முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்

Share this:

“பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?” என்ற தலைப்பில் தலாக் பற்றி ஆர். ராமசுப்பிரமணியன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை இந்தியா டுடே (ஜுன் 26, 2013) வெளியிட்டிருந்தது.

முன்னாள் அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ.,  முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல், முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி எனப் பல பின்புலங்களைக் கொண்டுள்ள பெண் வழக்கறிஞர் பதர் சயீத், “தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முஸ்லிம்களுக்கான தலாக் வழங்கும் அதிகாரத்தை முஸ்லிம் காஜிகளிடமிருந்து பறிக்க வேண்டும்” என்று கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுள்ளது.

தலாக் – தலாக் – தலாக் என்று ஒரே நேரத்தில் ஏக வசனம் பேசி வழங்கப்படும்(!) முத்தலாக் இஸ்லாத்தில் சொல்லப்படாத – செல்லாத ஒன்று என்பதை அடிப்படை இஸ்லாமிய அறிவு உள்ள எவரும் அறிவர். தலாக் பற்றி குர்ஆனில் 2:027 முதல் 2:037 வசனங்களில் தெளிவான வழிகாட்டல்கள் உள்ளன. நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம்களுள் ஒரு சிலர் அறியாமையினாலோ சுயநலனுக்காகவோ இதனைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை மறுக்க முடியாது. 

பொதுவாக, கணவன் வீட்டாரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, ஒரு சில இடங்களில் இவ்வாறு “நாட்டாமைகள்” சிலர் தீர்ப்புக் கூறுவதாகச் செய்திகள் வருவது உண்டு. ஆனால் இந்தியா டுடேயின் நடைப்பிரவாகம், ஏதோ ஒட்டு மொத்த முஸ்லிம் பெண்கள் இந்த நிலையில்தாம் காலம் தள்ளுகிறார்கள் என்பதாகச் சித்திரிக்க முயன்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

ஏழை எளிய, கல்வியறிவு அற்ற, தினசரி வருவாய்க்கு வக்கற்ற, ரோட்டோரத்தில் குடும்பம் நடத்தும் மக்களின் வாழ்க்கையில் நடக்கும் “சொல்வதெல்லாம் உண்மை” த்தனமான செட்டப் விஷயங்கள் இதில் கலந்திருந்தாலும் பாதிக்கப்படும் பெண்கள் மிக மிகச் சிறிய சதவீதமே என்றாலும் இந்தச் சமூகச் சீர்கேட்டைக் களைய முடியாத கையறு நிலையில்தான் முஸ்லிம் சமூகம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது.

வறுமைக் கோட்டை அண்ணாந்து பார்க்கும்படியுள்ள கீழ்த்தட்டு மக்கள், இவர்களின் படிப்பறிவின்மை, அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வற்ற நிலை, இட ஒதுக்கீடுகளில் முறைகேடு, மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் சமூகத்தைத் துண்டாடிக் கொண்டிருக்கும் மலிவு அரசியல் எனப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் பலத்த அடிவாங்கிக் கொண்டிருக்கும் தமிழக முஸ்லிம்களுக்கு இது சாதாரண விஷயம். என்றாலும் …

திருமணம் பற்றியும் மண விலக்குப் பற்றியும் இஸ்லாம் கூறும் உண்மை என்ன? என்பதை உடைத்துப் பேசியாக வேண்டும். ஆஹா… இப்படி அருமையான சட்டங்கள் நமது அரசின் சட்ட ஏடுகளில் இல்லாமல் போய் விட்டதே என்று பிற மதத்தவர் மனம் வெதும்படியான நிலை ஏற்படுத்த வேண்டும். விசாலமான மனம் திறந்த கலந்துரையாடல்கள் மட்டுமே இத்தகைய புரிந்துணர்வுக்கு வழி வகுக்கும்.

வடையை எதிர்பார்த்துக் காத்திருந்த நரியைப் போல, ஓங்கித் தும்மியவர் ஒரு முஸ்லிம் என்றால் அந்தத் தும்மலுக்கு வேறு பெயர் வைக்க, சில பரிவாரங்கள் வரிசையில் வாய் திறந்து காத்திருக்கின்றன. ஏற்கனவே மத அரசியல் துவங்கி, பொருளாதாரம் வரை பல்வேறு பலவீனமான சூழல்களில் சிக்கிக் கொண்டுள்ள தமிழக முஸ்லிம்கள் இதனைக் கண்டு அமைதியாக இருப்பதால், “ஆமோதிக்கின்றனர் பாருங்கள்!” எனும் அபாயச் சங்கு ஊதப்படும் நிலையை உணர்ந்தாவது விழித்தெழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எந்த ஒரு சட்டத்திலும் ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏழை – பணக்காரன் என்ற பேதமும் இஸ்லாமிய ஷரீஆவில் இல்லை. எனவே, திருமணம் பற்றியும் மண விலக்குப் பற்றியும் இஸ்லாம் கூறும் உண்மை என்ன? என்பதை உடைத்துப் பேசியாக வேண்டும். ஆஹா… இப்படி அருமையான சட்டங்கள் நமது அரசின் சட்ட ஏடுகளில் இல்லாமல் போய் விட்டதே என்று பிற மதத்தவர் மனம் வெதும்படியான நிலை ஏற்படுத்த வேண்டும். விசாலமான மனம் திறந்த கலந்துரையாடல்கள் மட்டுமே இத்தகைய புரிந்துணர்வுக்கு வழி வகுக்கும்.

 துவக்கத்தில் கூறிய,  பதர் சயீதின் வழக்கை இந்தியன் நேஷனல் லீக் எதிர்த்துப் போராடியதாக இந்தியாடுடே குறிப்பிட்டுள்ளது (ஜுன் 26, 2013 பக்கம் 11)

அதே போன்று புதிய தலைமுறை தொலைக் காட்சியில் கடந்த (29-06-2013 சனிக்கிழமை) இரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பாக வேண்டி தயாரிக்கப்பட்ட ‘ரெளத்ரம் பழகு’ நிகழ்ச்சி, குறிப்பிட்டுச் சொல்ல இயலாத சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

விஷயம் கூடுதல் சென்ஸிட்டிவ் ஆனது என்பதை நன்றாக உள் வாங்கிய புதிய தலைமுறை நிர்வாகம், பொறுப்புடன் ஆளூர் ஷாநவாஸ் போன்ற ஊடகவியலாளர்களிடம் நன்கு ஆலோசித்துள்ளதை அவரே தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் மிரட்டல் காரணமாக முன்பு நிறுத்தப்பட்ட பர்தா பற்றிய விஜய் டிவியின் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியை Facebook பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தடை செய்யப் பட்டமைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமில்லை என்று அவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே நாம் குறிப்பிட்டுள்ளது போன்று, மனம் திறந்த கலந்துரையாடல்களே உண்மை நிலையை உணர வைக்கும் பாலமாக இருக்கும். அதை விடுத்து, “தலாக் பற்றி வெளிப்படையாக விவாதிக்கக் கூடாது” எனப் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு, தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கும் முகமூடிக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

தலாக் என்பது யதார்த்தத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பதையும் மணவிலக்குச் செய்யும் உரிமை பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதுபோல் ஆண்களுக்கு மட்டும் உரித்தானதன்று என்பதையும் கணவனை மணவிலக்குச் செய்வதற்கு இஸ்லாத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு என்பதையும் பொதுவெளியில் விளக்கிக் கூறும் வாய்ப்பை முகமூடிக்காரர்கள் தடுக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.

அதேவேளை, முகமூடியினர் யார் என்பதைத் தெளிவாக இனங்காட்ட வேண்டியது புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது கடமையாகும். இல்லையெனில், இது ஒரு விளம்பர ஸ்டண்டு என்றே புரிந்துகொள்ளப்படும்!

“ரெளத்திரம் பழகு” நிகழ்ச்சியில் தலாக் குறித்த அலசல்கள் இடம் பெற வேண்டும் என்பதே தமிழ் முஸ்லிம்களின் ஒருமித்த விருப்பமாக இருப்பதை, இணைய தளங்களில், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் கருத்திடுவதைக் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது.

அது மட்டுமின்றி, இத்தகைய நிகழ்ச்சிகளை, இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து இஸ்லாத்தில் சொல்லப்படாத அபத்தங்களுக்கு அப்பாற்பட்ட தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து நடத்துவதன் மூலம் இஸ்லாத்தின் மிகச் சிறந்த கோட்பாடுகள் முஸ்லிம் மக்களையும் தாண்டி அனைத்துலகத் தமிழ்ச் சமூகத்திற்குச் சென்று சேரும்; சேர வேண்டும் என்பதே எமது அவா.

– அபூ ஸாலிஹா


தொடர்புடைய ஆக்கங்கள்:

தவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்
http://www.satyamargam.com/islam/analysis/2123-talaaq.html

இஸ்லாம், முஸ்லிம் & i Phone
http://www.satyamargam.com/articles/readers-page/readers-mail/1912-1912.html

எது பெண்ணுரிமை?
http://www.satyamargam.com/competition/year-2007/738-738.html

முத்தலாக்கின் மூடுபொருள்
http://www.satyamargam.com/articles/arts/lyrics/1904-1904.html


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.