விடுதலைச் சிறுத்தையினர் வன்முறை, முஸ்லிம்கள் விரட்டியடித்தனர்.

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துப் பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை, முஸ்லிம்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கண்ணில் கண்ட வாகனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் நீண்டநேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் காவல்துறையினரைத் தாக்கியதில் எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது; அசம்பாவிதம் தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை செல்லும் வழியில் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கல்பாக்கத்திற்கு அடுத்த புதுப்பட்டினம் எனும் ஊர் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கிராமமாகும். இங்கு வாழும் முஸ்லிம்களில் அநேகர் சென்னை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உணவகம், பெட்டிக்கடை போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

சுதந்திரதினத்தையொட்டி சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் கடலூர் மற்றும் புதுச்சேரியிலிருந்து விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்னை நோக்கிச் சென்றனர். இவர்களில் இரண்டு வேன்களில் வந்தவர்கள், பகல் 2.30 மணிக்குப் புதுப்பட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உணவகங்களில் உணவருந்த இறங்கினர். உணவருந்தி விட்டுப் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அப்பொழுது அருந்திய உணவிற்குரிய பணம் கேட்ட உணவக உரிமையாளர் பாஷா(45)வை அடித்து உதைத்துக் கத்தியால் குத்தினர். இதனைத் தடுக்க முயன்ற அவரது மகன் நசீர் மற்றும் உணவக ஊழியரையும் தாக்கினர். இச்சத்தம் கேட்டு, உணவகத்திற்கு எதிரே குளிர்பானக் கடையில் பணிபுரியும் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெய்லானி(22), காஜா(19) ஆகியோர் ஓடி வந்தனர். அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் உருட்டுக் கட்டையால் தாக்கினர். தலையில் பலத்தக் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். சுற்றியிருந்தவர்களால் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

இத்தகவல் அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் அனைவரும் கிழக்குக் கடற்கரை சாலையில் ஒன்று திரண்டனர். வேன்களில் வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் அரிவாள், உருட்டுக்கட்டை, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவர்களையும் தாக்கத் துவங்கினர். இதனால் கொதிப்படைந்த முஸ்லிம்கள் அவர்களைத் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இதனை எதிர்பாராத விடுதலைச் சிறுத்தையினர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களைப் பின்தொடர்ந்த முஸ்லிம்கள், அவர்கள் வந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கடைகள் மூடப்பட்டன. உணவக உரிமையாளரை வெட்டியவர்கள் தப்பித்தால் போதும் என வாகனங்களை விட்டு விட்டு ஓடினர். இவர்கள் அவ்வழியே வாகனங்களில் வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிறுத்தித் தங்களை ஒரு கும்பல் தாக்குவதாகத் தெரிவித்து அவர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

 

பின்னர் அவ்வழியே வந்த அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். 50க்கும் மேற்பட்ட பொது வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. பின்னர் திரைப்படக்காட்சிகளை மிஞ்சும் விதத்தில் பெரிய படையோடு புதுப்பட்டினம் நோக்கி உருட்டுக்கட்டை, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சாலையில் நடந்து சென்றனர். வழியில் தென்படுபவர்களை எல்லாம் தாக்கினர். அதைக் கண்டு மக்கள் தலைதெறிக்க ஓடினர். புதுப்பட்டினம் நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வரும் தகவல் அறிந்த முஸ்லிம்கள், உணவருந்தி விட்டு கலாட்டா செய்ததும் போதாதென்று மீண்டும் வருகின்றனரா? என்று ஆவேசத்துடன் அவர்களும் திருப்பித் தாக்க ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார், புதுச்சேரியிலிருந்து வந்த வாகனங்களை காத்தான்கடை சோதனைச் சாவடியிலிருந்து செய்யூர், மதுராந்தகம் வழியே திருப்பிவிட்டனர்.

 

புதுச்சேரியிலிருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள், காத்தமடை சோதனைச் சாவடி வழியே புதுப் பட்டினம் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த கூவத்தூர் காவல்துறை ஆய்வாளர் ஆல்பிரட் வில்சன், துணை ஆய்வாளர் ரமேஷ், ஏட்டுகள் வேல்முருகன், பலராமன், மோகன் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரின் தாக்குதலில் பலத்த காயமுற்றக் காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து புதுப்பட்டினம் நோக்கிய ஆயுதங்களுடன் முன்னேறிய விடுதலை சிறுத்தை அமைப்பினரை புதுப்பட்டினத்தில் ஒன்றிணைந்து முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். போர்க்களத்தில் நிற்பது போல் இரு தரப்பினரும் நேருக்கு ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நின்றனர். காவல்துறையினர், இரு தரப்பினருக்கும் நடுவில் நின்று, மோதலைத் தடுக்க முயன்றனர். காவல்துறையினர் குறைந்த அளவில் இருந்ததால் பதட்டம் நீடித்தது. சிறிது நேரத்தில் செங்கல்பட்டு சரக காவல்துறை டி.ஐ.ஜி., துரைராஜ், காஞ்சிபுரம் எஸ்.பி., பெரியய்யா, திருவள்ளூர் எஸ்.பி., செந்தாமரைக்கண்ணன், விழுப்புரம் எஸ்.பி., அமல்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிந்தனர். ஊருக்குள் நுழைந்துத் தாக்கத் தயாராக நின்ற விடுதலை சிறுத்தை அமைப்பினரைத் துப்பாக்கியைக் காட்டியபடி விரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 

காவல்துறையினரால் விரட்டியடிக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வாயலூர் சோதனைச்சாவடி அருகே மயிலாடுதுறையிலிருந்து வந்த அரசு விரைவு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். பின் பேருந்தை அதில் இருந்த பயணிகளோடு தீவைத்துக் எரிக்க முயன்றனர். அதற்குள் காவல்துறையினர் அங்கு வந்ததால், அங்கிருந்தும் தப்பியோடினர். விடுதலைச் சிறுத்தைகள் மாற்று வழியே கல்பாக்கம் டவுன்ஷிப்பிற்குள் சென்று கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இதனைக் கேள்விபட்ட கிழக்கு கடற்கரைச் சாலையில் குவிந்திருந்த முஸ்லிம்கள் அங்கு ஓடினர். முஸ்லிம்கள் கூட்டமாக வருவதைக் கண்ட அந்தக் கும்பல் அங்கிருந்தும் தப்பிச் சென்றது. உடனடியாக கல்பாக்கம் டவுன்ஷிப் கேட் மூடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இச்சம்பவத்தால் நேற்று பகல் 2.30 மணியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டு வழியே திருப்பிவிடப்பட்டன. இரவு வரை கிழக்கு கடற்கரைச் சாலை வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பதட்டம் தணிக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சுதந்திரம் கிடைத்து 61 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி வரும் வேளையில், அரசியலின் பெயரால் அராஜகம் புரியும் குண்டர்கள் மக்களின் அமைதியான வாழ்விற்குக் குந்தகம் விளைவிக்க முனைந்தமை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நடத்திய வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக, வாகனங்களில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியே நேற்று சென்றனர். பெரும்பாலான வாகனங்களில் கத்தி, கோடரி, கற்கள், உருட்டுக்கட்டை, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் கொண்டு சென்றுள்ளனர். கட்சி விழாவிற்குச் சென்ற தொண்டர்கள் வாகனங்களில் ஆயுதங்களைத் தயார் நிலையில் கொண்டு சென்றமை, அக்கட்சியின் அராஜக அரசியலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

 

அரசியல் கட்சி விழாக்களுக்கு அதிக அளவில் தொண்டர்கள் செல்லும் சாலையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதும், அதற்கு தொண்டர்கள் திரள்வதும் உளவுத்துறை மூலம் அரசுக்கு முன்னமே தெரிந்திருக்கும். எனினும் அரசு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையையும் முன்கூட்டியே செய்யாதது, வன்முறையாளர்களுக்கு அரசே அனைத்து உதவிகளையும் செய்கின்றதோ என்ற ஐயத்தைப் பொது மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

சாதாரணமாக சித்ரா பவுர்ணமியை ஒட்டி மாமல்லபுரத்தில் மாநாடு நடத்தும் மற்றொரு அமைப்பினராலும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பது வழக்கம். அது ஏற்கெனவே தெரிந்திருந்தும் வழிநெடுக உரிய பாதுகாப்புக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பினர்.

 

உணவு அருந்தி விட்டு பணமும் கொடுக்காமல் வன்முறையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை அமைப்பினரின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்கவும் வைத்தது. இவர்களின் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பயணிகளே. விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தாக்கிய ஒரு வாகனத்தின் உள்ளே பிஞ்சு குழந்தை ஒன்றை மார்போடு அணைத்துக் கொண்டு அஞ்சியபடி ஒரு  நடுத்தர மனிதர் அமர்ந்திருந்தார்,  பாப்பதற்கே பரிதாபமாக இருந்தது.

 

விடுதலை சிறுத்தைகளின் வன்முறையை எதிர்க்க ஒன்று திரண்ட புதுப்பட்டிணம் கிராம முஸ்லிம்கள் பேரூந்துகளையோ தனியார் வாகனங்களையோ பொதுமக்களையோ எவ்வித தொந்தரவும் செய்யாமல், விடுதலை சிறுத்தைகள் எங்கெல்லாம் சென்று வன்முறையில் ஈடுபட்டார்களோ அங்கெல்லாம் விரட்டிச் சென்று அவர்களை மட்டுமே குறி வைத்துத் தாக்கி விரட்டியச் செயலை பயணிகள் உட்பட காவல்துறையினரும் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

நாடு சுதந்திரம் அடைந்தது அன்னியனிடமிருந்து; அராஜக அரசியல்வாதிகளிடமிருந்து சுதந்திரம் அடைவது எப்போது?. புதுப்பட்டினம் முஸ்லிம்கள் அதற்கான துவக்கம் குறித்துள்ளனரா?.

 

காலம் பதில் சொல்லும்!