இஸ்லாத்தில் நற்பண்புகளின் முக்கியத்துவம்

ஒழுக்கம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த விஷயமாகும். மரணத்திற்குப் பின்னர் வரும் மறுமை நாளில் இவ்வுலகத்தில் தான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நன்மை, தீமை கணக்கிடப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என நம்பக்கூடிய இறைநம்பிக்கையாளனான ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அவன் கண்டிப்பாக பேணி நடக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும் இது. ஏனெனில்,

“(மக்களை) அதிகமாக சொர்க்கத்தில் புகுத்துவது இறையச்சமும் நற்குணமும் தாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி.

 

இறையச்சமும் நற்குணமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த பிரிக்க இயலாத, இணைபிரியாத தண்டவாளங்களை போன்றவைகளாகும். ஏனென்றால் இறையச்சம் இருக்கின்ற மனிதனிடம் ஒழுக்கக் கேடுகள் இருக்காது; ஒழுக்கக்கேட்டில் திளைத்திருக்கும் ஒரு மனிதன் உண்மையான இறை நம்பிக்கையாளனாக இருக்கவே மாட்டான்.

 

இதையே நபி(ஸல்) அவர்கள் அழகாக,

 

”உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது” என்று கூறுகிறார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி), நூல்: திர்மிதி.

 

எனவே தனக்கு சுவனம் மறுமையில் கிடைக்க வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் தான் செய்யும் செயல்கள் அனைத்தையும் அது நற்செயலா அல்லது தீயசெயலா என அச்செயலை செய்யத் தொடங்குவதற்கு முன் ஆய்ந்து முடிவு செய்த பின்னர் அதனை செய்வது மிகவும் முக்கியமாகும்.

 

செயல்களைப் பொறுத்தவரை அது எத்தகையது என்பதை நிச்சயிப்பதில் உள்ள கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் பார்வையில் தீயதாகத் தெரியும் ஒரு செயல் இன்னொருவர் பார்வையில் தீயதற்றதாகவோ அல்லது நன்மை பயப்பதாகவோ கருத வாய்ப்புள்ளது.

 

எடுத்துக்காட்டாக மது அருந்துவது, சிலர் தங்களின் சமூக அந்தஸ்தக் காட்டுவதாகவும் பெருமதிப்புப் பெற்றுத் தருவதாகவும் கருதுவர் மேலும் சிலரோ சமூகக் குடிகாரர்களாக (Social drinkers) இருப்பது தவறே இல்லை என்றும் அவ்வகையான மது பரிமாறப்படும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது விருந்தோம்புபவரை மனக்கஷ்டப் படுத்தாதிருக்கவும் மது சிறு அளவில் அருந்துவது நல்லது தான் என்றும் சரி காண்பர். ஆனால் இவ்வாறு தொடங்கும் ஒரு பழக்கம் அவர்கள் பெருங்குடிகாரர்களாகி (alcoholics) சமூகச் சீரழிவுக்கு வழிகோல ஏதுவாகும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

 

மேலும் சிலர் புகைபிடிப்பது தங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகவும், நிக்கோட்டினை வடிகட்டி புகைப்பது தீங்கானதில்லை என்றும் கருதுகின்றனர். இது போன்று பல தீய செயல்களை சரி காண்கின்றனர்.

 

ஆனால் இதே செயல்கள் மற்ற சிலருக்கு தவறாகப் படுகிறது. இது போன்ற சில விஷயங்களில் நல்லது தீயதைப் பிரித்தறிய இயலாத போது, தடுமாறாமல் நல்லவை தீயதை பிரித்து அறிந்து கொள்ள இஸ்லாம் அழகாக வழிகாட்டுகிறது.

 

ஒருமுறை நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நல்லவை மற்றும் பாவத்தைக் குறித்து கேட்ட பொழுது,”நற்குணமும், நற்செயலும் நன்மையாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ, எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ, அதுவே பாவமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி); நூல்: முஸ்லிம்

 

சிலர் சர்வ சாதாரணமாக மற்றவர்கள் முன்னிலையில் புகைபிடித்தல் போன்ற செயல்களை செய்வர். இவர்களிடம் இதனைக் குறித்து அறிவுறுத்தினால் கூட அதனைப் பெரிய காரியமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட அவர்களுக்கு நெருக்கமான சிலரை காணும் பொழுது ஒளிந்து கொள்வர். சிலருக்கு அல்லது அவர்கள் விரும்பக்கூடியவர்களுக்கு தாம் செய்யக்கூடிய இந்த காரியம் தெரியக்கூடாது என நினைக்கின்றனர் அதைத்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தீயச் செயல்களை பிரித்தறியும் அளவுகோலாக மிக அழகாக அறிவுறுத்துகின்றனர்.

 

எப்பொழுதாவது சில தருணங்களில் தன்னை கவனிக்கும் சிலரைக் கண்டு தான் செய்யும் சில தவறான செயல்களை மறைக்க முனைபவர்கள் இவை அனைத்தையும் எந்நேரமும் கவனித்துக் கொண்டு ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து விடுகின்றனர். மறுமையில் தன் இறைவனை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு இறைவிசுவாசிக்கு இது ஆகுமான செயலல்ல.

 

இஸ்லாம் நற்குணத்தை முஸ்லிம்கள் தங்களது தலையாய கடமையாக கருத வேண்டும் என போதிக்கின்றது. நற்குணத்தினை பேணும் பண்பு, முஸ்லிமை ஓர் இஸ்லாமியன் என  அடையாளப்படுத்துவதோடு மறுமையில் சுவர்க்கத்தினை எளிதில் பெறக் கூடிய வழியாகவும் அமைகிறது. எனவே ஒழுக்கத்துடன் நற்குணத்தினை பேணி நடந்து சுவனத்துக்குரியவர்களாக மறுமையில் இறைவனை சந்திப்பதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு வல்ல இறைவன் துணை புரிவானாக!

 

கட்டுரையாக்கம்: அபூஇப்ராஹிம்