மவ்லானாக்களின் இஸ்ரேல் விஜயம்

இந்தியாவிலிருந்து முதன் முதலாக முஸ்லிம்(?) பிரதிநிதிக்குழு ஒன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கிறது. ஆறு நாட்கள் இஸ்ரேலில் தங்கும் இந்த குழு அதிபர் ஷிமோன் பெரஸ் உட்பட யூத-முஸ்லிம் தலைவர்களோடு சந்திப்பு நடத்துவதோடு யூத மதத்தலைவர்களான ரப்பிகளோடு இணந்து கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடவும் செய்யவிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆஸ்திரேலிய இஸ்ரேல் விவகாரங்களுக்கான கவுன்சிலின் உதவியோடு அமெரிக்க யூத அமைப்பான Project in Change Institute என்ற அமைப்பு தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.


இமாம்கள் மற்றும் மஸ்ஜிதுகளின் அகில இந்திய கவுன்சில் என்று உரிமை கொண்டாடும் இந்த அமைப்பிற்கு திரு.ஜமீல் இல்யாசி குழுத்தலைவராக  இஸ்ரேல் சென்றுள்ளார். வாஜ்பாய் ஹிமாயத்(பாதுகாப்பு) என்ற அமைப்பின் குவாஜா இப்திகார் அஹ்மத் என்பவர் இக்குழுவின் மற்றொருத்தலைவர். சங்பரிவாரின் அ|றிவிக்கப்படாத கிளைகளாகத் தான் இந்த இரண்டு அமைப்புகளும் இயங்குகின்றன. இந்திய முஸ்லிம்களின் ஆதரவோ பிரதிநிதித்துவமோ இவ்விரு அமைப்புகளுக்கும் இல்லை. அரசியல் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ஆதரவாளர்கள் இல்லாத தலைவர்களை மட்டும் கொண்ட அமைப்புகள் தான் இவை இரண்டும். இஸ்ரேலுடைய மற்றும் அவர்களுடைய இந்திய ஏஜன்ட்களின் திட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இவர்களுக்கு நல்லவிலை கிடைத்திருக்கக்கூடும். சமீபத்தில் இந்திய அரசாங்கம் இஸ்ரேலுடன் செய்துக்கொண்ட பாதுகாப்புத்திட்டம் சம்பந்தமான உடன்படிக்கையும் இவர்களின் இந்த விஜயத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழுவை முன்னிறுத்தி இஸ்ரேலின் துணை பிரதமரான சிபி லெவ்னி இந்தியாவுக்கு, “பலஸ்தீனில் மிதவாதிகளுக்குதான் இந்தியா ஆதரவுத்தரவேண்டும். பலஸ்தீன அரசு எதிர்காலத்தில் தீவிரவாதிகளின் கைகளில் செல்லாமலிருக்கத்தான் இந்தியாவின் உதவி தேவை” என்று ஓர் அறிவுரை கூறியிருக்கிறார். அதாவது ஃபலஸ்தீன் மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸிற்கு எதிராக தங்களின் ஆதரவு பெற்ற மஹ்மூத் அப்பாஸின் பொம்மை அரசுக்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் என்பதே அதன் சுருக்கமாகும். மக்கா ஒப்பந்ததைத்தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய அரசு தகர்ந்தது அமெரிக்க-இஸ்ரேலிய சதியின் விளைவே ஆகும். பலஸ்தீன் மக்களால் வெறுக்கப்பட்ட பலஸ்தீன் அரசின் பாதுகாப்புப் படைத் தலைவர் அமெரிக்க-இஸ்ரேலிய அரசிடமிருந்து ஆயுதம் வாங்குவதைக் கண்டறிந்து பலமுறை பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹானியா அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு பலதடவை கடிதம் எழுதிய பிறகும் அது கண்டுக்கொள்ளப்படவில்லை.

கடைசியில் பொறுக்க முடியாமல்தான் ஹமாஸ் கஸாவை தன் வசம் கொண்டு வந்ததும் தஹ்லான் இரவோடு இரவாக பலஸ்தீனிலிருந்து தப்பியோடியதும் தற்பொழுது மஹ்மூத் அப்பாஸ் ஹமாஸை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறுகிறார். அதற்கு இந்தியாவின் ஆதரவு வேண்டுமென்பதே இஸ்ரேலிய பிரதமரின் எண்ணமாகும். அதையே  முஸ்லிம் பிரதிநிதி சங்கத்தின் வழியாக இந்தியாவிற்குக் கூறியுள்ளார். இஸ்ரேலிய பிரதமரின் வாக்குகளை அப்படியே அங்கீகரித்த இந்த முஸ்லிம் பிரநிதிக்குழு இஸ்ரேல் அன்றாடம் நடத்திவரும் பயங்கரவாதத்தைப்பற்றி வாய் திறந்திருக்கமாட்டார்கள். முஹம்மது துர்ராக்களின் ஆத்மா இவர்களை மன்னிக்குமா?

இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கும் இந்த சங்கத்தை புறக்கணிக்குமாறு இந்தியாவிலுள்ள முஸ்லிம் மதத்தலைவர்களும் அறிவுஜீவிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதற்குமுன்பு டெல்லியில் நடந்த இஸ்ரேலிய யூத புரோகிதர்களின் கூட்டத்திற்குப் பகரமாக இவர்களின் இஸ்ரேலிய விஜயம் நடந்துள்ளது. இந்த பயணத்திற்கு மதநல்லிணக்க முகமூடியை அணிவிப்பதற்கு முயற்சிகள் நடக்கிறது.

இவ்விடத்தில் சியோனிசத்தையும் யூத மதத்தையும் பிரித்துப்பார்ப்பது அவசியமான ஒன்று. இனவெறியை அடிப்படையாகக் கொண்டது தான் சியோனிசம். இஸ்ரேலின் அடிப்படையான இந்த இனவெறி சியோனிசமானது, செமட்டிக் மதமான யூதப் பாரம்பரியத்திற்கு அன்னியமானதாகும். அதனால்தான் யூத-கிறிஸ்தவ-முஸ்லிம் கலந்துரையாடலின் முன்னணியில் செயல்படும் பிரஞ்சு நாட்டைச்சார்ந்த ரஜா கரோடியைப் போன்றவர்கள் சியோனிசத்திற்கு எதிராகக் கடுமையாக குரல் கொடுக்கின்றார்கள். ஒரு காலத்தில் இந்த சியோனிசத்திற்கு எதிராக ஐநா தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. பின்னர் ஓஸ்லோ ஒப்பந்தத்தின் போது அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் அது திருத்தப்பட்டது. ஆனால் சிறுத்தையின் புள்ளிகளை வெறும் கைகளைக்கொண்டு மறைக்கமுடியுமா?.

எகிப்து இஸ்ரேலுடன் உறவுக்கொண்டாடும் நாடுதான். ஆனால் அங்குள்ள முக்கிய கிறிஸ்தவ சிறுபான்மையரான கிப்திகளின் மதத்தலைவர் ஃபாதர் ஸனூதா எவ்வளவு முயற்சிகள் நடந்தபிறகும் இதுவரை இஸ்ரேல் விஜயம் செய்ததில்லை. சியோனிஸ்டுகளுக்கு வேண்டி பக்கவாத்தியம் போடும் இந்த மவ்லானாக்கள் ஸனூதாவைக்கண்டு பாடம் படிக்கட்டும்.

நன்றி: மாத்யமம் ஆகஸ்ட் 20,2007
தகவல்: சையத் அலி