சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 98

Share this:

98. பரங்கியரின் வட சிரியாப் படையெடுப்புகள்

ம்லா போர் நிகழ்வுற்ற அதே காலகட்டத்தில் வடக்கே, சிரியாவில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றைப் பார்த்துவிடுவோம். ராஜா பால்ட்வின் பைஸாந்தியக் கூட்டணியுடன் எகிப்தின் மீது படையெடுக்கத் தாம் போட்ட திட்டம் அல்ஸாஸின் ஃபிலிப்பினால் பிசுபிசுத்துப் போனதும் வேறொரு காரியம் செய்தார்.

‘வந்தது வந்தாய். தெற்கே எகிப்துக்குச் செல்ல முடியாது என்று மறுத்துவிட்டாய். வடக்கே சிரியாவில் உள்ள முஸ்லிம்களையாவது தாக்கி உதவு’ என்று ராஜா பால்ட்வின் அல்ஸாஸின் ஃபிலிப்பிடம் கோரிக்கை வைத்தார். ஸலாஹுத்தீன் அய்யூபி ரம்லாவுக்குப் படையெடுக்கும் முன் நிகழ்ந்தது இது. எகிப்தில் அவர் பிற விவகாரங்களில் மும்முரமாக இருந்ததாலும் அதனால் அவரால் சிரியாவுக்கு உடனே விரைய முடியாது என்பதாலும் ஏதேனும் ஒரு வகையில் பயனீட்ட முனைந்தனர் பரங்கியர்கள். வேறு வழியின்றி இந்தக் கோரிக்கைக்குத் தலையசைத்தார் ஃபிலிப். 573 ஹி ரபீயுல் ஆகிர் / கி.பி. 1177 அக்டோபர் இறுதியில் கிளம்பினார். 100 குதிரைப்படையினரையும் 2000 காலாட்படையினரையும் ராஜா பால்ட்வின் அவருடன் அனுப்பி வைத்தார். அங்கே வடக்கில் பெருந்தலைகளான மூன்றாம் ரேமாண்ட், மூன்றாம் பொஹிமாண்ட், அந்தாக்கியாவின் இளவரசர், திரிப்போலியின் கோமான் ஆகியோர் காத்திருந்தனர். அவர்களுடன் இணைந்தது அல்ஸாஸ் ஃபிலிப் தலைமையில் வந்த படை.

படையின் ஒரு பிரிவு முதலில் ஹும்ஸு நகரைத் தாக்கத் தொடங்கியது. ஆனால் அங்கு முஸ்லிம் படையினரிடம் அது சிக்கி, சின்னாபின்னமாகி, தங்களிடமிருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்தது. ஃபிலிப்பும் மூன்றாம் ரேமாண்ட்டும் இணைந்திருந்த மற்றொரு பிரிவு ஹும்ஸு நகருக்கு வடக்கே இருந்த ஹமாவை முற்றுகை இட்டது. அங்கு ஆட்சியாளராக இருந்தவர் ஸலாஹுத்தீனின் தாய்மாமன் ஷிஹாபுத்தீன் மஹ்மூது. எதிரிகள் முற்றுகையிட்ட அந்நேரத்தில் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். உக்கிரமாகத் தாக்குதலைத் தொடங்கியது பரங்கியர் படை. நகரைக் கைப்பற்றும் அளவிற்கும் அது முன்னேறியது. ஆனால் நகர மக்கள் மனவுறுதியுடன் எதிர்த்து நின்றனர். அண்மைப் பகுதியில் ஸலாஹுத்தீன் நிலை நிறுத்தியிருந்த இராணுவத்தின் படைப்பிரிவு ஒன்று ஸைஃபுத்தீன் அலீ என்பவரின் தலைமையில் உதவிக்கு வந்து சேர , தீவிரமானது சண்டை. முஸ்லிம்களுக்கு வாழ்வா, சாவா என்ற போரட்டமாக அது அமைந்துவிட்டதால் வீரியமானது போர். நான்கு நாள்கள் இரவும் பகலும் நீடித்தது அது. இறுதியில் எதிரிகள் பலரைக் கொன்று பரங்கியர்களை நகரத்திலிருந்து துரத்தி அடித்த பிறகே முஸ்லிம்கள் ஓய்ந்தனர். ஆனால் அவர்களின் அந்த வெற்றிக் களிப்பின் மீது வேறொரு துயரம் படர்ந்தது. நோயுடன் போராடிக்கொண்டிருந்த ஸலாஹுத்தீனின் மாமா ஷிஹாபுத்தீன் மரணமடைந்தார். அதற்கு மூன்று நாள் முன் அவருடைய மகன் இள வயதில் மரணமடைந்திருந்தான்.

தோல்வியும் ஏமாற்றமுமாக அங்கிருந்து கிளம்பிய பரங்கியர்கள் மேலும் வடக்கே நகர்ந்தனர். அங்குள்ள ஹரிம் நகரை முற்றுகையிட்டனர். அங்கு அவர்களை அழைத்தவர் அந்தாக்கியாவின் ஆட்சியாளராக இருந்த மூன்றாம் பொஹிமாண்ட்.

oOo

சிரியாவில் ஒரொன்தீஸ் ஆற்றுக்குக் கிழக்கே அந்தாக்கியாவிலிருந்து சற்றொப்ப 18 மைல் தொலைவில் உள்ளது ஹரிம் நகரம். அலெப்போவிலிருந்து மேற்கே பயணித்தால் 34 மைல். அந்தாக்கியாவின் மூன்றாம் பொஹிமாண்ட், அதைத் தாக்குவோம்; கைப்பற்றுவோம்; உதவுங்கள் என்று அல்ஸாஸின் ஃபிலிப்பிடம் கோர, ‘அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்’ என்று வாக்குறுதி அளித்தார் ஃபிலிப். அவர்களுடன் மூன்றாம் ரேமாண்டும் இணைந்துகொண்டார். ஹரிம் நகரை முற்றுகையிட்டார்கள் அவர்கள்.

நூருத்தீனின் மகன் அஸ்-ஸாலிஹின் பாதுகாவலராக, அலெப்போவின் அரசியலை ஸலாஹுத்தீனுக்கு எதிராக நிகழ்த்திக்கொண்டிருந்தாரே குமுஷ்திஜின், அவர் ஹரிம் நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், இறைவன் நிர்ணயித்திருந்த விதி அத்தனை ஆண்டுகாலம் அலெப்போவில் கோலோச்சிவந்த குமுஷ்திஜினை அவரது கடைசிக் கட்டத்திற்கு நகர்த்தியிருந்தது- அதுவும் கோரமாக. அதன் விளைவாக அலெப்போ-ஹரிம் நகரங்களுக்கு இடையே குளறுபடியில் சிக்கியிருந்தது நிர்வாகம்.

அலெப்போவில், நூருத்தீனின் ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவராக அபூஸாலிஹ் இப்னு அல்-அஜாமி என்றொருவர் இருந்தார். நூருத்தீனின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய மகன் ஸாலிஹின் ஆட்சியிலும் அபூஸாலிஹ் செல்வாக்குடன் முன்னணி வஸீராகப் பதவி வகித்தார். அரசாங்கத்தில் அவருக்கு பிரத்யேகப் பிடிமானமும் இருந்தது. துணிச்சலும் அதிகம். அவருக்கு அலெப்போவில் ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர் . குமுஷ்திஜினின் அரசியலாலும் இதர நடவடிக்கைகளினாலும் அவரிடம் ஒவ்வாமையும் பொறாமையும் கொண்டவர்களெல்லாம் அபூஸாலிஹுடன் இணையத் தொடங்கினர். மெதுமெதுவே அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அலெப்போவில் அவருடைய கருத்துகளுக்கும் கட்டளைகளுக்கும் மக்கள் கட்டுப்பட்டனர். நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்கத் தனியாளாக ஆனார் அபூஸாலிஹ்.

ஒரு நாள் அபூஸாலிஹ் பள்ளிவாசலில் இருந்தபோது, சில அஸாஸியர்கள் நுழைந்தனர்; தாக்கினர்; அவரைக் கொன்றனர். கொலைஞர்களின் குறுவாளுக்கு இரையாகிப் போனார் அபூஸாலிஹ். அவரது மறைவிற்குப் பிறகு, குமுஷ்திஜினின் நிலைமை அலெப்போவில் வலிமையடைந்தது. அவரது செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு இன்றிப் போனது. மக்கள் மத்தியில் அந்தப் படுகொலைக்குக் காரணம் குமுஷ்திஜின், அவர்தாம் அஸாஸியர்களை ஏவியிருக்கிறார் என்ற பேச்சு எழுந்து, உயிர்பெற்று, உறுதியடைந்தது.

அபூஸாலிஹின் ஆதரவாளர்கள் இதை இளம் மன்னர் அஸ்ஸாலிஹின் செவிக்கு எடுத்துச் சென்று, ‘நீர் பலவீனமான ராஜா; உமக்கென்று எந்த அதிகாரமும் இல்லை; குமுஷ்திஜினே உம் மீது ஆதிக்கம் செலுத்துகிறார், அவமதிக்கிறார், சிறுமைப்படுத்துகிறார்; இப்பொழுது உம்முடைய வஸீரையும் கொன்று விட்டார்’ என்று குற்றம் சாட்டினர். அவர்கள் அவ்விதம் ஓத ஓத வெகுண்டெழுந்த அஸ்-ஸாலிஹ் தமது பாதுகாவலராக விளங்கிய குமுஷ்திஜினைக் கைது செய்து சிறையில் தள்ளினார்.

ஹரிம் கோட்டை குமுஷ்திஜின் வசம் இருந்தது. அதை அவருக்கு மானியமாக வழங்கியிருந்தார் இளம் மன்னர் ஸாலிஹ். குமுஷ்திஜின் சிறையில் என்ற செய்தி ஹரிமில் பரவியதும் அங்கிருந்த அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து, அலெப்போவிற்கு எதிராகத் திரும்பி, கோட்டைச் சுவர்களுக்குப் பின்னால் புகுந்து தங்களைப் பலப்படுத்திக் கொண்டனர். அவர்களுடன் சண்டையிட்டு அதைப் பிடுங்குவது எளிதன்று என்பதாலோ என்னவோ அஸ்-ஸாலிஹ் வேறொரு காரியம் செய்தார். ‘கோட்டையை எம் வசம் ஒப்படைக்குமாறு உன் ஆதரவாளர்களுக்குக் கட்டளையிடு’ என்று கூறி, காவலர்கள் சூழ குமுஷ்திஜினை அங்கு அனுப்பி வைத்தார்.

குமுஷ்திஜினும் அதற்கு அடிபணிந்து அப்படியே செய்தார்தாம். ஆனால், அங்கிருந்தவர்கள் அதைச் செவிமடுக்கவுமில்லை; அதற்குக் கீழ்ப்படியவும் இல்லை. அந்தளவு அவர்களுக்கு குமுஷ்திஜின் மீது விசுவாசம் மிகைத்திருந்தது. கடைசி வரை அவர்கள் ஒத்துவரவில்லை என்றானதும் பார்த்தார் ஸாலிஹ். ;அவர் கட்டளையிட, குமுஷ்திஜினின் ஆதரவாளர்களின் கண்ணெதிரே அவரை காடி, சுண்ணாம்புக் கலவையில் அமிழ்த்தி சித்திரவதை செய்தனர். பின்னர் மரப்பலகைகளுக்கு இடையில் வைத்து நெரித்தனர். வில்லின் நாணிலால் அவரது கழுத்தை அறுத்துக் கொன்று, கோட்டைக்கு வெளியே தலைகீழாகத் தொங்கவிட்டனர்.

அலெப்போ ஸலாஹுத்தீன் வசமாகாமல் தந்திரங்கள் அத்தனையையும் பிரயோகித்து நகரையும் நூருத்தீனின் மகன் அஸ்-ஸாலிஹையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குமுஷ்திஜின் இவ்விதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரங்களெல்லாம் பரங்கியர்களுக்குத் தெரிய வந்ததும் ஹரிமைக் கைப்பற்ற இதுதான் சரியான தருணம் என்று அவர்களுக்குத் தோன்றியது. உடனே உதவிக்கு வர இயலாத தூரத்தில் ஸலாஹுத்தீன் எகிப்தில் இருக்கிறார்; ஸாலிஹோ சிறுவன்; பொடியன்; நமது பெரும் படையை எதிர்க்க சக்தியற்றவன்; ஊரோ இரண்டுபட்டுக் கிடக்கிறது. எனும்போது கொண்டாட்டம்தான் நமக்கு இனி என்று புறப்பட்டு வந்தார்கள்; முற்றுகையிட்டார்கள். ஆனால் ஹரிம் நகரின் மக்களோ தங்களது வேற்றுமையை மறந்துவிட்டு, பொது எதிரியான பரங்கியர்களின் முற்றுகையை எதிர்த்து நின்றனர்.

பரங்கியர்களின் முற்றுகையைக் கேள்விப்பட்டதும் அலெப்போவைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அண்மையில் இருந்த கிறிஸ்தவப் பகுதிகளில் தாக்குதல்களைத் தொடங்கினர். அஸ்-ஸாலிஹ் இஸ்மாயீல் அலெப்போவிலிருந்து ஒரு படைப்பிரிவை ஹரிமுக்கு அனுப்பி வைத்தார். அது கிறிஸ்தவப் படைகளின் வரிசைகளை ஊடுருவிச் சென்று, ஹரிமில் உள்ள நகரக் காவல் படையுடன் இணைந்தது. ; பரங்கியர்களை எதிர்த்து நின்றது. பரங்கியர்களிடம் வீழ்வதை விட ஸாலிஹிடம் இணைவதே சரி என்று முடிவெடுத்த கோட்டைக் காவலர்கள் ஸாலிஹிடம் கோட்டையை ஒப்படைத்தனர்.

இந்நேரத்தில்தான் அங்கு ஸலாஹுத்தீன் எகிப்திலிருந்து ஃபலஸ்தீனுக்குப் படையுடன் கிளம்பினார்; ரம்லா சென்றடைந்தார். அதையறிந்த பரங்கியர்களுக்கு அலெப்போ ஸலாஹுத்தீனை உதவிக்கு அழைக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அங்கு ரம்லா போரில் ஸலாஹுத்தீனுக்குத் தோல்வி ஏற்பட்டு, அவர் எகிப்து திரும்பிவிட்டதால் அடுத்த நான்கு மாதம் இங்கு ஹரிம் முற்றுகை தொடர்ந்தது.

இறுதியில் இளம் மன்னர் மாலிக் அஸ்-ஸாலிஹ் பரங்கியர்களிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்தினார். முற்றுகையைத் தளர்த்துங்கள். இல்லையெனில் நகரை ஸலாஹுத்தீன் வசம் ஒப்படைத்துவிடுவேன் என்று எச்சரிக்க, பரங்கியர்கள் பின்வாங்கினர். அவர்களது நான்கு மாத முற்றுகை தோல்வியில் முடிவடைந்தது.

அதே நேரம் அங்கே தம் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து, தமது இழப்புகளை ஈடுசெய்துவிட்டு, 1178ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எகிப்திலிருந்து சிரியாவுக்குக் கிளம்பினார் சுல்தான் ஸலாஹுத்தீன். காரணம் சிரியாவில் அலெப்போ மட்டுமின்றி டமாஸ்கஸும் அவருக்குக் கவலையை ஏற்படுத்தியிருந்தது.

அது–

(தொடரும்)


Share this: