நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!

அப்பாவி சங் தீவிரவாதி (?)
Share this:

"காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து விட்டார். மற்றபடி இவரு ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பிள்ளை"

 

இது ஒரு திரைப் படத்தின் வசனக் காட்சியல்ல. இங்குத் தரப் பட்டுள்ள 'கைது-விடுதலை:3'இன் க்ளைமாக்ஸ் வசனம்தான் அது.

 

கைது-விடுதலை : 1

சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியைக் கொல்லத் தபால் குண்டு அனுப்பியதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற முஸ்லிம் இளைஞரைப் பிடித்துக் கொண்டுபோய் 20 நாட்களுக்கும் மேலாகக் கஸ்டடியிலும் சிறையிலும் வைத்துக் கேரளக் காவல்துறையினர் கொடுமைப் படுத்தினர். நிரபராதியான அவரின் தாயையும் தந்தையையும் உறவினர்களையும் காவல்துறை கொடூரமாக வேட்டையாடியது.

 

ஆனால், தீவிர விசாரணையின் பின்னர் உண்மையான குற்றவாளியான ராகேஷ் சர்மா என்பவரைக் காவல்துறை கைது செய்தது. அப்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கேரளக் காவல்துறை கூட்டி,  "பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ராகேஷ் சர்மா, மனநிலை பாதிக்கப் பட்டதாலேயே அவ்வாறு அனுப்பினார்" என காவல்துறை 'விளக்கம்' கூறி நற்சான்று வழங்கியது.

 

கைது-விடுதலை : 2

தேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல ஒரு மிரட்டல் விடுத்த பாஜகவின் மாணவர் அணி (ஏ.பி.வி.பி) உறுப்பினரான கோழிக்கோட்டைச் சேர்ந்த தேஜஸ் என்பவரது வழக்கையும் காவல்துறை மிகச் 'சாமர்த்தியமாக'க் கையாண்டு தேஜஸை நிரபராதி என விடுவித்தது.

 

கைது-விடுதலை : 3

கரூரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் ஊழியரின் மகனான ருண் சூர்யா என்பவரை, ஜனாதிபதி, இந்திய உளவுத்துறை 'ரா'வின் தலைவர், ஐ.பி அதிகாரிகள் ஆகியோருக்கு மிரட்டல் மின்மடல் அனுப்பியதற்காக காவல்துறை சென்ற வாரம் கைது செய்திருந்தது.

 

தகவலறிந்து மாநகரக் காவல்துறை ஆணைரது அலுவலகத்துக்கு அருண் சூர்யாவின் பெற்றோர் வந்தனர். அவர்கள் காவல்துறை உயரதிகாரிகளுடன் பல மணி நேரம் 'ஆலோசனை' நடத்தினர். அதனைத் தொடர்ந்தே, பத்திரிகையாளர் கூட்டத்துக்குக் காவல்துறை ஏற்பாடு செய்து, கண்ணன் என்ற அருண் சூர்யாவின் கள்ளம் கபடமில்லாத குணத்தைப் பற்றி இந்தச் செய்தியின் முதற் சொற்றொடரில் நீங்கள் படித்தவாறு கொச்சி நகரக் காவல்துறை ஆணையர் மனோஜ் ஆப்ரகாம் விவரித்தார்.

 

"நவம்பர் 14 க்குள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைக் கொலை செய்வோம்" என்றும் "மேலும் பல தலைவர்களைக் கொலை செய்யும் திட்டம் உண்டு" எனவும் "ஜனாதிபதி உட்பட அனைத்துத் தலைவர்களுக்கும் எச்சரிக்கை!" எனவும் மின் மடல் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் அருண் சூர்யா.

 

கடந்த அக்டோபர் 24 மாலை 5.15க்கு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்மடலில், "கொச்சி மற்றும் சென்னையில் 4 வெடிகுண்டுகள் வீதம் வைக்கப் பட்டுள்ளன" எனவும் "விரைவில் அவை வெடிக்கும்" எனவும் அவரது மின்மடலில்  மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.

 

இதற்கு முன்னரும் இதே போன்ற பல மிரட்டல் மின்மடல்கள் வந்திருப்பினும் இம்முறை சற்றுத் தீவிரமான மிரட்டலுடன் சென்னை மற்றும் கொச்சியில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக வந்ததால், ஜனாதிபதி மாளிகை உடடியாக மிரட்டல் மடல் விவரத்தை ஐ.பி, கேரள, தமிழக உள்துறைச் செயலர்களுக்கு அனுப்பி இருந்தது.

 

இம்மிரட்டல் மின்மடலை அனுப்பி, பிடிபட்டிருந்த அருண் சூர்யாவை, "எந்த விதமான தீவிரவாத குழுக்களுடனோ அமைப்புகளுடனோ தொடர்புடையவர் அல்ல எனவும் விளையாட்டிற்காகத்தான் அவ்வாறு ஒரு மின்மடல் அனுப்பிதாகவும்" கேரளக் காவல்துறை ஜனாதிபதி மாளிகைக்குக் கொடுத்த தகவலில் கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அனுப்பப்பட்ட மின்மடலில் தெரிவிக்கப் பட்டிருந்த மிரட்டலைக் கண்டு பயப்பட ஏதும் இல்லை எனவும் கேரள காவல்துறை உறுதி கூறியுள்ளது.

 

காதல் தோல்வியினால் விரக்தியடைந்த அருண் சூர்யா, காதலியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக 'ரஹ்மத்துல்லாஹ் பரகத்' என்ற முஸ்லிம் பெயரில் மெயில் அக்கவுண்ட் திறந்ததேன்?

 

முஸ்லிம்கள் மட்டுமே பயன் படுத்தும் அரபுமொழிச் சொற்கள் சிலவற்றை மிரட்டல் மின்மடலின் இறுதியில் இணைத்ததேன்?

 

தீவிரவாத மிரட்டல் விடுத்த அருண் சூர்யாவை, "நல்லப் பிள்ளை; நல்லக் குடும்பத்துப் பிள்ளை; மனவேதனையில் அப்படி செய்து விட்டான்; அல்லாமல் இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை" என நற்சான்றிதழ் வழங்கும் காவல்துறையிடம் இதற்கான பதில்கள் இல்லை!

 

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்:

அவ'னை' முகத்தை மூடி,

பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,

ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப் பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,

அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும்

தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

 

கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.

 

நல்லவேளை, பிடிபட்டவர் நல்ல குடும்பத்து நல்ல பிள்ளையாக இருந்ததால் நாடு பிழைத்தது!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.