உடனடித் தூதுவன் (Instant Messenger) வரமா? சாபமா?

வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் உலகில் தொலை தொடர்பு வசதிகள் மிக எளிதாகி வருகின்றன. இன்று பூமியின் ஓரிடத்தில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டிலோ அல்லது கண்டத்திலோ இருக்கும் இன்னொருவரிடம் கண்ணிமைக்கும்பொழுதில் பலவகை நவீனக் கருவிகளின் மூலம் தொடர்பு கொள்ள எளிதில் இயலும். இவ்வகை நவீன வசதிகளில் மிக மிக எளிமையானது இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் உடனடித் தூதுவன் எனப்படும் Instant Messenger ஆகும்.

அரட்டை(Chat) எனும் வசதியைக் கொண்டு செயல்படும் தூதுவன் சேவைகள் பொழுதுபோக்காக இருந்த நிலை மாறி, இப்போது வணிக நிறுவனங்களில் முக்கிய தகவல் தொடர்புக்கான கருவியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த அரட்டை சேவையை இன்று யாஹூ, MSN, கூகிள், AOL, mIRC, ICQ போன்ற பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்தச் சேவையை பயன்படுத்த இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும். இந்த சேவையைத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இவை இலவசமாகவே அளிக்கப்பட்டு வருகின்றன. சற்று காலம் முன்னர் வரை இவ்வகைத் தூதுவன் சேவையை பலரும் வீண் அரட்டை அடித்து வெட்டிப் பொழுது போக்க மட்டுமே பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், இணைய இணைப்பும் சிறிதளவு நேரமும் இருந்தால் இணையத்தின் உதவியால் ஒரு நிறுவனத்தையே நடத்த முடியும் இந்தக் காலத்தில், இந்த உடனடித் தூதுவன் சேவை, சிறு மற்றும் பெரும் வணிக நிறுவனங்களின் வணிக ரீதியிலான பேச்சுவார்த்தைகள், ஆரோக்கியமான கருத்து பகிர்வுகள், கோப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம் போன்ற பயனுள்ள செயல்களுக்காக அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

இவ்வகைச் சேவைகளின் முக்கியக் கவர்ச்சி இவை இலவச சேவைகள் என்பதேயாகும். இணைய இணைப்பு மட்டும் இருந்தால், உலகின் எப்பகுதிக்கும் வியாபார நிமித்தமாக எவருடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடிவதால், இவை தொலைபேசி அழைப்புகள் அல்லது பயணச் செலவுகளைப் பெருமளவு குறைக்கின்றன.

தூதுவன் சேவையில் உரையாடும் இருவர் வெறும் செய்திகள் பரிமாறுவது மட்டுமல்லாது தங்கள் வியாபாரத்துக்குத் தேவையான கோப்புகளை எளிதாக உடனடியாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இந்த நன்மை இருப்பதால் உலகின் பல நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டுள்ள பெரும் நிறுவனங்கள் சில இது போன்ற சேவைகளைத் தமது நிறுவன அளவில் அறிமுகப்படுத்தி தமது பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தியுள்ளன.

இந்த தூதுவன் சேவையை அளிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடும் போட்டி காரணமாக இந்நிறுவனங்கள் தங்கள் சேவையில் புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. குரல் மற்றும் படக்காட்சி மூலமும் தற்போது உரையாடல் சாத்தியமாவதுடன், ஒருவரது கணினியை இன்னொருவர் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்த நுட்பம் தற்போது மேம்பட்டுள்ளது.

இந்த அளவுக்கு நன்மைகள் கொண்டுள்ள தூதுவன் சேவையில் தீமைகளே இல்லையா என நீங்கள் வியக்கலாம். நுட்பம் ஒருபுறம் மேம்பட்டு நன்மைகள் அதிகரித்து வந்தாலும் இன்னொரு புறம் இதனைத் தீயவழியில் பயன்படுத்துவோரும் இருப்பதால் இதனால் சில தீமைகளும் விளைகின்றன. கோப்புகளைப் பரிமாறும் போது வைரஸ்கள் அடங்கிய கோப்புகளைப் பரப்பும் சிலர் மிக எளிதாகத் தங்களின் தீய செயலுக்கு வழி கண்டுகொள்கின்றனர்.

அதேபோல் ஒழுக்கக்கேடான செயல்கள் பலவற்றுக்கு இதில் இருக்கும் கட்டற்ற கட்டமைப்பையும் சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆபாசப்படங்கள், படக்காட்சிகள் இவற்றைப் பரிமாறுவதும் எளிதாகவே உள்ளது. நிறுவன அளவில் இவற்றுக்குத் தடை விதித்திருப்பதால் இவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த இயன்றாலும், தனிமனித ஒழுக்கமும் இறையச்சமும் இருக்கும் ஒருவர் இதனைத் தீய வழிகளுக்குப் பயன்படுத்துவதிலிருந்து தன்னைத் தற்காத்து நல்ல வழிகளில் பயன்படுத்தி சிறந்த பலன்களை அடைவார்.

இவ்வகைச் சேவைகள் நல்லவழியில் பயன்படுத்தும் போது இவை அளப்பரிய நன்மைகளைத் தரவல்லவை என்பதை எவரும் மறுக்க இயலாது.

ஆக்கம்: அபூஷைமா