உணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி?

Share this:

சமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2008 கண்காட்சியின் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள் முடித்துள்ளன. “வளைகுடா நாடுகளில் மட்டுமே ஹலால் பொருள்களுக்கான சந்தை 2.08 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் அளவுக்கு இருக்கும் எனக் கருதப்படுகிறது”


நொறுக்குத் தீனிகள், சமையல் எண்ணெய்கள் பால் பொருட்கள், மால்ட் உணவுப்பொருட்கள், பழச்சாறுகள் மற்றும் ஹலால் முத்திரையிடப்பட்ட இறைச்சி வகைகள் முதலானவை இவற்றுள் அடக்கம்.

எனினும்,தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

“அமீரகத்திலும் வளைகுடாவின் பிற நாடுகளிலும் உள்ள பேரங்காடிகளில் விற்கப்படும் ஹலால் முத்திரையிடப்பட்ட உணவுப் பொருட்கள் முஸ்லிம்கள் உண்ண ஆகுமானவையல்ல” என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகிறார் ஜலால் யொஸ்ஸே என்ற ஹலால் முத்திரை உணவுப் பொருள் நிறுவனமொன்றின் அதிபர்.

“முஸ்லிம்கள் புசிக்கத் தகுதியற்ற (ஹலால் அல்லாத) உணவுப் பொருள்கள் வளைகுடாப்பகுதியில் எவ்விதச் சோதனையுமின்றி தடையில்லாமல் கிடைக்கின்றன” எனக் கூறிய அவர், “இவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வளைகுடா அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இவ்வகை உணவுகளுக்கு ஹலால் முத்திரை வழங்குவோரிடம் ஊழல் மிகுந்துள்ளதும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் கையூட்டாகப் பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு இவர்கள் வழங்குவதாக அவர் கூறினார். “அமீரகம், சவூதி உள்பட வளைகுடா முஸ்லிம் நாடுகள் தங்களது கண்காணிப்பாளர்களை அனுப்பி இந்நிறுவனங்கள் ஹலால் முறையில் தான் உண்மையில் இறைச்சி தயாரிக்கின்றனவா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

இன்னொரு ஹலால் உணவுப்பொருட்கள் வழங்கு நிறுவனத்தின் உரிமையாளரானா மியான் ரியாஸ், “ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நிறுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பதால், ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும்” என்று தெரிவித்தார்.

இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர் கூறினார். இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுவதாக அவர் கூறினார்.

ஹலால் உணவுபொருள் விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.