பழகு மொழி (பகுதி-9)

யோசிக்கிறேன் ...
Share this:

(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்:

(1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது.

(1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர, ழகர, வரிசைகளில் எந்த எழுத்தும் தமிழ்ச் சொல்லுக்கு முதலில் வாரா.

(1):6:3 யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):6:4 வகர வரிசையில் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

 

(1):7 சொல்லுக்குள் இடையில் வராத எழுத்துகள்:

(1):7:1 ஒரு சொல்லின் இடையில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):7:2 ட், ற் என்னும் இரு எழுத்துகளை அடுத்து எந்த மெய்யும் இடம் பெறாது.

காட்ச்சி, மாட்ச்சி, அதற்க்கு, இதற்க்கு என எழுதுவது பிழையாகும்.

 

(1):8 சொல்லுக்குள் மெய் இரட்டித்து வராத எழுத்துகள்:

பாடம் (1):2:2இல் கூறப்பட்டிருக்கும் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு ஆகியன ஒரு சொல்லின் இறுதியில் அமையாமல், இடையில் அமைந்திருந்தால் அவற்றை, “உடனிலை மெய் மயக்கம்” எனக் கூறுவர்.

காட்டுகள்:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).

இவ்வாறு மெய் இரட்டித்து வருதல், உடனிலை மெய் மயக்கம் ஆகும்.

ர், ழ் ஆகிய இரு எழுத்துகள் உரைநடையில் மெய் இரட்டித்து வாரா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு). “மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு ஆகும் …” – நன்னூல் 110.

 


(1):9 சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்:

(1):9:1 ஆ, ஈ போன்ற ஓரெழுத்து ஒரு சொல்லாகவே அன்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லின் இறுதியில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):9:2 க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

கால்+சிலம்பு என்பதை காற் சிலம்பு என்று பிரித்து எழுதாமல் காற்சிலம்பு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1):9:3 ங், ஞ், ந் ஆகிய மூன்று மெல்லின எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரா (பண்டைய இலக்கியத்தில் அரிதாக இடம் பெற்ற ஞ், ந் ஆகிய இரு எழுத்துகளும் இப்போது வழக்கொழிந்து விட்டன).

மூன்று+நூறு என்பதை முந் நூறு என்று பிரித்து எழுதாமல் முந்நூறு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1)9:4 இடையினத்தில் வ் மட்டும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

அந்த+வாசல் என்பதை அவ் வாசல் என்று பிரித்து எழுதாமல் அவ்வாசல் எனச் சேர்த்து எழுத வேண்டும்.

 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

அதி. அழகு

<முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 | பகுதி - 4 | பகுதி - 5 | பகுதி - 6 | பகுதி - 7 | பகுதி - 8>


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.