புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும் அமைப்பிடமிருந்து “உன்னைக் கொலை செய்வேன்’ “IKillU” எனும் அச்சுறுத்தலோடு ஒரு கொலை மிரட்டல் இமெயில் அனுப்பப் பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தலையடுத்து அதிர்ச்சி அடைந்த கம்பீர், கடந்த புதன்கிழமை 23-04-2025 தில்லி காவல்துறையை அணுகி உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
அவரது புகாரைத் தொடர்ந்து, ராஜேந்தர் நகர் போலீஸ் நிலைய எஸ்எச்ஓவும், மத்திய தில்லி டிசிபியும் கூறியதன்படி, அதிகாரபூர்வமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
அதேசமயம், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கேட்டுக் கொண்டார் கம்பீர்.
“ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும் அமைப்பிடமிருந்து வந்த இந்த பயங்கரவாத அச்சுறுத்தலால் நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலையில், தில்லி காவல்துறை, திரு. கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது.
இது அவருக்கு முதல் முறை கிடைக்கும் அச்சுறுத்தல் அல்ல; 2021 நவம்பரில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, இதேபோன்ற மின்னஞ்சல் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை, காஷ்மீர் பகுதியிலுள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின்மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, கவுதம் கம்பீர், தனது X சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். பைசரன் மேடுகளில் பயணிகள் மீது தீவிரவாதிகள் சுட்டதில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
“உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இக்காரியத்தைச் செய்தவர்கள் தக்க தண்டனை பெறுவர். இந்தியா பதிலடி கொடுக்கும்,” என்று திரு. கம்பீர் X தளத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளிடம் இருந்து இந்த மிரட்டல் இமெயில் வந்துள்ளதாக கம்பீர் தெரிவித்தார்.
தில்லி காவல்துறை அமைத்த தனிப்படையினரின் தீவிர விசாரணையில், மதக்கலவரம் செய்யும் எண்ணத்தில் முஸ்லிம்களின் பெயரால் கொலை மிரட்டல் விடுத்த ஜிக்னேஷ்சிங் பர்மர் (Jigneshsinh Parmar) என்ற ஹிந்துத்துவா இயக்கப் பின்னணி கொண்ட நபரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஜிக்னேஷ் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது.
காவல்துறை விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்ட 21 வயதான ஜிக்னேஷ், குஜராத்தைச் சேர்ந்தவராவர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், கொலை மிரட்டல் விடுத்த ஜிக்னேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததாக டெபுடி கமிஷனர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். (https://www.ndtv.com/india-news/i-kill-you-student-21-held-for-sending-threat-mails-to-gautam-gambhir-8264806)