தோஹா: சர்வதேச அளவில் மக்கள் பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி, இஸ்லாமிய ஷரீயத் (சட்டங்களின்) அடிப்படையிலான பொருளாதார முறையினால் மட்டுமே சாத்தியம் என்றும் அதனை சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும் என்றும் பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெரூசலத்தின் பாதுகாப்புக்கான ஆறாவது மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்பொழுது மேற்கண்டவாறு கர்ளாவி கோரிக்கை விடுத்தார். முஸ்லிம், கிறிஸ்தவ என்.ஜி.ஓக்களும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுமாக சுமார் 300க்கும் அதிகமானவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
“சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலையானது அதன் மதிப்பீடு அடிப்படையில் அல்லாமல் வட்டி மற்றும் ஊகத்தின் அடிப்படையில் இருப்பதனாலேயே இத்தகைய வீழ்ச்சி அடைந்துள்ளது. மனித இனத்தைச் சுரண்டும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட இக்கொள்கைக்கு நேரெதிரான இஸ்லாமியப் பொருளாதாரத் திட்டத்தினை அமல் படுத்துவதே சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிக்குச் சரியான தீர்வாக அமையும்” என கர்ளாவி கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “மேற்கத்திய பொருளாதார முறை தகர்ந்து கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தில் ஆன்மீகம் மட்டுமின்றி, முழுமையான பொருளாதாரக் கொள்கைகளும் உண்டு. உலகின் எண்ணெய் உற்பத்தியின் பெரும்பாலான பாகங்களும் இஸ்லாமிய நாடுகளிலேயே உள்ளன. தற்பொழுதைய சிக்கலான நிலையைப் புரிந்து உலக மக்களின் துயரத்தைத் தீர்த்துவைக்க, இஸ்லாமியப் பொருளாதார முறையினை நிலைநாட்டுவதற்கு முஸ்லிம்நாடுகள் முன்வர வேண்டும்!” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஜெருசலத்தின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘அல்-குத்ஸ் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூஷன்’ நடத்திய இந்நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல், இரான் ஆன்மீகத் தலைவர் அலி காம்னயீயின் உதவியாளர் அலி அக்பர் விலாயதி முதலானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது