92. இராணுவக் குறிப்புகள்
இத்தொடரில் போர்களைக் கடக்கும் போதும் அவற்றை விவரிக்கும் போதும் பொதுப்படையாகப் படையணி, படை வீரர்கள் என்றே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், சிலுவைப்படை வருவதற்கு முன்பும் அவர்கள் நுழைந்த பின்பும் முஸ்லிம்களின் இராணுவமும் படைப் பிரிவும் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருந்தன, அவர்களின் போர்முறைகள் எப்படி அமைந்திருந்தன என்று சில நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. அவற்றை முடிந்தளவு சுருக்கமாகப் பார்த்து அறிமுகம் செய்துகொள்வோம்.
ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடுகள் நிலையான படைகளைக் கட்டமைக்கும் முன், குழுக்களாக இயங்கிய போராளிகளே படையின் அடிப்படை வீரர்களாக இருந்தனர். பழங்குடியினரின் பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் இருக்கும். அதில் உள்ள ஒவ்வோர் ஆணுக்கும் அரசு ஒரு தொகையை அளிக்கும். அதைப் பெற்றுக்கொண்டு அவர்கள் இராணுவப் பணிக்கு, போருக்கு தயாராக இருக்க வேண்டும்.
பிறகு, புதிதாக உருவான இராணுவ அமைப்பு சம்பள அடிப்படையில் காவலர் படையை உருவாக்கியது. அரசின் செலவுப் பட்டியலில் இந்த இராணுவ அமைப்பு முதலிடம் பெற்றது. அடிமைகள் நிரம்பியிருந்த இந்தக் காவலர் படையில் பெரும்பாலோர் மத்திய ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்திருந்த துருக்கியர்கள். மற்றவர்கள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்லாவ்கள், கிரேக்கர்கள், அனடோலியா, ஆர்மீனியா, ஜார்ஜியாவில் கைப்பற்றப்பட்ட கைதிகள். அவர்கள் படைப்பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டனர். அவற்றுள் ஒரு பிரிவு அரசாங்க நிகழ்வுகளில் பாதுகாவல் பணி புரிய தனிக் காவலர் பிரிவாகச் செயல்பட்டது.
இந்தக் காவல் படையினர் அனைவரும் குதிரை வீரர்கள். குதிரை மீதமர்ந்து வேகமாக அதை ஓட்டிக்கொண்டே வில் எய்வதில் அவர்களுக்கு அபாரத் திறமை. எதிரியை நெருங்கிவிட்டால் சண்டைக்கு அவர்களின் ஆயுதங்கள் ஈட்டிகளும் வாள்களும் ஆகும். ஆயுதம் தரித்த இந்தக் குதிரைப்படை ‘அஸ்கார்’ (askar) என்று அழைக்கப்பட்டது; அந்தப் படையின் உறுப்பினனுக்குப் பெயர் ‘அஸ்காரி அல்லது குலாம்’ (askari or ghulam). இவர்களுக்கு அவர்களுடைய பணிக்கால அளவுக்கு ஏற்பப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. படையினரின் தரவரிசை, உடை வேறுபாடுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஓர் அமீர் அதன் தளபதியாக இருப்பார். அந்த அமீர்களுக்கு ஒருவர் முதல்வராக இருப்பார். அந்த முதல்வரின் பட்டம் – ஹாஜிப் (commander-in-chief – haajib).
தளபதிகளாகச் செயல்பட்ட அமீர்கள் பொதுவாக ஆட்சியாளரின் தனிக் காவலர் படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இராணுவக் கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி நிர்வாக அலுவல்களிலும் முக்கியப் பங்கு வகித்தனர். உயர் பதவியை எட்டிய அமீர்கள் தங்களுக்கென அடிமைத் துருப்புகளை வாங்கிப் பராமரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். அந்த அமீர் இறந்துவிட்டால் அவருடைய அடிமைத் துருப்பினர் அஸ்கார் குழுவினர் ஆகிவிடுவர். ஆனால் அந்த அஸ்கார் குழு அவர்களின் முன்னாள் எசமானரின் பெயரால் அழைக்கப்படும்.
அடிமைத் துருப்புகளை வைத்துக்கொள்ளும் அளவிற்கு உயர்ந்த முதன்மை அமீர்களுக்கு, அந்த அடிமைகளின் பராமரிப்புச் செலவுக்கென்று பெரிய அளவில் தொகை தேவைப்படுமல்லவா? அதற்காக அந்த முதன்மை அமீர் ஒவ்வொருவருக்கும் ஒரு மாவட்டம் ஒதுக்கப்படும். அதன் வருவாய் முழுவதுமாகவோ, பகுதியாகவோ அவருக்கு உரிமையானதாகிவிடும். அந்த மாவட்டத்திற்கு அவரே ஆளுநர்; அவரே அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பு. இஸ்லாமியச் சொற்களஞ்சியம் இதை இஃக்தா (iqta) என்று குறிப்பிடுகிறது.
ஆட்சியாளரின் சக்தியையும் வளங்களையும் பொறுத்து அஸ்கார் படையினர் எண்ணிக்கை சில நூறுகளிலிருந்து சில ஆயிரம் வரை மாறுபடும். அது மட்டுமின்றி, போர்களின் போது தேவைக்கு ஏற்பக் கூலிக்குப் படையினர் வரவழைக்கப்பட்டு அஸ்காருடன் இணைக்கப்படுவர். அவ்விதம் அஸ்காருடன் சேர்க்கப்பட்ட இணைப்படையினருள் அர்மீனியர்கள், டைலாமைட்டுகள் (Dailamites). மட்டுமில்லாமல் ஜிஹாது, போர் என்ற வேட்கையில் தன்னிச்சையாய் வந்து இணைந்த சிரியா மக்களும் நிறைந்திருந்தனர். மட்டுமின்றி, குர்திஷ் பழங்குடியினரும் துணை குதிரைப் படைகளை வழங்கினர். ஏராளமான குர்துகளும் ‘அஸ்கார்’களில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டனர்
பல சந்தர்ப்பங்களில் அமீர்களின் அடிமைத் துருப்புகளும் துர்க்மென் பழங்குடியினரால் வலுப்படுத்தப்பட்டன. இவர்களும் குதிரை வில் வீரர்கள்தாம். பொதுவாக இவர்களும் ‘அஸ்கார்’ என்றே குறிப்பிடப்படுகின்றனர். துர்க்மென்களிடம் துணிச்சலும் போர் குணங்களும் குடிகொண்டிருந்த போதிலும், இராணுவத் துருப்புகளுக்குத் தேவையான ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவர்களிடம் இருந்ததில்லை. முரட்டுத்தனம் மிகைந்திருந்த அவர்களது போக்கால் அவர்களுடனான கூட்டணி ஆபத்தான ஒன்றாகவே இருந்தது.
அஸ்கார்கள் முன் வரிசைத் துருப்புகள் என்றால் இரண்டாவது வரிசையாக மற்றொரு துருப்பு இருந்தது. அதன் பெயர் ஜுன்த் (jund) (பன்மை அஜ்னாத் ajnad). அரபுப் போராளிகள் முன்னர் அப்பெயரில் அழைக்கப்பட்டனர். அஜ்னாத் அஸ்காரிகள் போலன்றி, பிராந்தியப் போராளித் துருப்புகளாக இருந்தவர்கள். ட்ரூஸ் (Druz) போன்ற சிறிய அரபு மாநிலங்களும் பிற உள்ளூர் அமைப்புகளும் இத்தகைய பிராந்தியத் துருப்புகளால் ஆனவையே. உதாரணமாக ஷைஸாரின் அமீரிடம் சிறு எண்ணிக்கையில் அஸ்கார் இருந்த போதிலும் அவருடைய பலமான துருப்பு அஜ்னாத். பல்வேறு உள்ளூர் பழங்குடியினர், அரபியர்கள், மக்ரிபிலிருந்து (வடமேற்கு ஆப்பிரிக்கா) வந்தவர்கள், குர்தியர்கள் அந்த அஜ்னாதில் இடம் பெற்றிருந்தனர். அஸ்கார்களைப் போல் அஜ்னாத் வில்லாளர்கள் அல்லர். ஈட்டியும் வாள்களும் மட்டுமே அவர்களது ஆயுதங்கள்.
அடுத்தது காலாட்படை. இப்படையிலும் பல்வேறு தரப்பினர் இருந்தனர். இராணுவச் சேவை கட்டாயமாக்கப்பட்ட மக்கள், புனிதப் போரில் பங்கேற்போம் என்று ஓடி வந்து சேர்ந்த தன்னார்வலர்கள் ஆகியோருடன் முஸ்லிமல்லாதவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்தப் படையினரின் துணிச்சல் கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவர்களின் பங்கு காவல் பணிகள், கோட்டைகளைப் பாதுகாத்தல், முற்றுகைகளின் போது எதிரிகளின் அரண் சுவர்களைத் தகர்க்கக் குழி பறித்தல் போன்றவை.
அடுத்து, முஸ்லிம் இராணுவப் படையினரின் ஆடை விபரங்கள். சேனாதிபதிகளுக்குச் சங்கிலிக் கவச மேலாடை, பாவாடைப் போன்ற கீழாடை, முகத்தை மூடாத, பின்புற மடலுடன் கூடிய வட்டமான தலைக்கவசம்; எடை குறைவான வட்டக் கேடயம் அணிந்திருப்பது அவர்களது சீருடை. குதிரை வீரர்கள் தோலாலான மேலாடைகளையோ, அக அணியுடன் கூடிய மேலணிகளையோ அணிந்தனர். சிலுவைப்போர்கள் தொடங்கிய பிறகே, முகமூடி, கையுறை போன்ற பரங்கியர்களின் பலவகை கவசங்கள் முஸ்லிம்களின் படையிலும் நுழைந்தன.
குதிரை வீரர்களின் முக்கிய ஆயுதங்கள் வில், ஈட்டி, வாள் போன்றவையே. எடை குறைவான குறுகிய அளவிலான ஈட்டிகளைத்தாம் அவர்கள் முதலில் வைத்திருந்தனர். ஆனால், முஸ்லிம்களுக்கு அவை போரில் பாதகத்தை ஏற்படுத்தின. ‘நீளம் போதவில்லை; நெருங்கி வா, குத்துகிறேன்’ என்றா எதிரியிடம் பேச முடியும்? ஆகவே, இது சரி வராது, கனம் அதிகரித்தாலும் பரவாயில்லை என்று இரண்டு ஈட்டித் தண்டுகளை ஒன்றாக இணைத்து ஈட்டியின் அளவை நீட்டிக்கொண்டனர்.
போர் நிகழாத காலங்களில் பெருவாரியான கவசங்களும் ஆயுதங்களும், கோட்டையின் ஆயுதக் கிடங்கில் அஸ்காரின் நம்பகமான அதிகாரிகளின் பொறுப்பில் இருக்கும். போருக்கான அழைப்பு வந்ததும் தேவையான ஆயுதங்கள் துருப்புக்களுக்கு வழங்கப்படும். அவை அஸ்கார்களுக்கு. அஜ்னாத் படையினரோ தங்களின் சொந்தக் குதிரைகளின் தங்களின் சொந்த ஆயுதங்களுடன் வர வேண்டும். எனினும், சில சமயங்களில் அவர்களுக்கும் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
படையினர் சுமந்தது போக, போருக்குத் தேவையான தளவாடங்களும் கூடுதல் ஆயுதங்களும் கவசங்களும் பொதி சுமக்கும் ஒட்டகங்கள், கோவேறு கழுதைகளின் உதவியுடன் சரக்கு வண்டித் தொடரியாய்க் களத்திற்குச் செல்லும். ஆகவே பெரும் போர் அணிவகுப்பின் போது படை வேகத்தை அது மட்டுப்படுத்தும்.
ஒரு நகரத்தைக் கைப்பற்ற நினைத்தால் அந்த நகரை அல்லது அதன் கோட்டையை எதிரிகள் எதிர்பாராத நேரத்தில் நேரடியாகத் தாக்கிக் கைப்பற்றுவார்கள். அது தோல்வியுற்றால், பின்வாங்கி, அதை முற்றுகையிடுவார்கள். முற்றுகைப் போருக்கு முக்கியமாக உதவுபவை, உருளையில் நகரும் மரக்கோபுரங்கள், கவண் கற்கள், அவற்றை எறியும் இயந்திரங்கள், கட்டடத்தை இடிக்கும் மரதண்டங்கள் (battering ram).
முற்றுகைப் போரில் கோட்டையைத் தகர்க்க முக்கியமான முறை குழி பறித்துப் பற்ற வைப்பது. கோபுரத்தின் அல்லது அரண் சுவரின் கீழே ஒரு பகுதியில் சுரங்கம் தோண்டுவார்கள். அதற்கென அதில் நிபுணத்துவம் பெற்றவர்களின் குழு படையில் இடம்பெற்றிருக்கும். தோண்டிய சுரங்கத்தில் இரசாயண எரிபொருள் சாற்றை நிரப்பி, தீயை மூட்டினால் திகுதிகுவென எரியும் தீ அடித்தளத்தைப் பலவீனமாக்கி விடும். படை வீரர்களின் குழு ஒன்று பெரும் எடையுள்ள மரதண்டங்ளைச் சுமந்து வந்து ‘திடும் திடும்’ என மேல்கட்டமைப்பை இடிக்கும். மெதுமெதுவே கோட்டைச் சுவர் வீழும். ஆனால் இத்தகு முறைகள் பாறையின் மீது கட்டப்பட்ட கோட்டைகளைத் தகர்க்க உதவுவதில்லை. குறிப்பாக சிரியாவில் இருந்தவை, பெரும்பாலும் திடமான அடித்தளங்கள் கொண்ட பண்டைய கல் கட்டடங்கள். ஆகவே, அந்நகர் உள்ளிருக்கும் உணவுப்பொருளின் கையிருப்புத் தீரும் வரை தாக்குதல்களை எதிர்த்து நிற்கும். ஸலாஹுத்தீன், அஸாஸியர்களின் கோட்டை முற்றுகையைக் கைவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
oOo
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சிலுவைப்படைக்கு எதிராகத் திட்டவட்டப் போரில் இறங்கியதும் அவரது இராணுவம் மேற்கொண்டு எவ்விதம் தன்னைத் தகவமைத்தது என்பதை அடுத்துப் பார்ப்போம். அடுத்தடுத்துப் பல போர்களும் சண்டைகளும் நடைபெறப் போகின்றன. அவை ஒவ்வொன்றையும் கடக்கும்போது அந்தப் போரை நாம் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டுமல்லவா? அதற்கு இத்தகவல்கள் மிகவும் உதவும்.
(தொடரும்)
