நல்லதும் கெட்டதும்

Share this:

 

இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாறிமாறி நடைபெறுபவை. எவருக்கும் இதில் விலக்கில்லை. ஆயினும் நல்லது ஏற்படும்போது மகிழ்கின்ற மனம், துன்பமோ சோதனையோ தீண்டும்போது மட்டும் துவள்கிறது; நிதானத்தை இழக்கிறது. நினைத்தது நடக்கும்போது மனம் இன்பத்தில் துள்ளுகிறது. அது நிறைவேறாதபோது வெறுப்பில் மூழ்குகிறது.

சோதனைகளைப் பற்றியும் அது நிகழும்போது மேற்கொள்ள வேண்டிய பொறுமையைப் பற்றியும் நிறைய படித்திருப்போம். ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் பாக்தாதில் வாழ்ந்த இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) Sayd Al-Khatir (தமிழில் ‘மனச்சுரங்கம்’ என்று சொல்லலாம்) எனும் நூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிகவும் சுவையானவை.

‘தனது அனைத்து ஆசைகளையும் தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றி வைத்தாக வேண்டும் என்று ஒருவன் எண்ணுவானேயானால் அவனைவிட முட்டாள் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது’ என்று நம் தலையில் நச்சென்று குட்டுகிறார் இமாம். ‘நினைத்ததெல்லாம் நடந்துவிடும் என்றால் சோதனைகள் எங்கிருந்து வரும்? நாம் விரும்புவதற்கு மாற்றமான ஒன்று இருக்கவே வேண்டும். விடை காண இயலா விஷயங்கள் சில சமயங்களில் நடைபெற வேண்டும். சில சமயங்களில் எதிரிகள் நமக்கு இழைக்க விரும்பும் தீங்குகளில் அவர்கள் வெற்றிபெற வேண்டும்’ என்கிறார்.

நமக்கு வியப்பளிக்கலாம்; அவர் அப்படிச் சொல்வதற்கான காரணத்தை அவரே விளக்குகிறார்.

‘எப்பொழுதுமே பாதுகாப்பான நிலையும் நமது எதிரிகளை நாம் எப்பொழுதுமே வெல்லும் வெற்றியும் சோதனைகளற்ற ஆரோக்கியமான வாழ்வும் நிரந்தரமாய் அமைந்துவிட்டால் அப்படிப்பட்ட மனிதனுக்கு பொறுப்பு உணர்வின் அர்த்தமோ பாதுகாப்பின் அர்த்தமோ விளங்கப்போவதில்லை.’

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பத்ருப் போரில் வெற்றி கிட்டியது. பிறகு உஹதுப் போரின்போது என்ன நிகழ்ந்தது? பத்ருப் போரில் வெற்றியடைந்த அல்லாஹ்வின் தூதர், இறையில்லம் கஅபாவைத் தரிசிக்கச் சென்றபோது தடுக்கப்பட்டார்களே?’ என்று நபியவர்களுக்கு பத்ருப் போரில் கிடைத்த வெற்றியையும் பின்னர் உஹதுப் போரில் நேரிட்ட பின்னடைவையும் உம்ரா நிறைவேற்ற மக்கா சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதையும் எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார் இமாம் இப்னுல் ஜவ்ஸி.

‘நல்லதும் கெட்டதும் இருக்கத்தான் வேண்டும்.  நல்லவை ஒருவனை நன்றியுடையவனாய் மாற்ற உதவும். சோதனைகள் அல்லாஹ்விடம் உதவி வேண்டி இறைஞ்ச வைக்கும். அப்படி இறைஞ்சி வேண்டுவதை இறைவன் நிறைவேற்றி வைக்கவில்லையெனில் அல்லாஹ் அந்தச் சோதனையை முழுமைப்படுத்த நாடியுள்ளான்; நம்மை அவனுடைய நாட்டத்திற்கு அடிபணிய வைக்க விழைகிறான் என்றே எண்ணங்கொள்ள வேண்டும். அங்குதான் உண்மையான இறை நம்பிக்கை ஒளிவிடும். இறைவனின் நாட்டத்திற்கு முழுக்க அடிபணிவதில்தான் ஒரு மனிதனின் மெய்யான இயல்பு வெளிப்படுகிறது,’ என்று இறைவனுக்கு அடிபணிவதன் மெய்ப்பொருளை உணர்த்துகிறார்.

‘அல்லாஹ்வின் விதியை நினைத்து மனத்திற்குள் வெறுப்போ, எதிர்ப்பு உணர்வோ இருந்தால் அது அந்த மனிதனின் அறிவுக் குறைபாட்டைப் பிரதிபலிக்கும்.’

‘இறைவனின் விதியை ஏற்றுக்கொள்ளும் ஒருவன், அதேநேரத்தில் தனக்கு நிகழ்வுறும் சோதனைகள் அளிக்கும் வேதனையையும் துக்கத்தையும் நினைத்து வருந்துவானேயானால், அதில் பிழையில்லை; ஏனெனில் அது மனித இயல்பு.’

‘ஆனால், அல்லாஹ்வின் விதியை வெறுக்கும் ஒருவன், இன்னும் ஒருபடி மேலேபோய், தனது ஆட்சேபத்தை “ஏன் அல்லாஹ் எனக்கு மட்டும் இப்படிச் செய்கிறான்?” என்று புலம்பினால், அவன் அறிவிலி. அத்தகைய அறிவிலிகளிலிருந்து நம்மை விலக்கிவைக்க அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்,’ என்று முடிக்கிறார் இமாம்.

நல்லதும் கெட்டதும் இருந்தால்தான் அது வாழ்க்கை. சோதனைகளை எதிர்கொள்வதில்தான் இறை நம்பிக்கை முழுமையடைகிறது என்பதை உணரமுடிகிறது. இமாம் இப்னுல் ஜவ்ஸியின் நூலில் இடம்பெற்றுள்ள இந்தச் சிறு பகுதியில் நமக்கு நிறைய அறிவுரைகள் அடங்கியுள்ளன.

-நூருத்தீன்

நன்றி : சமரசம் 1-15, மே 2012


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.