ஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்!

Share this:

நோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இது அமைந்துள்ளது.

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையில்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரித்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு “ஸாவு” கொடுப்பதை நபி(ஸல்) கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

அனைவர் மீதும் கடமை என்றால் அவர்களுக்காகக் குடும்பத்தலைவன் மீதும் கடமை என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அடிமைகளுக்கு பொருளாதாரக் கடமை ஏதும் இல்லை. அடிமைகளும் இங்கே குறிப்பிடப்படுவதிலிருந்து இதை விளங்கலாம்.

கருவில் உள்ள சிசுவின் சார்பாகவும் இந்தத் தர்மம் வழங்குவது கடமையாகாது. அதன் சார்பாக நன்மையை நாடி இந்தத் தர்மம் கொடுக்கப்பட்டால் அதில் குற்றமில்லை! அமீருல் முஃமினீன் உஸ்மான்(ரலி) அவர்கள் கருவிலிருந்த சிசுவின் சார்பாக இந்த ஃபித்ர் தர்மம் வழங்கினார்கள்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு “ஸாவு” கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு “ஸாவு” என்பதாகும்.

நிறுத்தல் அளவை உணவுக்கு உணவு வித்தியாசப்படும் என்பதால் முகத்தல் அளவையாக கொடுப்பதே சரியாகும். இரு கை நிறைய நான்கு முறை எடுத்தால் அது ஒருவர் கொடுக்க வேண்டிய தர்மத்தின் அளவாகும்.

இது நோன்புப் பெருநாள் தர்மம் என்றாலும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக ஓரிரு நாட்கள் முன்னதாகவும் கொடுக்கலாம். ஆயினும் இந்த தர்மம் பெருநாள் தொழுகைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டும்.

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒருநாள் அல்லது இருநாள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி

மக்கள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மத்தை கொடுத்து விடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டனர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி

பேரித்தம் பழம், கோதுமை கொடுத்ததாகவே ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுகின்றது. ஆயினும் ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

பித்ர் தர்மத்தின் அளவு: நபியவர்களுடைய மரக்காலின் அளவை ஒத்த ஒரு மரக்கால் ஆகும். கிராம் கணக்கில் : 2 கிலோ 40 கிராம். நபியவர்கள் பயன்படுத்திய மரக்கால் அளவை அறிய விரும்பினால் 2 கிலோ 40 கிராம் நல்ல கோதுமையை நிறுத்து அதே அளவிலான ஒரு பாத்திரத்தில் அதை நிறைத்துப் போடவும். பிறகு அதனை ஒரு மரக்கால் அளவாக வைத்துக் கொள்ளலாம்

ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம் என்று அறியலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். தமிழ்நாட்டில் அரிசியே பிரதான உணவாகக் கொள்ளப்படுவதால் அதுவே ஏழைகளுக்குப் பயன் தரும். முன்னர் நாம் குறிப்பிட்ட அளவு அரிசியை அல்லது அந்த அளவுக்கான ரூபாயை கணக்கிட்டுக் கொடுக்கலாம்.

பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை.

நோன்பாளியின் தவறுகளுக்குப் பரிகாரம் என்பதால் நோன்பு வைக்காத குடும்ப உறுப்பினர்களுக்காக கொடுக்காமல் இருக்கலாகாது. ஏனெனில் நோன்பு கடமையாகாத சிறுவர்களுக்காகவும் கூட இதை கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

ஜகாத் கொடுக்கத் தகுதியுள்ளவர்கள் என்பது போன்ற செல்வத்தின் அடிப்படையில் நோன்புப் பெருநாள் வழங்குபவர்கள் நிர்ணயிக்கப் படவில்லை. எனவே பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸும் இல்லை.

பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்தத் உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து இதை உரிய நேரத்தில் செய்து இறைவனின் திருப் பொருத்ததை நாம் அடைவோமாக!

– அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.