(2) சொல்லியல்
சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது “சொல்” என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் “பதம்” எனக் குறிக்கின்றனர். பதம் எனும் வடசொல், தமிழ் இலக்கண நூல்களில் வெகுஇயல்பாக ஆளப் பட்டுள்ளது.
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப – நன்னூல் 128.
(2) 1 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்:
தமிழில் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் நாற்பதுக்கும் அதிகமுண்டு எனக் கூறுவர். அவற்றுள் பல வழக்கொழிந்து போயின. நாம் தெரிந்து கொள்ளத் தக்க ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் சிலவற்றை இங்குக் காண்போம். “ஓரெழுத்து ஒருமொழி அனைத்தும் நெடிலாக அமையும்; குறிலோசை எழுத்துகள் ஓரெழுத்து ஒருமொழியாக வாரா” என்பது தொல்காப்பியரின் துணிபு : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி; குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே – தொல்காப்பியம் – மொழிமரபு 10,11.
ஆனால், நாம் பாடம் (1):1:1:3இல் படித்த அகச்சுட்டு எழுத்துகளான அ,இ,உ ஆகிய மூன்றும் வினா எழுத்தான ‘எ’வும் குறில்களே. தனிச் சொல் எனும் தகுதி பெறாமல் இடைச் சொல் வகையைச் சேர்ந்திருப்பதால் அவை ஒதுக்கப் பட்டன போலும். எனினும், தனிச் சொல்லாகவே அமையும் இரு குறில் எழுத்துகளும் உள:
(2) 1:1 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் – குறில்:
து = சாப்பிடு எனும் பொருள் தரும் ஏவல் வினை
நொ = வருந்து (ஏவல்)
அ+சொல் = அச்சொல் (சுட்டு)
இ+பாடம் = இப்பாடம் (சுட்டு)
உ+பக்கம் = உப்பக்கம் (பின் பக்கம் – சுட்டு)
எ+நூல் = எந்நூல்? (வினா)
மேற்காணும் ஓரெழுத்து அகச்சுட்டு/வினா ஒருமொழியின் புறச்சுட்டுச் சொற்கள்: அந்த, இந்த, உந்த, எந்த ஆகும்.
(2) 1:2 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் – நெடில்:
ஆ = பசு
ஈ = பறக்கும் பூச்சி; ஈ=வழங்கு (ஏவல் வினை)
ஊ = ஊன்/இறைச்சி
ஏ = அம்பு (கருவி)
ஐ = ஐந்து (எண்: ஐ+பால்=ஐம்பால்)
ஓ = மதகில்/அணையில் நீரைத் தடுத்து வைக்கப் போடும் பலகை
கா = காத்தல் (வினை); கா=தோட்டம்/சோலை: பூ+கா = பூங்கா (பெயர்)
கை = கரம் (சினை/உறுப்பு)
கோ = மன்னன்
கௌ = கவ்வு (ஏவல்)
சா = சாவு
சீ = அழி/விலகு/நீங்கு (ஏவல்)
சே = செம்மை (பண்பு)
தா = கொடு (ஏவல்)
தீ = நெருப்பு
தை = தை(காலம்); தை = தையல் செய் (ஏவல்)
நா = நாக்கு
நீ = நீ (முன்னிலைச் சுட்டு)
பா = பாடல்
பூ = மலர்; பூ = பூமி/உலகு
போ = செல் (ஏவல்)
பை = கைப்பை/பணப்பை
மா = மாம்பழம்; மா = பெரிய (பண்பு)
மீ = மேல்
மை = மசி
வா = அழைப்பு (ஏவல்)
வை = வை (ஏவல்)
வௌ = திருடு (ஏவல்)
மீக்கூறிய 28 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களுள் கை, சீ, தா, தீ, தை, நீ, பூ, போ, பை, மை, வா, வை ஆகியன நாம் உரைநடைப் பேச்சிலும் எழுத்திலும் இயல்பாகப் பயன்படுத்துபவை. மற்றவை பா எழுதுவதற்குப் பயன் படுவனவாகும்.
இனி, இன்னொன்றும் வழக்கில் வரக்கூடும்: “ஆடி மாதம் ஆற்றில் வெள்ளம் வந்தால் ஓப் போடு!”
– தொடரும், இன்ஷா அல்லாஹ்.
<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10 |பகுதி-11|