93. இராணுவப் பிரிவுகள்
இழந்த நிலத்தை மீட்போம், ஆட்சியைப் பிடிப்போம், உரிமையைக் காப்போம் என்ற கோபமும் கோஷமும் அனைவர் உள்ளத்திலும் நிறைந்திருக்கலாம்; ஆக்ரோஷமும் மிகைத்திருக்கலாம்; அவை உன்னதக் கவலையாகவும் இருக்கலாம். ஆனால் வெறுமையான அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மட்டுமே வெற்றியைத் தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடுவதில்லை. சிதறிக் கிடக்கும் தனி நபர் வீரம் மட்டுமே அவ்விஷயத்தை சாதித்து விடுவதுமில்லை. திறமையான, வலுவான இராணுவம் முக்கியம். இறையச்சமும் வீரமும் மதியூகமும் இராஜ தந்திரமும் அபாரத் தலைமைப் பண்பும் ஒருங்கமைந்த ஒரு தலைமை கட்டாயத் தேவை. அன்று அத்தகைய ஆளுமையாக உருவாகியிருந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.
அவரது இராணுவம் அவருக்கு முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்கியிருந்த அமைப்பையே பொதுவாகப் பின்பற்றியது. அது அடிப்படையில் ஐந்து பகுதிகள். ஏறக்குறைய மனித வடிவம். தலையைப் போல் முன்னணிப் படை; அதையடுத்து இரு கைகளைப் போல் வலப்புறமும் இடப்புறமும் சேனைகள்; இரு கால்களைப் போல் பின்னணியில் பாதுகாப்புப் படை. படையின் மையப் பகுதியில் இதயம் போல் வீற்றிருப்பார் சுல்தான். அங்கிருந்தபடி போரை வழிநடத்துவது, அனைத்துப் பிரிவுத் தளபதிகளுக்கும் கட்டளையிடுவது, தேவைக்கு ஏற்ப முன்னணிக்கும் இதர பகுதிகளுக்கும் நகர்வது எனச் சுழல்வார் ஸலாஹுத்தீன். நன்கு அறிமுகமானவராக, நம்பகமானவராகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்துப் படைத் தளபதிகளாக நியமித்திருந்தார் சுல்தான். அவர்களெல்லாம் ஒவ்வோர் அணிக்கும் தலைமை.
அவரைச் சுற்றிப் பாதுகாவலாக அமைக்கப்பட்டிருந்தது தனித்துவப் பாதுகாப்புக் குழு. அதில் பெரும்பான்மையினர் எகிப்தியப் படையினர். இந்தக் குழு மட்டுமே படையின் மையப் பகுதியில் சுல்தானைச் சூழ்ந்திருக்கும்; போர்களில் முக்கியப் பங்கும் வகிக்கும். சுல்தானின் பெயரை அடிப்படையாகக்கொண்டு இக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த பெயர் அல்-ஃபிர்காஹ் அஸ்-ஸலாஹிய்யாஹ். பொதுவாகவே சுல்தான்களின், தளபதிகளின் கீழுள்ள சிறப்புப் படை, அந்தந்தத் தலைவரின் மம்லூக்குகளால் நிரம்பியிருக்கும்; அந்தத் தலைவரின் பெயரையே கொண்டிருக்கும். உதாரணமாக நூருத்தீன் ஸெங்கியின் மம்லூக்குகள் அந்-நூரியா, அஸாதுதீன் ஷிர்குஹ்வின் மம்லூக் குழு அல்-அஸாதியா என்று பெயரிடப்பட்டிருந்தனர்.
சுல்தான் ஸலாஹுத்தீனின் இராணுவம் அணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அணிக்கும் அதற்கான தனித்துவப் பணிகள் அளிக்கப்பட்டிருந்தன; கடமைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அணிகளை இனங்காண வசதியாக, வெளிப்படையாகத் தெரியும் வகையில் ஆயுதங்களும் உபகரணங்களும் வேறுபடுத்தப்பட்டிருந்தன. போர்களின் போது அனைத்து அணிகளும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணையும்; முழுமையாக ஒத்துழைக்கும்; தத்தம் கடமைகளை நிறைவேற்றியபடி போரின் மைய இலக்கை எட்டும்.
முன்னணிப் படையில் சாரணர்கள், குதிரைப்படையினர், வாள்வீரர்கள், வில்லாளர்கள், ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடுவதிலும் எதிரியைத் துரத்துவதிலும் திறன் கொண்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் குதிரைப்படையினர். எழுபதிலிருந்து இருநூறு குதிரைப்படையினர் கொண்ட ஒவ்வொரு குழுவுக்கும் ஒருவர் தலைமை. அவரது பட்டம் ‘அமீர் முகத்தம்’. போரிடுதல் மட்டுமின்றி, சாரணப்பணியும் கள நிலவரத்தை உளவு பார்த்தலும் குதிரைப்படையினரின் முக்கியப் பணிகளாக இருந்தன. குதிரைப்படை எதிரிகளைத் தாக்கும், துரத்தும். அவர்கள் பின்வாங்கி ஓடினால் எந்தப் பாதையில் விரைவார்கள் என்பதை முற்கூட்டியே அறிந்து விரைந்து பாய்ந்து அவ்வழிகளைத் துண்டிக்கும். எதிரிகள் தங்களுக்குத் தேவையான உணவையும் உதவிப் பொருட்களையும் பெற இயலாமல் சிக்கித் திணறுவார்கள்.
வீரம் மிகுந்த, போர் அனுபவம் நிரம்பிய, நேர்மையான வீரர்களே குதிரைப்படையினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு உடலுறுதியும் வலிமையும் மிகைத்திருந்தன. எதிரிகளை எவ்விதம் எதிர்கொள்வது எனும் சூட்சுமம் தெரிந்திருந்தது. ஈட்டி எறிதல், அம்பெய்தல் ஆகியனவற்றில் அளவற்ற திறமை அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டது. வாள்களும் நீண்ட ஈட்டிகளும் அவர்களது ஆயுதங்கள். அவர்கள் சங்கிலிக் கவசம், தலைக் கவசம், கேடயம் பூண்டிருந்தனர். அவர்தம் குதிரைகளுக்கும் சங்கிலிக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.
கள நிலவரங்களை ஆராயும் பணியின்போது குதிரைப்படையினர் எதிரியுடனான நேரடி மோதலைத் தவிர்ப்பார்கள். எதிரியின் பலத்தை மதிப்பிடுவதும் அவர்களின் பலவீனமான பகுதிகளைக் கண்டறிவதும் மட்டுமே அச்சமயம் அவர்களின் நோக்கமாகவும் நடவடிக்கையாகவும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் படையின் ஏதேனும் ஒரு பகுதி திடீரென ஓர் இக்கட்டில் மாட்டிக்கொண்டால் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் உடனே குதிரைப்படை அங்கு விரையும், உதவும், போரிடும், மீட்கும். நிராயுதபாணிகளாகக் கைச்சண்டையும் போடும்.
போர்களத்தில் குதிரைப்படை, காலாட்படையினருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கும். தகுந்த நேரத்திற்காகக் காத்திருக்கும். தாக்கும் தருணம் வந்ததும் காலாட்படை ஒரு வழியைத் திறக்கும். அவ்வளவுதான். குதிரைகள் கனைக்க, வாள்கள் பளபளக்க, பேரிரைச்சலுடன் எதிரிகள் மீது வெள்ளமாய்ப் பாயும் குதிரைப்படை.
நேருக்கு நேர் சண்டை, அடி, உதை, வெட்டு, காயம், போரின் சுமை ஆகியனவற்றைச் சுமப்பதோ காலாட்படை. இராணுவம் அணிவகுத்துச் செல்லும் போது அதைப் பாதுகாப்பது, எதிரிகளின் திடீர்த் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுப்பது, பொருட்களையும் உபகரணங்களையும் சுமந்து செல்லும் வண்டிகளுக்குக் காவல் புரிவது போன்றவை காலாட்படையின் மிக முக்கியமான கடமைகளாக இருந்தன. அணிவகுத்து நடப்பதற்கும் களத்தில் ஓடியாடிச் சண்டையிடுவதற்கும் இலகுவானவை என்பதால் இவர்களின் ஆயுதங்கள் எடை குறைந்த வாள்கள், வில்கள், சிறு குத்தீட்டிகள்தாம்.
இவையன்றி இதர பல துணை அணிகள் இருந்தன. அவர்களுக்கான பெயர்களாக அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களும் நிறைவேற்றும் பணிகளும் அமைந்தன. நெஃப்தா (தீப்பொருள்) எறியும் அணிகள், கவண் அணிகள், ஆமை அமைப்பணிகள், தகவல் திரட்டும் (சாரண) அணிகள், இராணுவப் பொருளாதாரப் படைப்பிரிவு அணிகள் அவற்றுள் தலையாயவை.
oOo
ஒலி பெருக்கி வசதிகள் இல்லாத அக்காலத்தில் இராணுவத்தினர் மத்தியில் முழக்கமிடுவதற்காகவே ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அவருக்குப் பெயர் ‘அல்-ஜாவீஷ்’. ஸலாஹுதீனுக்கு அருகிலேயே அவர் இருப்பார்: சுல்தான் பிறப்பிக்கும் கட்டளைகளை இராணுவத்திற்கு உரத்த குரலில் முழக்கமிட்டு அறிவிப்பார். படைகளைப் போரிடுவதற்குத் திரளுமாறு அழைப்பது; எதிரிகளின் அணிகள் ஊடுருவியிருந்தால் அதை அறிவிப்பது; எந்தெந்தத் தளபதிகள் தமது படைகளை எங்கெங்கு நகர்த்தி எந்தெந்த அணிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடுவது என்று அவரது முழக்கம் களத்தில் அதிரும். போர்வீரர்களின் உத்வேகத்தைத் தூண்டி, ஊக்கப்படுத்தி, அவர்களின் மனோபலத்தை உயர்த்தும் அவரது முழக்கம்.

இமாதுத்தீன் ஸெங்கி, நூருத்தீன் ஸெங்கி இருவரின் ஆட்சியின் போதே இஸ்லாமியப் புத்துணர்ச்சி மக்களிடம் ஏற்பட்டிருந்தது. அது சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியின் ஆட்சிக் காலத்தில் உச்சத்தை எட்டியது. விளைவாக, சிலுவைப்படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து முஸ்லிம்களின் பகுதிகளை விடுவிக்க வேண்டும்; ஜெருசலம் நகரை மீட்க வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் என்ற குறிக்கோள்களுடன் இராணுவத்தில் இணைந்த தன்னார்வலர்கள் பற்பலர். அவர்கள் பல்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள்; பழங்குடியினர், கிராமவாசிகள், நகரவாசிகள், ஏழைகள், செல்வந்தர்கள், மார்க்க அறிஞர்கள், சூஃபிகள் எனப் பலதரப்பட்டவர்கள். பாகுபாடின்றி ஒன்றிணைந்திருந்த குழு அது.
மஸ்ஜிதுகளில் குத்பாவின் போது இமாம்கள் மக்களை இராணுவத்தில் இணைந்துகொள்ளுமாறு ஊக்குவித்தால், திமுதிமுவென்று ஓடி வந்தனர் மக்கள். சொற்பொழிவாளர்கள் மேடைகள் மீதேறி முழக்கமிட்டால், அவர்கள் அதிலிருந்து இறங்குவதற்குள், கோஷங்களை முழங்கியபடி, பிரார்த்தனைகளை உரைத்தபடி, அனைத்துத் திசைகளிலிருந்தும் இராணுவ முகாமை நோக்கி அணிவகுத்தது ஜனத் திரள். ஹத்தீன் போரின் போதும் சுல்தான் ஜெருசலத்தைக் கைப்பற்ற அணிவகுத்த போதும் அறிஞர்களும் பொதுமக்களும் தன்னார்வலர்களாக அவரிடம் வந்து குவிந்தனர் என்று இமாம் இப்னு கஸீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தன்னார்வலர்களுக்கு மகிழ்வூட்டும் வேலைகளையும் ஒப்படைத்தார் ஸலாஹுதீன். அது சிலுவைப்படைக் கைதிகளை, இஸ்லாமிய விரோதிகளை, தண்டனைக்கு உட்படுத்தும் பணி.
oOo
தொழில்நுட்ப ரீதியில் இராணுவத்திற்கு உதவப் பொறியியல் படைப்பிரிவும் மருத்துவப் படைப்பிரிவும் அதனுடன் எப்பொழுதும் இணைந்திருந்தன. கோட்டைகள், அகழிகளின் மீதான கவண் தாக்குதல்கள், எறிகணைகள், தீப்பொருள் (நெஃப்தா) எறியும் கருவிகள் போன்ற கனரகப் போர்க் கருவிகளை நிறுவுவது, ஆமை அமைப்பு போன்றவை பொறியியல் படைப்பிரிவின் பணிகள். முகாம்கள் அமைப்பது, மதில்களைக் கட்டுவது, தேவைக்கு ஏற்பப் பாலங்களை உருவாக்குவது, இடிப்பது, அகழிகளை நிரப்புவது, கிணறுகள் தோண்டுவது, முற்றுகையின்போது மதில்களை எங்கு உடைப்பது, ஆறுகளின் போக்கைத் திசை திருப்புவது எனப் பல நுட்பமான விஷயங்களை இப்பிரிவின் பொறியாளர்கள் நிர்ணயித்தனர்.
போரில் காயமடைந்தவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் சிகிச்சை அளிப்பது மருத்துவப் படைப்பிரிவின் பொறுப்பு. மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோருடன் மருந்துகள், காயமடைந்த நோயாளிகளைச் சுமக்கும் உபகரணங்கள் போன்ற அனைத்தும் நிறைந்திருந்த நகரும் மருத்துவமனையாகத் திகழ்ந்தது அப்பிரிவு.
சுல்தான் ஸலாஹுதீன் அய்யூபியின் காலத்தில் மருத்துவத் துறை நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே மருத்துவ விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார் அவர். காயமுற்றவர்களின் சிகிச்சையின்போது சுல்தான் ஸலாஹுத்தீன் சில நேரங்களில் மேற்பார்வை இடுவார். அந்தளவு தம் மக்களிடத்தும் படையினரிடத்தும் அன்பும் அக்கறையும் மிகைத்தவராய் இருந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி. எகிப்தில் ஃபாத்திமீ அரசவையிலும் சிரியாவில் நூருத்தீனின் அரசவையிலும் பணியாற்றிய மருத்துவர்களையும் மருத்துவத் துறையில் ஈடுபட்டிருந்தவர்களையும் ஊக்குவித்தார் சுல்தான். மருத்துவத் துறையின் செலவினங்களுக்காக வெகு தாராளமாகவும் நிதி வழங்கப்பட்டது.
அய்யூபி இராணுவத்தில் இடம் பெற்ற மருத்துவர்களுள் ஒருவர் அபூ ஸகரிய்யா அமீனுத் தவ்லா யஹ்யா இப்னு இஸ்மாயீல் அல்-அந்தலூசி. போர்களின் போது ஸலாஹுத்தீனின் இராணுவத்தில் அவரும் இடம் பெற்றிருப்பார். பிற்காலத்தில் டமாஸ்கஸில் குடியேறினார் அவர். அவரைப் போலவே பல மருத்துவர்களும் டமாஸ்கஸையே தங்கள் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தனர். காரணம் அங்கு, நூருத்தீன் ஸெங்கி உருவாக்கியிருந்த நூரி மருத்துவமனை. அது மட்டுமின்றி அந்நகரம் போர்க்களங்களுக்கு அண்மையில் இருந்ததால் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் அங்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டனர். அபூ ஸகரிய்யா தம் வாழ்நாளின் இறுதியில் பணியாற்ற இயலாத நிலைமையை எட்டியதும் அவர் மரணமடையும் வரை ஓய்வூதியம் வழங்கினார் ஸலாஹுத்தீன். மற்றொரு மருத்துவர் இப்னு அத்-தஹான் அல்-பக்தாதி, கண் மருத்துவர் அபுல்-ஃபஸ்ளு சுலைமான் அல்-மஸ்ரி ஆகியோருக்கும் ஓய்வூதியங்கள் அளிக்கப்பட்டன.
மருத்துவப் பிரிவில் இடம்பெற்றிருந்த மற்றொருவர் முவஃப்பக்குத்தீன் அபூ நஸ்ரு அஸ்அத். இப்னுல் மத்ரான் அத்-திமிஷ்கி என்று அறியப்பட்ட அவர் மிகப் பிரபலமான மருத்துவர்களுள் ஒருவர். சுல்தான் ஸலாஹுத்தீனின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர் அவர். நூரி மருத்துவமனையிலும் பணியாற்றியுள்ளார். அவர் பல மருத்துவ நூல்களை எழுதினார். அதில் ஒன்று ‘ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான நாஸிரி கட்டுரை’. மென்மையான குணம்கொண்டவர், புத்திசாலி, நேர்மையானவர் என்று அவரைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார் அல்-இஸ்ஃபஹானி.
சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு சிறப்பு மருத்துவரும் இருந்தார். படையெடுப்புகளின்போது அவரும் சுல்தானுடன் இணைந்து செல்வார். சில சமயங்களில் ஸலாஹுத்தீனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதும் முதுகில் கொப்புளங்கள் தோன்றுவதும் வலியால் அவர் துன்புறுவதும் நிகழும். அதற்கென அந்த மருத்துவர் சிறப்பு சிகிச்சைகள் மேற்கொளவதும் நடக்கும். தமது உடல்நிலையை சுல்தான் சரிவரக் கவனிப்பதில்லை, போதுமான ஓய்வு எடுப்பதில்லை என்று ஸலாஹுத்தீனின் பரிவாரத்தினர் அக்கறையுடன் தெரிவிப்பர். அதற்கு சுல்தான் ஸலாஹுத்தீன் அளித்துள்ள பதில் பிரசித்தம். “நான் ஜிஹாதிற்காகக் குதிரை ஏறிவிட்டால், நான் இறங்கும் வரை எனது வலி மறைந்துவிடும்.”
ஸலாஹுத்தீனின் தனி மருத்துவர், அவருடைய மூத்த அமீர்களுக்கும் தளபதிகளுக்கும்கூட சிகிச்சை அளித்தார்.
oOo
அய்யூபி இராணுவத்தில் இராணுவ இசை ஒரு முக்கியப் பங்கு வகித்தது. படையினர் தயாராக இருக்கும்படி ஜாவீஷ் முழக்கமிட்ட பின், கொடிகள் விரிக்கப்படும். சேணியங்கள் ஒலிக்கத் தொடங்கும். இன்றைய இராணுவ இசையைப் போன்ற அது, போர்வீரர்களின் உத்வேகத்தைத் தூண்டுவதாகவும் அமைந்திருந்தது.
அக்குழுவினருக்காக ஒரு சிறப்பு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது, அதன் பெயர் ‘தபல் கானா’. தபல்களும் புல்லாங்குழல்களும் இதர இசைக்கருவிகளும் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கும். போர்களின் போதும் இதர நாட்களில் மூன்று முறையும் இக்கருவிகள் வாசிக்கப்பட்டன. அவையன்றி, முக்கியஸ்தர் எவரேனும் இராணுவ முகாமுக்கு வரும்போது கொடிகளும் பதாகைகளும் விரிக்கப்பட்டு. சேணியங்களும் புல்லாங்குழலும் வாசிக்கப்பட்டன.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்கென சிறப்புத் தாளம் இருந்தது. அதை அறிந்துகொள்ள போர்வீரர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது. தோல்வி ஏதேனும் ஏற்பட்டுவிட்டாலும் போரும் சண்டையும் நிற்கக்கூடாது என்பதைத் தெரிவிக்க ஒரு சிறப்புத் தாளம் இருந்தது. வெற்றியின் நற்செய்தியை அறிவிக்க வேறொரு சிறப்புத் தாளம்.
oOo
கொடியும் பதாகைகளும் இராணுவ அணிகளையும் அணியில் இணைந்துள்ள நாட்டினைரையும் அடையாளப்படுத்தும் சின்னங்களாக இருந்தன. கொடி என்பது இறையாண்மையின் சின்னமாக இருந்தது. கோட்டைகள், கப்பல்கள் முக்கியமான இராணுவ இடங்களில் ஏற்றப்பட்டது. ஒரு கட்சி தோற்கடிக்கப்பட்டால், வெற்றி பெற்றவர் செய்த முதல் காரியம் தோல்வியடைந்த கட்சியின் கொடியை இழுத்து இறக்கி, அதன் இடத்தில் தமது கட்சியின் கொடியை ஏற்றுவதாகும். சிலுவைப்படையிடம் இருந்து கோட்டைகளை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது அதையே செய்தனர்.
சுல்தான் ஸலாஹுத்தீனின் கொடியின் நிறம் மஞ்சள்; நடுவில் ஒரு கழுகின் படம். இது வலிமையின், வெற்றியின், நம்பிக்கையின் சின்னமாக இருந்தது. அவரது கொடியைப் பாதுகாப்பதற்கும் சுமந்து செல்வதற்கென்றே தனியாக ஒரு குழு இருந்தது.
பதாகைகளில் மூன்று வகை இருந்தன. மஞ்சள் பட்டில் செய்யப்பட்ட மாபெரும் பதாகை அல்-இஸாபா என்று அழைக்கப்பட்டது, அதில் தங்க நூலால் சுல்தானின் பட்டங்களும் பெயரும் பின்னப்பட்டிருந்தன. அது சுல்தானுடன் செல்லும் பரிவாரங்களுக்காகச் சுமக்கப்பட்டது.
அல்-ஜலீஷ் என்றொரு பெரிய பதாகை. அதன் உச்சியில் ஒரு முடிப் பின்னல் இருக்கும்.
அஸ்-ஸனாஜிக் என்று அழைக்கப்பட்டது ஒரு சிறிய மஞ்சள் கொடி.
oOo
இராணுவ விபரங்கள் இம்மட்டில் இருக்கட்டும். இனி அடுத்தடுத்து நிகழ்ந்தவற்றை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
(தொடரும்)
