வாழும் முன்மாதிரிகள்!

மூக சேவை, கல்வி, மதம், அரசியல் என எங்கும் எல்லாமும் “வியாபார”மயம் ஆக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில், எப்பலனையும் எதிர்பாராமல் எந்த விளம்பரமும் இன்றி சாதாரண அடித்தட்டு மக்களிடையே மனித நேயமும் நேர்மையும் விலை பேசப்படாமல் உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறன அவ்வப்போது காணும் சில நிகழ்வுகள்.

அவ்வகையில், இன்று கண்ணில்பட்ட இரு செய்திகள் கீழே.

பாதையில் கிடக்கும் கல்லை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அப்புறப்படுத்துவதும் சக மனிதனை நோக்கி புன்முறுவல் பூப்பதும்கூட தர்மம்தான் என்ற நபிகளின் எளிமையான வழிகாட்டலை நாள்தோறும் கேட்கவும், பிறருக்குச் சொல்லவும் செய்யும் எத்தனை பேர், அதனைத் தம் வாழ்வில் செயல்படுத்துகின்றனர் என்ற கேள்வி பூதாகாரமாக எழும்பி நிற்கும் இக்காலத்தில், முன்மாதிரிகளைத் தேடி மற்றவர்கள் பின்னால் ஓடுவதை விடுத்து ஒவ்வொருவரும் தமக்குள் உறங்கிக் கிடக்கும் இத்தகைய மனித நேயத்தையும் நேர்மையினையும் வெளிக் கொண்டுவர முயற்சிப்போம்.  முன்மாதிரிகளை நம்மிலிருந்து உருவாக்குவோம்!

மெரினா கூட்டத்தில் தொலைந்த சிறுமியை வீட்டுக்கே வந்து ஒப்படைத்த இளைஞர்!

மெரினாவில் காணும் பொங்கல் கொண்டாட வந்த கூட்டத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியை அவரது வீட்டுக்கே அழைத்து வந்து ஒப்படைத்தார் ஒரு முஸ்லிம் இளைஞர்.

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ராஜா (16), விஜயலட்சுமி (7) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காணும் பொங்கல் கொண்டாட சிவக்குமார் தனது குடும்பத்துடன் மெரினாவுக்கு வியாழக்கிழமை வந்தார்.

ராஜாவின் கையை சிவக்குமாரும், விஜயலட்சுமியின் கையை கலைச்செல்வியும் பிடித்துக் கொண்டு மெரினா கடற்கரை கூட்டத்தில் நடந்தனர். அப்போது செல்போன் அழைப்பு வரவே விஜயலட்சுமியின் கையை விட்டுவிட்டு செல்போனில் பேசினார் கலைச்செல்வி. அப்போது கலைச்செல்வி போலவே இன்னொரு பெண் செல்ல இதுதான் தனது அம்மா என்று அந்த பெண்ணின் பின்னாலே நீண்ட தூரம் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. அவ்வளவுதான் லட்சக்கணக்கானோர் திரண்ட மணல் வெளியில் பெற்றோரும், சிறுமியும் பிரிந்துவிட்டனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டே நீண்ட தூரம் சென்ற பின்னர் தாயை பிரிந்து வந்து விட்டதை அறிந்து விஜயலட்சுமி அழ ஆரம்பித்து விட்டார். பெற்றோரும் விஜயலட்சுமியை தேடினர். பின்னர் அங்கிருந்த காவல் உதவி மையத்தில் சிவக்குமார் புகார் தெரிவித்தார். காவல் துறையினரும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில், ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த விஜய லட்சுமியை, குடும்பத்துடன் மெரினாவுக்கு வந்திருந்த ஒருவர் பார்த்து விவரம் கேட்டார். ஆனால் பதில் சொல்லாமல் தொடர்ந்து அழுத விஜயலட்சுமியின் நிலைமையை உணர்ந்து, தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். விஜயலட்சுமியின் அழுகையை நிறுத்தி, இரவில் வீட்டில் தங்க வைத்து மறுநாள் காலையில் வீட்டின் முகவரியை கேட்டபோது தெளிவாக கூறியிருக்கிறார் விஜயலட்சுமி. உடனே மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு செல்ல, குழந்தையை காணா மல் பரிதவித்துக் கொண்டிருந்த கலைச்செல்வியும் அருகே இருந்தவர்களும் விஜய லட்சுமியை கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டனர். கடமை முடிந்தது என்று நினைத்து, விஜய லட்சுமியை அழைத்து வந்த நபர் அமைதியாக சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து விஜய லட்சுமியின் தந்தை சிவக்குமாரிடம் கேட்டபோது, “எனது குழந்தையை பத்திரமாக அழைத்து வந்தவர் ஒரு முஸ்லிம் நண்பர். அவர் மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் எங்களுக்கு தெரியும். அவரது பெயர் கூட தெரியவில்லை.

அந்த நல்ல மனிதருக்கு நேரில் நன்றி சொல்ல நினைக்கிறேன். குழந்தை காணாமல்போன நேரம் முதல் நானும், எனது மனைவியும் பித்து பிடித்ததுபோல இருந்தோம்” என்றார்.

நன்றி: தி இந்து (தமிழ்)


சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை போலிஸிடம் ஒப்படைத்த முதியவர்!  எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு!

மதுரை – திருமங்கலத்தில் சாலையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்த முதியவரை மாவட்ட எஸ்.பி. நேரில் அழைத்துப் பாராட்டினார்.

கடந்த 13-ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்ற ஒரு முதியவர், 3 பவுன் தங்கச் சங்கிலியை அங்கிருந்த போலீஸாரிடம் கொடுத்துள்ளார். போலீஸார் கேட்டதற்கு, “திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள மதுரா பேக்கரி முன் நடந்து வந்தபோது, இந்த தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்தேன். யாருடையது எனத் தெரியவில்லை. இந்தச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படையுங்கள்” எனக் கூறியுள்ளார்.

ஆச்சரியப்பட்ட போலீஸார் அந்த முதியவரிடம் விசாரித்ததில், அவர் மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த சாகுல் அமீது (62) என்பதும், சிறிய அளவில் கடை வைத்து வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.

இது பற்றிய தகவல் மதுரை எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சாகுல் அமீதை நேரில் அழைத்து, அவரது நேர்மையைப் பாராட்டி வெகுமதி அளித்தார். இதுபற்றி போலீஸார் கூறுகையில், “சங்கிலியைத் தவறவிட்ட நபர், அதன் அடையாளம் மற்றும் ஆதாரங்களை திருமங்கலம் காவல் நிலையத்தில் தெரிவித்து, நகையைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றனர்.