குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் மக்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமேயன்றி அந்நாட்டை அல்லது மாநிலத்தை ஆள்வோர் ஊடகங்களுக்குத் தரும் பொய்த் தகவல்களின் அடிப்படையில் செய்யப்படக் கூடாது.

குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற பின்னர்தான் அம்மாநிலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வளர்ச்சி கண்டு விட்டதாக அண்மைக் காலமாகப் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் ஊடகங்களில் செய்தி தருவோருக்கு வழங்கப்படும் சலுகைகளின் கனம் என்பது அத்துறையில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.

அதுபோக, “பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரும் முஸ்லிம்கள்” என்பதாகச் சிலரைத் தொப்பியுடன் படம் காட்டும் சில்லரைத்தனமான விளம்பரங்களும் அவ்வப்போது செய்யப்படுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் குலாம் முஹம்மது வஸ்தன்வி எனும் பெயருடைய குஜராத்தி ஒருவர், “முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதில்லை; மாறாக மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத் முஸ்லிம்கள் பலனடைகின்றனர்” என்று குஜராத் இனப்படுகொலையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்போல் பேசிவைத்தார். அவரது பேச்சு எல்லா ஊடகங்களிலும் பெரிய எழுத்தில் வந்ததற்குக் காரணம் அவர் உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல்உலூம் எனும் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்பதுதான்.

வஸ்தன்வியின் பேச்சு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர் பல்கலைப் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் தாம் அவ்வாறு கூறவில்லை என மறுப்புத் தெரிவித்தார் வஸ்தன்வி.

வஸ்தன்வி மறுத்துவிட்டாலும் சங்பரிவார அமைப்புகள் மோடியை ஆதர்ச நாயகனாகச் சித்தரித்து, தங்கள் அமைப்பை வளர்த்து வருகின்றன. பரிவார ஊடகங்களும் மோடியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. ஊடகங்கள் ஊதுவதுபோல் மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத் உண்மையிலேயே வளர்ச்சி பெற்றுள்ளதா?

“வளர்ச்சி நாயகன்” என்று போற்றப்படும் மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத்தின் வளர்ச்சியில் பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. பிற மாநிலங்களைவிட குஜராத் வளர்ச்சி பெற்று விளங்கியது மோடியின் ஆட்சிக்கு முன்னர்தான். சான்றுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

நீளமான கடற்கரையை எல்லையாகக் கொண்ட குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இருமாநிலங்களும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பிய வணிகர்களை நம் நாட்டின்பால் ஈர்த்தன. இந்த இரு மாநிலங்களின் துறைமுகங்களை ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் வணிகத்துக்குப் பயன்படுத்தினர். அதன் தொடராகவே, இந்தியாவில் முதல் ரயில்பாதை தாணே-மும்பை இடையே அமைக்கப்பட்டது.

ஐரோப்பியர்கள் வருகையைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டிலேயே குஜராத் மாநிலத்தவர் வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். அப்படித்தான் அப்துல்லாஹ் எனும் முஸ்லிம்,  காந்திஜியைத் தென்ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.

எனவே, குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சி, இன்று நேற்று வந்ததல்ல. மாறாக, அது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கிய வளர்ச்சியாகும்.

1960இல் குஜராத் மாநிலம் உருவாக்கப் பட்டபோது வளர்ச்சியில் எட்டாவது இடத்தில் இருந்தது. 1980-1990 வாக்கில் மூன்றாவது இடத்திற்கு வந்தது. மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995லிருந்து 1999வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப் பட்டது.

1994-95இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும் 1995-1999 காலகட்டத்தின் வளர்ச்சி 10.13 விழுக்காடாகவும் இருக்கும்போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999இல்தான் மோடி குஜராத்தின் முதல்வரானார்.

1960இல் குஜராத் மாநிலம் உருவாக்கப் பட்டபோது வளர்ச்சியில் எட்டாவது இடத்தில் இருந்தது. 1980-1990 வாக்கில் மூன்றாவது இடத்திற்கு வந்தது. மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995லிருந்து 1999வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப் பட்டது.

1994-95இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும் 1995-1999 காலகட்டத்தின் வளர்ச்சி 10.13 விழுக்காடாகவும் இருக்கும்போது மோடி முதல்வராக இருக்கவில்லை.1996இல் ஆசிய வளர்ச்சி வங்கியால் முதலீட்டு வரிசையில் இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டிருந்த குஜராத், மோடி பதவியேற்று ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஐந்தாவது இடத்துக்குக் கீழிறங்கி விட்டது.

இந்தியாவின் 17 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணிப்பில் 13ஆவது இடத்தை குஜராத் பெற்றுள்ளது.

2005ஆம் ஆண்டு குஜராத் மீது 70,228 கோடி ரூபாயாக இருந்த கடன், இந்த ஆண்டு 95,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதன்படி 5 கோடி மக்கள் தொகையுள்ள குஜராத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 19,000 ரூபாய் கடன் இருக்கிறது.

2006 ஜனவரி முதல் 2007 ஜனவரிவரை உள்ள காலப் பகுதியில் குஜராத்தில் 148 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று முதல்வர் நரேந்திர மோடியே சட்டப் பேரவையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயற்படும் ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின் சோடாஉப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதாம்.

குஜராத் மாநிலம் இன்று வளமாகத் திகழ்வதற்கான அடிப்படைக் கட்டுமானங்கள், மோடி முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்னரே கட்டியெழுப்பப் பட்டுவிட்டன. வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர். அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூறமுடியாது.

மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் 2003-2004இல் குஜராத் ஒரு புள்ளி பின்தங்கி, இன்று கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத், முதலிடத்தில் உள்ள பஞ்சாபைவிட, நான்கு வரிசை பின்தங்கியே உள்ளது என்பதுதான் உண்மை. தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.

2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொருத்தவரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களைவிட, குஜராத் பின்தங்கியும் கர்நாடக மாநிலத்துக்கு இணையாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தொழிலாளர் தரத்தைப் பொருத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட்தான் தந்துள்ளது. 1996இல் ஆசிய வளர்ச்சி வங்கியால் முதலீட்டு வரிசையில் இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டிருந்த குஜராத், மோடி பதவியேற்று ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஐந்தாவது இடத்துக்குக் கீழிறங்கி விட்டது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட “இந்தியப் பசி அட்டவணை 2008″ன்படி குஜராத்தின் நிலை, ஒரிசாவைவிட மோசகமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 17 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணிப்பில் 13ஆவது இடத்தை குஜராத் பெற்றுள்ளது. குஜராத்தைவிட மிகமோசமான நிலையில் மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களே இருக்கின்றன.

குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதம் என ஓயாமல் தவறான தகவலை நரேந்திர மோடி கூறி வருகிறார். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமான 9 சதவிகிதத்தைவிட, தனது மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்பது அவர் வாதம். ஆனால், 2006-07ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வு செய்து குஜராத் அரசே அளித்த அறிக்கை, மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.11 என்கிறது. அதைவிட முக்கியமாக, இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கடன்பட்டிருக்கக் கூடிய மாநிலமாக குஜராத் திகழ்கிறது.

2005ஆம் ஆண்டு குஜராத் மீது 70,228 கோடி ரூபாயாக இருந்த கடன், இந்த ஆண்டு 95,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதன்படி 5 கோடி மக்கள் தொகையுள்ள குஜராத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 19,000 ரூபாய் கடன் இருக்கிறது.

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம்” என்பதற்கொப்ப இத்தனை மோசமான நிலையில் குஜராத்தை வைத்துக் கொண்டு “வளமான குஜராத்” என பம்மாத்துக் காட்டுவது மோடியால் மட்டுமே முடியும். அதற்கு வேறொரு குறுக்கு வழியை மோடி கையாள்கிறார். வறுமைக் கோட்டிற்குக்கீழே உள்ளவர்கள் என்பதை முடிவு செய்வதற்கு உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பு, ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர். அதாவது ஓர் இந்தியர் ஒரு நாளில் 45-50 ரூபாய் சம்பாதித்து விட்டால் ‘வறுமைக் கோட்டு’க்கு வெளியே வந்துவிடுவார். மாதத்திற்கு 1,200 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் அனைத்து இந்தியரையும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களாகக் கருத வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை கூறுகிறது. ஆனால், குஜராத் அரசு நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ‘வறுமைக் கோட்டிற்கான வரம்பை’ இன்னும் கீழிறக்கி, மறுநிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி குஜராத்தின் நகர்ப்புறக் குடிமகன் மாதம் 514.16 ரூபாய்க்குக் குறைவாக சம்பாதித்தால் மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவராகக் கணக்கிடப்படுவார். கிராமப்புறங்களில் இன்னும் குறைவாக மாதம் 353.93 ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில், ஜார்க்கண்ட் போன்ற மிகவும் பின் தங்கிய மாநிலங்களில்கூட, இந்த ‘வறுமைக் கோடு’ வரம்பு மிக அதிகமாகவே உள்ளது.

குஜராத் மாநில அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கென வகுக்கப்படும் நலத்திட்டங்களின் பலன்கள் அதற்குரிய பலருக்கும் போய்ச் சேருவதில்லை.

‘வளம் மிக்க’ மாநிலமாகப் பறைசாற்றப்படும் குஜராத்தில்தான், நாட்டில் உள்ள 100 பின்தங்கிய மாவட்டங்களில் 3 இருப்பதாகத் திட்டக்குழு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மின்சார உற்பத்தியைத் தேவைக்கு அதிகமாக மேற்கொள்ளும் ஒரே மாநிலமென குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. தங்கள் தேவைக்குப் போக எஞ்சியுள்ள மின்சாரத்தை விற்பதாகவும் சொல்கிறது. ஆனால் உண்மையில், பல கிராமங்களில் மக்கள் ஒரு நாளைக்கு நாலரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர்.

இதனால் உழவர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். 2006 ஜனவரி முதல் 2007 ஜனவரிவரை உள்ள காலப் பகுதியில் குஜராத்தில் 148 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று முதல்வர் நரேந்திர மோடியே சட்டப் பேரவையில் ஒப்புக் கொண்டார். 1997ஆம் ஆண்டு முதல் இதுவரை கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தொட்டுவிட்டதாக அரசுத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் 500 உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

கணித்துறை வளர்ச்சியடைந்த இக்காலக்கட்டத்தில் வளர்ந்த நாடுகள், சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைத் தங்கள் நாட்டில் நிறுவினால், தங்கள் சுகாதாரம் பாதிக்கப்படும் என்ற சுயநல எண்ணத்தில் தொழிற்சாலைகளை ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் மாற்றியுள்ளன. இங்குத் தொழிலாளர்கள் மலிவாகக் கிடைப்பதும் அவர்களுக்கு வசதியாகிவிட்டது. இத்தகைய தொழில் முதலீடுகளையே நமது நாட்டுத் தலைவர்கள் இரு கரம் நீட்டி வரவேற்கின்றனர்.

இப்படி முதலீடுகள் என்ற பெயரில் வந்த பொருளாதாரத்தினால் அதிகப் பலன் அடைந்த மாநிலங்கள் குஜராத்தும் மகாராஷ்டிராவும்தான். இந்த இரு மாநிலங்களையே அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன.

உழவுக்கு ஏற்ற மண் வளம் பொருந்திய மேற்குவங்க மாநில நிலத்தின் ஓர் அங்குலத்தைக்கூட விட்டுத் தரத் தயாராக இல்லாத மக்களை, “பிற்போக்குவாதிகள்” என்று வசைபாடிய கூட்டம், டாடா நானோ தொழிற்சாலை தொடங்க குஜராத் அரசு அளித்த இடம் விவசாயத்திற்குத் தகுதியற்றது என்பதை மறைத்துவிட்டு, மோடியின் விவேகத்தால் குஜராத் மக்கள் வளம் பெற்றார்கள் எனக் கதையளக்கின்றனர்.

மோடியும் தான் ஏதோ குஜராத் மாநிலத்தை இந்தியாவிலேயே மிகப் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றி விட்டதைப் போன்ற பிம்பம் ஏற்படுத்த முயல்கிறார்.

{youtube}8Y6Es6Cd5PM{/youtube}

நெடுங்காலமாக ஏற்பட்ட வளர்ச்சியில் முன்னிலையில் வந்த குஜராத்துக்கு, நரேந்திர மோடி வந்துதான் ஜென்ம சாபல்யம் அளித்தார் என்பதாகப் பரிவாரங்கள் விளம்பரப் படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. குஜராத்திலுள்ள இந்துமதவாதிகளுள் பெரும்பாலோர் மதத்துவேஷம் ஊட்டப் பட்டுள்ளனர். மதக் கலவரங்களை முன்னின்று நடத்தும் திறமை படைத்தவர் என்பது மட்டுமே அவர்கள் மோடியைக் கொண்டாடுவதற்கான காரணம். விரைவில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியில் இறங்கு முகம் தோன்றவே செய்யும். அதனால் வெகுகாலமாக முன்னணியில் இருந்த குஜராத் பின்நிலையை அடையும். ஆனால், ரத்த ஆறை ஓடச் செய்யும் திறமையைவிட, மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருக்கிறது.

குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப் படுவதற்கு அடித்தளமாக விளங்கிய மோடியின் வன்முறைப் பேச்சின் ஆவணத்தை மோடியின் முன்வைத்து, கடந்த 28.3.2010இல் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team-SIT)இன் காந்திநகர் அலுவகத்தில் மோடியிடம் விசாரணை நடந்தது.

விசாரணை அதிகாரி L.K. மல்ஹோத்ரா கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் கூறாமலும் மழுப்பியும் மறந்து விட்டதாக நடித்தும் பொய்களைக் கூறியும் நரேந்திர மோடி நழுவினார் என்று SIT ஆவணப்படுத்தியுள்ளதை இங்குக் கட்டாயம் ‘வளர்ச்சி’ அறிக்கைகளோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும் – கூடவே, கரண் தாப்பரின் தொலைக்காட்சிப் பேட்டியில் மழுப்ப முடியாமல் முகம் வெளிறிய மோடியின் முகத்தையும்.

மொத்தத்தில், குஜராத்தின் “அதிவேக வளர்ச்சி” எனும் பிம்பம் மோடியின் பொய்க்கணக்குகளால் வாரிமுடிக்கப்பட்ட “ஒய்யாரக் கொண்டை”தான். “உள்ளே இருக்கிற ஈறையும் பேனையும்” நாநோ தாழம்பூவால் மறைத்துவிட முயலும் மோடியின் உத்தி எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பதை எதிர்காலம் சொல்லும்.