வாடகை வீடு: இன்று எனக்கொரு புதிய அனுபவம் – அ.மார்க்ஸ்

ரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலமாக நான் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். பாவம் என் மனைவி ஜெயா, கொரடாசேரியில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தவள்.

நான் இப்போது அடையாறு வண்ணாந்துறையில் வசிக்கும் வாடகை வீடு மிகச் சிறிது. பக்கத்தில் மகள் வீடு. பேத்தியை விட்டுப் பிரிய இயலாமலும், பேத்திக்குத் துணையாய் இருப்பதற்காகவும் ஒரு மிகச் சிறிய வீட்டில் அதிக வாடகை கொடுத்து வாழ்ந்து வருகிறோம்.

என்றாலும் எனக்கு ஒரு ஊமை வேதனை. எப்போதும் எனது வீட்டில் பலரும் தங்கிப் போயுள்ளனர். தலைமறைவுத் தோழர்கள் உட்பட. இன்றும் நான் வெளி நாடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும்போது என் அன்பு நண்பர்கள் தங்களின் வீடுகளில் என்னை உபசரிக்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு வரும்போது அத்தகைய அன்பை என்னால் திருப்பித் தர இயல்வதில்லை.

சற்றுப் பெரிய ஒரு வீட்டைச் சில காலமாக வீட்டுத் தரகர்கள் மூலம் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் திருப்திகரமாய் ஒரு வீட்டை இன்று முடிவு செய்தோம். வீட்டு ஒத்தி ஒப்பந்தம் எழுத விவரம் கேட்டார்கள். ஒரு துண்டுத் தாளில் “அ.மா s/o அந்தோனிசாமி, வயது 63, முகவரி…… ” என்பதாக எழுதி அனுப்பினேன். சற்று நேரத்தில் வீட்டுத் தரகர் எனக்கு போன் பண்ணினார். “சாரி சார். அவங்க கிறிஸ்தவங்களுக்கு வீடு கொடுப்பதில்லையாம்”

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என் வீட்டில் என் மனைவி தவிர யாரும் சர்சுக்குப் போவதில்லை. என் மகள்கள் இருவரும் இந்துக்களைத்தான் திருமணம் செய்து கொண்டனர். என் அப்பா அந்தோனிசாமி, ராமதாஸ் என்கிற பெயரிலேயே அடையாளம் காணப்பட்டு மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவனாக இருந்ததற்காகத் தலைக்கு விலை கூறப்பட்டு நாடகடத்தப்பட்டவன், வாழ்நாளில் என்றைக்கும் மாதாகோவில் வாசாலை மிதித்தறியாதவன்…. என்பதெல்லாம் அந்த வீட்டுக்காராருக்குத் தெரியுமா என்ன?

சரி. இதுவரைக்கும் பத்துப் பன்னிரண்டு வாடகை வீடுகளில் வாழ்ந்தவன் நான். இது எனக்குப் புது அனுபவம். தினந்தோறும் முஸ்லிம் என்பதற்காகவும் தலித் என்பதற்காகவும் வீடு மறுக்கப்படும் எண்ணற்ற இந் நாட்டு மக்கள் இப்படி எத்தனை துயரங்களை அனுபவித்திருப்பர்? ஷபனா ஆஸ்மி, ஷாருக் கான் ஆகியோருக்கே இந்நிலை என்றால் நான் எம்மாத்திரம்?

– அ.மார்க்ஸ்