மனமாற்றத்தை ஏற்படுத்தும் அனிமேஷன் திரைப்படம் (திரை விமர்சனம்)

ரு அனிமேட்டட் திரைப்படத்தால் குழந்தை உளவியலை காட்சிப்படுத்த முடியுமா…?”

என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை துவம்சம் செய்திருக்கின்றது.

11 வயதுப்பெண்,  ரிலீயின் குடும்பம், அமெரிக்காவின் மின்னசோட்டாவிலிருந்து சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு மாறுவதிலிருந்து ஆரம்பிக்கின்றது திரைக்கதை. அந்த மாறுதலை ஏற்காத ரிலியின் மனத்தில் ஏற்படும் ஒரு சிறிய வருத்தம், தொடர்ந்து எவ்வாறு அவளின் எல்லா மகிழ்ச்சிகளையும், மகிழ்வான நினைவுகளையும், வசந்த காலக் காலை போல் அவளை வரவேற்கக் காத்திருக்கும் எதிர்காலத்தையும் அடியோடு மாற்றி அமைக்கின்றது என்பதே முழுக்கதை. ரிலியின் வாழ்க்கை மாற்றங்களாக அதைக் காட்சிப்படுத்தாமல், அவளின் ஆழ்மனத்தில் இருக்கும் தைரியம், நம்பிக்கை, மகிழ்ச்சி, துயரம், பயம், சோகம் என எல்லா உணர்வுகளையுமே உருவங்களாக்கி, ரிலியின் வாழ்க்கைக்கு ஆதாரமான ஆழ் மன உணர்வுகள், தினசரி நிகழ்வுகளால் அவள் மனத்தில் புதைந்து போகும் கருத்துக்கள் என எல்லாவற்றுக்கும் ஒரு உருவம், ஒரு அறை, ஒரு வடிவம், அதற்கு குரல், உடல் என எல்லாமே கொடுத்து, அவைகளைப் பேசவிட்டால்?

இப்படியொரு திரைக்கதை சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் அனிமேஷன் துறையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பிக்ஸர் குடும்பத்தாரும், குழந்தைகளின் விருப்பமான வால்ட் டிஸ்னி குடும்பத்தாரும்.

இடம் மாறுதல் என்பது வாழ்வின் ஒரு அங்கம். ஒரு பாகம். நம்மில் பலருக்கு வாழ்வே அத்தகையதுதான். ஆனால், அதனால் ஏற்படும் ஒரு சிறு கவலையைத் துடைத்து விட்டெறியாமல் ஆழ்மனத்தில் புதைத்து வைக்க, ரிலீ வயதொத்த குழந்தைகளின் மனத்தில் கட்டப்பட்டிருக்கும் கற்பனைக்கோட்டைகள், கற்பனை உருவங்கள், நட்புக்கு, அன்புக்கு, அரவணைக்க என அவர்களாகவே ஏற்படுத்தியிருக்கும் பிம்பங்கள் என எல்லாவற்றையும் எவ்வாறு ஒரு சோகம் தகர்க்கின்றது என்பதை சலிப்பு தட்டாமலும், ஆங்கிலப் படங்களுக்கே உரிய விறுவிறுப்பான காட்சிகளாலும் நகர்த்தியிருக்கின்றார்  இயக்குநர் பீட் டாக்டெர். (Wiki: Pete Docter)

மனித உணர்வுகளினை அழுத்தமான காரணியாகக் கொண்டு நம்முன் இப்படம்  விரியும்போது அறிந்திருந்தும் அறியாத ஒரு உலகிற்குள் செல்லும் அவஸ்தை தொற்றிக்கொள்கிறது நம்மை. ஒவ்வொரு மகிழ்விலும், ஒவ்வொரு வருத்தத்திலும் அந்தக் குழந்தையின் உலகில் சடாரென விரியும் ஒரு கோபுரத்தையும், திடீரென அதலபாதாளத்திற்குள் சாயும் அழகிய புகை வண்டியையும் பார்க்கும்போது, ஒரு சின்னஞ்சிறிய விஷயம் கூட குழந்தைகளின் மனத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துகின்றது. ஒரு சுடுசொல்லிற்கும், ஒரு சிறு புன்னகைக்கும் அவர்கள் கொடுக்கும் விலை புரிகின்றது. குழந்தைகளுக்கே இப்படியெனில், இன்னும் விஷேச திறன்பாடுடைய குழந்தைகளின் வாழ்வு? ஆட்டிஸத்தால் அல்லது மனோ ரீதியாக, சூழல் ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு? ஒவ்வொருவரிடமும் பிறர் பேசும் வார்த்தைகள், அவர்கள் செல்லும் இடம், கேட்கும் இசை, நுகரும் மணம், சிந்திக்கும் கற்பனை என எல்லாமே எப்படிப்பட்ட ஓர் உலகை அவரவர்களுக்காகவே கட்டுகின்றன, அதன் அடித்தளமே ஆடிப்போகச் செய்யும் வலிமையை எப்படி கவலையுணர்வு கைக்கொள்கிறது என்பதை இதை விட அழகாக யாரும் சொல்லியிருக்க முடியாது.

காட்சிகளின் கோவைகளும், பின்னணியும் அழகியல். எல்லா நல்லுணர்வுகளும் இறுதியில் சாம்பலாய்க் கரைய ஆரம்பிக்க, ரிலீயின் அபிமான பின்க் நிற யானையின் பிம்பமும் அவளின் மனமகிழ்வும் மட்டுமே கூடுமானவரை ரிலீயை சோகத்திலிருந்து விடுவித்து வாழ்க்கையை புன்னகையோடு மீட்டெடுக்க தம்மாலான இறுதி முயற்சிகளை மேற்கொள்கின்றன.  சோகத்தால் அழிந்த சாம்பல்களிலிருந்து கிளம்பி, இன்னும் கொஞ்சமாக உயிருடன் இருக்கும் மகிழ்ச்சி நிலத்திற்கு செல்ல மூன்று முறை முயன்றும், தோற்கும்போது, பின்க் நிற யானை பிங்க் பாங்க், கீழேயே சுட்டெரிக்கும் சாம்பலில் நின்றுகொண்டு மகிழ்ச்சி  உணர்வை மட்டும் மேலே அவ்விடத்திற்கு அனுப்பும் தருணம் வார்த்தைகளுக்கப்பாற்பட்டது. எந்தப் பொருளுமே உங்கள் வாழ்வில் இல்லாவிடினும், மகிழ்ச்சியாக வாழ நினைப்பதன் மூலமே வாழ்வை வளமானதாக்கலாம் என டைரக்டர் பேசும் இடம்  அது. அற்புதம்!

இதைப் போல பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் வாழ்வை அணுக நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோமா… எதிர்வரும் தோல்விகளை விட, கடந்து சென்ற அழகிய தருணங்கள் பெரிது என உணர வைக்கின்றோமா… அவசர உலகின இயந்திர மனிதத்திற்கு முன், இயல்பாக வெற்றி தோல்விகளை கடக்கப் பயிற்றுவிக்கின்றோமா… நம் வீட்டில், நம் குடும்பத்தில் உள்ளோரின் உணர்வுகளையே புரிந்து கொள்ள நம்மில் எத்தனை பேர் முயற்சிக்கிறோம்…

ரிலீ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளாள் என்னும் காட்சியில் நம்மையும் சீட்டின் நுனிக்கு தள்ளிவிடுகிறது, திரைக்கதை. அம்மா அப்பாவுடனான அழகிய பொழுதுகள், ரிலீயின் சிறு வயது நிகழ்வுகள், முதன் முதலாக மனத்தில் சேகரிக்கப்பட்ட உலகின் தருணங்கள் என எல்லாம் சேர்ந்து அவளின் முடிவை மாற்றி அமைக்கும்போது நம்மையே ரிலீயின் இடத்தில் சற்றேனும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு சிறு கவலை, தோல்வியை ஆழ் மனத்தில் உறைய வைத்து, அழகிய வாழ்வையா பலி கொடுப்பது என்னும் கேள்விக்கான பதிலே இப்படம்.

ரிலீ மட்டுமல்ல… நம் வீட்டுக்குழந்தைகளும் இன்றைய சூழலில், தொட்டதெற்கெல்லாம் அபாயகரமான முடிவுகளையே எடுக்கின்றனர். ஒவ்வொரு சிறு இடறலுக்கும் வாழ்வையே பணயம் வைக்கத் துணிந்து விடுகின்றனர். அதே துணிவை ஏன் வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்காக வைக்கக்கூடாது? இது குழந்தைகளுக்கான படமே எனினும், எல்லாப் பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கட்டாயம் காண வேண்டிய படம் இது.

இந்தப் படத்தின் டைரக்டரான பீட்டே இப்படியான ஒரு இடமாற்றத்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான். மேனிலைப் பள்ளி வரும் வரையிலும் தனித்தே தன் வாழ்வை எதிர்கொண்டவர்தான். காரணம், புதிய இடமும், புதிய நண்பர்களும் பிடிக்காமல் போயிருந்தது அவருக்கு. அதையே இத்தனை வருடம் கழித்து ஒரு செய்தியாய் மக்களுக்கு, அதுவும் இப்படியான புதிய கோணத்தில் தந்திருக்கிறார் என்றால் அது வாழ்வின் மீதான அவரின் நம்பிக்கையை, விடாமுயற்சியைக் காட்டுகின்றது. இதைப் போல பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் வாழ்வை அணுக நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோமா… எதிர்வரும் தோல்விகளை விட, கடந்து சென்ற அழகிய தருணங்கள் பெரிது என உணர வைக்கின்றோமா… அவசர உலகின இயந்திர மனிதத்திற்கு முன், இயல்பாக வெற்றி தோல்விகளை கடக்கப் பயிற்றுவிக்கின்றோமா… நம் வீட்டில், நம் குடும்பத்தில் உள்ளோரின் உணர்வுகளையே புரிந்து கொள்ள நம்மில் எத்தனை பேர் முயற்சிக்கிறோம்… ஏராளமான கேள்விக்கணைகளை நம் முன் வீசிவிட்டு, பெற்றோருடன் மீண்டும் ரிலீயைச் சேர்த்து விட்டபடி நிறைவடைகிறது படம்.

15 சிறந்த பட விருதுகள், 21 சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருதுகள், 40 சிறந்த அனிமேடட் மூவிகளுக்கான விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை, பல்வேறு அமைப்புக்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் வென்றிருக்கும் இத் திரைப்படம், ராட்டன் டொமேட்டோஸின் 2015இன் சிறந்த படங்களுக்கான வரிசையில் இரண்டாம் இடத்தையும், மெட்டாகிரிட்டிக்ஸின் சிறந்த படங்களின் வரிசையில்  முன்னணியிலும் இடம் பிடித்திருக்கின்றது. பிக்ஸாரின் அனிமேட்டட் திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு மைல்கல்லான இந்தப் படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு பாருங்கள். ஒரு மாற்றத்தையேனும் உங்களுக்குள் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

– அனிஷா யூனூஸ்