காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் – ஹிஸ்புல் முஜாஹிதீன்

{mosimage}காஷ்மீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை ஆயுதப்போராட்டம் தொடரும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவித்துள்ளது. "ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் வழிக்கு மீண்டும் வரவேண்டும்" என்ற மத்திய மற்றும் மாநில அரசுகளின் அழைப்பிற்கு பதிலளிக்கும் பொழுது, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான காஜி மிஸ்பாஹுத்தீன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு நாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும் வரை எங்களின் தொண்டர்கள் தங்களின் தோள்களில் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு தான் இருப்பர். பேச்சு வார்த்தையைத் தொடங்க ஆயுதப்போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் முன்வைத்த நிபந்தனை ஏற்கத்தக்கதாக இல்லை என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் நடக்கும் சமாதானப் பேச்சுகள் காஷ்மீர் பிரச்சையின் தீர்வுக்கு உகந்தவைகள் அல்ல என்றும் காஜி மிஸ்பாஹுத்தீன் கூறினார்.
"இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்னரும் அநேக உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன. எனினும், காஷ்மீர் பிரச்சனையின் தீவிரத்தை சிறிது கூட குறைக்க அவைகளால் இயலவில்லை. காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய அதிகாரம் வழங்குவது ஒன்றே இப்பிரச்சனைக்குரிய ஒரே தீர்வாகும். காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிரான எந்த ஒரு தீர்வும் இந்தியாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ ஏற்கத்தக்கது இல்லை எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் ஜம்மு பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது ஹுரியத் மாநாட்டில் (Hurriyat Conference) அங்கத்துவமான ஜம்மு காஷ்மீர் மீட்பு அமைப்பின் (Jammu Kashmir Salvation Movement) தலைவர் ஸபர் இக்பாலை 30க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் கொடூரமாகத் தாக்கினர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அலங்கோலப்படுத்திய சிவசேனா தொண்டர்கள், தொடர்ந்து ஸபரைக் கடுமையாகத் தாக்கிக் காயமடையச் செய்தனர். இத்தாக்குதலில் ஸபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
தாக்குதலின் பொழுது இக்பாலின் பாதுகாப்புக்காக அரசு நியமித்திருந்த இரு பாதுகாவலர்களும் இக்பாலைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என காவல்துறை கூறியது. இக்பால் சிகிச்சைக்காக ஜம்மு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவசேனையினரின் தாக்குதலுக்கு உள்ளான இக்பாலின் மீட்பு அமைப்பு பங்கு பெறும் ஹுரியத் மாநாடு, ஜம்மு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் மிதவாதப் பிரிவினராவர். இவர்கள் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை எதிர்த்து வருபவர்கள் என்பதும் பேச்சு வார்த்தையின் மூலமே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிவசேனாவினரின் இத்தாக்குதலை ஹுரியத் மாநாடு மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "சிவசேனாவினர் நடத்தியது மிகவும் மோசமான தீவிரவாதம்" என மீர் வாயிஸ் உமர் ஃபாரூக்கின் செயலாளர் வழக்கறிஞர். ஷாஹிதுல் இஸ்லாம் கருத்து தெரிவித்தார். "மிதவாதிகளான ஹுரியத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு தருவதில் அரசு தொடர்ந்து தோல்வியை தழுவுகின்றது; அதன்மூலம் அரசு சிவசேனாவை உற்சாகப்படுத்தும் செயலை செய்து வருகின்றது" என்றும் அவர் கூறினார்.

காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்பினரை, ஆயுதத்தைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்குத் தயாராக அரசு அழைப்பு விடுத்திருக்கும் இவ்வேளையில், மிதவாதிகளான ஹுரியத் அமைப்பின் மீது சிவசேனாவினர் தொடுத்திருக்கும் இந்த கொடூரத்தாக்குதல் ஆயுதப் போராட்ட குழுவினரின் செயலை மேலும் ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது கவலையளிக்கின்றது.