பெங்களூரு (மார்ச் 21, 2025): பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டு இந்திய ராணுவ கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட, பெங்களூரு ‘பெல்’ நிறுவன மூத்த இன்ஜினியர் தீப்ராஜ் சந்திரா கைது செய்யப் பட்டுள்ளார். – inneram.com
கர்நாடகாவின் கார்வாரில் உள்ள, ‘சீ பேர்டு’ Project Seabird (Naval Base) கடற்படை தளம் பற்றிய தகவல்களை, பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அங்கு பணியாற்றிய தற்காலிக ஊழியர்களான வேதன் தண்டேல், அக் ஷய் நாயக் ஆகியோரை என்.ஐ.ஏ., இரு மாதங்களுக்கு முன் கைது செய்தது.
இந்நிலையில், இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடந்த 14ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திர குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் குமார் விகாஷ் என்பவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
குமார் விகாஷிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு பெல் நிறுவனத்தில் தயாரிப்பு, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு துறையில் மூத்த இன்ஜினியராக பணியாற்றும் உத்தர பிரதேசத்தின் தீப்ராஜ் சந்திரா (வயது 36) என்பவரும் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, பெங்களூரு மத்திகெரேயில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு, தீப்ராஜ் சந்திராவை ராணுவ புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
விசாரணையில், நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்கள், விண்வெளி ஆய்வு தொடர்பான சில தகவல்களை பாகிஸ்தானுக்கு தீப்ராஜ் கொடுத்தது தெரிந்தது.
இதற்காக, பாகிஸ்தானிடம் இருந்து பிட்காயின் மூலம் பணம் வாங்கியதும் தெரியவந்தது. இவரிடம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேச்சு நடத்தி, தகவல்களை கறந்ததும் தெரிந்தது.
இவர்கள், பாகிஸ்தான் பெண்ணிடம், ‘ஹனிடிராப்’பில் சிக்கி இருக்கலாம் என்றும், இதனால், நம் நாட்டின் ரகசியங்களை கசியவிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவிட்டு பழியை இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்துவது, மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த மத்திய அரசு ஊழியர் தீப்ராஜ் சந்திரா -வை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெங்களூரு,
நமது நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் பற்றிய தகவல்களை, பாகிஸ்தான் நாட்டுக்கு ஒரு நபர் வழங்கி வருவதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எல். நிறுவனத்தில் இருந்து சில தகவல்கள் சென்றிருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆதாரத்தின் பேரில் பெங்களூரு பி.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த தீப்ராஜ் சந்திரா என்று தெரிந்தது. இவர் பி.இ.எல். நிறுவனத்தில் திட்ட மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தது தெரிந்தது.
மேலும் யஷ்வந்தபுரம் அருகே மத்திகெரேயில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தீப்ராஜ் சந்திரா வேலைக்கு சென்று வந்ததுடன், அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்தியாவின் பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்ததும் தெரியவந்து உள்ளது. மத்திய உளவுத்துறை மற்றும் கர்நாடக மாநில உளவுப்பிரிவு போலீசார் இணைந்து தீப்ராஜ் சந்திராவை கைது செய்திருந்தார்கள். அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த செல்போன், மடிக்கணினியில் இருந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு குறித்து பாகிஸ்தானுக்கு ஏதேனும் ரகசியங்களை தீப்ராஜ் சந்திரா அனுப்பி வைத்துள்ளாரா? என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான தீப்ராஜ் சந்திராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி: https://www.dailythanthi.com/news/india/janyayan-case-reported-hearing-in-supreme-court-on-pongal-1200093
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் பெல் நிறுவன பொறியாளர் தீப்ராஜ் சந்திரா கைது
பெங்களூரு: உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தீப்ராஜ் சந்திரா(36) பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கிரிப்டோகரன்சி அக்கவுன்ட் மூலம் பணம் பெற்றிருப்பதைத் தெரிந்துகொண்ட ராணுவ புலனாய்வு மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள், தீப்ராஜ் சந்திராவை ரகசியமாகக் கண்காணித்தனர்.
அப்போது, தொலைத்தொடர்பு, ரேடார் சிஸ்டம்ஸ் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பணத்திற்காக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ் அப், டெலிகிராம், இ-மெயில் மூலம் தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்திருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

