமையைக் கடைபிடித்து காண்பித்து முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்கள் தங்களுக்குள்ளேயே அடித்து, பிரிவினைகளை வளர்த்துக்கொண்டு…

 

ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு, கட்டுகோப்பான சமுதாயமாகத் திகழ வேண்டியவர்கள், 100 பேர் வசிக்கும் ஒரு தெருவுக்குள்ளேயே ஒன்பது அமைப்புகளை ஏற்படுத்திக் கோண்டு…

 

இறைவனை நம்புவதோடு கூடவே ஜாதகம், சூனியம், நல்ல நேரம் கெட்ட நேரம் என்று கண்ணை மூடிக்கொண்டு மூடத்தனங்களில் மூழ்கியவர்களாக மஸ்தான், மந்திரவாதி, சமாதி என ஈமானை அடகு வைத்துக்கொண்டு…

 

நற்பண்புகளுக்கு விளைநிலங்களாக கண்ணியமான சமுதாயமாக வாழ வேண்டியவர்கள் பிரச்சாரம், விவாதம், பணவசூல் என்ற பெயர்களில் கண்ணியத்தை மறந்தவர்களாக சொந்தம் சகோதரர்களின் கண்ணியத்தை விலைபேசிக் கொண்டு….

 

மறுமைக்காக வாழ வேண்டியவர்கள் வட்டி, மது, மாது, சூது என அனைத்து அருவருப்பான குற்றங்களையும் செய்பவர்களாக இவ்வுலக மாயையில் திளைத்துக்கொண்டு…

 

இறைவனைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாமல் துணிவோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வாழ வேண்டியவர்கள், இறைவனைத் தவிர மற்ற அனைத்திற்கும் பயந்தவர்களாக தினம் அஞ்சி வாழ்ந்து கொண்டு…

 

எவ்விதச் சமுதாய அக்கறையும் இன்றி உணர்வற்றவர்களாக இறைவனின் கோபத்திற்கு ஆளாகிக்கொண்டு நிற்கின்றது. இதற்குக் காரணம் என்ன?

 

– நல்வழிப்படுத்த போதிய வசதியின்மையா?

– தலைமைக்குக் கட்டுப்படும் கட்டுப்பாடின்மையா?

– நல்ல தலைவர்கள் இல்லாததாலா?

– போதிய மார்க்க அறிஞர்கள் இல்லாததாலா?

– வழி நடத்தச் சிறந்த வழிகாட்டிகள் இல்லாததாலா?

 

இல்லை. நிச்சயமாக இல்லவே இல்லை! இவை அனைத்தும் போதிய அளவு இச்சமுதாயத்திடம் நிறையவே உள்ளன.

 

ஒருகாலத்தில் உலகிற்கு வழிகாட்டியாக இருந்த, எப்போதும் எல்லா விஷயத்திலும் உலகிற்கு வழிகாட்டியாகவே இருக்க வேண்டிய இச்சமுதாயத்தின் இன்றைய இழிநிலைக்கு இவை ஒன்றும் காரணமாக இருக்க சாத்தியமே இல்லை. உரிமைக்காகக் குரல் கொடுக்க வீதிக்கு ஒரு இயக்கம் இன்று ஆரம்பமாகி விட்டன.

 

மார்க்கத்தைப் போதிக்க வீட்டிற்கு ஒரு ஆளும் தலைமைக்கு நல்ல பல சிறந்த தலைவர்களும் மார்க்கத்திற்கு அறிவில் சிறந்த பல மார்க்க அறிஞர்களும் அவர்களுக்கு கட்டுப்பட இன்று சமுதாயமும் தயார் நிலையிலேயே உள்ளன. பின்னரும் ஏன் இந்த இழிநிலை?

சிந்தித்துப் பார்த்தால் அதற்குக் கிடைக்கும் ஒரே விடை – அறிவின்மை, கல்வி ஞானமின்மைதான். கல்வி ஞானமின்றி, சிந்திக்கும் அறிவின்றி ஆட்டு மந்தைகள் போன்ற ஒரு மக்கள் கூட்டத்தை வெகு நாளைக்கு ஒரு தலைவரால் வழிநடத்திச் செல்ல இயலாது. காலகட்டத்திற்கு இயைந்த கல்வியறிவு இல்லையேல் அக்கூட்டம் சமுதாயத்திலிருந்து பிரித்து வைக்கப்படும்; பிரிந்து போகும். அது தான் இன்று உலகில் நடந்து கொண்டிருக்கிறது.

அதனாலேயே உலகம் விஞ்ஞான வளர்ச்சிப் பாதையில் எங்கோ சென்று கொண்டிருக்க, உலக சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட மிகப்பெரிய இம்முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு கூட்டம் சடங்கு, சமாதி, மந்திரம் என அலைந்து கொண்டிருக்க முடிகிறது.

 

அதனாலேயே "மறுமையில் மட்டுமே ஒருவன் நல்லவனா? கெட்டவனா?" என்பதையும், "நேரான வழியில் இருந்தவர் யார்? என்பது தெளிவாகும்" என்பதையும், "முடிவு செய்து தீர்மானத்திற்கு வரும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு" என்பதையும் நன்றாக அறிந்திருந்தாலும், "நான் மட்டுமே நேரான வழியில் இருக்கிறேன்; மற்றவர்களெல்லாம் தவறான வழியில் இருக்கின்றனர்" என்றும், "அவன் காஃபிர், இவன் முஷ்ரிக், இவன் முனாஃபிக்" என முடிவு செய்து "நாங்கள் மட்டுமே சுவனத்திற்கு சொந்தக்காரர்கள்" எனக் கூறிக் கொண்டு இச்சமுதாயத்தில் ஒரு கூட்டம் சமுதாய மக்களிடையே இறுமாப்புடன் உலாவர முடிகின்றது.

 

எவ்வளவுதான் மார்க்கப் பிரச்சாரம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், நவீன வசதிகளுடன் மார்க்கம் திறந்த புத்தகமாக மக்கள் முன் வைக்கப்பட்டாலும், மார்க்கத்தை வைத்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் போலி புரோகிதர்களைப் போல் மக்களை தாயத்து, தட்டு, அற்புதங்களை நம்பவைத்து சமாதிகளை நோக்கி பயணிக்க வைக்க முடிகிறது. அதனாலேயே மார்க்கத்தின் பெயரால் மார்க்கம் கற்றுத்தராத சமூக விரோத செயல்களில் மக்களில் ஒரு கூட்டத்தை சில சமூக விரோத பயங்கரவாதிகளால் வழிநடத்த முடிகிறது.

அதனாலேயே மார்க்கம் கற்றுத்தராத வழிகளில் வெறும் கொடி பிடிக்கும் கூட்டமாக மக்களில் ஒரு கூட்டத்தை இயக்கவெறி கொண்டலையும் மாக்களாக தலைவர்களால் உருவாக்க முடிகிறது. அதனாலேயே வெறும் பேச்சுக்கு மயங்கும் மந்தை கூட்டமாக மக்களில் ஒரு சாராரை காலம் முழுக்க கொண்டு செல்ல முடிகிறது.

கல்வி என்பது இன்று ஒரு சமுதாயத்திற்கு காலத்தின் கட்டாயமான அவசியமான தேவையாகும். கல்வி இல்லையேல் ஒன்றும் இல்லை.

நாகரீக உலகில் இன்று கல்விதான் அனைத்தையும் சாதிப்பதற்கான அடித்தளமாக விளங்குகிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இன்று அச்சமுதாயம் அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியின் வீதத்தைக்கொண்டே அவதானிக்கப்படுகிறது. அத்தகைய நவீன உலகின் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் தலையாயதாக கருதப்படும் இக்கல்வித்துறையில் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்திற்கு உரிய முஸ்லிம் சமுதாயம் எவ்வளவு தன்னிறைவை பெற்றுள்ளது என்பதைக் குறித்து சமுதாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

சமீபத்தில் மத்திய அரசால் சிறுபான்மையின மக்களின் நிலையை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி ஸச்சார் அவர்களின் தலைமையில் அமைந்த ஸச்சார் கமிட்டி தனது ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.

 

தொடர்ந்து இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மெச்சத்தக்கது; அவர்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி நாட்டை பிடிக்கும் நிலையில் உள்ளனர் என சங்க் பரிவாரத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டு, இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நாடளாவிய அளவில் திருப்பி விடப்பட்டு விட்ட நிலையில் இன்று ஸச்சார் கமிட்டி வெளியிட்டிருக்கும் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை குறித்த தகவல்கள் ஒருபுறம் சமூகத்தின் மோசமான நிலையை சுட்டிக்காட்டும் அதேவேளையில் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாசிஸ்டுகளின் சூழ்ச்சியையும் தோலுரித்துக் காட்டுகிறது.

 

சமீபத்தில் முஸ்லிம்களின் கல்வியறிவைக் குறித்து "இந்தியா டுடே" ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வறிக்கை சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நல்லதோர் முன்னெச்சரிக்கையாகும்.

 

அந்த ஆய்வறிக்கை கூறும் சில முக்கிய பகுதிகளை காண்போம்:

 

"2001- ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் கல்வியறிவைப் பெறுவதில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதைத்  தெரிவிக்கிறது. 1881- க்கு பிறகு அகில இந்திய அளவில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புகளில் இது மிக விரிவானது (சமீபத்தில் வெளியாகியுள்ள ஸச்சார் அறிக்கை இக்கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டதே). 2001-லேயே இக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டாலும் பல தகவல்களை கணக்கெடுப்பு ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.

 

இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.

 

நாட்டின் மொத்த முஸ்லிம்களில் 61 சதவீதத்தினர் இம்மாநிலங்களில்தான் இருக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள மற்றும் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவிலும் கூட இதே நிலைதான். குஜராத் மற்றும் ஆந்திராவில்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களின் கல்வி நிலை இருக்கிறது. கிராமம், சிறு நகரம், பெருநகரம் என எல்லா வகையிலும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பக்கல்வியில் ஆரம்பிக்கும் இவ்வித்தியாசம் கல்வி நிலை உயர உயர அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிற மதத்தினரோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கீழ்க்காணும் சதவிகிதத்தில் பின் தங்கியுள்ளனர்.

 

முஸ்லிம்களில்

ஆரம்பக்கல்வி

நடுநிலைப்பள்ளி

மேல்நிலைபள்ளி

உயர்நிலைப்பள்ளி

பட்டப்படிப்பு

ஆண்கள்

15%

20%

35%

44%

53%

பெண்கள்

11%

19%

35%

45%

63%

 

மேலும் இதில் ஆண், பெண் வர்க்க பேதமும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆணுக்கு கிடைக்கும் கல்வி, முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பக் கல்வியில், பெருநகரம் மற்றும் சிறு நகரங்களில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் ஆண்களை விட 18% குறைவாகவே பெண்கள் கல்வி பெறுகிறார்கள். கல்லூரி அளவில் உயரும்போது இது 48% அதிகரிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் கல்வி விகிதத்தை அடைவதற்கு 2011-ம் ஆண்டிற்குள் 31 மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கவேண்டும்" என்று கூறும் இவ்வறிக்கை மற்ற சமுதாயத்தவர்களின் கல்வியறிவை எட்டிப்பிடிக்க முஸ்லிம்கள் கற்க வேண்டிய இலக்கையும் கீழ்கண்ட அளவுகோளில் வைக்கிறது.

முஸ்லிம் ஆண் – பெண் கல்வி இலக்கு

 

முஸ்லிம்களில்

ஆரம்பக்கல்வி

உயர்நிலைப்பள்ளி

பட்டப்படிப்பு

ஆண்கள்

19.1 மில்லியன்

7.2 மில்லியன்

2.9 மில்லியன்

பெண்கள்

12 மில்லியன்

4 மில்லியன்

61.6 மில்லியன்

 

(தகவல்: முகவைத்தமிழன், நன்றி: இந்தியாடுடே ஆய்வறிக்கை)

 

அறிக்கைகளின் பட்டியலை நீட்டினால் இவ்வாக்கம் நீண்டு கொண்டே செல்லும்.

 

சமீபத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க மத்திய அரசு தீர்மானம் எடுப்பதற்கு முயன்றபோது அனைத்து ஃபாசிஸ சக்திகளும் இணைந்து நாட்டுப் பாதுகாப்பை காரணம் காட்டி அதனை எதிர்த்தது நினைவுகூரத்தக்கது.

 

இன்னும் சொல்லப்படாத கணக்கெடுக்கப்படாத விவரங்கள் எத்தனையோ உள்ளன. நாட்டின் எல்லாத்துறைகளின் பின்தங்கியிருக்கும் சமுதாயம், அதேவேளையில் சிறைச்சாலைகளில் மற்றெல்லா சமுதாயத்தை விடவும் எட்டிப்பிடிக்க இயலாத அளவு உயரத்திலும் உள்ளது மிக மிக அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாகும்.

 

இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஃபாசிஸ இந்துத்துவ சக்திகளால் திட்டமிட்டு குற்றங்கள் சுமத்தப்படுவதற்கும், அவ்வாறு குற்றங்கள் சுமத்தப்படும்போது அதனை ஏன் என்று கேட்கக் கூட இச்சமுதாயத்தில் ஆள் இன்றி போவதும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது என நிரூபிக்கும் அளவிற்கு பொருளாதார வசதியோ, மற்ற அடிப்படை அறிவோ இன்றி அதற்கும் மற்றவர்களை நாடும் இழிநிலையே சிறைச்சாலைகளில் முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும்.

 

இவ்வாறு எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் அடிப்படை காரணத்தை ஆராய்ந்தோமானால் அங்கு கல்வியறிவின்மை என்ற அரக்கன் பல்லிளித்து நிற்பதைக் காணலாம்.

 

கல்வியறிவு என்பது இருட்டில் வழி தெரியாமல் செல்லும் பயணிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கைப் போன்றதாகும். அதனைப் பெறாதவர்கள்/ இழந்தவர்கள் என்ன விலை கொடுத்தாவது திரும்பப்பெற முயல வேண்டும். "சீனா சென்றேனும் கல்வியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும்", "கல்வியின் பாதையில் செல்பவன் சுவர்க்கத்தின் பாதையில் பயணிக்கிறான்" என்றும் அறிவுறுத்திய நபி முஹம்மது(ஸல்) அவர்களின் பொன்மொழியை மறந்ததன் கூலியை இன்று சமுதாயம் அனுபவிக்கிறது என்றால் அது மிகையாது.

 

இன்று இடஒதுக்கீட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் சமுதாய இயக்கங்கள் அந்த இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் அதற்குத் தகுதியான எத்தனை நபர்கள் இச்சமுதாயத்திலிருந்து செல்வார்கள் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

வெறும் காசு வசூலில் கவனம் செலுத்துவதையும், பின்னர் அதனைப் பிரித்து கொடுப்பதில் சண்டையிட்டு நீயா நானா என சமுதாயத்தை சந்தி சிரிக்க வைப்பதிலும் கவனம் செலுத்துபவர்கள், சமுதாயக் கல்விக்காக கவனம் செலுத்தினால் எதிர்கால சமுதாயமாவது உயிர் பெறும்.

 

நாட்டின் எல்லா மட்டங்களின் இச்சமூகத்திற்கு எதிராக வலை பின்னப்பட்டு சமூகத்தைக் குழிதோண்டி புதைத்து விட சங்க் பரிவாரங்கள் காத்திருக்கும் வேளையில், அதனை இப்பெரிய சவக்குழியிலிருந்து மீட்டெடுக்க கல்வியறிவால் மட்டுமே இயலும்.

 

வெறும் மேடைப்பேச்சுக்கள், எழுத்துக்கள், வீரவசனங்கள் பேசி டிரஸ்டுகளின் வருமானத்தைப் பெருக்குவதிலும், மக்களை இயக்கத்திற்காக கொடிபிடித்து கோஷம் போட வைப்பதிலும் கவனத்தை வைத்துத் தருணம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொந்தச் சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடும் வேலையை செய்து கொண்டிருப்பதை விட்டு விட்டு, வருங்கால சமுதாய எதிர்காலத்தை கவனத்தில் வைத்து கல்வி நிலையங்களை உருவாக்குவதிலும், அனைத்து சமூக அங்கங்களுக்குக் கல்வியைக் கொடுப்பதிலும், சமூகத்தில் வேலையின்றி வெறுமனே சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நல்ல பல தொழில்சார்ந்த நிலையங்களை உருவாக்குவதிலும்தான் சமூகத்தின் எதிர்கால நிலைநிற்பு உள்ளது என்பதைச் சமூக தலைவர்களும், சமுதாய அக்கறை கொண்ட இயக்கங்களும் உணர வேண்டும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.