குருதி நாற்றம் அடிக்கும் நாடு!

குருதியில் தோய்ந்த வரலாற்றைக்் கொண்ட நாடு!
Share this:

லகின் அதிகுரூரமான ஆக்ரமிப்பு நாட்டின் அதிபர்…” என்ற மிகக் கடுமையான இந்த வாசகம் ஏதோ ஒரு முஸ்லிமின் நாவிலிருந்து வெளியானவை என நீங்கள் கருதினால், உங்கள் எண்ணம் தவறானது. இந்தக் கடுமையான வாசகத்தின் சொந்தக்காரர் ஒரு முஸ்லிமல்லர்; அவர் ஒரு கிறிஸ்தவர்; அதுவும் பிரபலமான ஒரு பேராயர் என்றால் நம்பவா போகின்றீர்கள். ஆம், நம்பித்தான் ஆக வேண்டும்.

 

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மாதாந்திர இதழ் ஒன்றிற்கு அளித்த நேர்முகத்தில் கான்டர்பரி பேராயர் டாக்டர் ரொவான் வில்லியம்ஸ் போர் வெறியன் ஜார்ஜ்புஷ்ஷிற்கு எதிராகப் பயன்படுத்திய வாசகங்களே மேற்கண்டவை. ‘US is the world’s imperialist’ என்ற தலைப்பில் இந்நேர்முகம் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

நவீன உலகை உருவாக்குதல் என்ற குறிக்கோளுடன் முன்னிறங்கிய அமெரிக்காவின் செயல்பாடுகள் உலகை மிகவும் மோசமான பயங்கரவாதத்திலும் தீவிரவாதத்திலும் கொண்டு சென்று விட்டுள்ளது எனவும் ரொவான் வில்லியம்ஸ் அதில் தெரிவித்தார். உலகை முழுவதும் சுட்டெரிக்கக் கூடிய அமெரிக்காவின் மோகம் நல்லதல்ல என்றும் மனிதகுலத்திற்கே அது அவமானமானது என்றும் அவர் தெரிவித்தார்.

 

ரொவானின் இக்கருத்துகள் மேற்குலகில் பெரிய சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. தீவிரவாதிகள் மட்டுமே தங்களையும் தங்களின் செயல்பாடுகளையும் எதிர்க்கின்றனர் என்ற புஷ்ஷின் அபிப்பிராயங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அடியாகவே பிஷப்பின் இவ்வார்த்தைகள் அமைந்துள்ளன.

 

போரைக் குறித்து எழுதும் பிரபல எழுத்தாளரான ராபர்ட் ஃபிஸ்க், புஷ் சமீபத்தில் நடத்திய அரபு நாடுகளுக்கிடையிலான சுற்றுப்பயணத்தைக் குறித்து எழுதிய ஓர் கட்டுரையில் (தி இன்டிபென்டன்ட், 2008 ஜனவரி 16), கீழ்கண்டவாறு கூறுகிறார்:

 

“அரபு நாடுகளினூடாக சுற்றுப்பயணம் நடத்தும் வேளையில் விலை உயர்ந்த பட்டுமெத்தைகளில் புஷ் துயில் கொண்டார். சுகமான நித்திரையையும் அவர் அனுபவித்தார். ஆனால், அதே வேளையில் மத்திய ஆசியா, இரத்தக்களரியிலும் கண்ணீரிலும் துயில் கொண்டிருந்தது. உலகின் சமாதானத்தைத் தகர்க்க கச்சைக்கட்டி இறங்கியுள்ள இம்மனிதர், மத்திய ஆசியாவில் சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையிலேயே லெபனானில் அமெரிக்க தூதரகம் குண்டுக்கு இரையானது. இதில் நான்கு நிரபராதிகள் கொல்லப்பட்டனர். இந்த இரத்தப் பிசாசினைக் கணட மகிழ்ச்சியில் சியோனிய தீவிரவாதிகள் 18 பாலஸ்தீனியரைச் சுட்டுக் கொன்றனர். அக்கிரமக்காரர்களுக்கு இதனைவிட உற்சாகம் அளிக்கக்கூடிய மற்றொரு சாத்தான் இவ்வுலகில் வேறு ஏதேனுமுண்டோ?”

 

நாகரீகம் மற்றும் வர்க்கரீதியில் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைச் சாதாரணமானவர்கள் என்று கருதும் ஒருவிதத் தலைக்கனம் அமெரிக்க மனங்களைப் பொசுக்கிக் கொண்டிருக்கின்றது என கான்டர்பரி பேராயர் கூறுகிறார். புஷ்ஷை வரவேற்பதற்கு அரபு நாடுகள் காண்பித்த ஆர்வம் அவரை வியப்பிலாழ்த்தியது. இராக்கிலும் பாலஸ்தீனிலும் தங்கள் முஸ்லிம் சகோதரர்களைக் கொடூரமாகக் கொன்றொழிக்கவும் நரகவேதனையை அனுபவிக்கவும் செய்த ஒரு மனிதனுக்குத் தங்களிடையே உயர்ந்த மதிப்பளிப்பதற்கு இவர்களுக்கு எவ்விதம் மனம் வந்தது? எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார். ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு இருக்கும் விவரம், அரபு நாடுகளின் எந்த ஓர் ஆட்சியாளருக்கும் உருவாகாததை நினைத்து வெட்கப்படாமல் வேறென்ன செய்ய முடியும்?

 

ராபர்ட் ஃபிஸ்க் கூறுகிறார்: “இராக் போருக்கு முன்னர் புஷ் அடிக்கடி பிரசங்கம் செய்துக் கொண்டிருந்த நவீன மத்திய ஆசியா ஆலோசனையைக் குறித்துத் தற்பொழுது எதுவுமே வாயைத் திறப்பதில்லை. ஏகாதிபத்தியங்களைக் குறித்தும் சித்திரவதைச் சிறைச்சாலைகளையும் அமெரிக்க இரகசியப் புலனாய்வுத்துறையினர் செயல்படும் பழைய மத்திய ஆசியாவைக் குறித்து மட்டுமே அவர் தற்பொழுது பேசிக்கொண்டிருக்கின்றார். இராக் யுத்தத்தில் இந்த நபர் தோற்றதற்கான தெளிவான ஆதரமல்லவா இது?”

 

அக்கிரமம் மற்றும் ஆக்ரமிப்பினுடைய வரலாற்றை மட்டுமே கூறக்கூடிய ஒரு நாடு தான் அமெரிக்கா. ஏதாவது ஒரு கொலைக்கு உத்தரவிடாத ஒரு அதிபர் கூட அந்நாட்டை ஆண்டதில்லை. ஜார்ஜ் வாஷிங்டன் முதல் துவங்குகின்றது இரத்தத்தில் புரண்ட அந்த நாட்டின் சரித்திரம்.

 

“அமெரிக்காவைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி” என்ற பெயரில் முனீர் அல் அகஸ் என்ற சிரிய எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எப்படிப்பட்ட ஒரு மனிதனின் இதயமும் உறைந்து விடக்குடிய அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்கள் அதில் உள்ளன.

 

“ஆதிவாசிகள் வசித்துக் கொண்டிருந்த அமெரிக்காவினை ஐரோப்பியர் ஆக்ரமித்து முதன் முதலாக அங்குக் குடியேறினர். அந்தப் பூமியின் யதார்த்த உடமையாளர்களான சிவப்பு இந்தியர்களுடன் சமரசம் செய்து அங்கு வாழ்ந்து கொள்வதற்குப் பதிலாக, அவர்களைக் கொன்றொழித்து அங்கு தங்களின் வாழ்க்கைத் துவங்கிய அமெரிக்கர்கள், தங்களின் அதே மனோபாவத்தையே பிலிப்பைன்ஸ், கொரியா, பலஸ்தீன் முதல் ஆப்கான் மற்றும் ஈராக்கிலும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர்”.

 

அகாஸின் ஆய்வுபடி இதுவரை 112 மில்லியன் ஆதிவாசிகள் அமெரிக்கக் குடியேற்றக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டு பிறக்கும் வேளையில் அமெரிக்காவில் வெறும் 4 மில்லியன் ஆதிவாசிகளே விஞ்சியிருந்தனர். ஒரு நாட்டினுள் ஆக்ரமித்து நுழைந்து அந்த நாட்டின் குடிமக்களை இதுபோன்று கொடூரமாகக் கொன்றொழித்த ஒரு சமூகத்தை உலகில் வேறு எங்காவது பார்க்க முடியுமா?

 

அது தான் அமெரிக்கா. இரத்தக்கறையைப் பார்க்காமல் ஒருநாள் கூட அவர்களால் நிம்மதியாகத் தூங்க இயலாது. அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்டின் அறிக்கை ஒன்று இதற்கான ஆதாரமாகும்: “சிவப்பு இந்தியக்காரர்களுக்கு மேய்வதற்கும் வேட்டையாடுவதற்கும் சிறிது நிலம் நாம் அனுமதித்துக் கொடுத்தால் அதன் அர்த்தம், காட்டுமிராண்டிகளும் நாகரீகமில்லாத்தவருமான ஒரு கூட்டத்திற்கு ஒரு கண்டம் முழுவதும் தயாராக்கிக் கொடுத்ததற்கு ஒப்பானதாகும். அதனால் அவர்களைக் கொன்றொழித்தல் அல்லாமல் மற்றொரு வழி நம் முன்னிலையில் இல்லை.” இவ்வறிக்கை வெளியிட்ட தியோடர் ரூஸ்வெல்ட், 1906 ஆம் வருடத்திய உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற நபர் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒருவரின் மனநிலையே இப்படி எனில், சமாதானத்திற்காக ஒரு சிறிய துரும்பு கூட பெற்றிராத மற்ற அமெரிக்கர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஒரு சமூகத்தைக் கொலை செய்யத் துணிந்தவர் அதனை இருந்த இருப்பில் ஒரேயடியாகச் செய்து முடித்தால் அதனைக் கொலையிலும் ஒருவித மரியாதை கலந்த கொலை என அழைக்கலாம். ஆனால் அவ்வாறு இல்லாமல் அச்சமூகத்தைச் சிறிது சிறிதாகச் சித்ரவதைச் செய்துக் கொல்வதை எவ்வாறு அழைப்பது?

 

பிரெஞ்ச் இந்தியக்காரர்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சிவப்பு இந்தியக்காரர்களுக்கு எதிராக நடத்திய யுத்தம் மனித சிந்தனைக்கே எட்டாத அளவில் கொடூரமான முறையில் அது இருந்தது. அரசு அங்கீகாரமும் இதற்குக் கிடைத்திருந்தது.

கொடூரமானவர்கள் கூட செய்வதற்குத் தயங்கக்கூடிய அந்த முறை கீழ்கண்ட முறைகளில் இருந்தது: “பரிசோதனை கூடங்களில் வைத்து, பரிசீலனை பெற்றவர்கள் ஆடைகளிலும் மற்ற அணியப் பயன்படுத்தும் விதவிதமான ஆடைகளிலும் நோய் உருவாக்கும் கிருமிகளைப் படர வைப்பர். இந்தத் துணிமணிகளை அமெரிக்கப்படையினர் ஆதிவாசிகளுக்கு உபயோகப்படுத்தக் கொடுப்பர். இதன் பலன் மிகக்கொடூரமானதாக இருக்கும். இதன் பலனாக நான்கு சிவப்பு இந்திய கோத்ரங்களில் இந்நோய் படர்ந்தது. குழந்தைகள் உட்பட ஒரு மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.”

நடுங்கவைக்கும் மற்றொரு கதையையும் முனீர் அகாஸ் தனது ஆய்வு புத்தகத்தின் மூலன் வெளிப்படுத்துகின்றார். “1975 ல் ஜெரார்ட் ஃபோர்ட் அமெரிக்க அதிபராக இருந்தக் காலத்தில் வெள்ளை மாளிகையினுள் ஒரு நீச்சல் குளம் தயார் செய்வதற்காக கட்டிடத்தின் அடித்தளத்தைத் தோண்டியிருக்கின்றனர். அங்கு, சிவப்பு இந்தியக் கோத்திரமான “கோனாய்”களின் வசிப்பிடங்களும் “நெகின் ஷ்ட்டென்க” நகரத்தின் இடிபாடுகளும் அவர்கள் அங்கே கண்டுள்ளனர். அமெரிக்கப்படை 1623 ல் கொன்றொழித்த ஒரு சமூகத்தின் உடல்களுக்கு மேலே தான் இன்றைய உலகக் காவல்காரனின் ஆட்சிபீடம் நிலைகொண்டுள்ளது என்பது இதன் சாரம். அமெரிக்க வெள்ளை மிருகங்களின் கொடூரங்களுக்கு இதனை விட மற்றொரு ஆதாரம் தேவையா?

கொலைகளின் ஆவணப் புத்தகம்

இதுவரை 216 முறை அமெரிக்கப்படை மற்ற நாடுகளின் நிலங்களை ஆக்ரமித்துள்ளனர். இது அங்கீகரிக்கப்பட்ட அரசு கணக்குப்படியாகும். பல்வேறு நாட்டின் அதிபர்களையும் தலைவர்களையும் கொல்வதற்காக சி.ஐ.ஏ முதல் மற்ற உளவாளிகள் வரை நடத்திய மறைமுக செயல்திட்டங்களையும் இத்துடன் கூட்டினால் எண்ணிக்கை இதனைவிட இரு மடங்காகும்.

கூட்டு நாசம் விளைவிக்கும் குண்டுகளை 23 நாடுகளின் மீது பிரயோகித்துள்ளது அமெரிக்கா. ஹிரோஷிமா முதல் பாக்தாத் வரை எண்ணற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அமெரிக்கப்படைகள், எதிர் நடவடிக்கை என்ற பெயரில் தகர்த்துள்ளது.

உலகம் முழுக்க அமெரிக்கா நடத்திய பயங்கர ஆக்ரமிப்புகளின் பட்டியலைச் சாதாரணமாக விவரிக்க இயலாது. பட்டியலில் அடக்கும் எண்ணிக்கைக்கும் விவரங்களுக்கும் மேலாக எழுத்தில் வடிக்க இயலா இரத்தக்கறை படிந்ததாகும் அது. நிகராகுவா, பெரு போன்ற நாடுகளுக்கு எதிராக நடத்திய யுத்தங்கள், மெக்ஸிகன் பூமி (தற்போதைய டெக்ஸாஸ்), பனாமா கால்வாய், நிகராகுவாவின் கிரேடவுன் போன்றவற்றை ஆக்ரமித்துக் கையகப்படுத்தியமை, உருகுவே, ஹோண்டுராஸ், கொலம்பியா போன்றவற்றிற்கு எதிராக நடத்திய அக்கிரமங்கள், ஹெய்த்தி, சிலி, ஹோண்டுராஸ், சால்வடோர் போன்ற நாடுகளுக்கு எதிராக நடத்திய ஆக்ரமிப்புகள், கியூபாவைத் தகர்ப்பதற்காக நடத்திய முயற்சிகள், கடலிடுக்கில் அமைந்துள்ள குவாண்டனமோவைக் கையகப்படுத்துவதற்காகக் கூறிய அநியாயமான சந்தர்ப்பவாதங்கள், லெபனான், சோமாலியா, சூடான், லிபியா, ஈராக், அஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளைத் தகர்த்து இல்லாமல் ஆக்குவதற்காக நடத்தப்பட்ட அநியாயமான யுத்தங்கள்…. பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

அமெரிக்கா, மனித சமூகம் கண்டதிலேயே மிகவும் கொடூரமான ஆக்ரமிப்பு சக்தியாகும். அமெரிக்காவில் குடியேறி வசிப்பதற்காக அங்குள்ள யதார்த்தக் குடிமக்களான ஆதிவாசி சிவப்பு இந்தியர்களை அழித்தொழித்து, அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தனர். அதற்குப் பின் தங்கள் அரசுக்கு அடிமை வேலை செய்வதற்காக ஆப்ரிக்க நாடுகளை ஆக்ரமித்து அங்கிருந்து பாவப்பட்ட அப்பாவி மக்களை(கறுப்பின மக்கள்) சரக்குக் கப்பல்களில் மூச்சு முட்டும் அளவில் நிரப்பி அமெரிக்கத் துறைமுகங்களில் கொண்டு வந்து இறக்கினர் அவர்களை வைத்து நரகத்தை விட மோசமான அளவில் வேலை செய்வித்தனர்.

இதோ தற்பொழுது எண்ணெய் சொத்துக்களைக் கையகப்படுத்தும் இலட்சியத்துடன் அரபு நாடுகளை ஒவ்வொன்றாகத் தகர்த்துக் கொண்டிருக்கின்றது. சியோனிஸ தீவிரவாதத்திற்குத் தேவையான இஸ்ரேல் எனும் ஆக்ரமிப்பு பூமியை நிலைநிறுத்துவதற்காக அப்பாவி ஃபலஸ்தீனியர்களைக் கருவறுக்கும் யூத சியோனிஸ தீவிரவாதத்திற்குத் துணை நிற்கின்ரது.

இப்படிப்பட்ட படு மோசமான இரத்தப்பாரம்பரியம் கொண்ட நாட்டிற்கு சமாதானத்தைக் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?.

நன்றி: தேஜஸ், 16 மே 2008.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.