பணப்பரிமாற்று விபரங்கள் US-வசம் அளிக்கப்பட்ட அதிர்ச்சித்தகவல்!

{mosimage}பிரஸ்ஸல்ஸ்: பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை உலகின் 200 நாடுகளில் கையாளும் பெல்ஜிய நாட்டு SWIFT (Society for Worldwide Inter-bank Financial Transactions) எனும் நிறுவனம் அதன் வழியாகப் பணம் அனுப்பியவர், அனுப்பப்பட்டவர், முகவரி, அனுப்பப்பட்ட பண மதிப்பு, பணம் அனுப்பியதற்கான காரணம் போன்ற விரிவான விபரங்கள் அடங்கிய தகவல்களை US-ன் உளவு நிறுவனங்களான CIA மற்றும் FBI போன்றவை பெற்றுக்கொள்ள வழிவகை செய்து தந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தத் தகவல் ஐரோப்பிய ஆட்சிமன்றத்தைக் கடும் சினத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து கடும் வார்த்தைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை இந்நிறுவனத்திற்கும் பெல்ஜிய அரசுக்கும் ஐரோப்பிய ஆணையம் (European Commission) அனுப்பி உள்ளது.

இது குறித்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பிரஸ்ஸல்ஸ் உறுதி அளித்துள்ளது. எனினும் SWIFT நிறுவனம் தனது கிளைகள் US-இலும் இருப்பதால் அந்நாட்டு அரசு தீவிரவாதத்தை ஒடுக்கப் போவதாகச் சொல்லிக் கேட்கும் தகவல்களைத் தாங்கள் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்தை SWIFT பரிமாற்றம் செய்கிறது. ஐரோப்பிய ஆணையத்தைப் பொறுத்தவரை இத்தகவல்கள் பாதுகாப்புடன் கையாளப்படும் என்ற நம்பிக்கை வந்தாலேயே இன்னொரு அரசுக்கு இது போன்ற தகவல்கள் அளிக்கப்படலாம். EC இதுவரை US-ஐ இவ்விஷயத்தில் நம்பகமான நாடாகக் கருதவில்லை.

SWIFT உடனடியாக இதற்கு மேல் இத்தகவல்களை US-க்கு அளிக்கக்கூடாது என ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.