தமிழகத்தை அச்சுறுத்திய புயல் கரையைக் கடந்தது

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது  தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக இருந்ததும் நம்மில் பலர் அறிந்ததே.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி நேற்றுவரை சென்னையை அச்சுறுத்தி வந்தது.

இந்தப் புயலால் ஏற்பட்ட பெருமழையால் இதுவரை தமிழகத்தில் 39 பேர் இறந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இன்று மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இது இன்று மாலை ஆந்திர மாநிலத்திலுள்ள ஓங்கோலுக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடந்தது.

இதனால் ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாகத் தெரியவருகிறது. தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறிப்பாக குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் 9 செ.மீ., ஆம்பூரில் 8 செ.மீ., சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம், அரூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., தாம்பரம், மதுராந்தகம்,
திருத்தணி, திருக்கோயிலூர், திருத்துறைப்பூண்டி, தக்கலை, கோபிசெட்டிப் பாளையம், தர்மபுரி, மேலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலுக்கு ஓக்னி என்று பெயரிட்டிருந்தது ஒரு மேலதிகத் தகவல்.