மாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்!

விமானத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் வயதில் விமானத் தொழில் நுட்பத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார் சையத் ரேயன்!

தாமாகவே விமானம் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் தேடிப் படித்து, தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார். சிறிய மாதிரி விமானங்களை வீட்டிலேயே உருவாக்கும் அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்.

சென்னை ஆவடியில் உள்ள விஜயந்தா மாடல் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றுவரும் சையத் ரேயனுக்குச் சின்ன வயதிலிருந்தே விமானங்களின் மீது ஆர்வம் அதிகம். 12 வயதில் இவருடைய அப்பா ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். ரேயனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஹெலிகாப்டரை விளையாட்டுப் பொருளாக நினைக்காமல், அது எப்படி இயங்குகிறது என்று ஆராய்ந்துகொண்டிருந்தார். ஒருமுறை ஹெலிகாப்டரை இயக்கும்போது சுவரில் மோதி உடைந்துவிட்டது.

“இனிமேல் இதுபோன்ற பொருட்களை வாங்கித் தரப் போவதில்லை என்றார் அப்பா. கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்த ஹெலிகாப்டர் இப்படி உடைந்துவிட்டதே என்றுதான் எனக்குக் கவலை இருந்ததே தவிர, ஹெலிகாப்டர் உடைந்ததில் நான் வருத்தப்படவில்லை. காரணம் நான் ஹெலிகாப்டர் எப்படி இயங்குகிறது என்ற நுட்பத்தை அறிந்துகொண்டுவிட்டேன். அதை வைத்து நானே மாதிரி விமானங்களை உருவாக்கமுடியும் என்று நம்பினேன். உடனே செயலிலும் இறங்கினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. விரைவிலேயே பறக்கக்கூடிய மாதிரி விமானத்தை உருவாக்கிவிட்டேன். அந்த நாள் எனக்கு மட்டுமின்றி, என் பெற்றோருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்தது!” என்கிறார் சையத் ரேயன்.

சமீபத்தில் மங்களூரில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் ஐ.ஐ.டி. மாணவர்களோடு கலந்துகொண்டு, பரிசும் பெற்றிருக்கிறார். நாசா, அப்துல்கலாம் அறக்கட்டளை, விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

எளிய பின்னணியைச் சேர்ந்த குடும்பம் என்றாலும் சையத் ரேயனின் ஆராய்ச்சிகளுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள் இவருடைய பெற்றோர்கள். தற்போது ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினாலும் விமானப் படையில் விமானியாகப் பணியாற்றுவதுதான் தனது எதிர்கால லட்சியம் என்கிறார் சையத் ரேயன்.

நன்றி: தி ஹிந்து (தமிழ்)