என்றும் மாறா இஸ்லாமிய வாழ்வு!

இஸ்லாமிய வாழ்க்கை முறை மிகவும் உறுதியானதும் காலப்போக்கில் மாற்றம் காணாத கொள்கைகளை அடிப்படையாக கொண்டதுமாகும். அது தெளிவான புனித குர்ஆன் போதனைகளையும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களுடைய ஸுன்னா எனும் வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். டிப்படையான இக்கொள்கைகள் அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றதாகவும்,மார்க்க அறிஞர்களின் திறமையை ஒட்டியும் மாறிவந்தாலும் அடிப்படையான கொள்கையை இம்மாற்றங்கள் ஒரு போதும் மாற்றியது இல்லை.

ஸஹர் நேரத்தைக் கணக்கிடும் முறை பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது:

 

மேலும் இரவு எனும் கறுப்பு கயிற்றி(காரிருளி)லிருந்து அதிகாலையின் வெண்மைக் கயிறு தெளிவாக துவங்கும் வரை உண்ணுங்கள் பருகுங்கள்(அல்குர்ஆன் 2:187)

 

இம்முறையே முஹம்மது (ஸல்) அவர்கள் மற்றும் அக்காலத்திலிருந்த முஸ்லிம்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஏனென்றால வரிவரியாக வரும் ஒளியின் கீற்றுகள் கொண்டு அதிகாலையின் துவக்க நேரத்தைக் கணக்கிட்டு முன்கூட்டியே அறிந்து கொள்வது அன்று சாத்தியமானதாக இருக்கவில்லை.

 

இந்த வசனம் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை சுட்டிக் காட்டுகின்றது என்பதும் அதனைப் பேணுவது அவசியம் என்பது தான் முக்கியமே தவிர அதை அடையக் கையாளப்பட்டுள்ள முறைக்கு முக்கியத்துவம் இல்லை. அந்த நேரத்தை சரியாக கணிக்க வேறு வழிமுறைகள் இருக்குமேயானால் அது ஏற்றுக்கொள்ளப்படும். யதார்த்தத்தில் முஸ்லிம் வானியல் ஆராய்ச்சியாளர்கள் இத்துறையில் முன்னோடிகளாக இருந்தவர்கள்,தனைக்கணித்து எந்த ஒரு நேரத்தையும் வருடத்தின் எந்த ஒரு நாளுக்கும், கடந்த, நிகழ் அல்லது எதிர்காலத்திற்கும் பூமியின் பல்வேறு இடங்களுக்கும் கணித்து அறிவித்துள்ளனர். இந்த கால அட்டவணைகள் இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானோர்களால் உபயோகிக்கப்படுகிறது. அவர்கள் இந்த நேரத்தைக் கணக்கிட கையாண்ட முறை குர்ஆனில் கூறப்பட்ட முறைக்கு மேலோட்டமாக ஒத்துப் போகாவிட்டாலும் இது புனித குர்ஆனில் அந்த ஸஹரின் இறுதி நேரத்தைப் பெற வேண்டும் என்று கூறப்பட்ட அடிப்படைக்கு உட்பட்டதே.

 

மக்ரிப் நேரத்தைக் கணக்கிடுவது (அனைவராலும்) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது:

 

சூரிய அஸ்தமனத்தை (மறைவை) அடிப்படையாகக் கொண்ட மக்ரிப் தொழுகை, மற்றும் நோன்பை முடிக்கும் இஃப்தார் நேரத்தைக் கணக்கிட நபி(ஸல்) அவர்களும் அக்காலத்தில் இருந்த முஸ்லிம்களுக்கும் சூரியன் மறைவதைக் காத்திருந்து காண்பதை தவிர கணிக்கும் முறைகள் சாதன சாத்தியக்கூறுகள் இருக்கவில்லை. தமது கண்களால் அதை காணவேண்டிய ஒரே வழிமுறை மட்டுமே அன்று இருந்தது. இன்று முஸ்லிம்கள் யாரும் இதே முறையைக் கையாண்டு மக்ரிப் நேரத்தைக் கணக்கிட வேண்டிய நிலையில்லாத வண்ணம் உலககெங்கும் குறிப்பாக ஒவ்வொரு பகுதிக்கும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும், நேரத்தைத் துல்லியமாகக் காட்டும் கால அட்டவணைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயெ உலககெங்கும் பரவலாக இந்த நேரம் கணிக்கப்பட்டுள்ளது. இப்படிக் கணக்கிடுவது நபி(ஸல்) அவர்களின் முறைக்கு ஒத்துப்போகாதது போலத் தோன்றினாலும் இது ஒரு தவறாக கருதப்படுவது இல்லை ஏனென்றால முக்கிய அடிப்படையான சூரியன் மறைந்த நேரம் என்பது இங்கும் பாதுகாத்து முறையாகக் கணிக்கப்பட்டு கடைபிடிக்கப் படுகிறது.

 

அஸர் நேரத்தைக் கணக்கிடுதல் (அனைவராலும்) ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

 

அஸர் தொழுகையின் நேரத்தைக் கணக்கிட நபி(ஸல்) அவர்கள் ஒரு கம்பை பூமியில் நட்டு, அதனுடைய நிழலின் அளவு அதை போன்ற அளவுக்கோ அல்லது அதிகமாகும் போதோ கணித்து வந்தனர். இன்று நாம் இது போன்று குச்சிகளையோ கம்புகளையோ வைத்து இந்த நேரத்தைக் கணக்கிடாமல் முஸ்லிம் வானியல் நிபுணர்களின் கணிப்பின் அடிப்படையில் இந்த நேரத்தை அறிந்துகொள்கிறோம்.

 

விமானங்களும் கார்களும் ஒட்டகங்களுக்கும் குதிரைகளுக்கும் பதிலாக வாகனங்களாய் மாறியுள்ளன.

 

நபி(ஸல்) அவர்கள் தம் காலகட்டத்தில் ஒட்டகத்தை பாதுகாப்பாகப் பயணிக்க உதவும் வாகனமாகப் பயன்படுத்தி வந்தனர். இன்று காரிலோ பஸ்ஸிலோ விமானத்திலோ பயணிப்பது குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டது தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.


நபி(ஸல்) அவர்கள் கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் பழக்கத்தை உடையவராக இருந்துள்ளனர். அவர்கள் இன்றைய தொடர்பு சாதனங்களாகிய தொலைபேசி , ஃபேக்ஸ், ரேடியோ, இணையம், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் செய்திகளை எத்திவைப்பதை அங்கீகரித்து இருப்பார்கள். அதே போல் மைக்ரோவேவ் சமையல் சாதனங்கள், மின் உலைகள் (ovens), ஏர்கண்டிஷனர் போன்ற  சாதனங்கள் உட்பட்ட நவீன கண்டுபிடிப்புகளாகிய நமது வாழ்க்கையை இலகுவாக்க உதவும் வசதி வாய்ந்த ஏனைய கண்டுபிடிப்புகளையும் அங்கீகரித்திருப்பார்கள் என்று கூறலாம்.

 

இன்று பயபக்தியுடைய உண்மை முஸ்லிம்கள், என்று உலகெங்கும் கருதப்படுபவர்கள் அணியும் ஆடைகள், அன்று நபி(ஸல்) அவர்களும் அவர்களுடைய மனைவியரும் அணிந்தவற்றிற்கு மாற்றமானதாக இருப்பினும் இவை அடிப்படையில் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் ஆடை அணியும் அடிப்படைப் போதனைகளுக்கு உட்பட்டுள்ளவையே.

 

நபி(ஸல்) அவர்களால் செயல்படுத்தப் பட்ட கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்

 

புதிய முறைகள் மற்றும் சாதனங்கள் மூலம் தொழுகையின் நேரங்கள், ஸஹருடைய இறுதி நேரம், போன்றவற்றை முடிவு செய்வதற்கு மார்க்க அறிஞர்கள் அளித்துள்ள அங்கீகாரம் இவை நபி(ஸல்) அவர்களுடைய நடைமுறைக்கு மேலோட்டமாக மாறுபட்டது போல் இருப்பினும்எதுவரை இவை குர்ஆனும் நபிவழியும் வலியுறுத்தியுள்ள அடிப்படையான கொள்கையினை நிறைவேற்றி பின்பற்றுகின்றனவோ அதுவரை குர்ஆன் மற்றும் ஸுன்னாவுக்கு உட்பட்டவைகள்தான் என்றே கருதுகின்றனர் என்பது தெளிவு.

 

வானியல், கணிதம் மற்றும் கணக்கிட உதவும் சாதனங்கள்

 

நபி(ஸல்) அவர்கள் அன்றைய மக்களின் நிலையைப் பற்றி கூறும் போது, அவர்கள் எழுப் படிக்க தெரியாக உம்மி சமுதாயமாக இருந்தனர் அவர்களுக்கு எழுதவோ படிக்கவோ கணக்கு முறைகளிலோ(சிரமமான வானியல் கணித சாஸ்திரத்திலோ) ஞானமில்லை என்று கூறியுள்ளார்கள். பிற்காலத்தில் தோன்றிய முஸ்லிம் விஞ்ஞானிகள் புனித குர்ஆனின் போதனைகளால் வானியலில் முன்னோடிகளாக அரும்பணியாற்றினர்.

 

பின்னர் விழிப்புணர்வு பெற்ற ஐரோப்பிய அறிஞர்கள் கணிதத்துறையிலும், வானியலிலும் முன்னேற்றம் அடைந்தனர். இன்று கணிதம், வானியல் மற்றும் கணிணித் துறைகள் கண்டுள்ள முன்னேற்றத்தினால் சந்திரனுடைய பல்வேறு நிலைகள், அதன் தோற்றம், மறைவுமுழு நிலவு, அமாவாசை மற்றும் சூரிய உதயம், சூரிய மறைவு போன்றவற்றை எந்த ஒரு நாளுக்கும் முன்கூட்டியே உலகெங்கும் எந்த ஒரு இடத்திற்கும் துல்லியமாக கணித்து அறியக்கூடிய சாதனங்கள் மற்றும் வசதிகளினை முன் எப்போதையும் விட அதிகமாக பெற்ற நிலையில் உள்ளோம். நாம் நமது கண்களால் சூரியனின் மறைவைப் பார்க்காமல் அல்லது பார்த்தவர்களின் சாட்சிகளின்றி நமது நோன்பை, சூரியன் மறையும் நேரத்தின் கணிப்பின் படி துறக்கிறோம்.

 

நமதருமை நபி(ஸல்) அவர்கள் வானவியல் அறிவை பயன்படுத்தினார்களா?

 

முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வரும் முன் யூத நாட்காட்டிகளையே பயன்படுத்தி வந்தனர். அந்த காலண்டரில் சந்திரனின் அடிபப்டையில் ஒரு மாதத்தை பதிமூன்றாவது மாதமாக ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டு சேர்த்து வந்தனர். அதன் மூலம் பூமி சூரியனைச் சுற்றத் தேவையான நாட்களுக்கு ஈடு செய்து வந்தனர். அந்த காலத்தில் சந்திரனை அடிப்படையாக கொண்ட மாதத்தில் குறைந்த்து 29 நாட்கள் இருந்தன ஆனால் முப்பது நாட்களுக்கு அதிகமாக இருக்க வில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு போதும் மாதத்தின் 28ம் நாள் பிறையைப் பார்க்கச் சொல்லவில்லை மேலும் 29 அன்று பிறையை யாரும் காணவில்லைன்றால் முப்பதாம் நாள் பார்க்கப் பணிக்கவில்லை. ஏனென்றால் 29ம் நாளில் பிறை தென்படாவிட்டால் 30ம் நாள் அன்று பிறை தோன்றுவது உறுதி. இன்று இருப்பது போல் துல்லியமாகப் புதிய பிறையைக் கணிக்கவல்ல சாதனங்கள் அன்று இருந்திருந்தால் 29ம் நாளன்று கூட பிறையை பார்க்க நபி(ஸல்) அவர்கள் பணித்திருக்க மாட்டார்கள் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 

வானியல் சாஸ்திர ஞானத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவது அவசியம்.

 

இன்றைய விண்வெளி ஆராய்ச்சியுகத்தில், வானியல் கலையின் விஞ்ஞானத்தில் அதிவேக கணினிகளின் பங்கு மிக அதிகம் என்பதை நாம் நன்கறிவோம். இவற்றின் உதவியால் விண்வெளியில் உள்ள சூரியன் சந்திரன் போன்ற இதர கோள்களின் சுற்றுப்பாதைகள் அவற்றின் இடம், நிலைகள், வேகம் போன்றவற்றை அவை ஒரு விநாடியின் பகுதியளவு உள்ள வேறுபாடுகளை மீச்சிறு அளவுகளாயினும் துல்லியமாகக் கணக்கிட்டு அறிய இயலுகின்றது.

 

அல்லாஹ் குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அர்ரஹ்மான் அத்தியாயத்தில் கூறியுள்ளான்

 

சூரியனும் சந்திரனும் (நிர்ணயிக்கப்பட்ட) கணக்கின்படி இயங்குகின்றன(அல்குர் ஆன் 55:5)

 

இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் மக்கள் வானியலை, ஜோதிடம் மற்றும் சூனியத்துடன் சேர்த்துக் குழம்பி வந்தனர். ஏனென்றால் ஜோதிடம் பார்த்தல் மற்றும் சூனியம் செய்தல் ஆகிய இரண்டுமே இஸ்லாத்தில் தடைவிதிக்கப் பட்டவைகளாகும். வானியல் சாஸ்திரத்தில் இருந்த விஞ்ஞான அறிவு இல்லாத அறிஞர்கள் அதனைப் புரியாமல் புறக்கணித்து வந்தனர்.[1]

 

முதல் பிறை ஒரு இடத்தில் புறக்கண்களால் எவ்வித கருவிகளும் இன்றி காண்பதற்கு அது தோன்றும் மாலை நேரத்தில் அந்த இடத்தில் உள்ள மேகமூட்டம், மற்றும் அந்த இடத்தின் உயரம் போன்ற பல்வேறு காரணங்கள் காரணிகளாக அமைகின்றன. நாம் ஏற்கனவே வானியல் கணக்குகளின் அடிப்படையில் முன்கூட்டியே ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம், பஜ்ர் எனும் அதிகாலை தொழுகை நேரம், சூரிய உதயம், அஸர் நேரம் சூரிய அஸ்தமனம். இஷா எனும் இரவு தொழுகையின் நேரம் போன்றவற்றை கணக்கிட்டு பின்பற்றுவதை அங்கீகரித்துள்ளோம். ஆக இன்றைய காலக்கட்டத்தில் கல்வியில் முன்னேறியுள்ளவர்களில் அனைவருமே இந்த அடிப்படையில் தொழுகைகளின் நேரத்தை அறிவிக்கும் அட்டவணைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இன்று எவரும் சூரியன் மறைவதை கண்ணால் கண்டு அல்லது சாட்சிகளினால் கேட்டு நோன்பைத் துறப்பதோ அல்லது அதிகாலையில் அடிவானத்தின் வெள்ளை கீற்றுகளின் துவக்கத்தை பார்த்து பஜ்ர் தொழுகைக்கு அழைப்பு விடுவதோ இல்லை, மேலும் அஸ்ர் தொழுகையைக் கணக்கிட குச்சி, கம்பு போன்றவற்றினைப் பயன்படுத்தி முடிவு செய்வதில்லை. முன்கூட்டியே கணக்கிடப்பட்ட அட்டவணைகள் பரவலாக அனைவராலும் அங்கீகரிக்கப் பட்ட ஒன்றாகவும் குர்ஆன் மற்றும் ஸுன்னாவிற்கு உட்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

சமீப கால அணுகுமுறைகள்:

 

சில ஆண்டுகளுக்கு முன்பு 1970ன் துவக்கத்தில் சர்வதேச இஸ்லாமிய குழு அமைக்கப்பட்ட்து, இது பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாதில், உலக அளவில் அனைத்து இஸ்லாமியர்களும் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் கூட்டப்பட்டது. இதில் இக்குழு ஸவூதி அரேபியா( மக்கா) வில் பிறையின் நிலையை கணக்கிட்டு அவ்வடிப்படையில் அமைந்த உம்-அல்-குரா காலண்டரை பின்பற்ற பரிந்துரைத்தது. ஆனால் பல முஸ்லிம் நாடுகள் அதைச் செயல்படுத்த முன்வராதது துர்பாக்கியமான ஒன்று எனலாம்.

அக்டோபர் 1992ம் ஆண்டு, ISNA ஃபிக்ஹ் குழு முன்கூட்டியே கணித்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு காலண்டரைப் பின்பற்றுவதைப் பற்றி ஆய்வு செய்தது.

 

அக்குழுவின் உறுப்பினர் மற்றும் பிரபல மார்க்க அறிஞருமான டாக்டர் ஜமால் பதாவி அவர்கள் இது போன்ற காலண்டர் தேவை எனும் கருத்தை கொள்கை அடிப்படையில் தாம் ஏற்றுக் கொண்டாலும் இன்னும் இந்த உம்மத் இதை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் இல்லை. அவர்களுக்கு இது குர்ஆன் மற்றும் ஸுன்னாவுக்கு உட்பட்டது தான் எனும் உண்மையை முறையாக போதிக்கப் பட வேண்டும் என்று கூறினார். இக்குழுவின் இன்னொரு உறுப்பினராகிய டாக்டர் இஹ்ஸான் பாக்பி அவர்கள் இது போன்று முன்கூட்டி கணிக்கும் முறையை கொள்கையளவில் கண்ணால் பார்த்து தீர்மானிக்கும் முறைக்கு பதிலாக ஏற்றுக் கொள்வதாக கருத்து தெரிவித்தார். மேலும் ஷைக் யூஸுஃப் கர்தாவி எனும் பிரபலமான மார்க்க அறிஞரும் இது போன்ற கணிப்பு முறை காலண்டரை ஆதரிக்கின்றார்.

 

வட அமெரிக்க ஃபிக்ஹ் குழுவின் அறிவிப்பு:

 

அண்மையில் வட அமெரிக்க ஃபிக்ஹ் குழுவின் துணிச்சலான மற்றும் தைரியமான ஒர் அறிவிப்பு, இவ்வழியில் உம்மத்தை ஒரே கருத்தில் ஒன்றிணைத்து ஒரு முன்கணிப்பு காலண்டரை சந்திரகணக்கின் அடிப்படையில் ஏற்க வைக்கும் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இம்முயற்சிக்கு ஸவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தொனேஸியா மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள் மற்றும் அந்நாட்டின் மார்க்க அறிஞர்களின் ஆதரவு கிடைத்து இது நடைமுறைக்கு வர வேண்டும் என்று நாம் நன்நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

 

டாக்டர் ஜுல்ஃபிகார் அலி ஷா அவர்களின் ஆக்கம்[2] ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு தனி காலண்டர் எனும் கொள்கையை புறந்தள்ளி உலக அளவில் ஒருங்கிணைந்த ஒரு காலண்டரின் அவசியத்தையும் நிலை நாட்டுகின்றது.

 

பலவற்றிலிருந்து தேர்வு செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன?

 

நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதிக்கப் பட்ட பலவற்றிலிருந்து தேர்வு

செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த பொது அவர்கள் எல்லவற்றிலும் இலகுவானதையே தேர்வு செய்துள்ளார்கள்.

 

அல்லாஹ் நம் மீது இன்று இது போன்ற வசதி வாய்ப்பு மற்றும் விஞ்ஞான அறிவு மற்றும் சாதனங்களை அருள் புரிந்துள்ள போது நாம் அவற்றைக் கொண்டு நமது வாழ்க்கையை மற்றும் வழிமுறைகளை(மார்க்கத்திற்கு முரணில்லாத விதத்தில்) இலகுவானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஹதீஸின் அடிப்படையிலும் நாம் இலகுவானதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணரலாம். ஆகையால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை புறக்கணிக்கக்கூடியவர் எவரும் உளரோ?

 

ஆய்வுக்குறிப்புகள் (References):


[1] Shah, Zulfikar Ali, Astronomical Calculations: A Fiqhi Discussion, Presented before the Fiqh Council of North America and accepted by it on June 10, 2006.

[2] Shah, Zulfikar Ali, “The Unity of Horizons or Variety of Horizons,” Presented before the Fiqh Council of North America and accepted by it on June 10, 2006.

MOIEZ A TAPIA, Chairman Emeritus
Universal Heritage Institute, Miami, FL.

தமிழாக்கம்: இப்னு ஹனீஃப்