அணுமின் நிலையம் – ஒரு பாமரப் பார்வை

Share this:

நம் நாட்டில் 19 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாகக் கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைத்து, தமிழக மக்களின் ‘மின் பசி’யைப் போக்குவதற்கு நடுவண் அரசு பத்தாண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புப் தெரிவித்து, 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, முதல்வரின் வாக்குறுதிக்கும் வேண்டுகோளுக்கும் இணங்கி இன்றோடு அவர்களின் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள முன்வந்திருக்கின்றனர். அமைதி வழியில் போராடி வென்ற மக்களுக்கு நம் பாராட்டுகள்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய பாதுகாப்பு அதிகாரியான சீக்கியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது சீக்கியர் சமுதாயத்தில் ஒருபகுதியினர் அழித்தொழிப்புக்கு உள்ளாயினர். அப்போது, ராஜீவ் காந்தி சொன்னவற்றை இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்:

“ஓர் ஆலமரம் விழும்போது அதனால் ஏற்படும் அதிர்வுகள் தவிர்க்க முடியாதவை”

பதினான்கு ஆயிரம் கோடி ரூபாயில் அணுமின் நிலையம் அமைத்து ‘ஒளிரும் இந்தியாவை’ப் பார்க்க வேண்டுமானால் சில இழப்புகளைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று விஞ்ஞானிகள் சமாதானம் சொல்லக் கூடும்.

“கூடங்குளத்திலிருந்து அணுக்கதிர் பரவினால் கூடங்குளம், பெருமணல், இடிந்தகரை, செட்டிகுளம், கூட்டபுளி, கூடுதாழை ஆகிய ஆறே ஆறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும்” என்று விஞ்ஞானிகள் கருத்துக் கூறியுள்ளனர். அப்புறம் என்ன? கூடங்குளத்தை அடுத்துள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கு அணுக்கதிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு ஆளுக்கு ஐம்பது கிராம் ‘இலவச இறைச்சி’த் திட்டத்தை நமது மத்திய-மாநில அரசுகள் கொண்டுவரமலா போய்விடும்? போன்ற ஆறுதல் செய்திகளை அறிவியலாளர்கள் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது புகுஷிமா நகரில் இருந்த அணுமின் நிலையம் வெடித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். “நம்ம ஊருக்குத்தான் சுனாமி வரவில்லையே, கவலைப்பட என்ன இருக்கிறது?” என்பது விஞ்ஞானிகளின் அறிவார்ந்த(!) கேள்வியாகும்.

oOo

இனி, தினத்தந்தியின் நேற்றைய (21.9.2011) செய்திகள்:

அணுமின் நிலையம் பற்றி மக்கள் அச்சப்பட தேவை இல்லை – மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி

சென்னை, செப்.21-

அணுமின் நிலையம் பற்றி மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

மத்திய மந்திரி நாராயணசாமி நேற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் நாராயணசாமி நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 20 இடங்களில் அணுமின் நிலையங்கள் உள்ளன. ஒரு அணுமின் நிலையம் மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால் அதுதவிர மற்ற 19 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதனால் எந்த வித பாதிப்பு ஏற்படவில்லை. நல்ல முறையில் அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணுமின் நிலையங்களால் எந்த வித ஆபத்தும் ஏற்படாது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

அணுமின் நிலையங்கள் தகுந்த பாதுகாப்புடன் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜப்பான் நாட்டில் சுனாமியில் அணுமின் நிலையங்கள் வெடித்து பல உயிர்கள் பலியானதால் பொதுமக்கள் பயப்படுகின்றனர். ஜப்பான் நாட்டிற்கும், நம் நாட்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இந்தியாவில் சுனாமி ஏற்பட்டபோது, கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏன் என்றால் கல்பாக்கத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அதுபோல் தான் இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அணுமின் நிலையங்களுக்கு பிரதமர் தலைமையிலான கண்காணிப்பு குழு தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரிடையாக செய்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை.

இவ்வாறு மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.


Source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=675640&disdate=9/21/2011

விரிவான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதால் ‘கூடங்குளத்தில் நடைபெறும் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது’ – ரஷியா கருத்து

புதுடெல்லி, செப்.21-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அங்கு போராட்டம் நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் இந்தியாவுக்கான ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடலோர கிராமமான கூடங்குளத்தில் ரஷியா உதவியோடு அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியில் புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு பேரழிவு ஏற்பட்டது போலவே, கடலோரம் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஆபத்து இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். எனவே, அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கூடங்குளம் போராட்டம் குறித்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ரஷிய தூதர் செர்கே கர்மலிடோ கூறியதாவது:-

கூடங்குளத்தில் நடைபெறும் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது. அந்த போராட்டத்தினால் டிசம்பர் மாதம் அணு உலையின் செயல்பாடு தொடங்குவதில் இடைïறு ஏற்படக்கூடும். கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. எதிர்கால மின் உற்பத்தியின்போது ஏற்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது, அணுஉலை செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டால் மற்ற ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கும்.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தன்மை குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளதாக அறிகிறோம். அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணு வல்லுனர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மக்களின் சந்தேகங்களை இந்திய அரசு தீர்க்க வேண்டும். இந்திய அரசும், இந்திய அணுசக்தி துறையும் இதை செய்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

கடந்த காலத்தில் இருந்தே இந்தியாவுடன் சாதகமான நல்லுறவு நீடித்து வருகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையால் இருநாடுகளின் எதிர்கால கூட்டுறவுக்கு பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில், மக்களின் பிரச்சினைக்கு விரைவில் இந்தியா தீர்வு காணும் என நம்புகிறோம்.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலைய ஆபத்தை தொடர்ந்து, அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொண்டுள்ளோம். மேலும், இந்தியா கேட்டுக் கொண்ட புதிய பாதுகாப்பு அம்சங்களையும் ரஷ்யா தனது கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படியே, விரிவான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப உதவியும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புகுஷிமா அணுமின் நிலையத்தோடு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒப்பிடக் கூடாது. அது பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், கூடங்குளத்தில் இருப்பது உலகில் உள்ள மிக சக்தி வாய்ந்த மற்றும் அதிநவீன அணுமின் நிலையங்களில் ஒன்று.

இவ்வாறு கர்மலிடோ தெரிவித்தார்.


Source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=675597&disdate=9/21/2011

oOo

விஞ்ஞானிகளெல்லாரும் விளக்கங்கள் சொல்ல முயல்கின்ற இந்தக் காலத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் “வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு …” ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பாமரன். பொருத்தம் கருதி அது இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது:

“வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு …”

இப்பிடிக் கூப்பிடறனேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏதோ உங்கள மாதிரி நாலெழுத்துப் படிக்கிலீன்னாலும் அங்கியும் இங்கியும் காதுல உளுந்தத வெச்சுத்தான் இந்தக் கடுதாசிய எழுதறேன். எனக்கு அவ்வளவாப் படிப்பறிவு கெடையாதுங்க.

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.

பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.

அப்புறம் ஒருநாளு நம்ம ஊட்டுல மாட்டீருந்த சங்கிலிக்கருப்பராயன்ல இருந்து சரசுவதி வரைக்கும் அத்தனையையும் கழுட்டி பொடக்காழில போய் போட்டுட்டு வந்தேன்.

என்ன இருந்தாலும் நீங்க என்னோட கண்ணத் தொறந்தவுங்க. நம்ம சனங்களோட முட்டாத்தனத்துக்கெல்லாம் ராப்பகலா ஆராஞ்சு பதிலு கண்டுபுடிச்சவுங்க….

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

என்னவோ நீங்களும் கூட ராக்கெட் உடறப்ப புள்ளையாருக்குத் தேங்கா ஒடச்சுட்டுத்தான் மேல உடறீங்களாமா? உங்கள மாதிரி விஞ்ஞானிங்க கூட திருப்பதில மொட்டை அடிச்சுக்கிட்டு லட்டுக்காக சண்டப் போட்டுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதக் கேட்டதும்தான் கோபம் பத்தீட்டு வந்துருச்சு. சங்கிலிக்கருப்பராயன பொடக்காழில போட்டதுக்கு பதிலா உங்களத் தூக்கிப் போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.

அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….

அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.

“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.

ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.

ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….

உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?

ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள  கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.

உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….

நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க….  இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..

என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “நம்ம” தலைவருக்கு ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….

அது ஓடவும் வேண்டாம்….

அத மூடவும் வேண்டாம்….

ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?

இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி  வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..

”தப்பித்தவறி உலைல இருந்து கதிரியக்கம் கெளம்பீடுச்சுன்னா….. ஜீப்புல மைக்கக் கட்டீட்டு ஊர் ஊராப் போயி தெரியப்படுத்துவோம்”னு போட்டிருக்கீங்க…..

ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?

சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..

ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது  டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….”உலைகள் பத்திரமா இருக்கு. கதிரியக்கம் துளிக்கூட வெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.

சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..

சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப்     பொழைக்கிறவனும்…..    கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.

இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.

எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.

இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….

அதுக்கும்….

உங்க விஞ்ஞானம்…..

உசுரோட உட்டு வெச்சா….


பாமரன்

தொடர்புடைய செய்தி : கீற்று வெளியீடான “ஈயைக் கொல்ல பீரங்கி”


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.