தமிழகத்தில் தொடரும் கனமழை!

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெருமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பல பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளம் அதிகமாக சூழ்ந்துள்ள ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, வேளச்சேரி, வியாசர்பாடி மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளுக்குச் சென்று, சீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசித்தார்.

பெரம்பூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்.

தாழ்வான பகுதிகளில் மழை நீரை விரைவாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே வங்கக்கடலில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் குறைந்த வளியழுத்த மண்டலத்தால் மேலும் 24 மணிநேரத்திற்கு தமிழகத்திலும் புதுவையிலும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.