திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
தாக்குதல் அன்று பாக். எல்லையில் இருந்து 300 கி.மீ தாண்டி பயணித்து, பஹல்காம் வந்த தீவிரவாதிகள், தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்திவிட்டு சாவகாசமாக மீண்டும் திரும்பிச் சென்றது எப்படி? ராணுவ பாதுகாப்பு அன்று ஒரு நாள் விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து மக்களை பரபரப்புக்குள்ளாக்கி உள்ளன.
பல்லடத்தில் இருந்து காஷ்மீருக்கு குடும்பத்தினருடன் சென்று திரும்பிய 2 நாட்களில், தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பல்லடம் வனாலயத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
4 நாட்கள் காஷ்மீரில் குல்மார்க், பஹல்காமில் தங்கியிருந்தோம். பஹல்காமில் உள்ள 3 பள்ளத்தாக்குகளை குதிரையில் சென்று சுற்றிப்பார்த்தோம். கடந்த 20-ம் தேதி அங்குதான் இருந்தோம். அதன்பின்னர் 2 நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடந்ததை எங்களால் நம்பவே முடியவில்லை.
இந்திய ராணுவ பாதுகாப்பு கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்திருந்ததை, அங்கு கண்கூடாக பார்த்தோம். ராணுவ பாதுகாப்புடன் நாங்கள் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக சுற்றிப்பார்த்து ரசித்தோம். ராணுவ வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. துளியும் அச்சமின்றி சுற்றுலாவை ரசித்து வந்தோம்.
பஹல்காமில் நாங்கள் இயற்கையை ரசித்த இடத்தில் இப்படியொரு தாக்குதலா? என நான் உட்பட என்னுடன் வந்த 20-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் தான் உள்ளனர் என்றார்.
