அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..!

“தலித் கிறிஸ்த்துவர்கள்” என்ற அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..! (-கார்ட்டூனிஸ்ட் பாலா)

“தலித் கிறிஸ்தவர்கள்” என்ற சொல்லாடலே ஆபத்தான ஒன்றாகப் பார்க்கிறேன். இதில் தலித் கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரியாக படவில்லை.

இப்படி சொல்வது தலித் அறிவுஜீவிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் என் மீது எரிச்சலை உண்டு பண்ணக்கூடும்.. பரவாயில்லை.. என் பார்வையை பதிவு செய்கிறேன்.. அவ்வளவுதான்.

இந்து மதத்தின் கொடூரமான சாதிய அடுக்குகளிலிருந்து வெளியேறத்தான் மாற்று மதங்களுக்கு செல்கிறார்கள் தலித் மக்கள். கிறிஸ்த்தவ பிள்ளை, கிறிஸ்த்துவ நாடார், கிறிஸ்த்துவ வன்னியர்.. இப்போது தலித் கிறிஸ்த்துவர்கள்.. என்று கிறிஸ்த்துவ மதம்.. இன்று இந்தியாவில் இந்துமதத்தின் அத்தனை அசிங்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு இந்துமதத்தின் மற்றொரு வடிவமாக மாறிவிட்டது.

கிறிஸ்த்துவத்திற்கு மாறினாலும் நாங்கள் தலித்துகளாகவே இருக்கிறோம், அதனால் தான் இடஒதுக்கீடு கோரிக்கை என்கிறார்கள். உங்களை சமமாக மதிக்காத கிறிஸ்த்துவ மதத்திற்கு என்ன எளவுக்கு மாறி நீங்கள் அல்லேலுயா போடணும்.. தூக்கி வீசிட்டு வெளியே போங்க.

இந்த வகையில் இஸ்லாம் மட்டும் அதன் அடிப்படைவாதிகள் காரணமாக இந்து மதத்தின் சாதிய தாக்கம் இல்லாமல் கொஞ்சம் தாக்குப்பிடித்து நிற்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய தலித் மக்கள் இன்று இஸ்லாமியர்களாகவே வாழ்கிறார்கள். அன்று அவர்கள் மதம் மாறியபோது, அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்று கூறி தலித் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று தலித்தாகவேத்தான் இருந்திருப்பார்கள். (தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய முக்கியம்..)

இடஒதுக்கீட்டுக்காக இன்று தலித் கிறிஸ்த்துவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவதுபோல் நாளை `தலித் இஸ்லாமியர்கள்’ என்ற அடையாளமும் உருவாக்கப்படலாம். இவர்களின் இந்த கோரிக்கை எல்லாம் மறைமுகமாக இந்துமதத்திற்கு பலமளிக்கவே செய்யும்.

இடஒதுக்கீட்டுக்காக இப்படி ஒவ்வொரு மதத்திலும் தலித் என்ற அடையாளத்தை உருவாக்கிக்கொண்டே செல்வார்களானால் அந்த மக்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சாதிய விடுதலைக்கான வாய்ப்பும் தட்டி பறிக்கப்படும். வேண்டுமானால் இப்படி மதம் மாறும் தலித் மக்களுக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம்.

மாறாக இப்படியே இந்து மதத்தின் படி நிலை சாதிய கட்டமைப்பை ஒவ்வொரு மதத்திற்கும் கடத்திக்கொண்டே இருந்தால் காலம் முழுக்க தலித் மக்கள் அசிங்கப் படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.. அந்த மக்களை வைத்து ஓட்டுப் பொறுக்குபவர்களுக்கு வேண்டுமானால் தலித் அடையாள அரசியல் லாபத்தை தரலாம்..

மற்றபடி அந்த மக்களின் சாதிய விடுதலை எந்த காலத்திலும் சாத்தியமாகாது..

கார்ட்டூனிஸ்ட்.பாலா