பொய்க்கும் டார்வின் கொள்கை: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

Share this:

உலகின் படைப்பாளனை மறுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட, “குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்” என்ற டார்வினின் சித்தாந்தத்தை சமீபத்தில் வெளியாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள “படைத்தல் பற்றிய வரைவு (Atlas of Creation)” என்ற ஹாரூன் யஹ்யா அவர்களின் புத்தகம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுவரை ஐரோப்பிய நாடுகளின் பள்ளிப் பாடப்புத்தகங்களில் மனிதனின் தோற்றம் பற்றி டார்வினின் அனுமானத்தின் அடிப்படையிலான நிரூபிக்கப்படாத குரங்குக் கொள்கையான “பரிணாமக் கோட்பாடே” இடம்பிடித்து வருகிறது. இதற்கு நேரெதிராக, மனிதன் சுதந்திரமாக சிந்திக்கும் வகையில் வளர பள்ளிப்பாடங்களில் “படைத்தல் பற்றிய வரைவையும்” இடம் பெற செய்ய வேண்டும் என இப்புத்தகத்தின் ஆசிரியர் ஹாரூன் யஹ்யா கோரிக்கை எழுப்பியுள்ளதே ஐரோப்பிய பாராளுமன்ற சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகும்.

அனுமானத்தின் அடிப்படையிலான பரிணாமவாதத்தை பல்வேறு ஆதாரங்களுடன் தகர்க்கும் அத்னான் அக்தர் எனப்படும் ஹாரூன் யஹ்யாவின் இப்புத்தகம், ஐரோப்பியக் கண்டத்தின் டார்வின் கோட்பாடுகள் மீதான பரிணாமவாத நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சேர திகில் உண்டாகியிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பரிணாமக்கோட்பாட்டில் நம்பிக்கையற்றவர்களிடம் இருந்து இதுவரை வெளியான அனைத்து புத்தகங்களையும் விட இந்த “படைத்தல் பற்றிய வரைவு” (Atlas of Creation) என்ற புத்தகம் அதிக எதிர்ப்பை எழுப்பியுள்ளதற்குக் காரணம் உள்ளது. இதுவரை கட்டிக் காத்து வந்த பரிணாமக் கோட்பாட்டிற்கும் அதன் மூலம் ஊடுறுவியிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சிந்தனை மற்றும் கலாச்சாரங்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கருதுகின்ற காரணத்தினாலேயே இப்புத்தகத்தை முழு உலகிலும் தடை செய்யும் அளவிற்கு மனம் வெதும்பியுள்ளனர் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டார்வின் தத்துவ ஆதரவாளர்களிடம் இருந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் தற்போது ஒரு சேர எழுந்திருக்கும் கூக்குரல்களே இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் நுட்பமான தகவல்களையும் மறைமுகமாக அறிவிக்கின்றன. “ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்சிதை மாற்றங்கள் மூலம் தோன்றின” என்ற பரிணாம வளர்ச்சி எனும் டார்வின் சிந்தனையை அடியோடு கருவறுக்கும்படியாக, அதிரவைக்கும் பல்வேறு அறிவியல் ஆதாரங்களோடு இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

இப்புத்தகம் வெளிப்படுத்தியிருக்கும் அறிவியல் ஆதாரங்கள் மூலம், ஐரோப்பியர்கள் கடந்த 150 வருடங்களாக தாங்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளதாக பிரபல பிரெஞ்ச் இணையதளமான Science Actualities தெரிவிக்கிறது. இத்தளம் “படைத்தல் பற்றிய வரைவு” புத்தகம் கூறும் படைத்தல் கொள்கையை முன்வைத்து எடுத்திருக்கும் ஒரு கருத்துக்கணிப்பில் 92% ஐரோப்பியர்கள் இறைவனின் படைப்பை நம்புவதாகவும், 5% ஐரோப்பியர்கள் பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இப்புள்ளி விபரங்கள் பொய்யான எவ்வித ஆதாரமும் இல்லாத டார்வின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் பரிணாமவாதிகளுக்கு பலத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிணாம வளர்ச்சி என்பது 19 ம் நூற்றாண்டில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சியின் போது நிலவிய, போதிய அறிவின்மை காரணமாக பரப்பப்பட்ட கட்டுக்கதை என்பதை ஐரோப்பியர்கள் தற்போது படிப்படியாய் உணரத் துவங்கியுள்ளனர். ஹாரூன் யஹ்யாவின் இப்புத்தகத்தின் மூலம் மிக உறுதியான அறிவியல் ஆதாரங்களுடன் இக்கட்டுக்கதைகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்தும் வருகின்றனர். அதே சமயம், உலகலாவிய அளவில் பரவும் இத்தகைய கருத்தாய்வுகளும் அறிவியல் வெளிச்சத்தில் சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வுகளும் குரங்குக் கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் டார்வின் விசிறிகளுக்கு அமைதியின்மையைத் தோற்றுவித்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.

ஐரோப்பிய பாராளுமன்ற பேரவை தயாரித்து அளித்திருக்கும் கலாச்சாரம், அறிவியல் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான திட்ட அறிக்கையில் டார்வின் ஆதரவாளர்களின் இந்த அமைதியின்மை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை, படைத்தலின் மீதான ஐரோப்பிய மக்களின் நம்பிக்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பிரெஞ்ச் பொதுவுடைமைவாதியான கை லெங்கேன் எழுதி வெளியிட்டுள்ள ஆவணமான “கல்வித்துறையில் பரம்பொருளின் ஆபத்துக்கள் (The Dangers of Creationism in Education)” அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. அதில் மிகவும் பிரத்தியேகமாக 12 க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் ஹாரூன் யஹ்யாவின் Atlas of Creation பற்றியும் அது ஐரோப்பிய சமூகத்தில் ஏற்படுத்தவிருக்கும் பெரும் விளைவுகள் பற்றியும் பேசுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கை, “படைத்தல் பற்றி துருக்கிய எழுத்தாளர் ஹாரூன் யஹ்யாவின் 750 பக்கங்கள் அடங்கிய “அட்லஸ் ஆப் கிரியேஷன்” பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஸ்பெய்ன் நாடுகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் இலவசமாக விநியோகமாகியிருக்கின்றது என்றும் அதன் மூலம் அங்கு பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதையும்” வாஷிங்டன் டைம்ஸ் தினசரியில் கடந்த ஜூன் 24, 2007 இல் அழுத்தமாகக் கூறியுள்ளது.

பாரிஸ் பல்கலைக்கழகத்தின் உயிரின ஆய்வாளர் ஹெர்வெ லீ கையடர், “இதற்கு முன் பல்வேறு சமயங்களில் பலரால் எடுத்து வைக்கப்பட்ட பரிணாம வளர்ச்சியின் எதிர்மறை வாதங்களை விடவும் ஹாரூன் யஹ்யாவின் இந்த அறிமுகம் மிக, மிக ஆபத்தானது” என்றும் ” இதனை இஸ்லாமிய சிந்தனையாளர்களிடமிருந்து விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ள இயலும்” என்றும் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

“Atlas of Creation எடுத்து வைக்கும் படைத்தல் சம்பந்தமான அறிவியல் ஆதாரத்திற்கு எதிராக களமிறங்க 47 ஐரோப்பிய மாநில உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்” என்பதே இந்த அறிக்கை கூறும் இறுதித் தகவலாகும். மேலும், “பரிணாம வளர்ச்சி கொள்கை அடியோடு சாயத்துவங்கி விட்டதால் ஐரோப்பா கண்டம் முழுவதுமாகவே ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளதாகவும்” அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஐரோப்பிய கல்வித்திட்டத்திற்கான தோழமை நாடுகளின் உறுப்பினர்களின் முன்னிலையில், கடந்த ஜூன் 26, 2007 இல் ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் நடத்தப்பட்டுள்ள வாக்கெடுப்புக்களின் அடிப்படையிலேயே, ஹாரூன் யஹ்யாவின் இந்த படைத்தல் பற்றிய வரைவு ஐரோப்பிய பள்ளிப் பாடத்திட்டங்களில் இணைக்கப்படுவதற்காக பரிந்துரைக்கப்படும். இந்தத் தீர்மானம் தோழமை நாடுகளை கட்டுப்படுத்தாது என்றாலும், ஐரோப்பாவின் அடிப்படைக்குறிக்கோள், மனித உரிமைகள், கருத்துச்சுதந்திரம் மற்றும் மக்களாட்சி ஆகிய அம்சங்களுக்கு இணங்கவே செயல்படும் என்ற கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தனது படைத்தல் பற்றிய வரைவு புத்தகத்தைக் குறித்து கூறும் பொழுது, “மனிதனின் தோற்றம் சம்பந்தமாக பள்ளிப்பாட ஆக்கங்களில் வைக்கப்பட்டிருக்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனையுடன், அதனை முற்றிலுமாக எதிர்க்கும் படைத்தல் பற்றிய அறிவையும் கலந்தே மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்” என்ற தனது நிலையை அத்னான் அக்தர் (ஹாரூன் யஹ்யா) அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். “மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சிந்தனையை விரிவுபடுத்தி அதன் மூலம் தாங்கள் விரும்பியதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே தன் ஆவல்” என்கிறார். ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடிப்படையான “கருத்துச் சுதந்திரம் மற்றும் மக்களாட்சியின் அடிப்படையில் இதுவே சிறந்த அணுகுமுறையாக இருக்க இயலும்” என்றும் ஆணித்தரமாகப் பேசுகிறார்.

“பரிணாம வளர்ச்சியை ஆதரித்துப் பேசுவோர், தங்களது வாதங்களைத் தவிர மற்ற எதுவும் மேலோங்கி விடக்கூடாது எனும் அடக்குமுறையைக் கொண்டிருப்பதை” சுட்டிக்காட்டிய ஹாரூன் யஹ்யா, “இது ஐரோப்பிய பாராளுமன்ற பேரவையின் அடிப்படை விதிகளுக்கு முரணானது” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் இக்காலகட்டத்திலும் கூட, மனிதனின் தோற்றத்தைக் குறித்து கூறும் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் வகுத்தளித்த குரங்குக் கொள்கையான டார்வினின் பரிணாம வாதத்தை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுச்செல்லும் நிலையில் மக்கள் இல்லை என்பதை ஹாரூன் யஹ்யாவின் அறிவியல் ஆதாரங்களுடனான “படைத்தல் பற்றிய வரைவு” தெளிவிக்கின்றது. உலகில் மக்களிடையே இது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அட்லஸ் ஆஃப் கிரியேஷன்-II புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் (Download) படிக்க இங்கே சொடுக்கவும். PDFMS Word

ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம்: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.