97. ரம்லா போர்
1177ஆம் ஆண்டு. டிசம்பர் மாதத் தொடக்கம். கெய்ரோ நகரின் உயர்ந்தோங்கிய வாயில்களில் தூதுவர்கள் மூச்சிரைக்க வந்து நின்றனர். செய்தி ஒன்றை உரத்து அறிவித்தனர்.
‘சபிக்கப்பட்ட பரங்கியர்களுக்கு எதிராக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்திருக்கின்றான்! சுல்தான் ஸலாஹுத்தீனும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்கின்றார்கள். போரில் கைப்பற்றிய செல்வங்களுடன் அவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள்.’
அதைக் கேட்டுக் கொண்டாட்ட மன நிலைக்குச் சென்றனர் மக்கள். காலில் செய்திகளைக் கட்டிக்கொண்டு பறந்தன அஞ்சல் புறாக்கள். ஆனால் அறிஞர் இமாதுத்தீன் இஸ்ஃபஹானி மட்டும் அச்செய்தியின் உட்கருத்தைச் சரியாக யூகித்து விட்டார். அரசாங்கத்தின் மொழிநடையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அவருக்கு சுல்தானின் பாதுகாப்புக் குறித்து அதீதப் புகழ்ச்சியுடன் வெளியான அறிவிப்பில் ஒளிந்திருந்த மெய்த்தகவல் புரிந்துவிட்டது.
oOo
ராஜா பால்ட்வின் பைஸாந்தியக் கூட்டணியுடன் எகிப்தின் மீது படையெடுக்கத் தாம் போட்ட திட்டம் அல்ஸாஸின் ஃபிலிப்பினால் பிசுபிசுத்துப் போனதும் அவரை சிரியாவின் வடக்குப் பகுதிகளுக்கு, முஸ்லிம்களின் வேறு இரு நகரங்களைத் தாக்க, அனுப்பிவிட்டார். கூடவே கணிசமான எண்ணிக்கையில் பால்ட்வினின் பரங்கியர் படையும் சென்றது. கெய்ரோவிலும் அலெக்ஸாண்டிரியாவிலும் தமீதாவிலும் தற்காப்புக் கட்டுமானங்களில் மும்முரமாக இருந்த சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு அச்செய்திகளெல்லாம் உளவர்கள் மூலம் வந்தபடி இருந்தன. கோமான் ஃபிலிப்பின் கோக்குமாக்கான செயல்களும் கலைந்து போன கூட்டணியும் ஒருபுறம் அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டன என்றால், இப்பொழுது பரங்கியர்களின் படை பெருமளவில் வடக்கே சென்று, ஜெருசலத்திற்கான பாதை அகலத் திறந்து கிடந்தது அவரை வரவேற்பதைப் போல் இருந்தது.
ஸலாஹுத்தீன் தமக்கான அடிப்படை இலட்சியமாக நிர்ணயித்துக்கொண்டது சிலுவைப்படையினருடன் புனிதப் போர்; ஜெருசலம் மீட்பு. அதற்கான நல்வாய்ப்பு ஒன்று கண்ணெதிரே தெரிந்தால் என்ன செய்வார்? ஜெருசலம் ராஜ்ஜியத்திற்கு எதிராகத் தமது படையெடுப்பைத் தொடங்க நினைத்தார். ஆனால் அது முழு அளவிலான போராகத் திட்டமிடப்படவில்லை. ‘செல்வோம்; தாக்குவோம்; அவர்களது உடைமைகளைக் கைப்பற்றுவோம். வடக்கே சிரியாவுக்கு உபத்திரவம் அளிக்கச் சென்றுள்ள பரங்கியர் படைக்கான எதிர் நடவடிக்கையாகவும் இருக்கும். புனிதப் போருக்கான நமது ஆயத்தத்தையும் உறுதிப்பாட்டையும் அவர்களுக்கு உணர்த்தும்’ என்பதைப் போன்ற சமிக்ஞையாக, ஒரு முன்னோடி முயற்சியாக அதைக் கருதினார்.
வெள்ளிக்கிழமை, 3 ஜமாதுல் அவ்வல், 573 / 28 அக்டோபர், 1177. சுல்தான் ஸலாஹுத்தீன் 20,000 குதிரை வீரர்களுடன், பேரார்வத்துடன் கெய்ரோவிலிருந்து கிளம்பினார். அதுவரை நிகழ்ந்திருந்த சிறு சிறு மோதல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஸலாஹுத்தீன் சிலுவைப்படையினருக்கு எதிராக நிகழ்த்திய முதல் பெரும் படையெடுப்பு அது. கெய்ரோவின் வடகிழக்கே மத்திய தரைக்கடல் கரையில் உள்ள அல்-அரீஷ் நகரில் தமது தளவாடப் படையை நிறுத்திவிட்டு மற்ற படையினருடன் கடலோரமாக ஃபலஸ்தீனை எட்டினார் ஸலாஹுத்தீன். அவரது இலக்கு கஸ்ஸா என்றே பரங்கியர்கள் நினைத்தார்கள். அதனால், கஸ்ஸா கோட்டையில் டெம்ப்ளர்களின் வலிமையான காவல் இருந்தபோதும் மேற்கொண்டும் உதவிப்படையைக் கோர அவர்கள் முனைந்தனர். ஆனால் ஸலாஹுத்தீன் கஸ்ஸாவைத் தவிர்த்துவிட்டு அஸ்கலான் நகருக்கான பாதையில் முன்னேறினார்.
ஜெருசலத்தின் தென்மேற்கே ஃபலஸ்தீனின் கால்மாட்டில் அமைந்துள்ளது பண்டைய துறைமுக நகரமான அஸ்கலான், ஒருவகையில் அதுதான் ஜெருசலத்திற்கான நுழைவாயில். சிலுவைப்போரின் போது 1153ஆம் ஆண்டு வரை எதிர்த்து நின்று பரங்கியர்களிடம் வீழ்ந்த கடைசிக் கடலோர நகரம் அது. அதன் பின் அங்குக் கிறிஸ்தவர்களின் குடியிருப்புகள் பெருகி, சிலுவைப்படையினரின் ஆக்கிரமிப்பிற்குள் வந்துவிட்டது அஸ்கலான்.
ஸலாஹுத்தீன் படையுடன் கிளம்பி வரும் செய்தி ஜெருசலத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. பதற்றமடைந்தார் ராஜா நான்காம் பால்ட்வின். ரேனால்டையும் பெத்லஹெமின் பேராயரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு 500 சேனாதிபதிகளைத் திரட்டிக்கொண்டு அஸ்கலானைத் தற்காக்க விரைந்து வந்து சேர்ந்தார் அவர். போரிடும் அளவிற்குப் போதிய படை பலம் இல்லாததால் அந்தச் சிறு படைத் தொகுதி ஸலாஹுத்தீனைத் தாக்கத் துணியவில்லை. நகரின் சுவர்களுக்குள் பின்வாங்கிப் பாதுகாப்புடன் கோட்டைக்குள் பதுங்கியது. ஸலாஹுத்தீனும் அவர்களுடன் மோதலைத் தவிர்த்துவிட்டு, சிறு படையினரை அவர்களைச் சுற்றி வளைத்து நிறுத்தினார். சிலுவைப்போர் வீரர்கள் சிலர் மட்டும் கைதாயினர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
அங்கிருந்து முன்னேறிய ஸலாஹுத்தீனின் படை ரம்லா நகரை அண்மியது. அது அக்காலத்தில் ஃபலஸ்தீனத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்று. அங்கிருந்து ஜெருசலம் இருபத்து மூன்று மைல் தொலைவில்தான் இருந்தது. ஸலாஹுத்தீன் அந்தளவு நெருக்கத்தில் வந்துவிட்ட செய்தி ஜெருசலத்தில் இருந்த மக்களைப் பெரிதும் அச்சுறுத்தியது. நகரின் கோட்டைகளும் முதலாம் சிலுவைப் போருக்குப் பின் பராமரிப்பின்றி வலிமை இழந்திருந்ததால் அது அவர்களுக்கு மேலும் கவலையை அதிகரித்தது. ஜாஃபா வாயிலில் இருந்த தாவீத் கோபுரம் மட்டுமே நம்பிக்கை அளித்ததால் அங்குத் தஞ்சம் புக முடிவெடுத்தார்கள்.
ஜெருசலப் படையின் பெரும் பகுதி வடக்கிலும் மற்றவர்களுடன் அமால்ரிக் அஸ்கலானிலும் இருந்ததால், நகரின் பொறுப்பை ஏற்றிருந்த பேராயருக்குக் கோட்டைச் சுவர்களைப் பாதுகாக்க , பெண்களையும் உதவிக்கு அழைக்க வேண்டிய நிலை. தம்மால் ஆனதைச் செய்துவிட்டு, புனித ஜான் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம், ‘தேவனிடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
அங்கு ரம்லாவில் ஸலாஹுத்தீனின் படை டெல் அஸ்-சஃபியா (Tell as-Safiyah) ஆற்றை எதிர்கொண்டது. இதுவரை குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எதுவும் பரங்கியரிடமிருந்து வராததால் கவலையின்றி அழுத்தம் குறைந்திருந்த முஸ்லிம் படையினர் ஸலாஹுத்தீனின் அனுமதியுடன் ஆயுதங்களை இறக்கிவிட்டு, கவசங்களைக் கழற்றி வைத்தனர். படையெடுப்பிற்கான வெகுமானங்களைத் தேடிக் கலைந்தனர். அந்தத் தளர்ச்சி, அந்த கவனக் குறைவு ஸலாஹுத்தீனுக்கும் முஸ்லிம் படையினருக்கும் பேராபத்தை ஏற்படுத்திவிட்டது.
ராஜா பால்ட்வின் சிறு வயதினன். தொழுநோயால் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று ஸலாஹுத்தீன் அந்த ராஜாவைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். ஆனால், பால்ட்வினுக்கோ தாம் நோயுற்றிருந்த போதும் தம் நிலங்கள் பறிபோவதை வெறுமே வேடிக்கை பார்க்காமல் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தம் மக்களைத் தம்மால் பாதுகாக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. எனவே, ஸலாஹுத்தீனை எதிர்த்து, தாமே முன்நின்று வழிநடத்தித் தாக்குதல் தொடுக்க அவர் முடிவெடுத்தார். ஆனால் அவரது படையோ ஹாஸ்பிடல் வீரர்கள் பலருடன் வடக்கே சென்றிருந்தது. என்ன செய்வது? பால்ட்வின் தாமிருந்த பகுதியில் எவ்வளவு படைகளைத் திரட்ட முடியுமோ அவ்வளவையும் அவசரமாகத் திரட்டினார். ‘அரியர் பான்’ (arrière-ban) எனப்படும் அரசப் பிரகடனம் வெளியானது. சூழ்நிலை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கான தெளிவான அபாய சமிக்ஞை ‘அரியர் பான்’. நிலப்பிரபுகள், துணை நிலப்பிரபுகள், போருக்குத் தகுதியான ஆண்கள் அனைவரும் உடனே போருக்கு வருமாறு விடுக்கப்படும் அவசர அழைப்பு அது. ஸலாஹுத்தீனின் படையெடுப்பால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளைச் சேர்ந்த பிரபுகள் அந்த அழைப்புக்குக் கட்டுப்பட்டு பால்ட்வினுடன் இணைய விரைந்தனர்.
பரங்கியர்கள் ஸலாஹுத்தீனின் இந்தப் படையெடுப்பை எவ்வளவு அபாயகரமாகக் கருதித் தீவிரமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு மற்றொரு சான்று, மெய்ச் சிலுவை. மெய்ச் சிலுவையின் முக்கியத்துவத்தையும் பரங்கியர்களின் ஆன்ம பலத்திற்கும் ஆக்ரோஷத்திற்கும் அது கிரியாஊக்கியாக அமைவதையும் முன்னரே பார்த்திருக்கின்றோம். அதிலுள்ள மரத்துண்டு இயேசு கொல்லப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி என்பது அனைத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ராஜா பால்ட்வினுடன் வந்திருந்த பெத்லஹேமின் பேராயர் அந்த மெய்ச் சிலுவையையும் தம்முடன் சுமந்து வந்திருந்தார். ஜெருசல ராஜ்ஜியத்திற்கு ஆபத்து ஏற்படும்போதெல்லாம் போருக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த புனிதச் சின்னம் ஏறக்குறைய எல்லா நேரங்களிலும் கிறிஸ்தவர்களுக்கு வெற்றியைத் தந்தது; அல்லது குறைந்தபட்சம் தோல்வியின் பாதிப்பிலிருந்து காத்தது என்பது அவர்களது நம்பிக்கை. எனவே அதுவும் தன் பங்கிற்கு பால்ட்வினின் குழுவினருக்கு வீரியத்தை அளித்தது.
ரேனால்ட் தன் காரியத்தைத் தொடங்கினான். சுற்றி வளைத்திருந்த முஸ்லிம் படைகளைக் கடந்து கஸ்ஸாவில் இருந்த டெம்ப்ளர்களுக்குத் தகவல் சென்றது. அவர்களின் தளபதி கிராண்ட்மாஸ்டர் ஓடோ டி செயிண்ட் அமாண்ட் (Grandmaster Odo de St Amand). அவன் ரேமாண்டுக்கு இணையான வில்லன். கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம் அவனைப் பற்றி, ‘கொடியவன்; அகங்காரமும் ஆணவமும் கொண்டவன்; அவனது மூக்கில் கோபத்தின் ஆவி குடியிருக்கும்; அவன் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை; மரியாதைக்குரிய எந்த மனிதர்களையும் மதிப்பதில்லை’ என்று எழுதி வைத்துள்ளார். அத்தகு வில்லன் ஓடோ, ஸலாஹுத்தீனைத் துரத்தியடித்து விட்டுத்தான் மறுவேலை என்ற முடிவுடன் எண்பது டெம்ப்ளர் வீரர்களைத் திரட்டிக்கொண்டு பால்ட்வினின் உதவிக்கு வந்து சேர்ந்தான்.
வெகு மூர்க்கத்துடன் உருவானது ராஜா பால்ட்வின் திரட்டிய படை. Knights எனப்படும் 375 சேனாதிபதிகளும் 80 டெம்ப்ளர்களும் கொண்ட அந்தப் படையின் எண்ணிக்கை தோராயமாக 10,000. அதன் மூர்க்கத்துக்கு இரையாக வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது ஸலாஹுத்தீன் படையினரின் கவனப் பிசகு.
oOo
25 நவம்பர் 1177. போர் கவசங்களைக் களைந்துவிட்டு, ஆயுதங்களை இறக்கி வைத்துவிட்டு, மாண்ட்கிசார்ட் (Mons Gisard or Mont Gisard) என்ற மலையின் அருகில் உள்ள டெல் அஸ்-சஃபியா ஆற்றைக் கடப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடிப் பரவினர் ஸலாஹுத்தீனின் படையினர். அவர்களின் நடமாட்டத்தை வெகு கவனமுடன் கண்காணித்தபடி இருந்த சிலுவைப்படை ஒற்றர்கள் முஸ்லிம் படையினர் கலைந்து பரவிச் சென்றுவிட்டதைக் கண்டனர். பால்ட்வினுக்குத் தகவல் பறந்தது. ‘இதற்குத்தானே காத்திருந்தேன் தேவனே’ என்று அவர்கள் உடனே புனித அந்தஸ்து மிக்க மெய்ச்சிலுவையை உயர்த்தி ஏந்திக்கொண்டு, அஸ்கலானிலிருந்து கடலோரமாகவே குதிரைகளில் விரைந்து வந்து, ஸலாஹுத்தீனைச் சுற்றி வளைத்தனர்.
அந்நேரம் ஸலாஹுத்தீனுடன் அவருடைய படையின் சிறு குழு மட்டுமே தங்கியிருந்தது. அவர்களும் அந்தத் திடீர்த் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை; சண்டைக்கும் போருக்குமான எந்த ஆயத்தத்துடனும் இல்லை. பரங்கியர்கள் வந்தடைந்ததும் ஸலாஹுத்தீன் தம்முடன் இருந்த அமீர்களுடனும் வீரர்களின் சிறு குழுவுடனும் உறுதியாக நின்றிருந்த போதிலும், நிலைமை வெகு மோசமாக இருந்தது. மான்ட்கிசார்ட் எனப்படும் குன்றின் அருகில் ஸலாஹுத்தீன் தமது படைகளை ஒன்றுதிரட்ட முயன்றார். அவசர அவசரமாக போருக்கான ஒலி எழுப்பப்பட்டது. பிரிந்து சென்றிருந்த படையினர் விழுந்தடித்து ஓடி வந்தனர்; ஒன்று திரண்டனர். பெரும் ஆக்ரோஷத்துடன் தாக்கியது பரங்கியர் படை. டெம்ப்ளர்கள் ‘ஓநாய்களைப் போலச் சுறுசுறுப்பாகவும் வேட்டை நாய்களைப் போலக் குரைத்தபடியும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப்போல் திரளாகத் தாக்கினர்’ என்று விவரித்துள்ளார் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் அபூ ஷாமா.
முஸ்லிம்களின் படை ஓரளவு சுதாரித்து, ஒன்று திரண்டு எதிர் தாக்குதல் நடத்த முனைந்தது. ஆனால் படை ஒழுங்கு குலைந்திருந்த அவர்கள், பரங்கியர் படை நெருங்கி வந்த நேரத்தில் வலது பக்கப் பிரிவு இடது பக்கத்திற்கும், இடது பக்கப் பிரிவு மையப் பகுதிக்கும் நகர வேண்டும் என்று நினைத்தார்கள். மான்ட்கிசார்ட் குன்று தங்களுக்குப் பின்னால் இருக்கும்படி படையை அமைக்க முனைந்தார்கள். அந்த மும்முரத்தில் அவர்கள் இருக்க, சகட்டு மேனிக்குத் தாக்கத் தொடங்கியது பால்ட்வினின் படை.
ஸலாஹுத்தீனின் சகோதரர் மகன் தகீயுத்தீன் வீரத்துடன் முன்னேறிச் சென்று போரிட்டார். ஆனால் அவருடன் இருந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். தகீயுத்தீனுக்கு அஹ்மது என்றொரு மகன். தாடி வளரத் தொடங்கியிருந்த பருவம். அப்படித்தான் அவனது வயதை உத்தேசமாகக் குறிப்பிட்டுள்ளனர் அக்கால வரலாற்று ஆசிரியர்கள். எதிரிகளைத் தாக்கும்படி அவனுக்குக் கட்டளையிட்டார் தகீயுத்தீன். வேகமாக முன்னேறிய அவன் தாக்கினான், போரிட்டான், எதிரிகளிடம் சேதத்தை ஏற்படுத்திவிட்டுப் பத்திரமாகத் திரும்பினான்.
“அஹ்மதே! மீண்டும் செல், போரிடு, அதுவே உனக்குச் சிறப்பு” என்று தகீயுத்தீன் தொடர்ந்து கட்டளையிட, மீண்டும் களம் புகுந்தவனுக்கு வீரமரணம் காத்திருந்தது. உயிர்தியாகியானான் அஹ்மது.
பரங்கியர்களின் சக்திவாய்ந்த தாக்குதல் முஸ்லிம்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலர் தப்பி ஓடினர். மூன்று பரங்கியர்கள், அக்குழப்பத்தின் ஊடே முன்னேறி ஸலாஹுத்தீனின் எதிரே நேருக்கு நேராக வந்து விட்டனர். ‘அதிலொருவன் ஈட்டியை ஏந்தி என் மார்பைக் குறிபார்த்து ஓடி வந்தான்’ என்று பின்னர் தெரிவித்துள்ளார் ஸலாஹுத்தீன். இன்னும் சில அடிகளே பாக்கி. ஸலாஹுத்தீனின் மெய்க்காப்பாளர்களாக அமர்த்தப்பட்டிருந்த உயர்மட்ட மம்லூக் வீரர்கள் சிலர் கடைசி தருணத்தில் குறுக்கே பாய்ந்து அவரைக் காப்பாற்றினர். அவரது கண்ணெதிரில் அவன் வெட்டி எறியப்பட்டான்.
போர் மதியம் முழுவதும் கடுமையாக நீடித்தது. பரங்கியர் படைகளின் வரிசைகளை உடைத்து முன்னேறும் முயற்சியில் முஸ்லிம்கள் குறைந்தது இரண்டு குதிரைப்படைத் தாக்குதல்களை நடத்தினர். தகீயுத்தீனும் சட்ட நிபுணர் ஃபகீஹ் ஈஸாவும் இதர தளபதிகளும் உக்கிரமாகப் போரிட்டனர்; படையினரும் சமாளித்து எதிர்த்துப் போரிட்டனர்தாம். ஆனால் களத்தை அவர்களால் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே முடியவில்லை. பரங்கியர்களின் தாக்குதல் வீச்சு மேலோங்கி, ஸலாஹுத்தீன் பின்வாங்க நேர்ந்தது. முஸ்லிம் படையினர் தெறித்துச் சிதறினர்.
இறுதியில் முஸ்லிம்களுக்குப் பெரும் தோல்வியில் முடிந்தது அந்தப் போர். அஸ்கலான் நகருக்கு வடக்கே மாண்ட்கிசார்ட் என்ற இடத்தில் அது நிகழ்ந்தது. ஆனால் அந்தப் பெயர் வழக்கொழிந்து அதனருகே உள்ள ரம்லா என்ற ஊரின் பெயரில் நிலைத்துப் போனது ரம்லா போர்!
பரங்கியர்கள் தரப்பில் 1,100 பேர் கொல்லப்பட்டனர்; 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஜெருசலம் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர் என்று கிறிஸ்தவர்களின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆயினும் அதைவிடப் பேரிழப்புக்கு உள்ளாகியிருந்தது சுல்தான் ஸலாஹுத்தீனின் படை. உளவியல் பாதிப்போ மேலதிகம். பரங்கியர்கள் அவரது பிரத்யேகக் கூடாரத்தைப் பிய்த்துத் தூக்கிச் சென்றார்கள். வெருண்டோடிய முஸ்லிம் படையினரும் ஃபகீஹ் ஈஸாவும் சிறைபிடிக்கப்பட்டனர். முஸ்லிம் படையினரின் ஆயுதங்கள் உடைமைகள் பரங்கியர்களால் கைப்பற்றப்பட்டன. தோல்வியையும் அதிர்ச்சியையும் சுமந்தபடி, களத்திலிருந்து பின்வாங்கி மீதமிருந்தவர்களுடன் எகிப்துக்குத் திரும்ப யத்தனித்தார் ஸலாஹுத்தீன். ஆனால் அதுவும் எளிதாக அமையவில்லை.
கடுமையாக மழை பெய்து, அது பத்து நாள்கள் நீடித்து, அவர்களது துயரத்தை அதிகரித்தது. அது போதாதென்று வழியில் பதுஊக்களின் கூட்டம் ஒன்று அவர்கள் மீது பாய்ந்து மிச்சம் மீதி இருந்ததையும் கொள்ளையடித்தது. கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம் அதைப் பெருமகிழ்ச்சியுடன், ‘வெட்டுக்கிளி விட்டுச் சென்றதை, புழு தின்றுவிட்டது’ என்று எழுதி வைத்துள்ளார். தேவையான உணவும் நீரும் இல்லாமல், பயணிக்கக் குதிரைகள் போதாமல், சினாயின் வடக்கே பாலைவனத்தில் பாதையையும் தவறவிட்டு, தட்டுத்தடுமாறி சோதனைக்கு உள்ளானார்கள் அவர்கள்.
அங்கு பரங்கியர்களோ, ஸலாஹுத்தீனின் கூடாரத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று தங்களது வெற்றியைக் கொண்டாடினார்கள். அவ்வெற்றிச் செய்தியைத் தூதர்கள் மேற்கு ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார்கள்.
oOo
கள நிகழ்வுகளையும் தமது தோல்வியையும் எகிப்திலும் சிரியாவிலும் உள்ள மக்களும் எதிரிகளும் எப்படிப் புரிந்துகொள்வார்கள், என்னவிதமான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்திருந்த சுல்தான் ஸலாஹுத்தீன் இத்தகு தருணங்களில் மதிக்கூர்மையுள்ள தலைவர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்தார். அவர் உயிருடன் இருப்பது வெகு முக்கியமாக அனைவருக்கும் தெரிய வேண்டியது அவசியம். எனவே தூதுவர்கள் முதலில் எகிப்துக்குக் கிளம்பிச் சென்று செய்தியை அறிவித்தார்கள்.
‘சபிக்கப்பட்ட பரங்கியர்களுக்கு எதிராக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்திருக்கிறான்! சுல்தான் ஸலாஹுத்தீனும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்கின்றார்கள். போரில் கைப்பற்றிய செல்வங்களுடன் அவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள்.’
மக்கள் அதைக் கேட்டு மகிழ்வடைந்தாலும் அச்செய்தியின் உட்கருத்தைப் புரிந்துகொண்டார் அறிஞர் இமாதுத்தீன் இஸ்ஃபஹானி.
ஒருவழியாக அனைத்து சோதனைகளையும் கடந்து, எஞ்சிய படையுடன் ஹிஜ்ரி 573, ஜுமாதா II மாதத்தின் நடுப்பகுதியில் / டிசம்பர் 1175 (கி.பி.) கெய்ரோ வந்தடைந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன். ரம்லா போரின் தோல்வி அவருடைய வாழ்க்கையில் மிகவும் கசப்பான ஓர் அனுபவம். வேதனை நிறைந்த ஓர் அத்தியாயம். ஆனால் அதற்காக அந்த வேதனையில் சுருண்டு மருண்டு கிடப்பவரா அவர்? அடுத்த நகர்வுக்குத் தம்மைப் பக்குவப்படுத்திக்கொண்டு தயாரானார் அந்த ஜெருசல நாயகர் சுல்தான் ஸலாஹுத்தீன்.
அது–
(தொடரும்)
