வேலூர் : வேலூர் பாஜ பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொலைக்கு வேலூர் மத்திய சிறையில் சதித்திட்டம் தீட்டிய ரவுடி வசூர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். நீரிழிவு நோய் டாக்டரான இவர், வேலூர் ரங்காபுரம், கொசப்பேட்டை மற்றும் சென்னையில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி, சத்துவாச்சாரியில் உள்ள புதுமனை புகுவிழாவுக்கான அழைப்பிதழ்களை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு, கொசப்பேட்டையில் உள்ள கிளினிக்குக்கு சென்றார்.
இரவு 7.30 மணியளவில், மீண்டும் வெளியே வந்த அவர், காரில் ஏற முயன்றார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சாய்ந்த அவர், இறந்துவிட்டாரா? என்பதை உறுதி செய்துகொண்டு, அந்த கும்பல் பைக்கில் ஏறி தப்பிச் சென்றது.
அதேநேரம், கொலையாளிகளை பிடிக்க பொதுமக்கள் சிலர் முயன்றனர். கத்தியை காட்டி ”பிடிக்க வந்தால் உங்களுக்கும் இதே கதிதான்”என்று மிரட்டிச் சென்றுள்ளனர். உயிருக்கு பயந்த பொதுமக்கள் தப்பி ஓடினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக,, வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் இருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக எஸ்.பி., ஈஸ்வரன் மேற்பார்வையில் டிஎஸ்பிக்கள் தட்சிணாமூர்த்தி, சீதாராமன், மதிவாணன், லாவண்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொழில் போட்டி, முன்விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல், ரியல் எஸ்டேட், பெண் தொடர்பு, அரசியல் காரணங்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக, அரவிந்த் ரெட்டியின் மனைவி, உறவினர்கள், நண்பர்கள், கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், கொலைக்கான காரணத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். உள்ளூர் ரவுடிகள், வெளிமாவட்ட ரவுடிகள் என சுமார் 20க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதிலும், போலீசாருக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், அனாதையாக கிடந்த பைக் ஒன்றை சத்துவாச்சாரி போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பைக்கை வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) ஆகியோர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதை கூறியுள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பைக் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார். அவர்தான் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்யுமாறு, சிறைக்குள் இருந்து செல்போன் மூலம் இவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உதயா தலைமையில் ஒரு குழுவும், அரியூர் ராஜா தலைமையில் மற்றொரு குழு இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது. ஒரு குழுவின் திட்டம் தோல்வி அடைந்தால், அடுத்த குழு அதை செய்து முடிக்கும். இவர்களுக்கு சென்னையில் இருந்து வந்த 2 பேர்தான், கொலை செய்யும் திட்டத்தை தயாரித்து கொடுத்ததுடன், ஸ்பிரேயர் வெடிகுண்டையும் அளித்துள்ளனர்.
உதயா கும்பல்தான் அரவிந்த் ரெட்டியை கொலை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பியவர்கள் ராணிப்பேட்டைக்கு சென்று, அங்குள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர். சில நாட்கள் அங்கே இருந்தவர்கள், மீண்டும் வேலூர் வந்துள்ளனர். கொலை நடந்தபோது, தினகரன் பஸ் நிறுத்தம் அருகே இருந்த மற்றொரு கும்பல், அரியூரில் சென்று ராஜா பாதுகாப்பில் இருந்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலையாளிகளை அனுப்பிய ரவுடி வசூர் ராஜாவை, விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தெற்கு காவல் நிலைய போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான், பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தால் கொலை நடந்ததா? அல்லது வேறு எந்த காரணத்துக்காக கொலை நடந்ததா? அல்லது யாராவது கொலை செய்ய தூண்டினார்களா? கொலைக்காக எவ்வளவு பணம் கைமாறியது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.
கொலைக்கு காரணம் என்ன? விசாரித்து வருகிறோம்: எஸ்பி
டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையை நேரில் பார்த்த பொதுமக்களிடம் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தகவல்களின் அடிப்படையில் உதயா, அரியூர் ராஜா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு திட்டத்தை வகுத்து கொடுத்த 2 பேர் தலைமறைவாக உள்ளனர். சிறையில் சொகுசாக வாழ்ந்துவரும் ரவுடி வசூர் ராஜா, செல்போன் மூலம் சதித்திட்டத்தை செயல்படுத்தி உள்ளான்.
சிறையில் தாதா போல செயல்படும் அவன், சக கைதிகள் தனது உத்தரவுக்கு வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களை துன்புறுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, புதுவசூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம், சிறையில் இருந்தபடி ராஜா பணம் கேட்டு செல்போனில் மிரட்டியுள்ளான். பணம் கொடுக்காத பாலாஜியை கொலை செய்ய இந்த கும்பல் 2 முறை முயற்சி செய்துள்ளனர்.
இதே கும்பல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஜூவல்லரியில் நகை கொள்ளையடிக்கும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. அரவிந்த் ரெட்டி வழக்கில் கொலைக்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அறிவியல் ரீதியாக நடத்திய விசாரணையில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிப்போம். இந்த கொலையில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பைக், சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பைக் விரைவில் மீட்கப்படும். இவ்வாறு எஸ்.பி. ஈஸ்வரன் கூறினார்.
தடயவியல் ஆய்வகத்தில் வெடிகுண்டு
கொலை நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்பிரேயர் வெடிகுண்டு, பலத்த பாதுகாப்புடன் சென்னை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த வெடிகுண்டு தன்மை மற்றும் வெடிக்கும் திறன் குறித்த அறிக்கை விரைவில் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.
நன்றி: தினகரன்