மருந்தை விட மனசு முக்கியம்…

Share this:

செய்யும் வேலையே சேவையாக அமைவது, வரம். தனக்குக் கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பை வைத்து, நிறைவாக வாழ்கிறார் ராஜேஸ்வரி. புற்றுநோயால் ஆட்கொள்ளப்பட்டு, குடும்பம் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட  பரிதாப உயிர்களை, தன் உறவுகளாக நினைத்துப் பணிவிடை செய்வதுதான் வேலையே!

மனிதமும் கருணையும் நிரம்பிக் கிடக்கிறது ராஜேஸ்வரியின் பேச்சில்… “என் சொந்த ஊர் ஈரோடு. கணவர் அன்புமணி வேன் டிரைவர். ரெண்டு பசங்களும் ஸ்கூல்ல படிக்கிறாங்க. நர்ஸிங் முடிச்சுட்டு, தனியார் மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன்.

சேவையையே முக்கிய நோக்கமா நினைச்சு படிச்ச இந்தப் படிப்புக்கு, அங்க அதை செயல்படுத்துறதுக்கான சூழல் முழுமையா இல்லை. எல்லா மருத்துவமனைகள்லயும் ஒரு உயிரைப் பணமாவே பார்க்கற அவலம் எனக்குப் பிடிக்கல. காசு இருக்கற நோயாளிகளுக்கு ஃபைவ் ஸ்டார் கவனிப்பு தர்றது, டெபாஸிட் கட்ட முடியாத நோயாளிகளுக்கு கருணையே இல்லாம கெட் அவுட் சொல்றதுனு இப்போ இருக்குற கார்ப்பரேட் மருத்துவமனைகளோட போக்கே வேற மாதிரி இருக்கு. மனச கல்லாக்கிட்டு வேலை பார்க்க பிடிக்கல.

 

இந்த நிலையிலதான், ஈரோடு மாவட்டத்துல இருக்கற கங்காபுரம், ‘இமயம் டிரஸ்ட்’ல, கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளைக் கவனிக்கும் பணிக்கான வாய்ப்பை அறிந்து, நான் அங்க போனேன்” எனும் ராஜேஸ்வரிக்கு, அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது மனம்போல் வேலை.

“டிரஸ்ட்டோட பிரசிடென்ட் டாக்டர் அபுல் ஹசன், ‘இந்த வேலைக்குச் சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு, அக்கறை வேணும்’னு ஆரம்பிச்சு, நிறைய அறிவுரைகள் சொன்னார். அதுக்கு உறுதிமொழி கொடுத்து வேலையில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் இங்க இருக்கற நோயாளிகளோட நிலைமையைப் பார்க்குறப்போ, மனசு முழுக்க வேதனை நிரம்பும். இப்போ அதை வேதனையா சுமக்காம, அவங்களுக்கான பிரார்த்தனையா மாத்துற பாஸிட்டிவ் பக்குவம் வந்திருக்கு. டிரஸ்ட் டாக்டர்களோட சேவை மகத்தானது. இந்தக் கருணை நதியில, ராமரோட அணில் நான்” என்றவரின் பணி, நற்பணி.

“ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள்னு எந்த பாரபட்சமும் இல்லாம கேன்சர் தீண்டின நோயாளிகள் இங்க இருக்காங்க. குடும்பம், உறவினர்களால பார்த்துக் கொள்ள முடியாத நிலையிலும், சிகிச்சையளிக்க வசதியில்லாத நிலையிலும் கொண்டு வந்து விட்டுடறாங்க. புறக்கணிப்போட கொடூர வலிதான் கேன்சரைவிட அவங்கள அதிகமா பாதிச்சுருக்கும். அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தைனு குடும்பத்துல சிரிச்சு பேசி வாழ்ந்துட்டு இருந்தவங்க, கேன்சர் பரிசோதனைகள், மருத் துவமனைகள், சிகிச்சைகள்னு அலைக்கழிக்க… உறவுகளோட உரையாடல்களை கொஞ்சம் கொஞ்சமா இழந்திருப்பாங்க. ஆறுதலான வார்த்தைகள்தான் அவங்களுக்கு உடனடி தேவை. அதனால, மாத்திரை, மருந்துகளைவிட, அன்பா அவங்க கண் பார்த்து, முகம் பார்த்து, கை பிடிச்சு ஆறுதலா பேசுறதுலதான் என் சிகிச்சை ஆரம் பிக்கும்!

உடை மாற்றி விடுவது, உணவு சாப்பிட வைக்கிறது, புண்ணால அவதிப்படறவங்களுக்கு அதைச் சுத்தம் செய்து மருந்து போடுறதுனு எல்லாப் பணிவிடைகளையும் செய்றேன். தாயம் விளையாடுறது, கதை பேசுறதுனு அவங்களோட பொழுதுபோக்குக்கும் நான் கியாரன்டி. எல்லாத்துக்கும் மேல, ‘உங்களுக்கு ஒண்ணுமில்ல… சீக்கிரமே குணமாகிடுவீங்க’னு நான் சொல்ற நாலு நம்பிக்கை வார்த்தைகள், அவங்கள ரொம்பவே புத்துணர்வாக்கும்!” என்ற ராஜேஸ்வரி,

“இதுவரை 500-க்கும் மேற்பட்டவங்க தங்களோட இறுதி நாட்களை இங்க கழிச்சிருக்காங்க. அதுல ஒரு சிறுவனோட இழப்பு, என்னை அதிகம் உலுக்கினது. ரொம்ப அறிவான, சமர்த்துப் பையன். அவனுக்கு வலது கண்ல புற்றுநோய் ஏற்பட்டதால, ஆபரேஷன் மூலம் அந்த கண்ணை அகற்றின நிலையிலதான் இங்க வந்தான். ஒரு சில மாதங்கள்ல இடது கண்ணுக்கும் கேன்சர் பரவி, அதையும் அகற்றிட்டாங்க. பார்வை இல்லைனாலும்… மலர்ந்த முகத்தோட, ‘அக்கா எங்க இருக்கீங்க… ஏதாவது கதை சொல்லுங்க…’னு அவன் கேட்கும்போது, தாங்க முடியாம நிறைய அழுதிருக்கேன். அவன் மூளைக்கும் கேன்சர் பரவ, கடைசியா சாக்லேட் வாங்கிச் சாப்பிட்டு… அவன் உயிர் விட்ட காட்சி, கண் முன்னால கசியுது” என்று கண்கள் கசிந்தார்.

ராஜேஸ்வரி நிறைவாக மனதிலிருந்து எடுத்து வைத்த வேண்டுகோள்…
“எய்ட்ஸ், புற்றுநோய் மட்டுமில்ல… கைவலி, முதுகுவலினு உடல் முடங்குற உங்க உறவுகளுக்கு முதல் மருந்து… உங்களோட அனுசரணையும், ஆறுதலும்தான். பெரிசா காசு பணம் செலவழிச்சு வைத்தியம் பார்க்க முடியலனாலும், அவங்க கை பிடிச்சு நம்பிக்கை சொல்லுங்க. அந்த சிகிச்சைதான் அவங்களோட முதல் தேவை!”

நன்றி : ச.ஆ.பாரதி, அவள் விகடன். படங்கள்: செ.பாலநாக அபிஷேக்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.