அதிமுக இருக்க பிஜேபி எதற்கு?

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.

அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்’, இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை’யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றி வீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது’ என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்.

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே’ என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான்.

 

நன்றி: சோலை(குமுதம் ரிப்போர்ட்டர்)