சென்னையில் கோலாகல ஊர்வலம் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை : விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது. 1,507 பெரிய சிலைகள் உள்பட ஏராளமான சிறிய சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1ம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள், பொது மக்கள் சார்பில் ஆயிரத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக தெருக்கள், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு தினமும் பூஜைகள் நடந்தது. சிலை பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, நீலாங்கரை பல்கலை நகர், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டது. பெரிய சிலைகளை மெரினாவில் கரைக்க தடை விதிக்கப்பட்டது. சிவசேனாவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று சிலைகளை கடலில் கரைத்தனர். இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை முதல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று 1,507 பெரிய சிலைகள் உள்பட ஏராளமான சிலைகளை கடலில் கரைத்தனர். சிலைகள் மேள தாளம் முழங்க லாரி, டெம்போ, ஆட்டோ, மாட்டு வண்டி ஆகியவற்றில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

பாதுகாப்பு பணிக்காக ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,500 பேர் உள்பட 10 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். அவர்கள் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். இதற்காக திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. சில இடங்களில் தடுப்பு வேலி அமைத்து வாகனங்களை வேறு வழியாக திருப்பி விட்டனர்.

திருவல்லிக்கேணி பகுதியில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊர்வலத்தை தொடங்கி வைத்து ராமகோபாலன் பேசுகையில், “கோயில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஜெயலலிதா, கோயில் நில ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போக்குவரத்து மாற்றத்தால் திண்டாட்டம்:

ஊர்வலத்தின்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் முழுவதும் சாயம் பூசி தலையில் ரிப்பன் கட்டி குத்தாட்டம் போட்டனர். பாரத மாதாவுக்கு ஜே என்றும் வெற்றி முழக்கமும் இட்டனர். சிலர் பாம்பு நடனமும் ஆடினர். இதனை மக்கள் வெகுவாக ரசித்தனர். மாடியில் இருந்து பார்த்த மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சிலை கரைப்பு பாதுகாப்பு பணியில் ஒரு இணை கமிஷனர், 4 துணை கமிஷனர், 2 கூடுதல் துணை கமிஷனர், 10 உதவி கமிஷனர்கள், 31 இன்ஸ்பெக்டர்கள், 100 எஸ்ஐக்கள், 145 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சிலைகளை கரைக்க 3 ராட்சத கிரேன்களும் பயன்படுத்தப்பட்டன. கிரேன்கள் மூலம் கடலுக்குள் கொண்டு செல்லப்படும் சிலைகளை கட்டுமரத்தில் தயார் நிலையில் இருந்த வீரர்கள் அதனை கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர்.

வழக்கமாக விநாயகர் ஊர்வல பாதையை போலீசார் அறிவிப்பார்கள். ஆனால், இந்த முறை எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதனால், பல்வேறு பகுதிகளில் வாகனம் முன் அறிவிப்பின்றி திருப்பி விடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

செய்தி: தினகரன் 09-05-2011 அன்றைய சென்னைப் பதிப்பில் வெளியான செய்தி

http://dkn.dinakaran.com/News_detail_2011.asp?Nid=4476


செய்தி விமர்சனம்:  விநாயகர் சிலை மீது கல்லெறிந்துவிட்டு, குறிப்பிட்ட மதத்தினரை திட்டி வசைபாடி கலவரங்கள் நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு கல்லெறிக்கு கலவரம் நடத்திய அதே கூட்டம், விநாயகர் சிலைகளை கடல் அலையினுள் அழுத்தி, அடித்துத் துவைத்துக் கரைக்கும் கொடுமை ஒருபக்கம். நீர் மாசுபடுவதால், கடல் ஜீவராசிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாவதும், ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் காதைப் பிளக்கும் ஆர்ப்பாட்டங்களும் தாரை தப்பட்டைகளுமாக போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு தரும் இடைஞ்சல்கள் இன்னொரு புறம். மனிதனே வடித்து மனிதனே கரைக்கும் இச்செயலில் விநாயகரின் பங்கு தான் என்ன? என்ற கேள்விக்குறியே இறுதியில் எஞ்சி நிற்கிறது.