இஸ்லாத்தை அறியாத ஒரு முஸ்லிம் கிராமம்

Share this:

முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்கப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற தோரணையில் நமக்குள்ளேயே மோதிக்கொள்கிறோம்.

இதனால் முஸ்லிம்கள் பல பிரிவுகளாகச் சிதறுண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இஸ்லாத்தைத் தெரியாத ஒரு முஸ்லிம் கிராமம் மதம் மாறுவதற்குத் தயாரான தமிழ்நாட்டுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

[மார்க்கத்தைப் பற்றி ஏதும் அறியாமல் தாங்கள் வாழ்ந்தது உண்மைதான் என்றும் இஸ்லாத்தைத் துறந்து வேறு ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்க ஒருபோதும் துணிந்ததில்லை என்றும் சோழமொழி முஸ்லிம்களின் மறுப்புச் செய்தி தற்போது வெளியாகியுள்ளது – சத்தியமார்க்கம்.காம்]

நன்றி : அதிரை பிறை

இந்தியாவிலுள்ள பல்வேறு குக்கிராமங்களில் பள்ளிவாசல்கள் இல்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. இந்தியாவில் ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின்படி பெரும்பாலான கிராமங்களில் பள்ளிவாசல்களே கிடையாது. இஸ்லாம் என்றால் என்வென்றுகூடத் தெரியாமல் அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்.

தமிழகத்தின் பல கிராமங்களில் குடிசைகளிலேயே பள்ளிவாசல்கள் இயங்கி வருகின்றன. இங்கு இஸ்லாத்தைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லை. இவ்வாறானதொரு இடம்தான் திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் இருங்கலூர் உள்ளூராட்சிக்கு உட்பட்ட சோழமொழி கிராமம். இங்கு 35 முஸ்லிம் குடும்பத்தவர் வாழ்கின்றனர். இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாது; மார்க்கக் கடமைகள் பற்றி தெரியாது; தொழுகை, நோன்பு பற்றியெல்லாம் தெரியாது. அதை அவர்கள் செய்து பார்த்திருக்கவும் மாட்டார்கள். பெயரளவில் முஸ்லிம்களாக இருந்த இம்மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கவில்லை.

சோழமொழி கிராம மக்கள் அனைவரும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் கூலித் தொழில் செய்து தங்களது வயிற்றைக் கழுவி வந்தனர். அருகிலுள்ள கிறிஸ்தவ தோட்டமொன்றில் வேலை பார்த்தனர்.

நிலமையைக் கேள்விப்பட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு அங்குக் குடிசை ஒன்றில் பள்ளிவாசலை நிறுவியது. பிலால் ஜும்ஆ மஸ்ஜித் என்ற பெயரில் நிறுவப்பட்ட அப்பள்ளிவாசலில் ஐநேரத் தொழுகைகள், வாரம் இருமுறை மார்க்கச் சொற்பொழிவுகள் மற்றும் தப்லீக் ஜமாஅத் கஷ்த்துகள் என்பன நடைபெற்றன. இப்பள்ளிக்கு இமாமாக இருப்பவர் இலங்கை பாணந்துறையைச் சேர்ந்த அல்ஹாபிஸ் மெளலவி அப்துல் கரீம் (ரஹீமி) என்பவர். இவர் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஒருநாள் சமயபுரம் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த இவர், அவராகவே முன்வந்து பிலால் ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாகப் பொறுப்பேற்றார்.

இவரது வருகையினால், சோழமொழி கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் ஐநேரமும் தொழுபவர்களாகவும் குர்ஆன் ஓதுபவர்களாகவும் மாறினர். இதுவே அவரது ஒரேயொரு குறிக்கோளாகும். அத்துடன் சோழமொழி கிராமத்தில் பள்ளிவாசல் கட்டவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். இப்பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிவரும் அப்துல் கரீம் மெளலவிக்கு 300 இந்திய ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்பட்டது.

இக்காலத்தில் இந்தியாவில் பணியாற்றும் பள்ளிவாசல் இமாம் ஒருவருக்குக் குறைந்தது 10,000 இந்திய ரூபாவும் தங்குவதற்கான வீடு மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படும். ஆனால், சோழமொழி கிராமத்தின் இமாமான இலங்கையைச் சேர்ந்த மெளலவி அப்துல் கரீம் வெறும் 300 ரூபாவுக்குப் பணியாற்றி வந்தார். பணத்தையும் மீறி அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இன்றுவரை அதற்காகப் போராடி வருகிறார். இவரது சம்பளத்தைக் கேள்வியுற்ற ஐக்கிய நலக் கூட்டமைப்பு மாதாந்தம் இராண்டாயிரம் இந்திய ரூபாவை இவருக்கு வழங்கி வருகிறது.

இலங்கையின் பாணந்துறையில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இவர், மக்களை ஜாஹிலியக் காலத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகத் தனது வருமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஹிஜ்ரத் வாழ்க்கையில் நாட்டம் கொண்டுள்ளார். சொந்த நாட்டில் மாடிவீட்டில் வாழ்ந்தவர், தற்போது சோழமொழிக் கிராமத்தில் சிறிய ஓலைக் குடிசையில் இருக்கிறார். இவர் நினைத்திருந்தால் இலங்கையில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், இறைவனின் திருப்பொருத்தத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளார். அத்துடன் அக்கிராமத்திலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கும் உறுதி பூண்டுள்ளார்.

போதிய வருமானம் இல்லாமையினால் ஏனைய நேரங்களில் உணவகங்களில் வேலை செய்கிறார். அங்கேயே மூன்று வேளைக்கான உணவையும் உட்கொள்கிறார். இங்குப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் மெளலவிகளுக்கு மத்தியில் இலங்கை இளைஞர் ஒருவரின் தியாகத்தைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும், தனது ஆத்ம திருப்திக்காக இவரது பணி தொடரவேண்டும்.

சோழமொழி கிராமத்தின் நிலைமைகளை வெளியுலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் ஓர் ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்தனர். திருச்சி செய்தியாளர் சாஹுல் ஹமீது தலைமையிலான ஒரு குழு இதற்கென நியமிக்கப்பட்டது. ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள், கேரளா குமுளியைச் சேர்ந்த முஹம்மது ஜாவித், சாஹுல் ஹமீது, அன்ஸார் அலி, சுதர்சன் மற்றும் திருச்சி ஐக்கிய நலக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களான பீர் முஹம்மது, ஷனாவாஸ் ஆகியோர் சோழமொழி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து அவற்றை ஆவணப்படமாகத் தயாரித்தனர்.

இந்த ஆவணப்படம், ஐக்கிய நலக் கூட்டமைப்பின் சென்னைத் தலைமை அலுவலகப் பொது முகாமையாளர் பாருக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அங்குப் பார்வையிட்ட 150க்கும் மேற்பட்டோர் கண்கலங்கிவிட்டனர். உடனடியாக அங்குப் பள்ளிவாசல் கட்டுவதற்கு அல்ஹரைமன் நிதியம் பொறுப்பேற்றுக் கொண்டது. தற்போது அந்தப் பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அல்ஹரைமன் அமைப்பு, பள்ளிவாசலை மட்டுமே கட்டிக் கொடுத்தது. பள்ளிவாசலைச் சுற்றி மதில், வுழூ செய்வதற்கான இடம், கழிவறை வசதிகள் மற்றும் இமாம் தங்குவதற்கான வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்படவில்லை. இதனை சோழமொழி மக்களே செய்யவேண்டுமென அல்ஹரமைன் அமைப்பு கூறியுள்ளது. இதற்கான மொத்த செலவு 6 இலட்சம் இந்திய ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சோழமொழி கிராமத்திலுள்ள மக்கள் ரமழான் காலங்களில் நோன்பு நோற்பதுகூடத் தெரியாமல் இருந்தார்கள். அங்குள்ள இமாம் அப்துல் கரீம், ஏன் நோன்பு நோற்க வேண்டும்?, அதனால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட பல விடயங்களை எடுத்துக்கூறிய பின்பே, அங்குள்ள மக்களுக்கு நோன்பைப் பற்றி தெரிந்தது. அதன்பின்னரே அவர்கள் நோன்பு நோற்றார்கள். தங்களது வறுமை காரணமாக அவர்கள் வெறும் தண்ணீரினால் நோன்பு திறந்தார்கள். இதனை அவதானித்த இமாம், நோன்பாளிகளுக்குக் கஞ்சி வழங்கும் நோக்கில் ஆவணப்படம் தயாரித்த குழுவினரை நேரில் சந்தித்துப் பேசினார்.

விடயங்களை கேட்டறிந்த குழுவினர், நோன்புக் காலங்களில் இஃப்தார் செய்வதற்காகக் கஞ்சி மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அங்குள்ள 35 குடும்பங்களுக்கும் நோன்புப் பெருநாள் தினத்துக்காக உடையும் பணமும் வழங்கப்பட்டன. ஹஜ் பெருநாள் தினத்தன்று 35 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு 6 பேர் வீதம் பிரியாணி சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப்பட்டன. இவ்வேளையிலேயே பள்ளிவாசலின் ஏனைய புனரமைப்பு வேலைகளைப் பூர்த்திசெய்து தருமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கென செய்தியாளர் சாஹுல் ஹமீது தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் ஹமீது முஹம்மது றிஸ்வான், அஜீஸுல்லா, மைதீன், முஹம்மது முஷ்தாக், ஆதில், முத்துப்பேட்டை முஹம்மது அனிபா, ஜியாவுல் ஹக் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் மூலமாகவே இந்தப் பள்ளிவாசலின் ஏனைய பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலமையை அறிந்தவுடன் நல்லுள்ளம் படைத்த ஒருசிலர் பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலுள்ள கைக்கூலி கைவிட்டோர் கழகம், இளம் அரிமா சங்கம் (லியோ கிளப்), ரோட்டரிக் கிளப் ஆகிய அமைப்பிலுள்ள மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு பள்ளிவாசலுக்குச் சென்று இந்தப் பள்ளியின் கட்டட நிதிக்காக வசூல் செய்துவருகின்றார்கள். ஆனால், இப்பணி இன்னும் நிறைவடையவில்லை.  

இலங்கையில் ஒவ்வொரு வீதிக்கும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சில ஊர்களில் பள்ளிவாசல்கள் இல்லாமையினால் இஸ்லாத்தைப் பற்றி தெரியாமலேயே மக்கள் மரணித்துப் போகிறார்கள். இதற்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. வெளிநாடு என்றாலும், இஸ்லாத்தைப் பற்றித் தெரியாமல் இருந்த ஜாஹிலியா காலத்து மக்கள் போன்றதொரு சமூகம் வாழ்வதைப் பார்த்துக்கொண்டு இலங்கை முஸ்லிம்களான எம்மால் சும்மா இருக்கமுடியாது.

இறைவனின் திருப்பொருத்துக்காக அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் களமிறங்கியுள்ள பாணந்துறை சகோதரரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு நம்மாலான முழு உதவிகளையும் செய்வோம். அவருடன் கைகோர்த்து நாமும் அந்த மக்களுக்கு உதவுவோம். பள்ளிவாசலின் ஏனைய பணிகளைச் செய்வதற்கு நம்மாலான உதவிகளைத் தாராளமாக வழங்குவோம்.

இதற்கு உதவி செய்வதன் மூலம் இஸ்லாத்திலிருந்து பிரிந்துசெல்ல முற்பட்ட ஒரு சமூகத்துக்கு நல்வழி காட்டிய நன்மை நமக்கு வந்து சேரும்.

இதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்குப் பள்ளிவாசல் புனரமைப்புக் குழுவின் தலைவர் சாஹுல் ஹமீது (+91-9865124804) மற்றும் பாணந்துறை மெளலவி அப்துல் கரீம் (+91-9688698828) ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியும்.

– (திருச்சியிலிருந்து சாஹுல் ஹமீது)

நன்றி : துருவம் ந்யூஸ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.