அன்னா ஹசாரே கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அனல் கக்கும் அருந்ததி ராய்

Share this:

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ என்ற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் ‘நொறுங்கிய குடியரசு’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்திருந்த அருந்ததி ராயைச் சந்தித்தேன். இரு மாநில மக்களிடையே கொந்தளிப்பான சூழல் நிலவுவதால், இப்போதைக்கு ‘முல்லைப் பெரியாறு’ தவிர்த்து எதுவும் பேசலாம்” என்றபடி பேட்டிக்குத் தயாரானார்.

ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்துக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது?

“பெண்களைப் பொறுத்த வரையில், இந்தியா மிகவும் சுவாரஸ்யமான தேசம். வலிமை வாய்ந்த பெண்களும் இருக்கிறார்கள். வழி வழியாக ஒடுக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். இன்றும் கூட, 16-ம் நூற்றாண்டு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கும் ஒரு நாட்டில், ஒரு பெண் முதல்வராக இருப்பதை மட்டும் வைத்து பெண்கள் முன்னேற்றம் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. ஆனால், இரண்டு விஷயங்களை நாம் எப்போதும் நினைவு கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளிலும் பல பெண்கள் கட்டுப்பெட்டிகளாக இருக்கிறார்கள். இங்கே அரசியல் போராட்டங்களில் குறிப்பாக, தண்டகாரன்யா போன்ற இடங்களிலும் பெண்கள் முன் நிற்கிறார்கள். ஆக பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பொதுப்படையாகப் பேசுவது சிக்கலான விஷயம்!”

மாவோயிஸ்ட்கள் பற்றிச் சொல்லும் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ புத்தகம் எழுதப்பட்டதன் பின்னணி குறித்துச் சொல்லுங்களேன்?

“இதை எழுத வேண்டும் என்ற ஐடியா எதுவும் என்னிடம் இருக்கவில்லை. சுவாசத்தில் கலந்திருக்கும் காற்றைப் போல கலந்துவிட்ட ஒன்றாக இந்தப் போராட்டத்தை நான் பார்க்கிறேன். கற்பனை செய்து, யோசித்து எழுதப்பட்டதல்ல. என்னுடைய ‘காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகம் போன்று என்னைப் பாதித்த, நான் உணர்ந்த விஷயங்களைத் தான் இதில் சொல்லி இருக்கிறேன். ‘இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது?’ என்ற கேள்வி எதுவும் எழுப்பப்படாமல் பொதுவெளியில் இன்று மௌனம் நிலவுகிறது.

ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் போன்றவை முறையாகக் கட்டமைக்கப்பட்ட புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை. ‘ஏன் ஊழல் ஏற்படுகிறது?’ என்ற கேள்விக்குப் பதில் தனியார்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் ஆகியவற்றால் கொண்டு வரப்படும் அதிகமான பணம் தான். அந்தப் பணம் ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கிவிடுகிறது. ஊழல் என்பது நடைமுறையில் இருக்கும் பிரச்னைகளின் ஒரு பகுதிதான். அதுவே பிரச்னை அல்ல. கிராமங்கள், காடுகள் போன்றவற்றில் நடைபெறும் போராட்டங்கள் இந்தக் கொள்ளையை எதிர்த்துத்தான் கிளம்புகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டுதான் புத்தகத்தை எழுதினேன்!”

உங்கள் கட்டுரை ஒன்றில் மாவோயிஸ்ட்களை ‘காந்தியர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்களே?

“இல்லை! கவனமாகப் படித்தால் நான் சொல்ல வருகிற கருத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நான் தண்டகாரன்யாவில் இருந்த போது, மாவோயிஸ்ட்களின் நுகர்வுக் கலாசாரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறார்கள். எதையும் வீணாக்குவதில்லை. காந்தியத்தைப் பின்பற்றுபவர்களைக் காட்டிலும் இந்த விஷயத்தில் அவர்கள் அதிகமான காந்தியவாதிகளாக இருக்கிறார்கள். அரசியலை எழுதுவதில் உள்ள முக்கியப் பிரச்னை இதுதான்… முரண்நகைகளை வாசகர்கள் புரிந்து கொள்வதில்லை, எழுதுபவரையும் புரிந்துகொள்வதில்லை!”

இன்னமும் நீங்கள் ‘மாவோயிஸ்ட் அனுதாபி’ தானா?

“அப்படியென்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பிர்லாக்களை நீங்கள் காட்டுக்குள் விடலாம். ஆனால் ஆதிவாசிகளை நீங்கள் விடமாட்டீர்கள். 99 சதவிகிதம் மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகள். ஆனால் எல்லா ஆதிவாசிகளும் மாவோயிஸ்ட்கள் அல்ல. அவர்களுக்காக எழுதினால் அனுதாபி, ஆதரவாளர் என்கிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்கள் எனக்கு அளித்த பட்டம் தான் இது!”

உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?

“தீவிரவாதம் என்பது தனியார்மயப்படுத்தப்பட்ட போர். முதலாளித்துவமும் அப்படித்தானே? அமெரிக்காவால் சமீபகாலம் வரை நெல்சன் மண்டேலா கூட ஒரு தீவிரவாதியாகத்தானே பார்க்கப்பட்டார்!”

‘காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்புகிறார்கள்’ என்று ஒருமுறை பேசி இருந்தீர்களே… அவர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதுதானா?

“எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் ராணுவம், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தன் மக்களைத் தன்னுடையே தேசத்தில் தங்க வைக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை. தாங்கள் அந்த தேசத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் பெருமை கொள்ள முடியும். ஒரு தேசத்தின் மீது பற்றுகொள்ள வைக்க அதன் குடிமக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது. அதில் எந்த ஒழுக்கநெறியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நியாய தர்மங்களுடனும், ஒழுக்கநெறியுடனும் வெளிப்படையான விவாதத்திற்கு வரவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அதே உரிமையும் விருப்பமும் காஷ்மீரிகளுக்கும் இருப்பதில் தவறில்லை!”

ஜார்ஜ் புஷ்ஷை ‘போர்க் குற்றவாளி’ என்றீர்கள். தற்போது அமெரிக்காவின் அதிபராக ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தின் பிரதிநியாக ஒபாமா இருக்கிறார். ஏதேனும் நம்பிக்கை வருகிறதா?

“அதனால் அமெரிக்காவின் ஆட்சி முறையில் எந்த மாற்றமும் வரவில்லை. சொல்லப்போனால், பிற நாடுகளின் மீது செலுத்தப்படும் போர் விரிவடைந்து இருக்கிறது. கடாஃபியை அவர்கள் கொன்ற விதம் திட்டமிட்ட கொலை. அதற்காக, நான் கடாஃபி நல்லவர் என்று சொல்ல வரவில்லை. தஹ்ரீர் சதுக்கத்தில் ஹோசினி முபாரக்கிடம் இருந்து ராணுவம் பிடுங்கப்பட்டது. அதை அமெரிக்கா ஆதரித்தது. உடனே மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் ‘ராணுவம் கைப்பற்றியது; எகிப்து அமைதியானது’ என்று எழுதின. இப்போது ராணுவத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம்தான் உண்மையான புரட்சி. ஆனால் இதை அமெரிக்கா ஆதரிப்பதில்லை. அமெரிக்காவாலேயே எகிப்துப் படைகள் வழி நடத்தப்படுகின்றன. மக்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவே ஆயுதங்களை வழங்குகிறது. இப்போது என்ன நடக்கிறது என்பது பற்றி ஊடகங்கள் கவலைப்படவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் புதிய பனிப்போர் மூண்டிருக்கிறது. முந்தைய பனிப்போரின் போது பாகிஸ்தான் ஆற்றிய பங்கை தற்போது இந்தியா செய்யும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அது அமெரிக்காவின் துதிபாடி!”

‘பாராளுமன்றத் தாக்குதல் விசாரணை முழுமையாக நடத்தப்படாத வரை, முகமது அஃப்சலை தூக்கிலடக்கூடாது’ என்று நீங்கள் சொன்ன கருத்துக்காக பா.ஜ.க. உட்பட பல கட்சிகள் உங்கள் மீது சீறின. இந்தியாவில் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதத்துக்கு அஃப்சல் ஓர் உதாரணமா?

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்துப் பார்த்தால் தெரியும். முதலில் நான்கு பேரைக் கைது செய்கிறார்கள். அதில் கிலானி தான் முக்கியக் குற்றவாளி என்றார்கள். இறுதித் தீர்ப்பிலோ ‘கிலானிதான் செய்தார் என்பதற்குப் போதுமான ஆதாரமும் இல்லை’ என்றார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒருமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளைச் சீண்டிவிடுவதற்காக ஊடகங்கள் தொடர்ந்து பொய்யையே சொல்லிக் கொண்டிருந்தன. நாட்டு மக்களின் கோபம் தணிக்க அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அறைகூவின. அது முற்றிலும் காட்டுமிராண்டித்தனம். பெரும்பான்மையின் சீரழிக்கும் எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையான குற்றவாளிகள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே அஃப்சலைத் தூக்கிலிடத் துடிக்கிறார்கள்!”

அன்னா ஹஜாரேவைப் பற்றி…

“அவரைப் பற்றி என்ன? பல மக்கள் இன்னும் அவர்கள் அளித்த ஜன்லோக்பால் சட்ட வரைவைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மக்களின் போராட்டம் உண்மையானது. அந்த நியாயமான கோபம் முறையாக செலுத்தப்படவில்லை. இருப்பதிலேயே பெரிய ஊழல் கார்ப்பரேட்கள் செய்யும் ஊழல்தான். ஆனால் அண்ணா ஹஜாரேவின் சட்ட வரைவோ அரசின் கழுத்தைப் பிடிப்பதாக மட்டுமே இருக்கிறது. 24 மணி நேரமும் கார்ப்பரேட் ஊடகங்களால் கவரேஜ் கொடுக்கப்பட்டு அந்தப் போராட்டமும் ஊழல்படுத்தப்பட்டது. அந்த கவரேஜ் கூட ஒரு வகையில் ஸ்பான்ஸர்ஷிப்தான். மக்களின் நியாயமான கோபமும் கார்ப்பரேட் படுத்தப்பட்டுவிட்டது. ஒரு இடத்திலும் ‘தனியார்மயமாக்கலுக்கு முடிவு கொண்டு வாருங்கள்’ என்று கோஷம் எழவில்லை. ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியாது!”

தஹ்ரீர் சதுக்கம், ஜன்லோக்பால், வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என சென்ற வருடம் மக்கள் வீதிக்குத் திரண்டு போராடியது எதைக் காட்டுகிறது?

“இப்படி பொதுமைப்படுத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு போராட்டமும் வேறு வேறு பிரச்னைகளுக்காக எழுந்தது. ‘பாப்ரி மஸ்ஜித்தை உடைக்க வாருங்கள்’ என்று மக்கள் வீதிக்கு இறங்குவதும் தஹ்ரீர் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வருவதும் ஒன்றல்ல. ஆகவே, இதை ஏதோ மக்கள் செய்யும் புரட்சி என்றும், மக்கள் சக்தி என்றும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஒன்று தெரியுமா… ஊழலுக்கு எதிராகப் போராடும் அதே டெல்லியில் இருக்கும் மக்கள்தான் ‘இந்தியா வல்லரசாக வேண்டும்’ என்கிறார்கள்!”

எழுத்தாளராக இருந்து கொண்டு அரசியலையும் பேசுவது எப்படி சாத்தியமாகிறது?

“இதுவே 20-ம் நூற்றாண்டுச் சிந்தனைதான். சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் அன்று தங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்ததோ அதைத்தான் எழுதினார்கள். பேசினார்கள். நானும் அப்படித்தான் இருக்கிறேன். எழுத்தாளர் என்பவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்பவராக மட்டும் இருக்கக் கூடாது!”

நீங்கள் எதைப் பேசினாலும் எழுதினாலும் அது சர்ச்சையைக் கிளப்புகிறதே…?

“நான் சர்ச்சையைக் கிளப்ப எதையும் எழுதுவதில்லை. ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளான விஷயங்களைத் தான் எழுதுகிறேன். அந்தச் சர்ச்சைக்குரிய விஷயங்களில் என்னுடைய பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன். அவ்வளவே!”

அந்த சர்ச்சையைக் கிளப்புவதில் ஊடகங்களுக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிறீர்களா?

“நான் அவர்கள் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை!”

கூடங்குளம், முல்லைப் பெரியாறு, 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப் பல பிரச்னைகள் நாட்டில் இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது உண்மையிலேயே நமது குடியரசு நொறுங்கிவிட்டதாகத் தோன்றுகிறதா?

“நிச்சயமாக!”

நன்றி: செய்தி விகடன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.