எப்பொழுதும் போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்தச் சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து சென்றிருக்கின்றது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற மற்றதொரு ரமளானைச் சந்திப்பரா? என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக் கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாதம் முழுமையும் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது. மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களான புத்திசாலிகள், இப்பெறற்கரிய பயிற்சியின் மூலம் கிடைத்த மனக்கட்டுப்பாட்டை மீதம் வரும் தனது வாழ்நாளிலும் முழுமையாகப் பேணுவர்.
ஒவ்வொரு ரமளானின் வருகையிலும் அதன் விடைபெறலுக்கு முன்னரும் எண்ணற்ற அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, இந்தப் புனித மாதம் முழுமையாக ஷைத்தானைக் கட்டிப்போடுவதில் மும்முரம் காட்டும் முஸ்லிம்களில் அநேகர், ரமளானின் விடைபெறலோடு தாம் பேணியக் கட்டுப்பாடுகளுக்கும் விடை கூறி விடுகின்றனர்; தாம் பெற்றப் பயிற்சியைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர்.
மற்றும் சிலர், இயற்கையான வாழ்க்கைக்கு ஒன்றிய வழிமுறைகளைத் தரும் இஸ்லாம் தந்த இப்புனித மாதத்தினை வெறும் சடங்காகப் பேணி, அது விட்டுச் செல்லும் யதார்த்த நினைவுகளையும் பாடங்களையும் உயிரோட்டமில்லாத ஆன்மீக வழிபாடுகளில் தொலைத்து விடுகின்றனர்.
விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.
1 |
இவ்வுலக மாந்தர் சுபிட்சம் பெற படைப்பாளனால் வகுத்தளிக்கப்பட்ட அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் பாடபுத்தகமாம் இறைவனின் வார்த்தைகள், – திருகுர்ஆன் – பட்டுத்துணியால் போர்த்தி பாதுகாப்பாக பரணில் அடுக்கி வைத்திருந்ததைத் தூசி தட்டி, மாதம் முழுதும் வெளிச்சம் காண வைத்துள்ளது. இவ்வுலக மாந்தருக்கான அருள்கொடையாக இறைவனால் இறக்கியருளப்பட்ட இந்த அமானிதத்தைச் சென்று சேராதவர்களுக்குச் சேர்த்து வைப்பது, ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதனை நினைவுறுத்தும் முகமாக, தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டதைப் படித்து விளங்கி, தூதர் வழிகாட்டுதல் படி எட்டாதவர்களுக்குச் சேர்த்து வைத்தல். |
2 |
இறை அளித்த வழிகாட்டுதல் – திருகுர்ஆன் படி வாழ்வை அமைத்துக் கொண்டால் எத்தகைய பராக்கிரமசக்தியையும் இறை உதவியுடன் தகர்த்தெறிய முடியும் என்ற பத்ரின் அறிவிப்பு. |
எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டி திருகுர்ஆனை இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்பு செய்கின்றான்.
இதனைத் தத்துவார்த்தரீதியில் கூட உணர்ந்துக் கொள்ளாத முஸ்லிம்கள், ரமளான் வந்தது; அமல்கள் போட்டி போட்டு செய்தோம். ரமளான் சென்றது; மற்றொரு ரமளானுக்காகக் காத்துள்ளோம் என, எதிர்பார்க்க இயலா எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து, கிடைக்க வேண்டிய வெற்றிகளைக் குழிதோண்டி புதைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
எனவே தான் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரமளான் வந்து விடுகிறது. ஆனால், அதன் பலனான பத்ர் மட்டும் முஸ்லிம்களுக்கு வருவதே இல்லை.
புத்திசாலி, பட்டதை வைத்து சுதாரித்துக் கொள்வான். இதுவரை பட்டதை வைத்து முஸ்லிம்களும் சுதாரித்துக் கொள்வர்.
சுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு 1430 ஆம் ஆண்டு ரமளான், பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும். அதற்கான முன்னேற்பாடுகளில் – திருமறை போதிக்கும் வழியில், தூதர் தம் வழியில் கவனம் செலுத்த இதோ கைவிட்டும் செல்லும் ரமளானாவது முஸ்லிம்களுக்குத் தூண்டுதல் அளிக்கட்டும்!
சுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைபடி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.
அது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரிந்து போராட்டத்தை வாழ்வாக அமைத்துக் கொள்வதாக இருந்தாலும் சரி!
திருமறை இறக்கம் மற்றும் பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈகைப் பெருநாளில், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் கலைந்து மக்களிடையே சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்!
சத்தியமார்க்கம்.காம் வாசக நெஞ்சங்களுக்கும் ஏனைய அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!